மொட்டாய் மலர்ந்து
சிட்டாய் திரிந்து
அந்த பட்டாம்பூச்சியாய்
திரிந்த அவளுக்கு
காதைப் பிளக்கும்
கெட்டிமேளச் சத்தம்
காதில் வட்டமடிக்க
கனவுகள் சிக்கிக் கொண்டன
மூன்று முடிச்சுக்குள்….!
நாள் குறித்து மாட்டிய விலங்கு
நாள்தோறும் கட்டிப்போடுகிறது
நான்கு சுவருக்குள் அவளை…
பெருவிரல் தொட்டு வைத்த திலகம்
தீச்சிகையாய் எரிகிறது
விளக்கணையும் இரவுகளில்…!
தாளில் இட்ட கையெழுத்தில்
மாற்றமடையும் முதலெழுத்து…
கறுப்புமை காய்வதற்குள்
மாறிப்போகும் தலையெழுத்தில்
தலையணையை நனைக்கிறது
அக்கினியில் அஸ்தமனமான
சூரியனின் அடுப்படித் தரிசனத்தில்…!
கைக்குட்டைக்குள் மறைந்த
கைதட்டல் காலங்கள்
விறகோடு எரியும்
பூட்டி வைத்த இலட்சியங்களின்
திறவுகோலோடு இணைந்தே
சாம்பலாகின்றது….!
ஆணியோடு கதை பேசும்
நூலறுந்த பட்டங்கள்
நொறுங்கிய கண்ணாடியோடு
ஒட்டிக் கொண்ட வெற்றிச்சின்னங்கள்
வரலாறாகாமல் காவற்கடமைபுரிகின்றன அறையின் மூலைக்குள்…!
புரியாத புதிர்கள் பல மொழியறிந்தும் எழுத்துப்பிழைகளால்
முந்தானையால் மூடிக்கொள்கின்றனர்
சரித்திரம் காணவேண்டிய பல
பல பக்கங்களை…..