பிரம்மாஸ்த்திரம்

0
1832

கிளினிக்குக்கு புது நோயாளி ஒருவர், ஒரு மருத்துவரின் துண்டுச்சீட்டுடன் வந்திருந்தார்.
” டியர் டொக்டர், உயர்குருதி அமுக்க நோயாளியான இந்த 62 வயது பெண்மணியின் ஈசீஜீயில் கோளாறு இருக்கிறது. மேலதிக பரிசோதனைகள் தேவை. ஆவன செய்யவும்”
இதுதான் சீட்டின் சாரம்.

நான் தான் அந்த டியர் டொக்டர்.
ஆகவே ஆவன செய்ய ஆயத்தமானேன்.

“என்ன பிரச்சனை அம்மா”

” ஒரு பிரச்சனையும் இல்லை”

” அப்ப ஏன் இங்க வந்த நீங்க?”

“டொக்டர் போகச் சொன்னவர்”

“ஓ .. சரி, அப்ப அந்த டொக்டர்ட்ட என்ன வருத்தம் எண்டு போன நீங்க?”

” பிரஷர் எண்டு போன நான்”

” சரி அம்மா, பிரசர் எண்டு நாங்க அளந்து பார்த்தா தானே தெரியும் , உங்களுக்கு என்ன வருத்தம் எண்டு போன நீங்க”?

” ஈசீஜீ ல ஏதோ பிரச்சனையாமே..”

“ஈசீஜீ ய பார்க்க வேணுமெண்டா, நீங்க ஏதும் வருத்தம் சொல்லித்தானே இருப்பீங்க.. அதத்தான் கேக்கன்..”

” அதான் பிரஷர் வருத்தம்..”

“ஹீஹ்ஹ்ஹ்ஹீஹீ”
என்னடாது அசரீரி என்று நிமிர்ந்தால் முன்னால் இருந்த ரெஜிஸ்ட்ரார் கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டிருந்தார்.
” மாட்டுனீயா.. செத்தாய் நீ” என்ற தொனி அதில் தெரிந்தது.

” இஞ்ச பாருங்கம்மா.. உங்களுக்கு பிரஷர் இருக்கு, ஈசீஜீ ல பிரச்சனை இருக்கு… அதைத் தவிர வேறென்ன பிரச்சனை இருக்கு”

“நெஞ்சில..”

ஆகா மேட்டருக்கு வந்திட்டார் என்று சற்று ஆசுவாசப்பட்டேன்.
தொடர்ந்தார்.

” நெஞ்சில ஒரு கட்டு வந்தது, அது வெடிச்சு சிதல் வந்தது, கொஞ்ச நாள் காய்ச்சல் காய்ஞ்சது, சரியான நோக்காடு..”

அட, நாம நினைச்ச பிரச்சனை இல்லை போல இருக்கே..
மார்பில் வரும் சிதல் கட்டி, அவரது ஈசீஜீ மாற்றங்கள் இரண்டுக்குமான தொடர்பை நான் கற்ற மொத்த வித்தைகளில் இருந்தும் பொருத்திப் பார்த்து யோசித்தேன், ஒன்றுமே பிடிபடவில்லை.

அவர் தொடர்ந்தார்.
“… பிறகு அதை வெட்டி எடுத்திட்டாங்க..”

” சரி, அதைக்காட்டவா அந்த டொக்டர்ட போன நீங்க”

” என்ன டொக்டர் நீங்க, அது வெட்டி எடுத்தது எண்ட மூத்தமகளுக்கு ரெண்டு வயசாயிருக்கக்குள”

” இப்ப அவக்கு என்ன வயசு”
“அவட மகளுக்கு இப்ப ரெண்டு வயசு”

இதற்கு மேல் பொறுமையாக கேள்வி கேட்பதற்கு சத்தியமாக முடியவில்லை.

இறுதியாக அவரது வாயைத் திறக்க வைக்க பிரம்மாஸ்திரம் மட்டும் மிச்சமிருந்தது.

” அம்மா, உங்களுக்கு ஒரு வருத்தமுமில்ல.. ஈசீஜீ எல்லாம் நோர்மலா இருக்கு..
ஒரு மருந்தும் தேவையில்ல, போய்ட்டு வாங்க..
மிஸ் , அடுத்த பேஷண்ட கூப்பிடுங்க..”

” என்ன டொக்டர் நீங்க, இளைப்புக்கு மருந்து ஒண்டும் தரல்லியா..”

” என்ன இளைப்பு?”

” இப்ப ஒரு ரெண்டு மாசமா கொஞ்ச தூரம் நடந்தாலும் இளைக்குது டொக்டர், நிமிர்ந்து படுக்க கஸ்டமா இருக்கு..”
“சரி..”
” இடைக்கிடை கால் வீக்கமும் வாறது”
“சரி..”
“வாளி ஏதும் தூக்கிப் போனா நெஞ்சுக்குள சுள் சுள்ளெண்டு குத்துறது”
“சரி..”
“அதைக் காட்டத்தான் அந்த டொக்டர்ட்ட போன நான்”
“வேற?..”
“வேற.. ஆ.. கைகால் நோவு, மூட்டுப்பிடிப்பு, நித்திரையே வாறல்ல, சாப்பாட்டுல துப்பரவா விருப்பமில்ல…..”
“ஹோல்ட் ஆன் … ஹோல்ட் ஆன்.. சரி அம்மா, இதத்தானே ஆரம்பத்துல கேட்டன்.. அப்ப ஏன் சொல்லல்ல?”

“நீங்க ஒழுங்காக் கேட்டா நான் சொல்லிருப்பன் தானே” என்றார்.

யோசித்துப் பார்த்தால், சரிபோல தான் தோன்றியது.
பதில் அவருக்குத் தெரிந்திருந்தது.
அதற்கான கேள்வி எனக்குத்தான் தெரியவில்லை.

இனி யாரும் வந்தால், ” உங்களுக்கு ஒரு வருத்தமும் இல்லை, போய்ட்டு வாங்க” என்று பிரம்மாஸ்த்திரத்துடன் தான் அறிமுகத்தை தொடங்கலாம் என்றிருக்கிறேன்.

என்ன சொல்றீங்க?

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments