வனப்பான வழிகள் எல்லாம் மொழியாத கதைகள் பேசி
வளி நிறைத்த சக்கரங்கள் இதமாக உருண்டு வரும்
மிதிவண்டி தனையோட்டி மகிழ்நகையிற் களிக்கும் மனம்
நதியன்ன நகர் வாழ்வில் ஓர் சீர்பெற்ற பாகமது
பாமரன் எனும் இராவணன் தன் வலுவேற்றிப் பறந்திட
அழகு மயிலாகப் பறந்திடும் புஷ்பக விமானமது…
ஜனனம் முதல் மரணம் ஈறாய் வாழ்வின் சுவடோடு – உன்
கருநிறப் பரிதியதன் தடங்கள் நிலையாய்ப் பதிந்திடுமே.
இருள் அளிக்கும் பயம் விரட்டும் தோழன் நீயன்றோ?
அருள் மாலோன் சுதர்சனம் உன்னிரு சக்கரம் ஆனதுவோ?
எடுத்தல், இருகரம் பிடித்தல், மிதித்தல், பறத்தல் என்று
நான் களிக்கும் கணங்கள் தினம் செதுக்கும் சிற்பியானாய்
நடு வழியிற் தவிக்கும் குழந்தை நாய்க்காய் இரங்கி
மிதிவண்டி விட்டிறங்கி அதைக் காத்து மகிழ்ந்த காலமுண்டு
பெரு நாய்களவை நான் தெருவிற் செல்லத் துரத்தி
பாயந்து கிலி கொண்டே மிதித்துத் தப்பிய காலமும் உண்டு.
மஞ்ஞை நடை மலர் விழியாள் சொல்லாத காதல் வேண்டி
கஞ்சிப்பானை சுமந்து அவள் கழனி வழி போகையிலே
கொஞ்சும் உருளி மணியதனை பின் தொடர்ந்து நான் ஒலிக்க
நெஞ்சம் இரண்டு பேசிக்கொள்ளும் இன்பமான மொழியதுவே.
இகல் போற்றப் பிறந்த மகன் பள்ளி செல்லுங் காலை
பின்னிருத்தி ஓட்டுவான் தந்தை – தன் மிதிவண்டி தனை
ஆயிரம் கனாக்களுடன் ஓகை பல விழியில் நிரம்ப
பிஞ்சு வாய் கொட்டும் இசை காதில் வேண்டித் திளைத்தபடி.
ஆதவனின் தீண்டலிலே வான மகள் சிவக்கக் கண்டு
சேவலது கூவக் கேட்டு கண் விழித்த ஏர் உழவன்
பின் இருக்கை மேலே அந்த மண்வெட்டி கட்டிக்கொண்டு
நீர் இறைக்கும் இயந்திரத்தை கட்டி இழுத்துக் கழனி செல்வான்.
குன்று குழி காணும் போதும் சீற்றம் கொள்ளாத் தாய்மையது
வெப்பம் தட்பம் பாராது உழைக்கும் அன்புத் தந்தையது
முற்றம் நின்று வதனம் காட்டி ஒப்பு நிற்கும் கேளிரது
உயிர் உறவு யாவும் கடந்து உறைந்து நிற்கும் உணர்வு அது.
ஆடியோடி உழைத்த உடல் ஒடுங்கும் காலம் வரும்போது
நன்றி நவிலும் நற்பொருளாய் ஈருருளி
நீ தெரிவாய்
கண் மூடிக் காடு செல்லப் பின் தொடர்வார் சிலரும்
மிதிவண்டி தன்னோடு நகர்ந்திடுவர் துயரோடு……