மண்புழு!
ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் ஒரு ஓநாய் இருக்கிறான்
மண்புழு மனங் கொண்டோர் யார் இங்கே?
உடலைக் கொழுவில் மாய்த்து உணவூட்ட உயிர் அறுக்கும்
மனிதா உன்னால் இயலுமா?
விவசாயத் தோழனாய் விவசாயிகளுக்குத் தோள் கொடுக்கும்
நீயோ விளைநிலத்தின் மீது விசப்பரீட்சை யல்லவா செய்கிறாய்!
மண்புழு பெண்களை நம்புவதில்லை…
அதனாலென்னவோ இனப்பெருக்கத்தில் ஆணே பெண்ணாய் மாறி இனப்பெருக்கிக் கொள்ளும்
எனினும்,
வெறும் இச்சைப் பொருளாக அல்லவா நீ பெண்ணை உபயோகிக்கிறாய்..
மழைக்காலம் மண்புழுக்கள் பெருக்கெடுக்கும்
ஆனால் அடுத்தவரின் வேலி உடைத்ததில்லை
கற்களுக்கிடையில் கனநாட்கள் குடியிருக்கும்
ஆனால் சொந்த நிலம் கொண்டாடியதில்லை
தொந்தரவு செய்யத் தெரியாத உயிரினம்
மண்புழு!
மண்புழுவைப் பலிக்காதே..
சுதந்திரமாக ஊர்ந்து
செல்லும்
மண்புழுவின் மத்தியில்
மனிதா!
நீயென்றும் ஊனம்தான்…