பூக்கும் கற்கள்

0
810

 

 

 

 

’’லித்தாப்’’ எனப்படும் கற்செடிகள் தாவரஉலகின் அதிசயங்களில் ஒன்றாகும். பூக்கும் கற்கள் என்றும் அழைக்கப்படும் இவை பனிக்கட்டிக்குடும்பம் (Ice plant family) என்றழைக்கப்படும் அய்சோயேசியே (Aizoaceae)   குடும்பத்தைச்சேர்ந்த சதைப்பற்றுள்ள (Succulents) சிறிய  கற்களைப்போலவே தோன்றும் தாவரங்களாகும்.

நமீபியாவிலும், தென்னாப்பிரிக்காவிலும்  பாறைகள் அதிகமுள்ள வறண்ட நிலப்பகுதிகளில்  ஆயிரக்கணக்கில்   இவை காணப்படும்.

1811ல் தாவரவியலாளர் வில்லியம் ஜான் தென்னாப்பிரிக்காவின் பாலைநிலங்களில் முதல் கற்செடியைக் கண்டறிந்தார். அதன் பிறகு  2006  வரையில் லித்தாப்பின்   பல வகைச்சிற்றினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 கிரேக்கமொழியில் லித்தொ-(Litho) என்றால் ’’கற்கள்’’, ops   என்றால் ’’தோற்றம்’’ என்றும் பொருள், ’’கற்களைப்போன்ற’’ என்று பொருள்  படும்படி   இவற்றிற்கு ’’லித்தாப்’’ என்று  பெயரிடப்பட்டிருக்கிறது. இரண்டாகப் பிளவுபட்ட கூழாங்கற்கள் போலவே தோற்றமளிப்பதால்  கூழாங்கல் செடிகளென்றும் (Pebble plants) அழைக்கப்படுகின்றன.

 தண்டுகளின்றி ஒரே ஒரு ஜோடி (2 இலைகள்) சிறிய, சதைப்பற்றுள்ள, காற்றின் ஈரப்பதத்திலிருந்தே   நீரைச்சேமித்து   வைத்துள்ள, அடிப்பகுதியிணைந்து,  எதிரெதிராக அமைந்திருக்கும் இலைகளே முழுத்தாவரமுமாகும். இலைகளுக்கிடையிலிருக்கும் வளர்நுனியிலிருந்தே    (Meristem)  மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் மலர்கள் உருவாகும். ஓரிடத்தில் வளரும் அனைத்தும் ஒரே சமயத்தில் பூக்கும்.

மிகமெதுவாக வளரும் இவற்றில் ஆண்டிற்கொருமுறை இலைகள் உதிர்ந்து புதிதாக இரண்டு இலைகள் உருவாகும்.  மெல்லிய நூல் போன்ற  வேர் மண்ணிற்கடியில் இருக்கும் தரையுடன் பதிந்திருக்கும் இவ்விலைகளின்  ஜன்னல் போன்ற அமைப்பு சூரிய ஒளியை ஈர்த்து ஒளிச்சேர்க்கை செய்யும்.

 

 

 

 

 சாம்பல், கருப்பு, காவி, இளமஞ்சள், பழுப்பு என   கற்களைப்போன்ற  வண்ணங்களில்  இருக்கும் இவற்றை தாவரங்களென மலர்களை வைத்தே இனம்காண முடியும். ஈரம் பட்டால் வெடித்துச்சிதறும் உலர் பழங்களின் சிறிய விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும்.

நேரடியான சூரிய ஒளியில் நன்கு வளரும் கற்செடிகள் Dish Gardening  முறையில் ஆழம் குறைவான கிண்ணங்களில்  கூழாங்கற்களுக்கிடையில் வைத்து உலகெங்கிலும் அழகுக்காக வளர்க்கப்படுகின்றன. தற்போது இணையவழியிலும் விற்பனையாகும்  இவை முளைத்து 4  வருடங்களில் மலரத்துவங்கும்.

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments