மாமிச உணவின் மருத்துவப் பயன்கள் – கோழி

0
13211

நமது நாட்டில்‌ ஆட்டு இறைச்சிக்குச்‌ சமமாகக்‌ கோழி இறைச்சியும்‌ அசைவ உணவுப்‌ பழக்கங்‌கொண்ட மக்களால்‌ பெரிதும்‌ விரும்பி உண்ணப்படுகிறது. பறவை இறைச்சிகளில்‌ மக்களால்‌ அதிக அளவில்‌ விரும்பி உண்ணப்படுவது கோழி இறைச்சியே ஆகும்‌.

இக்காலத்தில்‌ கோழி இறைச்சிக்காகச்‌ செயற்கை முறையில்‌ கோழி வளர்ப்பு நவீனப்‌படுத்தப்பட்டுள்ளது. ஆயினும்‌, இந்த நவீன ரகக்‌ கோழிகளுள்‌, சித்த மருத்துவ அடிப்படையில்‌, எந்த அளவு மருத்துவப்‌ பயன்‌ உள்ளது எனக்‌ கூற இயலவில்லை. இருப்பினும்‌, கோழி இறைச்சி’ என நவீன மருத்துவ நூல்களில்‌ குறிப்பிடப்படுவது இந்த நவீன ரகக்‌ கோழி இறைச்சியையே எனக்‌ கொள்வதில்‌ தவறில்லை.

பிற பெயா்கள்‌

கோழிக்குப்‌ பல பெயர்களை நமது நிகண்டு நூல்கள்‌ தெரிவிக்கின்றன. குக்குடம்‌, வாரணம்‌, குருகு, ஆண்டலைப்‌ புள்‌, காலாயுதம்‌, சரணாயுதம்‌, ஞானி, காற்படை, துவசம்‌ என்பன அவற்றுள்‌ சில பெயர்களாகும்‌.

கோழியின்‌ வகைகள்‌

கோழிகளைப்‌ பொதுவாக 1. நாட்டுக்கோழி, 2. அயல்நாட்டுக்‌ கோழி, 3. கலப்பினக்‌ கோழி என்று மூன்றாக வகைப்படுத்தலாம்‌.

நாட்டுக் கோழிகள்‌

இவ்வகைக்‌ கோழிகளுள்‌ கழுகுக்‌ கோழி, கொண்டைக்‌ கோழி, சண்டைக்‌ கோழி, குருவுக்கோழி, கருங்கால்‌ கோழி போன்றவற்றைக்‌ குறிப்பிடலாம்‌.

மேல்நாட்டுக் ‌கோழி வகைகள்‌

வெள்ளை லக்‌உறார்ன்‌, மினார்க்கா, ரோடே ஐலண்ட்‌ ரெட்‌, பிளைமவத்ராக்‌, பிளாக்ஜெர்சிஜயன்ட்‌, லைட்சூசக்ஸ்‌ முதலிய வகைகள்‌ மேல்நாட்டுக்‌ கோழி இனத்தைச்‌ சேர்ந்தவையாகும்‌.

நவீன கலப்பினக்‌ கோழிகள்‌

பாப்காக்‌, டீ ஜே டீ கால்ப்‌, ஹைலைன்‌, போவான்ஸ்‌, காப்‌, ஹப்பர்டு, ஸ்டார்‌ புரோ, இந்தியன்‌ரிவரீ போன்ற வகைகள்‌ நவீனக்‌ கலப்பினக்‌ கோழி வகைகளாகும்‌. மேலே காட்டப்பட்டுள்ள அனைத்து ரகக்‌ கோழிகளுமே நமது நாட்டில்‌ முட்டைக்காகவும்‌, இறைச்சிக்காகவும்‌ மக்களால்‌ வளர்க்கப்பட்டுவருகின்றன.

இருப்பினும்‌ நமது சித்த மருத்துவ குணபாட நூல்களில்‌, கோழிகளைப்‌ பற்றிய குறிப்புகளில்‌ நான்கு வகைக்‌ கோழிகளைப்‌ பற்றி மட்டுமே சொல்லப்பட்டுள்ளன.

கோழி இறைச்சியில்‌ அடங்கியுள்ள சத்துகள்‌

100 கிராம்‌ கோழி இறைச்சியில்‌ 25.9 கிராம்‌ புரதச்‌ சத்தும்‌, 0.6 கிராம்‌ கொழுப்புச்‌ சத்தும்‌, 25மி.கி. சுண்ணாம்புச்‌ சத்தும்‌, 245 மி.கிராம்‌ பாஸ்பரச்‌ சத்தும்‌ அடங்கியுள்ளன.

வைட்டமின்களில்‌, வைட்டமின்‌ – ஏ-யானது 20 மைக்ரோகிராமும்‌, ரிப்போ பிளேவின்‌ 0.14 மி.கிராமும்‌, தயமின்‌ 0.05 மைக்ரோகிராமும்‌, நியாசின்‌ 10.7 மி.கிராமும்‌, கோழி இறைச்சியில்‌ அடங்கியிருப்பதாக நவீன அறிவியல்‌ நூல்கள்‌ தெரிவிக்கின்றன.

கோழி இறைச்சியில்‌ கொழுப்புச்‌ சத்து மிகக்‌ குறைவாக (0.6 கிராம்‌ / 100 கிராம்‌ கோழி இறைச்சி) இருப்பதால்‌, (மாட்டு இறைச்சியில்‌ 2.6 கிராம்‌, வாத்து இறைச்சியில்‌ 4.8 கிராம்‌. புறா இறைச்சியில்‌ 4.9 கிராம்‌, பன்றி இறைச்சியில்‌ 4.4 கிராம்‌. செம்மறியாட்டு இறைச்சியில்‌ 13.3 கிராம்‌ கொழுப்பின்‌ அளவை ஒப்பிடும்‌ பொழுது) இது இரத்த அழுத்தம்‌, கொலஸ்ட்ரால்‌ நோயாளிகளும்‌ விரும்பக்கூடிய அசைவ உணவாக விளங்குகிறது.

100 கிராம்‌ கோழி இறைச்சியை உண்டோமானால்‌. அது நமது உடலுக்கு 109 கலோரி சக்தியை அளிக்கவல்லது என ஆய்வுகள்‌ தெரிவிக்கின்றன.

நமது உடலுக்குத்‌ தேவையான அமினோ அமிலங்கள்‌ அனைத்தும்‌ கோழி இறைச்சியில்‌ உள்ளன என்பதையும்‌ இங்குக்‌ குறிப்பிட்டாக வேண்டும்‌.

கோழி இறைச்சியின்‌ சித்த மருத்துவப்‌ பண்புகள்‌

கோழி இறைச்சிக்குக்‌ காம உணர்வைத்‌ தூண்டும்‌ சக்தி உண்டு. விந்து உற்பத்தியை இது அதிகப்படுத்தும்‌. உடலுறவு ஆற்றல்‌ இந்த இறைச்சியை உண்பதால்‌ அதிகமாகும்‌. உடலை இளைக்கச்‌செய்யும்‌ தன்மையும்‌ இந்த இறைச்சிக்கு உண்டு. இந்த இறைச்சியினை எப்படிப்‌ பக்குவப்படுத்தி உண்டாலும்‌ இதன்‌ மருத்துவப்‌ பண்புகள்‌ மாறாதது ஆகும்‌.

சூடுள்ள கோழி இறைச்சியானது பிற மருந்துகளின்‌ குணப்படுத்தும்‌ ஆற்றலைக்‌ குறைக்கும்‌ தன்மை கொண்டது. மகாவாதம்‌, தேகக்‌ கடுப்பு, மந்தம்‌, மூலம்‌ ஆகிய நோய்களையும்‌ அதிகரிக்கச்‌ செய்யும்‌. கொழுப்புள்ள புண்களும்‌, பித்தமும்‌ இம்மாமிசத்தை உண்பதால்‌ உண்டாகும்‌ என்று கூறுகிறது கீழ்வரும்‌ குணபாடப்‌ பாடல்‌:

“கோழி இறைச்சிநெருப்பாம்‌, கொள்ளின்‌ மருந்துறம்வங்

கூழை கடுப்புமந்தம்‌, கூறரசம்‌ – மாழ்கிப்போம்‌

நீளுற்றபோகம்‌, நிணக்கிரந்தி பித்தமுண்டாம்‌,

தூளித்த மெய்‌இளைக்கும்‌ சொல்‌”

கோழி இறைச்சியின்‌ பொதுப்‌ பண்புகளைக்‌ கண்டோம்‌. இனிச்‌ சித்த மருத்துவ நூல்களில்‌ குறிப்பிடப்பட்ட பிற வகைக்‌ கோழி இறைச்சியின்‌ குணங்களைக்‌ காண்போம்‌.

கருங்கோழி இறைச்சியின்‌ குணம்‌

கருங்கோழிக்குக்‌ கருங்கால்கோழி என்ற பெயரும்‌ உண்டு. கருங்கோழி இறைச்சியால்‌ குட்டநோய்‌ (தொழுநோய்‌) கட்டுப்படும்‌. காணாங்கடி எனப்படும்‌ அரிப்பும்‌ தடிப்புமுள்ள தோல்‌ நோய்‌ குணமாகும்‌. குடற்புழுக்கள்‌ அழியும்‌. வாய்வுக்‌ கோளாறுகள்‌ போகும்‌. கட்டுப்படாத சூலை நோய்கள்‌ கட்டுப்பட்டு மறையும்‌. சிறு சிரங்குகள்‌, புண்கள்‌, காயங்கள்‌ இவற்றை விரைவில்‌ ஆற்றும்‌ சக்தி இக்கருங்கோழி இறைச்சிக்கு உண்டு. இ இறைச்சியை உண்பதால்‌ வலிப்பு நோய்‌ கட்டுப்படும்‌ என்றும்‌, உடல்‌ வலுவடையும்‌ என்றும்‌ கூறப்படுகிறது. இக்கருங்கோழியின்‌ கறியை அடிக்கடி உண்டு வந்தாலும்‌, உடலுக்கு உறுதுணை செய்யும்‌ பண்புகள்‌ மாறாது என்பது அனுபவ மொழியாகும்‌.

 

“குட்டம்‌, கடிகிருமி, கோரவா தக்கூட்டம்‌

மட்டிடாச்‌ சூலைஅறும்‌, மாதரசே! – துட்டக்‌

கிரந்தியொடு புண்வலிபோம்‌ கேள்‌! உடல்‌ உரக்கும்

அருந்துகருங்‌ கோழி இறைச்சி”

என்று கருங்கோழி இறைச்சியின்‌ குணத்தைப்‌ பறைசாற்றுகிறது ஒரு பழம்‌ பாடல்‌.

கானாங்‌ கோழி இறைச்சியின்‌ குணம்‌

கானாங்‌ கோழி இறைச்சியை உண்டால்‌, நெஞ்சுச்‌ சளி, இருமல்‌ ஆகிய நோய்கள்‌ குணமாகும்‌. கரப்பான்‌ எனப்படும்‌ தோல்‌ நோயினைப்‌ போக்கும்‌ குணமும்‌ இந்த இறைச்சிக்கு உண்டு. தவளைச்‌ சொறி, மருக்கள்‌ ஆகியவற்றை இக்கானாங்‌ கோழி இறைச்சியை உண்பதால்‌ கட்டுப்படுத்தலாம்‌. இது பத்தியத்திற்கு உகந்த கறியாகும்‌. இதனையே கீழ்வரும்‌ பாடல்‌ விளக்குகிறது.

“உத்தமமாம்‌ நோய்‌அனைத்தும்‌ ஓடும்‌ இருமல்‌ அறும்‌

பத்தியமாம்‌ கரப்பான்‌ பாறுமே! – முத்த வொளி

தானாம்‌ கனிமொழியே சார்ந்த மறுஅகலும்‌

கானாங்கோ ழி இறைச்சியைக்‌ காண்‌.”

வான்‌ கோழி

வான்‌ கோழி என்பது நமது நாட்டில்‌ மிகப்‌ பழங்காலம்‌ தொட்டே இருந்து வரும்‌ பறவை அல்ல என்பது ஆய்வாளர்கள்‌ முடிவு ஆகும்‌.

இப்பறவை இனமானது துருக்கி நாட்டிலிருந்து இங்கிலாந்திற்கும்‌ பிற ஐரோப்பிய நாடுகளுக்கும்‌, கொண்டுவரப்பட்ட இனமாகையால்‌, அந்த நாட்டின்‌ பெயராலேயே, ‘டர்க்கி’ (Turkey) என ஆங்கிலத்தில்‌ வழங்கப்படுகிறது என்று கூறுவர்‌.

ஐரோப்பியர்‌ வருகையின்‌ போதுதான்‌, இவ்வான்‌ கோழி இனம்‌ இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கு கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும்‌ எனவும்‌ ஆராய்ச்சியாளர்கள்‌ கருதுகின்றனர்‌. 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட எந்தவொரு இலக்கியத்தும்‌, கல்வெட்டுகளிலும்‌, செப்பேடுகளிலும்‌, சிற்பங்களின்‌ உருவங்களிலும்‌, “வான்‌கோழி’ இல்லை என்பதை மேற்கண்ட கருத்துக்குச்‌ சான்றாகக்‌ காட்டுவார்கள்‌. இதனாலேயே,

“கான மயிலாடக்‌ கண்டிருந்த வான்கோழி” என்ற ஒளவையின்‌ பாடல்‌ மிகப்‌ பிற்காலத்தது என்றும்‌, இதனைப்‌ பாடிய ஒளவையார்‌ கி.பி. 1500க்குப்பின்‌ வாழ்ந்தவராதல்‌ வேண்டும்‌ என்றும்‌ அறிஞர்‌ “கால்டுவெல்‌ கருதுவர்‌. (இதனையொட்டித்‌ தமிழறிஞர்‌ தேவநேயப்‌ பாவாணர்‌ ‘ஒளவையார்‌ எனப்‌ பெயர்‌ படைத்த புலவர்கள்‌ எழுவர்‌’ என நிறுவுவார்‌)

வான்கோழியின்‌ வகைகள்‌

வான்கோழிகளுள்‌ பிரான்சு, வொயிட்‌ ஹாலந்து, பார்பான்‌ ரெட்‌, நார்‌ஃபோக்‌, ஸ்லேட்‌, நாரகான்‌ செப்‌, பெல்ட்ஸ்வில்‌ வொயிட்‌ ஆகியவை குறிப்பிடத்தக்க இனங்களாகும்‌. ஆயினும்‌, நமது நாட்டில்‌ பெருவாரியாக வளர்க்கப்படுபவை, பல வகைகளின்‌ கலப்பாகத்‌ தோன்றிய பெரிய கருமையான வான்கோழிகளும்‌, சிறிய வெள்ளை நிற வான்கோழிகளுமேயாகும்‌.

வான்கோழி இறைச்சியில்‌ அடங்கியுள்ள சத்துகள்‌ 100 கிராம்‌ வான்கோழி இறைச்சியில்‌ புரதச்‌ சத்து 29.41 கிராமும்‌, கொழுப்புச்‌ சத்து 3.53 கிராமும்‌ இருக்கின்றன.

பாஸ்பரச்‌ சத்து 218.82 மி.கிராமும்‌, சோடியம்‌ 63.53 மி.கிராமும்‌, பொட்டாசியம்‌ 304.71 மி.கிராமும்‌, சுண்ணாம்புச்‌ சத்து 18.82 மி.கிராமும்‌, இரும்புச்‌ சத்து 1.29 மி.கிராமும்‌ உள்ளன எனவும்‌ ஆய்வுகள்‌ தெரிவிக்கின்றன.

வைட்டமின்களில்‌ தயமின்‌ 0.071 மி.கி, அளவும்‌, ரிப்போஃபிளேவின்‌ 0.13 மி.கிராம்‌ அளவும்‌, நியாசின்‌ 6.82 மி.கிராம்‌ அளவும்‌ 100 கிராம்‌ வான்கோழி இறைச்சியில்‌ அடங்கியுள்ளன.

கொலஸ்ட்ராலின்‌ அளவு 69.41 மி.கிராம்‌ ஆகும்‌.

10௦ கிராம்‌ வான்கோழி இறைச்சியானது நமது உடலுக்குச்‌ சுமார்‌ 159 கலோரி சக்தியை அளிக்கவல்லது.

வான்கோழி இறைச்சியின்‌ சித்த மருத்துவக்‌ குணங்கள்‌

இந்த இறைச்சி அதிகச்‌ சுவையுள்ளதாகும்‌. ஆண்மையைப்‌ புத்துணர்வு பெறவைக்கும்‌ தன்மை இந்த இறைச்சிக்கு உண்டு. வீரியம்‌ வற்றிய ஆண்களுக்கு அதிகப்படியான வீரியத்தை உற்பத்தி ‘ செய்கிறது. இதன்‌ காரணமாகக்‌ காம விருப்பம்‌ அதிகமாகும்‌ என்றும்‌ கூறப்படுகிறது. அடிக்கடி இந்த இறைச்சியை உண்பவர்கள்‌, காம இன்பத்தில்‌ முழுத்‌ திருப்தி அடைவார்கள்‌.

நன்மைகள்‌ இவ்வாறு இருப்பினும்‌, இ இறைச்சிக்குச்‌ சில தீய பண்புகளும்‌ இல்லாமல்‌ இல்லை. இ இறைச்சியினைத்‌ தொடர்ந்து உண்பவர்களுக்குக்‌ கபம்‌ அதிகரிக்கும்‌ என்றும்‌, கரப்பான்‌ எனனும்‌ தோல்‌ நோய்‌ உண்டாகும்‌ என்றும்‌ பதார்த்த குணபாடம்‌ கூறுகிறது.

“போகம்மிகும்‌ மெய்யிற்‌ புளகிதம்வான்‌ கோழிக்கு

ஆகமதில்‌ ஐயம்‌ அதிகமுமாம்‌ தேகம்‌எல்லாம்‌

தானே கரப்பானாம்‌ சாற்ற உரிசையுமாம்‌

தேனே! இதனைத்‌ தெரி.”

கோழிச்‌ சமையல்‌ குறிப்புகள்‌

கோழி இறைச்சியைச்‌ சுத்தப்படுத்துதல்‌ என்பது மிகச்‌ சுலபமானதேயாகும்‌. தலை துண்டிக்கப்‌ பட்ட கோழியைச்‌ சிறிது நேரம்‌, வெந்நீரில்‌ அழுத்திவைத்திருந்து எடுத்து இறகுகளைப்‌ பிடுங்கி நீக்கினால்‌ எளிதாக வேலைமுடியும்‌. பின்‌ சிறிது மஞ்சள்‌ தூளைக்‌ கோழியின்மீது நன்கு தடவி, தீயை நன்கு எரியவிட்டு அத்தீயில்‌ கோழியை வாட்டும்போது நுண்ணிய மயிர்கள்‌ பொசுங்கி விடும்‌. சிறிதுகூட ரோமம்‌ இல்லாது பொசுக்கிய பின்பு, மீண்டும்‌ சிறிது மஞ்சள்‌ தூளைத்‌ தடவிவிட வேண்டும்‌.

இப்படிச்‌ சுத்தம்‌ செய்வதை விரும்பாதவர்கள்‌ முழுக்கோழியின்‌ தோலை உரித்தும்‌ சுத்தம்‌ செய்வதும்‌ உண்டு

பிறகு இரண்டு, தொடைப்‌ பகுதிகளையும்‌, இரண்டு இறக்கைகளையும்‌ தனித்‌ தனியாக அறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்‌. பிறகு வயிறு, நெஞ்சுப்‌ பகுதிகளைப்‌ பிளவு படுத்திக்‌ குரல்வளை முதல்‌ குடல்‌ வரையிலும்‌ மற்றும்‌ நுரையீரல்‌ போன்றவற்றையும்‌ நீக்கிவிட வேண்டும்‌.

தீனிப்‌ பையை இரண்டாகப்‌ பிளந்து அதிலுள்ள சீரணமாகாத உணவுகளை நீக்கிவிட்டு, உட்புறம்‌ ஒட்டியிருக்கும்‌ சவ்வை உரித்து எறிந்துவிட்டு, அதனையும்‌ கறியொடு சேர்த்துச்‌சமைப்பதும்‌ உண்டு.

இதைப்‌ போலவே கல்லீரலையும்‌ (அதனில்‌ ஒட்டியுள்ள பித்தப்‌ பையை உடையாமல்‌ மென்மையாக அறுத்து நீக்கிவிட்டு) கறியொடு சேர்த்துக்கொள்ளலாம்‌.

விருப்பமுள்ளவர்கள்‌, கோழியின்‌ தலையையும்‌ (அலகு முதலியவற்றை நீக்கிவிட்டும்‌, கால்களையும்‌ (நகம்‌, விரல்‌ ஆகியவற்றை நீக்கிவிட்டும்‌ சமையலில்‌ சேர்த்துக்கொள்வதும்‌ உண்டு.

கோழி இறைச்சியைச்‌ சமைப்பதற்கு எத்தனையோ பக்குவமுறைகள்‌ உள்ளன.

பல்வேறுபட்ட வகைகளில்‌, பல்வேறுபட்ட ருசிகளில்‌ கோழி இறைச்சியைச்‌ சமைக்க முடியும்‌. எனினும்‌, இங்கு ஒரு சில சமையல்‌ குறிப்புகளை மட்டும்‌ பார்க்கலாம்‌.

கோழிக்குஞ்சுச்‌ சூப்பு

சூப்பு என்பது பொதுவாக எளிதில்‌ சீரணமடையும்‌ ஓர்‌ உணவு என முன்பே கண்டோம்‌. கோழிக்குஞ்சுச்‌ சூப்பும்‌ எளிதில்‌ சீரணமாகும்‌ ஓர்‌ உணவாகும்‌. இந்தச்‌ சூப்பு உடல்‌ தேற்றியாகவும்‌, மருந்தாகவும்‌, உணவாகவும்‌ செயற்படுகிறது.

சிறப்பாக, பிரசவம்‌ ஆன பெண்களுக்குக்‌ கோழிக்குஞ்சு சூப்பு உண்ணத்‌ தருவது நமது நாட்டுப்‌ பழக்கம்‌. இதற்கு உடலிற்குச்‌ சக்தி தரும்‌ குணம்‌ உண்டு. கபத்தைப்‌ போக்கி, சுவாசம்‌ தொடர்புடைய பிணிகளையும்‌ கட்டுப்படுத்தும்‌ ஆற்றலும்‌ இக்கோழிக்குஞ்சுச்‌ சூப்பிற்கு உண்டு. குஞ்சுக்குப்‌ பதிலாகப்‌ பெரிய கோழியையும்‌ சூப்புக்குப்‌ பயன்படுத்துவதும்‌ உண்டு.

தேவையான பொருள்கள்‌

சுத்தம்‌ செய்த எலும்பொடு கூடிய கோழிக்‌ குஞ்சு இறைச்சி – 500 கிராம்‌

தோல்‌ சீவிய இஞ்சி – 10 கிராம்‌

உரித்த பூண்டு – 2

உரித்து நறுக்கிய வெங்காயம்‌ – 100 கிராம்‌

மஞ்சள்‌ பொடி – 1 ஸ்பூன்‌

மிளகு – 1 ஸ்பூன்‌

சீரகம்‌ – 2 ஸ்பூன்‌

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்துமல்லித்‌ தழை – சிறிதளவு

உப்பு சுவைக்கு ஏற்ப.

செய்முறை

அரிசி கழுவிய கழுநீரில்‌ ஒரு லிட்டர்‌ அளவுக்கு எடுத்து ஒரு பாத்திரத்திலிட்டுக்‌ கொதிக்க வைக்கவும்‌.

சுத்தம்‌ செய்த கோழிக்குஞ்சு இறைச்சியை மர உலக்கையால்‌ பஞ்சுபோல்‌ இடித்து அதில்‌ போடவும்‌. இஞ்சி, பூண்டு இரண்டையும்‌ விழுதாக அரைத்துக்‌ கொதிக்கும்‌ நீரில்‌ சேர்க்கவும்‌.

வெங்காயத்‌ துண்டுகளையும்‌ போட்டு நன்கு வேகவிடவும்‌. கறி வெந்ததும்‌ மிளகு, சீரகம்‌ ஆகியவற்றைப்‌ பொடி செய்து அதில்‌ சேர்க்கவும்‌. தேவையான அளவு உப்பையும்‌ சேர்‌த்து இறைச்சிவேப்பிலை, மல்லித்‌ தழையையும்‌ கிள்ளிப்போட்டு இறக்கிச்‌ சிறிது நேரம்‌ மூடி வைத்திருந்து பிறகு பரிமாறவும்‌.

கோழி இறைச்சி வறுவல்‌

தேவையான பொருள்கள்‌

சுத்தம்‌ செய்த கோழி இறைச்சி – 500 கிராம்‌

மிளகாய்த்‌ தூள்‌ – 2 தேக்கரண்டி

தோல்‌ நீக்கிய இஞ்சி – 1 துண்டு

உரித்த பூண்டு – 2

சோம்பு – 1 தேக்கரண்டி

உரித்துப்‌ பொடியாக நறுக்கிய வெங்காயம்‌ – 10௦ கிராம்‌

சமையல்‌ எண்ணெய்‌ – 500 மி.லி

சுவைக்குத்‌ தகுந்த அளவு உப்பு

கோழி இறைச்சியை அரைப்பதமாக வேக வைக்கவும்‌. தண்ணீரை வடிகட்டி விட்டு இறைச்சியை மட்டும்‌ எடுத்துக்‌ கொள்ளவும்‌.

சோம்பு, பூண்டு, இஞ்சி ஆகியவற்றை விழுதாக அரைத்துக்‌ கொள்ளவும்‌. அவ்விழுதோடு உப்பு, மிளகாய்த்தூள்‌ இரண்டையும்‌ சேர்த்துக்‌ குழப்பிக்‌ கொள்ளவும்‌. இந்த மசாலாவை, முன்பு பக்குவம்‌ செய்து எடுத்து வைத்துள்ள கோழி இறைச்சியொடு சேர்த்துப்‌ பிசறிச்‌ சுமார்‌ 30 நிமிடங்கள்‌ அப்படியே வைத்திருக்கவும்‌.

மசாலாக்‌ காரம்‌ கறியில்‌ இறங்கிய பின்‌, ஒரு வாணலியை அடுப்பில்‌ ஏற்றி, எண்ணெய்‌ ஊற்றிக்‌ காய்ந்தவுடன்‌ பிசறி வைத்திருக்கும்‌ கறியை 6-7 துண்டுகளாகப்‌ போட்டுப்‌ புரட்டிப்‌ புரட்டி வேகவிடவும்‌. கறி பொன்‌ வறுவலாக வெந்ததும்‌ எடுத்துப்‌ பரிமாறவும்‌. இவ்வறுவல் ‌உண்பதற்கு மிகுந்த ருசியுள்ள வறுவலாகும்‌.

வான்கோழி இறைச்சிச்‌ சமையல்‌

தேவையான பொருள்கள்‌

வான்கோழி இறைச்சி – 500 கிராம்‌

உரித்த வெங்காயம்‌ – 10௦ கிராம்‌

உரித்த பூண்டு – 2

பட்டை – 1 துண்டு

அன்னாசிப்‌ பூ – 1

கிராம்பு – 3

பச்சை மிளகாய்‌ – 6

சோம்பு – 72 தேக்கரண்டி

மிளகு – 1 தேக்கரண்டி

வினிகர்‌ – 2 தேக்கரண்டி

ரொட்டி ஸ்லைஸ்‌ – 5

எலுமிச்சம்‌ பழம்‌ – 2 மூடி

நெய்‌ – 6 தேக்கரண்டி

சமையல்‌ எண்ணெய்‌ – 2 தேக்கரண்டி

சுவைக்கு ஏற்ப உப்பு

செய்முறை

வான்கோழி இறைச்சியைச்‌ சுத்தப்படுத்தித்‌ துண்டுகளாக நறுக்கிக்‌ கொள்ளவும்‌. கறித்‌ துண்டுகளில்‌ வினிகரை ஊற்றி நன்றாகப்‌ பிசறி வைக்கவும்‌.

வாணலியை அடுப்பில்‌ வைத்து 2 தேக்கரண்டி நெய்யை ஊற்றி, வெங்காயம்‌, பூண்டு ஆகியவற்றை நறுக்காமல்‌ முழுசு முழுசாகப்‌ போட்டு இரண்டிரண்டாய்‌ அரியப்பட்ட பச்சை மிளகாய்‌, கிராம்பு, பட்டை, அன்னாசிப்‌ பூ ஆகியவற்றையும்‌ போட்டு நன்றாகச்‌ சிவக்கும்‌ வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும்‌.

அதே வாணலியில்‌ வான்கோழி இறைச்சியைப்‌ போட்டுக்‌ கிண்டி மூடி விடவும்‌. கறியில்‌ நீர்‌ சுண்டியபின்‌, சோம்பை வறுத்துத்‌ தூள்‌ செய்து, மிளகுத்‌ தூளுடன்‌ கலந்து கறியில்‌ போட்டு நன்கு கிளறிவிடவும்‌. தேவையான அளவு உப்பை நீரில்‌ கரைத்து இறைச்சியில்‌ விடவும்‌.

கறிநன்கு வெந்து தண்ணீ சுண்டியபின்‌, ரொட்டி ஸ்லைஸ்களை நீரில்‌ ஊறவைத்துப்‌ பிசைந்த, நீரை வடித்துவிட்டு இறைச்சியொடு சேர்த்துக்‌ கிளறவும்‌. இப்போது மீதமுள்ள நெய்யை ஊற்றிக்‌ கிளறிக்கொண்டிருந்து கறி சுருண்டு நெய்‌ பிரிந்த பிறகு எலுமிச்சம்‌ முடியைப்‌ பிழிந்து கிளறி இறக்கிவிடவும்‌. சூட்டொடு பரிமாறினால்‌ சுவையாக இருக்கும்‌.

கோழி இறைச்சிக்‌ கோலா

தேவையான பொருள்கள்‌

எலும்பு நீக்கிச்‌ சுத்தம்‌ செய்த கோழி இறைச்சி – 1/4 கிலோ

பொட்டுக்‌ கடலை – 150 கிராம்‌

தேங்காய்‌ – மூடி

மிளகாய்‌ வற்றல்‌ – 6

உரித்த சிறிய வெங்காயம்‌ – 10

சோம்பு – 1 தேக்கரண்டி

மஞ்சள்‌ தூள்‌ – சிறிதளவு

கறிவேப்பிலை – 1 கொத்து

பூண்டு (உரித்தது) – 1

இஞ்சி – ஒரு துண்டு

சமையல்‌ எண்ணெய்‌ – 300 மி.லி,

உப்பு – சுவைக்கு ஏற்ப

மசாலாப்‌ பொருள்கள்‌ அனைத்தையும்‌, கறியொடு சேர்த்துத்‌ தண்ணீர்‌ ஊற்றாமல்‌ அரைத்துக்கொள்ளவும்‌.

வாணலியில்‌ எண்ணெய்‌ ஊற்றிக்‌ காயவிடவும்‌. காய்ந்ததும்‌ அரைத்து வைத்துள்ள மசாலா இறைச்சிக்கலவையை நெல்லிக்காய்‌ அளவான உருண்டையாக உருட்டி எண்ணெயில்‌ போட்டுப்‌ பொரித்துச்‌ சிவந்த நிறம்‌ வந்தவுடன்‌ எடுத்துப்‌ பரிமாறவும்‌.

மருத்துவக்‌ குறிப்புகள்‌

வீரிய விருத்திக்குக்‌ கோழி இறைச்சிக்‌ குழும்பு

தேவையான பொருள்கள்‌

சுத்தம்‌ செய்த ஒரு கோழியின்‌ கறி – (சுமார்‌) 600 கிராம்‌.

வெண்மை நிறமாகத்‌ தேய்த்துத்‌ தோல்‌ நீக்கிய எள்‌ – 30 கிராம்‌

சுத்தம்‌ செய்த கசகசா – 20 கிராம்‌

இலவங்கப்‌ பட்டை – 1 துண்டு

கிராம்பு – 3

ஏலக்காய்‌ – 2

தோல்‌ உரித்து நறுக்கிய வெங்காயம்‌ – 100 கிராம்‌

இஞ்சி – 1 துண்டு

பச்சை மிளகாய்‌ – 8

தேங்காய்‌ – 1/2 மூடி

மலலித்‌ தழை – சிறிதளவு

நெய்‌ – 20 கிராம்‌

சுவைக்கு ஏற்ப உப்பு

செய்முறை

எள்‌, கசகசா, தேங்காய்‌, பச்சை மிளகாய்‌, உப்பு, இஞ்சி, கொத்தமல்லி இவற்றைச்‌ சிறிது நீர்‌ சேர்த்து நன்றாக மைபோல்‌ அரைத்துக்கொள்ளவும்‌. அரைத்த சாந்தொடு தேவையான அளவு நீர்விட்டுக்‌ குழம்புக்குக்‌ கரைப்பதுபோல்‌ கரைத்துக்கொள்ளவும்‌. வாணலியை அடுப்பில்‌ வைத்து நெய்விட்டு, அரிந்த வெங்காயத்தைப்‌ போட்டு, இலவங்கப்‌ பட்டை, கிராம்பு ஆகியவற்றையும்‌ போட்டு வதக்கவும்‌.

ஏலக்காயைத்‌ தட்டிப்‌ போடவும்‌. வெங்காயம்‌ சிவந்து வரும்போது கோழிக் கறியையும்‌ போட்டு வதக்கிக்‌ கொண்டிருக்கவும்‌, கறியும்‌ பிறவும்‌ வதங்கி, கறி சிவந்து வரும்போது கரைத்து வைத்திருக்கும்‌ குழம்பையும்‌ விட்டு நன்ழாகக்‌ கிண்டி, மூடிவிட்டுச்‌ சிறு தீயாய்‌ எரிக்கவும்‌. இறைச்சி நன்றாய்‌ வெந்து வாசனை வரும்‌ சமயம்‌ இறக்கிவிடவும்‌. இக்குழம்பைச்‌ சோற்றொடு கலந்து உண்டுவந்தால்‌ உடலுறவுச்‌ சக்தி அதிகமாகும்‌ என்பது அனுபவ முறையாகும்‌.

எக்காரணம்‌ கொண்டும்‌ கோழி இறைச்சியைச்‌ சமைக்கும்பொழுது எலுமிச்சம்‌ பழச்‌ சாறு சேர்க்கக்கூடாது என்றும்‌ கூறப்படுகிறது. இது கோழி இறைச்சியின்‌ மருத்துவக்‌ குணத்தை மாற்றிவிடும்‌ என்றும்‌ கருதுகிறார்கள்‌.

கிராணி என்ற வயிற்றோட்டத்திற்குக்‌ கருங்கோழி வதக்கல்‌

தேவையான பொருள்கள்‌

கருங்கோழி (சுத்தம்‌ செய்தது) – 1

சுக்கு – 15 கிராம்‌

மிளகு – 15 கிராம்‌

திப்பிலி – 15 கிராம்‌

ஓமம்‌ – 15 கிராம்‌

பெருங்காயம்‌ – 15 கிராம்‌

சமையல்‌ எண்ணெய்‌ – 50 மி.லிட்‌.

வெடியுப்பு – 3 கிராம்‌

வளையலுப்பு – 3 கிராம்‌

கல்லுப்பு – 3 கிராம்‌

இந்துப்பு – 3 கிராம்‌

கறியுப்பு – 3 கிராம்‌

செய்முறை

‘பஞ்ச லவணம்‌’ என்றும்‌ ‘அஞ்சுப்பு’ என்றும்‌ சொல்லப்படும்‌ மேற்சொல்லிய உப்புகளைக்‌ கலந்து அரைத்துப்‌ பொடியாக்கிக்கொள்ளவும்‌.

‘திரிகடுகம்‌’ என்று சொல்லப்படும்‌ சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும்‌ சுத்தப்படுத்தி இடித்துச்‌ சூரணமாகச்‌ செய்துவைத்துக்‌ கொள்ளவும்‌.

ஓமம்‌ 15 கிராம்‌, பெருங்காயம்‌ 15 கிராம்‌ எடுத்துத்‌ தூசு, தும்பு நீக்கி நன்றாக இடித்துத்‌ திரிகடுகச்‌ சூரணத்துடன்‌ கலந்துகொள்ளவும்‌.

கருங்கோழியின்‌ கறியுடன்‌ சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம்‌ ஆகியவற்றின்‌ சூரணத்தையும்‌, ருசிக்கு ஏற்றவாறு உப்பு(களின்‌) பொடியையும்‌ சேர்த்துப்‌ பிசறிச்‌ சிறிது நேரம்‌ வைத்திருக்கவும்‌.

வாணலியில்‌ எண்ணெய்‌ ஊற்றிக்‌ காயவிடவும்‌. எண்ணெய்‌ காய்ந்ததும்‌ பிசறி வைத்துள்ள கறியைப்‌ போட்டு அடி பிடிக்காமல்‌ வதக்கவும்‌. கறி நன்றாக வெந்ததும்‌ இறக்கிவைத்துக்‌ கொண்டு, தயிர்ச்‌ சோற்றுடன்‌ உட்கொண்டால்‌ கிராணி என்ற வயிற்றோட்ட நோய்‌ குணமாகும்‌.

போர்‌ மாந்தத்திற்குக்‌ கோழி ஈரல்‌ – கல்‌ மருந்து

குழந்தைகளுக்கு வரும்‌ நோய்களுள்‌ மாந்தம்‌ என்பதும்‌ ஒன்று. இந்தநோய்‌ சித்த மருத்துவ நூல்களுள்‌ மூன்று வகை எனவும்‌, எட்டு வகை எனவும்‌, 21 வகை எனவும்‌, 33 வகை எனவும்‌, 43 வகை எனவும்‌ பல்வேறு எண்ணிக்கையில்‌ கூறப்பட்டுள்ளது. இம்மாந்த வகைகளுள்‌ போர்மாந்தம்‌ என்பதும்‌ ஒன்றாகும்‌.

“வயிறு பொருமிக்‌ கழியும்‌, வயிற்றில்‌ புரட்டல்‌ கண்டு வலி ஏற்படும்‌. தாயிடம்‌ பால்‌ உண்ண முடியாது குழந்தை மங்கும்‌. அடிக்கடி குழந்தை மிரளும்‌. குழந்தை வாந்தி செய்யும்‌. கண்கள்‌ குழியும்‌. அதிக நாவறட்சி ஏற்படும்‌. காய்ச்சல்‌ தோன்றும்‌. இதயம்‌ வேகமாகத்‌ துடிக்கும்‌. தலையைப்‌ புரட்டும்‌. சோர்ந்து மயங்கும்‌. நெற்றியில்‌ நரம்பு புடைத்துக்‌ காணப்படும்‌. வயிறு ஊதிக்‌ காணப்படும்‌” இவை போர்‌, மாந்தத்தின்‌ குறி குணங்களாகும்‌.

இதற்குக்‌ கீழ்க்காணும்‌ மருந்து நல்ல பலனைக்‌ கொடுக்கிறது. அதன்‌ செய்முறையைக்‌ காண்போம்‌.

செய்முறை

கோழியின்‌ கல்லீரலில்‌ இருக்கும்‌ கல்லை எடுத்து நீரில்‌ கழுவிக்கொள்ளவும்‌. அதன்‌ எடைக்குச்‌ சமமாகச்‌ சீரகம்‌, மற்றும்‌ கிராம்பு ஆகியவற்றைத்‌ தனித்‌ தனியாக எடையிட்டு எடுத்துக்கொள்‌ளவும்‌.

இம்மூன்று மருத்துப்‌ பொருள்களையும்‌ கல்வம்‌ எனப்படும்‌ மருந்துகள்‌ அரைக்கும்‌ குழி அம்மியில்‌ இட்டுச்‌ சிறிதளவு பசும்பால்‌ சேர்த்துப்‌ பட்டுபோல்‌ மென்மையாக அரைக்கவும்‌.

அரைத்த விழுதில்‌ குன்றி மணி அளவு (110 மி.கி) எடுத்துப்‌ பசுப்பாலில்‌ கரைத்துக்‌ கொடுக்கச்‌ சிறு குழந்தைகளுக்கு ஏற்படும்‌ போர்‌ மாந்தத்தைக்‌ குணப்படுத்தும்‌. இ்து ஓர்‌ அனுபவ முறையாகும்‌.

உடல்‌ வளப்பம்‌ பெறக் கோழிக்கல்‌ மருந்து

கோழியின்‌ கல்லீரலில்‌ காணப்படும்‌ ஒரு வகைக்‌ கல்லைச்‌ சேகரித்துக்‌ கொண்டு வந்து, நீர்விட்டு விழுதாக அரைக்கவும்‌. அரைத்த விழுதைச்‌ சுண்டைக்காய்‌ அளவு காலையிலும்‌ மாலையிலும்‌, ஒரு நாளைக்கு இரு வேளைகள்‌ உண்டு வர நன்கு பசி எடுக்கும்‌; உடல்‌ செழுமை பெறும்‌.

கபம்‌ என்னும்‌ நெஞ்சுச் சளி கறைய

கோழிச்‌ சூப்பை, மிளகு, சீரகம்‌ போன்றவற்றைச்‌ சற்றுத்‌ தூக்கலாகப்‌ போட்டுக்‌ காரசாரமாக வைக்கவும்‌. அதனை ஒரு கோப்பையில்‌ பாதியளவு எடுத்துக்கொண்டு அதனொடு சம அளவு ‘பிராந்தி’ (என்ற மதுவகை)யையும்‌ சேர்த்து அருந்தினால்‌ கபம்‌ கரையும்‌.

மூலநோயைத்‌ தீர்க்கும்‌ கருங்கோழி வதக்கல்‌

கருங்கோழி என்பது நாட்டுக்‌ கோழி வகைகளுள்‌ ஒன்றாகும்‌. ஒரு நாட்டுக்‌ கோழி பொரிக்கும்‌ 10-15 குஞ்சுகளுள்‌ ஒன்று கருஞ்கோழிக்‌ குஞ்சாக இருப்பதும்‌ உண்டு. இக்கோழிக்‌ குஞ்சின்‌ கால்‌, அலகு போன்றவை கருமை நிறமாக இருப்பதால்‌, இதற்குக்‌ “கருங்கால்‌ கோழி’ என்ற பெயரும்‌ உண்டு. இதன்‌ கறியும்‌ கருமை நிறமாகவே இருககும்‌. இக்கோழியின்‌ கறியைக்‌ கொண்டு தயாரிக்கும்‌ வதக்கல்‌ மூல நோய்க்கு ஒரு நல்ல மருந்தாகச்‌ செயற்படுகிறது. அதன்‌ செய்முறை பின்வருமாறு:

தேவையான பொருள்கள்‌

பெட்டைக்‌ கருங்கோழியின்‌ மாமிசம்‌ – 500 கிராம்‌

வயல்‌ நத்தை மாமிசம்‌ – 500 கிராம்‌

கடற்‌ கிளிஞ்சல்‌ (அ) ஆற்றுக்‌ கிளிஞ்சல்‌ மாமிசம்‌ – 500 கிராம்‌

மிளகு – 50 கிராம்‌

சீரகம்‌ – 25 கிராம்‌

மஞ்சள்‌ தூள்‌ – 5 தேக்கரண்டி

தேவையான அளவு உப்பு

‘நத்தை’ என்னும்‌ தலைப்பில்‌ நத்தையைச்‌ சுத்தப்படுத்தும்‌ முறையும்‌ ‘கிளிஞ்சல்‌’ என்னும்‌ தலைப்பில்‌ கிளிஞ்சலைச்‌ சுத்தப்படுத்தும்‌ முறையும்‌ கூறப்பட்டுள்ளன. அதன்படி நத்தை, கிளிஞ்சல்‌ ஆகியவற்றைச்‌ சுத்தப்படுத்தி அதன்‌ கறிகளை வகைக்கு 500 கிராம்‌ வீதம்‌ சேகரித்துக்‌ கொள்ளவும்‌. கருங்கோழியையும்‌ சுத்தப்படுத்தி எலும்புகளை நீக்கி அதன்‌ மாமிசமும்‌ 500 கிராம்‌ எடுத்துக்கொள்ளவும்‌.

மிளகு, சீரகம்‌ ஆகியவற்றை நன்றாக அரைத்துத்‌ தூளாக்கிக்கொண்டு, மஞ்சள்‌ பொடி, தேவையான அளவு உப்பையும்‌ சேர்த்துக்‌ கலந்துகொள்ளவும்‌.

முன்பு சுத்தம்‌ செய்து வைத்திருக்கும்‌ மூன்று கறிகளையும்‌ ஒன்றாகக்‌ கலந்து அதில்‌ முன்‌ சொல்லிய மிளகு, சீரகப்‌ பொடிக்‌ கலவையைப்‌ பிசறி 3 மணி நேரம்‌ ஊறவைத்து, எடுத்து நல்ல வற்றலாகக்‌ காய வைத்துப்‌ பத்திரப்படுத்திக்‌ கொள்ளவும்‌. இந்த வற்றலைத்தான்‌ தேவையான பொழுது எடுத்து வதக்கல்‌ தயாரித்து உண்ண வேண்டும்‌. அதன்‌ பக்குவம்‌ வருமாறு:

தேவையான பொருள்கள்‌

ஆயில்‌ பட்டைச்‌ சாறு – 500 மிலி

உரித்து நறுக்கிய வெங்காயம்‌ – 100 கிராம்‌

பட்டை – ஒரு துண்டு

கிராம்பு – 2

சமையல்‌ எண்ணெய்‌ – 2 தேக்கரண்ட

செய்முறை

மாமிச வற்றல்களைத்‌ தேவையான அளவு எடுத்து ஆயில்‌ பட்டைச்‌ சாற்றில்‌ வேக வைக்கவும்‌.

வாணலியில்‌ எண்ணெய்‌ விட்டுப்‌ பட்டை கிராம்பு போட்டு நன்கு வறுத்து, வெங்காயத்தைப்‌ போட்டு வதக்கவும்‌. வெங்காயம்‌ நனகு வதங்கியதும்‌, வேகவைத்த மாமிச வற்றல்களைச்‌ சேர்த்து ரசிக்கத்‌ தகுந்த அளவு உப்பும்‌ சேர்த்து வதக்கி இறக்கவும்‌.

இரண்டு மூன்று நாள்களுக்கு ஒரு முறை இந்த வதக்கலைத்‌ தயாரித்துச்‌ சூடுள்ள அரிசி சோற்றுடன்‌ கலந்து பிசைந்து உண்டு வந்தால்‌ மூலநோய்‌ ஒழியும்‌. இஃது ஓர்‌ அனுபவ முறையாகும்‌.

வாத நோய்களுக்குக்‌ கருங்கோழித்‌ தைலம்‌

தேவையான பொருள்கள்‌

விடைப்‌ பருவமுள்ள கருங்கோழி – 1

வெண்‌ கடுகு – 800 கிராம்‌

வேப்பெண்ணெய்‌ – 500 மி.லி.

முற்றிய தேங்காயின்‌ தனிப்பால்‌ – 500 மி.லி

குஞ்சுப்‌ பருவத்திலிருந்து மாறி முதன்‌ முதலாக முட்டையிடும் பருவமடைந்த கோழியை விடைக்கோழி எனக்‌ கூறுவார்கள்‌.

விடைப்‌ பருவமுள்ள கருங்கோழியைக்‌ கொண்டு வந்து தலை, கால்‌, இறகு ஆகியவற்றை நீக்கிச்‌ சுத்தப்படுத்தவும்‌. வயிற்றைக்‌ கீறி வயிற்றிலுள்ள குடல்‌ போன்றவற்றை நீக்கி அதன்‌ கொள்ளளவு வெண்கடுகை நிரப்பவும்‌.

அப்படியே கடுகொடு, கோழியைக்‌ கல்லுரலில்‌ இட்டு மர உலக்கையால்‌ நைய இடிக்கவும்‌. இடித்த கறியையும்‌ கடுகையும்‌ ஒரு புதிய வாயகன்ற மண்சட்டியில்‌ இட்டு அதனொடு வேப்பெண்ணெய்‌, தேங்காய்ப்‌ பால்‌ ஆகியவற்றையும்‌ சேர்த்து அடுப்பிலேற்றி, இலுப்பை விறகு, அல்லது புளிய மர விறகால்‌ சிறு தீயாக எரிக்கவும்‌.

எண்ணெய்‌ காயக்‌ காய இறைச்சி சிவந்து எண்ணெய்‌ பிரிந்து வரும்‌. அந்தச்‌ சமயத்தில்‌ ஒரு சட்டுவத்தினால்‌ கசண்டை அழுத்திக்கொண்டு தைலத்தை வடிகட்டி எடுத்துப்‌ பத்திரப்படுத்தவும்‌.

பயன்பாடு: வெளிப்‌ பிரயோகத்திற்கு மட்டும்‌. நோயுள்ள இடத்தில்‌ ஒரு நாளைக்கு இரு முறை நன்கு சூடு பறக்கத்‌ தேய்க்கவும்‌.

தீரும்‌ நோய்கள்‌: பாரிச வாயு, முடக்குவாதம்‌, குடைச்சல்‌ வலி ஆகியவை.

சொறி, சிறங்கு, கிரந்திப்‌ புண்களுக்குக்‌ கருங்கோழிச்‌ சூரணம்‌

தேவையான பொருள்கள்‌

கருங்கோழி – 1

சதுரக்‌கள்ளி – 150௦ கிராம்‌

மிளகு, சீரகம்‌, சுக்கு, ஓமம்‌, திப்பிலி – 2௦ கிராம்‌

சாதிக்காய்‌, சாதிப்பத்திரி, கிராம்பு குராசானி ஓமம்‌ வகைக்கு – 5 கிராம்‌

கோஷ்டம்‌, அதிமதுரம்‌, கடுகுரோகிணி வகைக்கு – 1௦ கிராம்‌

செய்முறை

கருங்கோழியைக்‌ கொண்டுவந்து தலை, கால்‌, இறகு ஆகியவற்றை நீக்கிச்‌ சுத்தப்படுத்தவும்‌. வயிற்றைக்‌ கிழித்துக்‌ குடல்‌, தீனிப்பை, நுரையீரல்‌ ஆகியவற்றையும்‌ நீக்கிவிடவும்‌.

சதுரக்கள்ளி தவிர மருந்துச்‌ சரக்குகள்‌ அனைத்தையும்‌ கல்லுரலில்‌ இட்டு நன்றாக இடித்துத்‌ துணியில்‌ சலித்து (வஸ்திர காயம்‌ செய்து) எடுத்து வைத்துக்கொள்ளவும்‌.

கருங்கோழியின்‌ வயிற்றில்‌ இடித்து வைத்திருக்கும்‌ மருந்துப்‌ பொருள்களின்‌ சூரணத்தை நன்றாகத்‌ திணித்து வயிற்றை நூலால்‌ தைத்துவிடவும்‌. ஒரு புது மண்பானையில்‌ சுமார்‌ 10 லிட்டர்‌ நீர்‌ விட்டுச்‌ சதுரக்‌ கள்ளியைச்‌ சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, அப்பானை நீரில்‌ போட்டு ஒரு மெல்லிய வெள்ளைத்‌ துணியால்‌ பானையின்‌ வாயை முடிக்‌ கட்டவும்‌.

வயிறு தைக்கப்பட்ட கோழியை வேடு கட்டப்பட்டுள்ள துணியின்‌ மீது வைக்கவும்‌. முழுக்‌ கோழியையும்‌ தாராளமாக மூடக்கூடியதாகவும்‌ பானையின்‌ வாய்க்குச்‌ சம அளவான வாய்ப்பகுதியை உடையதாகவும்‌ உள்ள ஒரு புது மண்‌ சட்டி கொண்டு கோழியை மூடவும்‌.

பானையை அடுப்பில ஏற்றிச்‌ சுமார்‌ மூன்று மணி நேரம்‌ அடுப்பை எரியவிடவும்‌.

சதுரக்‌ கள்ளி நீராவியில்‌ கோழி நன்றாக வெந்ததும்‌ கோழியை எடுத்து வயிற்றிலுள்ள தையலைப்‌ பிரித்து மருந்துச்‌ சரக்குகளை உதிர்த்து நிழலில்‌ உலரவைக்கவும்‌. கூடவே கோழியின்‌ எலும்புகளை நீக்கிவிட்டு மாமிசத்தையும்‌ நிழலில்‌ உலர்த்தவும்‌.

மருந்துச்‌ சரக்குகளும்‌ கோழி மாமிசமும்‌ நன்கு உலர்ந்தவுடன்‌ கல்லுரலில்‌ இட்டு இடித்துச்‌ சலித்து எடுத்துப்‌ பத்திரப்படுத்திக்கொள்ளவும்‌.

அளவு: மூவிரல்‌ கொள்ளவு; ஒரு நாளைக்கு இருவேளை.

காலம்‌: (அரை மண்டலம்‌) 24 நாள்களுக்கு மட்டும்‌.

தீரும்‌ நோய்கள்‌: சொறி, சிரங்கு, கிரந்தி, அரையாப்பு, புரை, புண்‌, சூலைக்‌ கட்டு, நோய்கள்‌ தீரும்‌.

கோழி முட்டை

நமது நாட்டு மக்களுக்குக்‌ காய்‌ கறிகளைப்‌ போன்றே கோழி முட்டையும்‌ ஒரு அன்றாட உணவுப்‌ பொருளாகிவிட்டது.

கோழி முட்டை ஓர்‌ அசைவ உணவு என்ற கருத்து கொஞ்சம்‌ கொஞ்சமாகப்‌ பின்னுக்குத்‌ தள்ளப்பட்டுவருகிறது. முட்டைக்காக வளர்க்கப்படும்‌ நவீன ரகக்‌ கோழிகளின்‌ முட்டைகள்‌ உட்கரு இல்லாமல்‌ இருப்பதாலும்‌, அடைவைத்தால்‌ குஞ்சுகள்‌ உற்பத்தியாகாததாலும்‌, இது சைவ உணவுதான்‌ என்ற கருத்தும்‌ மேலோங்கி வருகிறது. மரபு வழி சைவ உணவு அருந்தும்‌ பழக்கமுடைய பலர்‌, (உட்கரு வற்ற) கோழி முட்டைகளையும்‌, மாட்டுப்‌ பாலைப்‌ போன்ற ஒரு சைவ உணவே எனக்‌ கருதத்‌ தொடங்கியுள்ளனர்‌.

அரசு தொடங்கிவைத்த, நடவடிக்கைகளினால்‌ நமது நாட்டில்‌ எல்லா இடங்களிலும்‌ மிகத்‌ தாராளமாகக்‌ கோழி முட்டைகள்‌ கிடைக்கின்றன.

கோழி முட்டையில்‌ அடங்கியுள்ள சத்து‌கள்‌

100 கிராம்‌ கோழி முட்டையில்‌ புரதச்‌ சத்தும்‌ கொழுப்புச்‌ சத்தும்‌ சம அளவில்‌ உள்ளன. அதாவது புரதம்‌ 13.3 கிராமும்‌, கொழுப்பு 13.3 கிராமும்‌ உள்ளன.

உலோகச்‌ சத்துகளான சுண்ணாம்புச்‌ சத்து 0.06 கிராமும்‌, பாஸ்பரச்‌ சத்து 0.22 கிராமும்‌, மக்னீசியம்‌ 12 மி.கிராமும்‌, சோடியம்‌ 129 மி.கிராமும்‌ பொட்டாசியம்‌ 145 மி.கிராமும்‌, இரும்புச்சத்து 2.1 மி.கிராமும்‌, தாமிரச்‌ சத்து 0.03 மி.கிராமும்‌ துத்தநாகச்‌ சத்தானது 1.8 மி. கிராமும்‌ உள்ளன.

வைட்டமின்களில்‌, கரோட்டின்‌ 600 மைக்ரோகிராமும்‌, ரெட்டினால்‌ 360 மைக்ரோ கிராமும்‌ தயமின்‌ 0.1 மிலிகிராமும்‌, ரிபோஃபிளேவின்‌ 0.4 மி.கிராமும்‌ நியாசின்‌ 0.1 மி.கிராமும்‌ வைட்டமின்‌- பி6 -0.25 மி.கிராமும்‌, வைட்டமின்‌ – பி12 – 1.8 மி.கிராமும்‌ அடங்கியிருக்கின்றன.

கொலஸ்ட்ராலைப்‌ பொறுத்தவரையில்‌ 100 கிராம்‌ முட்டையில்‌ 498 மி.கிராம்‌ உள்ளது. அதிலும்‌ மஞ்சள்‌ கருவில்‌ மட்டுமே கொலஸ்ட்ரால்‌ உண்டு என்றும்‌ (100 கிராம்‌ மஞ்சள்‌ கருவில்‌ 1330 மி.கிராம்‌ கொலஸ்ட்ரால்‌ அடங்கியுள்ளது என்றும்‌) வெள்ளைக்‌ கருவில்‌ கொஞ்சம்கூடக்‌ கொலஸ்ட்ரால்‌ இல்லை என்றும்‌ ஆய்வுகள்‌ தெரிவிக்கின்றன.

100 கிராம்‌ முட்டை உணவானது நமது உடலுக்கு 173 கலோரிச்‌ சக்தியை அளிக்கவல்லது.

சித்த மருத்துவக் குணங்கள்‌

சித்த மருத்துவத்தில்‌ இதற்குச்‌ சிற்றண்டம்‌ என்ற பெயரும்‌ உண்டு. தாது புஷ்டி உண்‌டாக்கும்‌ சக்தி முட்டைக்கு உண்டு. புண்களை ஆற்றும்‌ சக்தி இதற்கு உண்டு என்றும்‌ கூறப்‌படுகிறது. கபத்தைப்‌ போக்கும்‌. ஆயினும்‌, நமது உடலுக்குச்‌ சில தொல்லைகளையும்‌ முட்டை உண்டாக்கும்‌ இயல்பு கொண்டது. கரப்பான்‌ என்னும்‌ தோல்‌ நோயை முட்டை அதிகப்படுத்தும்‌ எனவும்‌, வாய்வுத்‌ தொல்லைகளை முட்டை உண்டாக்கும்‌ எனவும்‌ கூறப்படுகிறது.

மேலும்‌ முட்டையின்‌ ஓட்டிற்கும்‌ சில மருத்துவக்‌ குணங்கள்‌ உண்டு எனச்‌ சித்த மருத்துவ நூல்கள்‌ செப்புகின்றன.

முட்டைகளைப்‌ பரிசோதித்தல்‌

முட்டைகளில்‌ நாட்டுக்‌ கோழி முட்டைகள்‌, பண்ணைக்‌ கோழி முட்டைகள்‌ என மக்கள்‌ வகைப்படுத்தியுள்ளனர்‌. நாட்டுக்‌ கோழி முட்டைகள்‌ பண்ணைக்கோழி முட்டைகளைவிடச்‌ சத்துகள்‌ அதிகம்‌ கொண்டவை என்ற ஒரு தவறான கருத்து நம்மிடையே நிலவிவருகிறது. சத்துகளைப்‌ பொறுத்தவரையில்‌ இரண்டு வகை முட்டைகளிலும்‌ சம அளவிலேயே உள்ளன என்பதே அறிவியல்‌ உண்மையாகும்‌.

முட்டைகளை வாங்கும்போது, “அது கெட்டுவிட்டதா? இல்லையா?’ எனப்‌ பார்த்து நல்ல முட்டைகளையே வாங்குவது நம்மை நட்டத்திலிருந்து தவிர்க்கும்‌. முட்டைகளைப்‌ பரிசோதிக்கக்‌ கீழ்க்காணும்‌ முறைகள்‌ கடைப்பிடிக்கப்படுகின்றன.

  1. முட்டைகளைக்‌ காதருகில்‌ ஆட்டிப்பார்த்தால்‌, கெட்ட முட்டையாக இருந்தால்‌ உள்ளே உள்ள திரவம்‌ [கொட கொட’ என்று ஆடும்‌ ஒலி கேட்கும்‌. நல்ல முட்டையில்‌ அவ்வாறு ஒலி கேட்காது.
  2. முட்டை நாள்பட்டுப்‌ பழசாக இருந்தால்‌ அதன்‌ ஓடு பார்ப்பதற்கு மினுமினுப்பாக இருக்கும்‌. புதிய முட்டைகளின்‌ ஓடு சிறிது மங்கலாக (டல்லாக) மினுமினுப்பின்றி இருக்கும்‌.
  3. ஒரு பாத்திரத்தில்‌ நிறைய நீர்‌ விட்டு அதில்‌ முட்டைகளைப்‌ போட்டுப்‌ பார்த்தால்‌ அதிகமாகக்‌ கெட்டுப்போன முட்டை நீரில்‌ மிதக்கும்‌. நாள்பட்ட முட்டைகள்‌ பாத்திரத்தின்‌ அடியில்‌ நிமிர்ந்து நிற்கும்‌. புதிய முட்டையாக இருந்தால்‌, நாம்‌ நீரில்‌ போட்டதும்‌ போட்டதைப்‌ போலவே படுக்கைவசத்தின்‌ அடியில்‌ கிடக்கும்‌.
  4. முட்டையை உடைத்துப்‌ பார்க்கும்போது அதில்‌ ஏதேனும்‌ கறுப்பு நிறமோ அல்லது, கறுப்புப்‌ புள்ளிகளோ தென்படுமானால்‌ அது கெட்டுப்போன முட்டை என்றும்‌, கறுப்பு நிறம்‌ அல்லது புள்ளிகள்‌ இல்லையென்றால்‌ அது நல்ல முட்டை என்றும்‌ புரிந்து கொள்ளலாம்‌.

முட்டைகளைக்‌ கெடாமல்‌ நீண்ட நாட்கள்‌ பாதுகாத்தல்‌

  1. முட்டை ஓட்டிலுள்ள நுண்ணிய துளைகள்‌ வழியாகக்‌ காற்று புகுவதால்தான்‌ முட்டைகள்‌ விரைவில்‌ கெட வாய்ப்பு ஏற்படுகிறது. முட்டையின்‌ ஓட்டின்மீது, வாஸ்லைன்‌ அல்லது பன்றி நெய்‌ தடவி ஒன்றோடொன்று தொடாதவாறு வைத்திருந்தால்‌ பல நாள்கள்‌ முட்டையைக்‌ கெடாது பாதுகாக்கலாம்‌.
  2. முட்டைகளை அதன்‌ கூர்முனை மேல்‌ நோக்கி இருக்குமாறு நிற்க வைப்பதால்‌ சில நாள்கள்‌ வரை கெடாது பாதுகாக்கலாம்‌.
  3. சுண்ணாம்பு தாளித்த நீரில்‌ முட்டைகளை அமிழ்த்தி வைத்திருந்தாலும்‌ கெடாது.
  4. ஒரு மரப்பெட்டியில்‌ ஈரமற்ற சுத்தமான சமையல்‌ உப்பைக்‌ கொட்டி அதன்மீது முட்டைகளை ஒன்றோடொன்று தொடாதவாறு வைத்து, அம்‌ முட்டைகளை மூடுமளவுக்கு மீண்டும்‌ உப்பைக்‌ கொட்டி, மறுபடியும்‌ ஒரு வரிசை முட்டைகளை வைத்து மீண்டும்‌ உப்பைக்‌ கொட்டி, இவ்வாறு உப்பு – முட்டை – போட்டு அடுக்கி வைத்துவிடலாம்‌. வேண்டும்போது ஆணியை நீக்கித்‌ தேவையான முட்டைகளை எடுத்துக்‌ கொண்டு மீண்டும்‌ ஆணிபோட்டு வைத்துவிட வேண்டும்‌. இந்த முறையில்‌ பல நாள்கள்‌ முட்டையைக்‌ கெடாது பாதுகாக்கலாம்‌.

இம்முறையில்‌ உப்பானது முட்டையில்‌ உள்ள நீரை உறிஞ்சிவிடும்‌. ஆகையால்‌ வெள்ளை, மஞ்சள்‌ ௧ரு சிறிது ஆடுவதுபோல்‌ தெரியும்‌. இதனால்‌ முட்டை கெட்டுவிட்டது எனக்‌ கருதிவிட வேண்டாம்‌.

முட்டைகளை உடைத்து; அவை கெட்டுவிடவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு வாணலியில்‌ ஊற்றி நன்கு கிளறிக்‌ கொண்டிருக்கவும்‌. ஓரளவு வெந்த முட்டை வாசனை வரும்‌ சமயத்தில்‌ மல்லித்‌ தழையை நறுக்கிப்‌ போட்டுக்‌ கிளறி இறக்கிவைக்கவும்‌. இதுவே முட்டைப்‌ பொரியல்‌ அல்லது முட்டைப்‌ பொடிமாஸ்‌ எனப்படும்‌.

மருத்துவக்‌ குறிப்புகள்‌

இது வரையில்‌, கோழி முட்டையில்‌ அடங்கியுள்ள சத்துகள்‌, சித்த மருத்துவக்‌ குணங்கள்‌ ஆகியவற்றைக்‌ கண்டோம்‌. முட்டையைக்‌ கொண்டு செய்யப்படும்‌ சில உணவுப்‌ பொருள்களின்‌ பக்குவ முறைகளையும்‌ பார்த்தோம்‌. இனி, முட்டையைப்‌ பயன்படுத்தித்‌ தயாரிக்கப்படும்‌ சில சித்த மருந்துகளையும்‌, பிற மருந்துக்‌ குறிப்புகளையும்‌ காணலாம்‌.

விற்றுப்‌ புண்‌, வாந்தி குணமாக முட்டை மருந்து

ஒரு முட்டையின்‌ வெள்ளைக்‌ கருவை மாத்திரம்‌ தனியே பிரித்தெடுத்து ஒரு கண்ணாடிச்‌ சீசாவில்‌ (பாட்டிலில்‌) ஊற்றிக்‌ கொள்ளவும்‌. அதனுடன்‌ கொதித்து ஆறிய சுத்தமான நீரை 50 மி.லிட்டர்‌ அளவிற்குச்‌ சேர்க்கவும்‌. பாட்டிலை இறுக்கமாக மூடி நன்றாகக்‌ குலுக்கவும்‌.

நீரும்‌ வெள்ளைக்‌ கருவும்‌ இணைந்து உறவான பதத்தில்‌ பத்திரப்படுத்திக்‌ கொண்டு கொஞ்சம்‌ கொஞ்சமாக அடிக்கடி நாள்‌ முழுவதும்‌ இதனை உண்ணச்‌ செய்யவும்‌. வயிற்றிலுள்ள புண்களை ஆற்றும்‌ சக்தி இவ்வெள்ளைக்‌ கருவிற்கு உண்டு என்பது அனுபவபூர்வ உண்மையாகும்‌.

மேலும்‌, இவ்வயிற்றுப்புண்‌ காரணமாக ஏற்படும்‌ வாந்தியையும்‌ இது குணப்படுத்தும்‌.

வாய்ப்‌ புண்‌ குணமாகக்‌ கொப்புளிக்கும்‌ நீர்‌

முன்‌ கூறியபடி முட்டையின்‌ வெண்‌ கருவோடு 500 மிலி கொதித்து ஆறிய நீர்‌ சேர்த்துக்‌ கலக்கிக்‌ கொள்ளவும்‌. நன்றாகக்‌ கலந்து பின்பு மேலும்‌ 500 மி.லிட்டர்‌ கொதித்து ஆறிய நீரைச்‌ சேர்க்கவும்‌. அதில்‌ 100 கிராம்‌ படிகாரத்தைத்‌ (சீனா காரம்‌ என்றும்‌ சொல்வார்கள்‌) தூளாகப்‌ பொடித்துப்‌ போட்டு நன்றாகக்‌ கலக்கவும்‌. படிகாரம்‌ நன்‌கு கரைந்த பின்‌ அந்நீரில்‌ அடிக்கடி வாய்‌ கொப்புளித்துக்கொண்டு வந்தால்‌ விரைவில்‌ வாய்ப்‌ புண்கள்‌ ஆறும்‌.

பாதரச விஷத்தினால்‌ ஏற்பட்ட வாய்ப்‌ புண்களையும்‌ ஆற்றும்‌ சக்தி இந்நீருக்கு உண்டு.

மயில்‌ தூத்தம்‌, சவ்வீரம்‌ (வீரம்‌ உண்டவர்களுக்கு விஷ முறிவு

தெரிந்தோ, தெரியாமலோ சிலர்‌ மயில்‌ துத்தம்‌ (காப்பர்‌ சல்பேட்‌), சவ்வீரம்‌ முதலிய விஷங்களை உண்டுவிடுவார்கள்‌. இவ்விஷத்தின்‌ வீறு தணிப்பதற்கு முட்டையின்‌ வெள்ளைக்‌ ௧ரு முறிவு மருந்தாகச்‌ செயல்படுகிறது.

இவ்வாறு முன்‌ சொல்லிய விஷமுண்டவர்களுக்கு முட்டையின்‌ வெள்ளைக்‌ கருவைக்‌ கொஞ்சம்‌ கொஞ்சமாகக்‌ கொடுத்துக்‌ கொண்டு வர விஷத்தின்‌ வேகம்‌ தணியும்‌. மேலும்‌, இக்காரணத்தால்‌ உண்டாகும்‌ வாந்தி, பேதி, தேக எரிச்சல்‌ ஆகியவற்றைக்‌ குணப்படுத்தும்‌ ஆற்றலும்‌, முட்டையின்‌ வெள்ளைக்‌ கருவிற்கு உண்டு.

வெள்ளைப்‌ பாஷாண நஞ்சு முறிப்புக்கு முட்டை மருந்து

வெள்ளைப்‌ பாஷாணம்‌ ( Arseni0us acid, white arsenic) ஒரு கடும்‌ விஷமாகும்‌. இதற்குச்‌ சித்த மருத்துவத்தில்‌ பல்வேறு பயன்பாடுகள்‌ குறிப்பிடப்படுகின்றன. எனினும்‌, தற்கொலை செய்து கொள்வதற்கே அதிகமாகக்‌ கையாளுகிறார்கள்‌. இது சிறு அளவிலேயே மரணத்தைக்‌ கொண்டு வரக்‌ கூடியதாகும்‌.

இவ்விஷத்தை உண்டால்‌ இரத்த முறிவு ஏற்பட்டுச்‌ சிரங்கு, மற்றும்‌ கொப்புளங்களைத்‌ தோற்றுவிக்கும்‌. கை, கால்‌ விரல்கள்‌ மடங்கி விகாரமாகும்‌. முகம்‌ வீங்கும்‌. மூக்கு வீங்கிப்பூதம் போல்‌ காட்சி தரும்‌. மேலண்ணம்‌, உதடும்‌, நாக்கு ஆகியவை தடித்துப்‌ பேச இயலாது போகும்‌. வாயிலிருந்து நீர்‌ வடியும்‌. வயிற்றில்‌ எரிச்சல்‌, வாந்தி, பேதி, இவற்றில்‌ இரத்தம்‌ கலந்து வருதல்‌,நீரடைப்பு, அதிக தாகம்‌, மூச்சுத்‌ திணறல்‌, அதிக வியர்வை, வாய்‌ பிதற்றல்‌, அறிவு மழுங்கல்‌, தலைநோய்‌, மயக்கம்‌ ஆகியவற்றுடன்‌ உடல்‌ வீங்கி மரணம்‌ நிகழும்‌.

இவ்வாறான கொடிய துன்பங்களைத்‌ தந்து மரணத்தை அளிக்கும்‌ வெள்ளைப்‌ பாஷாண நஞ்சுக்கு முறிவு மருந்தாக முட்டை பயன்படுகிறது.

வெள்ளைப்‌ பாஷாணம்‌ தெரிந்த உடனேயே முட்டையின்‌ வெள்ளைக்‌ கருவையும்‌ (பால்‌ கலவாத) தேநீரையும்‌ கலந்து நன்றாக அடித்து ஆற்றி அடிக்கடி பருகக்‌ கொடுத்துவந்தால்‌ நல்ல பலன்‌ கிடைக்கும்‌.

அவுரி வேர்‌, முசுமுசுக்கை வேர்‌, ஏலக்காய்‌, படிக்காரம்‌ வகைக்கு 10 கிராம்‌ வீதம்‌ எடுத்து இடித்து 2 லிட்டர்‌ நீர்‌ விட்டு 1/4 லிட்டர்‌ அளவிற்கு வற்றக்‌ காய்ச்சி வேளைக்கு 100 மி.லி. வீதம்‌ 30 நிமிடத்திற்கு ஒரு முறை 5-6 தினங்கள்‌ கொடுக்க வேண்டும்‌. இடையிடையில்‌ முட்டையின்‌ வெள்ளைக்‌ கருவும்‌ தேநீரும்‌ நன்றாக அடித்து ஆற்றிப்‌ பருகக்‌ கொடுத்து வரவும்‌ வேண்டும்‌. இவ்விஷம்‌ உண்டவர்களுக்கு வெள்ளாட்டுப்‌ பால்‌, இளநீர்‌, தாய்ப்பால் போன்றவற்றையே உணவாகக்‌ கொள்ளுதல்‌ அவசியம்‌.

சவ்வீரம்‌, மயில்‌ துத்தம்‌ உண்டவர்களுக்கும்‌ விஷ முறிவிற்கு முட்டையைத்‌ தேநீரில்‌ அடித்து உட்கொள்ளக்‌ கொடுப்பதும்‌ உண்டு.

தீராத மண்டையிடி, மண்டைக்‌ குத்தல்‌, கபாலச்‌ சூலைக்கு – தலை முழுக முட்டை மருந்து

கோழி முட்டையின்‌ வெள்ளைக்‌ கருவையும்‌ அதற்குச்‌ சம அளவு சுத்தமான விளக்கெண்ணெயையும்‌ சேர்த்து ஒரு கிண்ணத்தில்‌ இட்டுக்‌ குழப்பிக்‌ கொண்டிருந்தால்‌ வெண்ணெய்‌ போல்‌ வரும்‌. அவ்வெண்ணெயைத்‌ தலையில்‌ தேய்த்துக்‌ குறைந்தது ஒரு மணி நேரம்‌ வைத்திருந்து பின்‌ சீயக்காய்த்‌ தூள்‌ தேயத்து வெந்நீரில்‌ தலை முழுகவும்‌. இவ்வாறு தொடர்ந்தாற்‌ போல்‌ மூன்ற நாள்கள்‌ தலை முழுகி வந்தால்‌ போதும்‌. மண்டையிடி, மண்டைக்‌ குத்தல்‌, கபாலச்‌ சூலை ஆகியன தீரும்‌. இஃது ஓர்‌ அனுபவ மருத்துவ முறையாகும்‌.

உடல்‌ எரிச்சல்‌ விலக முட்டை குளியல்

கோழி முட்டையின்‌ வெள்ளைக்‌ கருவைத்‌ தனியாகப்‌ பிரித்து எடுத்து நன்றாகக்‌ கலக்கி உடல்‌ முழுவதும்‌ பூசி வைத்திருந்து சுமார்‌ 20-30 நிமிடங்கள்‌ கழிந்த பின்பு தலை முழுகினால்‌ உடல்‌ எரிச்சல்‌ தணியும்‌.

வெள்ளைக்‌ கருவை மட்டும்‌ பிரித்தெடுத்துத்‌ தலையில்‌ தேய்த்துச்‌ சிறிது நேரம்‌ வைத்திருந்து பிறகு தலை முழுகி வரக்‌ கண்களுக்கு மிக்க பலனைக்‌ கொடுக்கும்‌.

குதிகால்‌ வாதத்திற்கு முட்டைப்‌ பற்று

குதிகால்‌ புண்‌ போல்‌ வலிக்கும்‌. தரையில்‌ கால்‌ வைக்க முடியாது. அதிகாலை படுக்கை விட்டு எழும்போது வலி உயிர்‌ போவது போல்‌ இருக்கும்‌. இதற்குக்‌ குதிகால்‌ வாதம்‌’ என்று பெயர்‌. இதற்கு முட்டையில்‌ தயாரிக்கும்‌ கீழ்வரும்‌ மருந்து நல்ல பலன்‌ தருகிறது.

எருக்கம்‌ பால்‌ 50 மி.லி. எடுத்து அதனோடு ஒரு கோழி முட்டையை உடைத்து ஊற்றி நன்றாகக்‌ கலக்கவும்‌. அக்‌ கலவையைக்‌ குதிகாலில்‌ பூசி வரவும்‌. இவ்வாறு செய்து வந்தால்‌ குதிகால்‌ வாதம்‌ குணமாகும்‌.

வீக்கத்திற்குப்‌ பற்று

கற்பூரம்‌, சாம்பிராணி, பெருங்காயம்‌, மூசாம்பரம்‌, புளியங்கொட்டைத்‌ தோல்‌, கரி வளையல் இவற்றை வகைக்கு 5 கிராம்‌ எடுத்துக்‌ கொள்ளவும்‌. இரண்டு முட்டையின்‌ வெள்ளைக்‌ கருவைத்‌ தனியே பிரித்தெடுத்து, மேல்‌ சொல்லிய மருந்துச்‌ சரக்குகளுடன்‌ சேர்த்து மை போல்‌ அரைத்துத்‌ தொண்டைக்‌ கம்மல்‌, வாயவு வீக்கம்‌, சயித்தியம்‌ (குளிர்‌ நோய்‌) போன்றவற்றிற்குப்‌ பற்றுப்‌ போடவும்‌. பற்றின்‌ மீது சிறிது நெருப்பனலில்‌ காட்ட நல்ல குணம்‌ கிடைக்கும்‌.

சீதளத்தினால்‌ ஏற்பட்ட வீக்கமானால்‌ அவ்விடத்திலுள்ள நீரை வறட்டிக்‌ குணம்‌ தரும்‌. ‘வாய்வு’ தொல்லையினால்‌ ஏற்பட்ட வீக்கமாயின்‌, அவ்விடத்திலுள்ள வாய்வை விலக்கிக்‌ குணம்‌ கொடுக்கும்‌.

உடையாத கட்டிகளுக்கு முட்டை‌ப் பற்று

ஒரு கோழி முட்டையின்‌ வெள்ளைக்‌ கருவொடு, பெருங்காயம்‌, மஞ்சள்‌, காசுக்கட்டி, சுண்ணாம்பு, விளாம்‌ பிசின்‌ ஆகியவற்றை வகைக்கு 5 கிராம்‌ எடுத்துச்‌ சேர்த்து, மை போல்‌ அரைத்து, பழுக்காத கட்டிகளின்‌ மீது பற்றுப்‌ போடவும்‌. கட்டிகள்‌ விரைவில்‌ பழுத்துத்‌ தானே உடைந்துவிடும்‌.

இவ்வாறு கட்டிகளுக்கு வேறு மருந்துகளைக்‌ கொண்டும்‌ பற்றுப்‌ போடலாம்‌.

கோழி முட்டையின்‌ வெள்ளைக்‌ கருவுடன்‌ அபின்‌, கழற்சிக்‌ கொடியின்‌ இலை, பெருங்காயம்‌, களிப்பாக்கு, காசுக்கட்டி ஆகியவற்றை வகைக்கு 5 கிராமாக எடுத்து மை போல்‌ அரைத்துக்‌ கட்டிகளுக்குப்‌ பற்றுப்‌ போட்டு வர விரைவில்‌ கட்டிகள்‌ பழுத்து உடையும்‌.

சூலை நோய்க்கு அவித்த முட்டை

இரவு படுக்கைக்குச்‌ செல்லுமுன்‌, ஒரு கோழி முட்டையைக்‌ கொதி நீரில்‌ போட்டு, அவித்து எடுக்கவும்‌. அதன்‌ ஓட்டை உரித்தெடுக்காமல்‌, ஒரு கூர்மையான ஊசியினால்‌ முட்டையின்‌ மேல்புறம்‌ முழுவதும்‌ துளையிடவும்‌. பின்‌ அம்முட்டையைச்‌ சமையல்‌ உப்பில்‌ புதைத்து வைக்கவும்‌. இரவு முழுதும்‌ உப்பின்‌ சாரம்‌ துளைகளின்‌ வழியே முட்டையில்‌ ஏறட்டும்‌.

காலையில்‌ அந்த முட்டையை எடுத்து ஓட்டை நீக்கிவிட்டு உண்ணவும்‌. இவ்வாறு குறைந்தது மூன்று நாள்கள்‌ உண்ண வேண்டும்‌. நீண்ட நாள்‌ நோயாக இருக்குமானால்‌ மேலும்‌ சில நாள்கள்‌ உண்ணலாம்‌. இதனால்‌ சூலை, குன்மம்‌ ஆகிய நோய்கள்‌ குணமாகும்‌.

அண்டவாதம்‌, வீக்கம்‌, சூலைக்கு முட்டைப்‌ பொரியல்‌

கழற்சிக்‌ கொடியின்‌ கொழுந்து இலைகளைப்‌ பறித்து வந்து விழுதாக அரைத்து அருநெல்லிக்காய்‌ அளவு எடுத்துக்‌ கொள்ளவும்‌.

ஒரு புதிய மண்சட்டியை அடுப்பில்‌ வைத்து ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, அரைத்து வைத்துள்ள விழுதையும்‌ கலந்து. பொரித்து எடுத்து உண்ணவும்‌.

இப்‌ பொரியலை மூன்று நாள்கள்‌ உண்டால்‌ அண்டவாதம்‌, வீக்கம்‌, பக்கச்‌ சூலை ஆகிய நோய்கள்‌ தீரும்‌.

மூன்று நாள்களுக்கும்‌ உப்பு, புளி ஆகியவற்றைத்‌ தவிர்த்து, மிளகு போட்டுச்‌ சமைத்த இளங்கீரை, வெந்நீருடன்‌ கலந்த சோறு மட்டுமே உண்டு வர வேண்டும்‌.

இதுவரையில்‌ முட்டையைப்‌ பயன்படுத்தும்‌ சில கை மருத்துவ முறைகளைக்‌ கண்டோம்‌. மேலும்‌, முட்டையைக்‌ கொண்டு தயாரிக்கப்படும்‌ சில மருந்துகளையும்‌ பார்க்கலாம்‌.

பக்கவாதத்திற்குப்‌ பாஷாண முட்டைத்‌ தைலம்‌

50 கோழி முட்டைகளை அவித்து, மஞ்சள்‌ கருவை மட்டும்‌ சேகரித்துக்‌ கொள்ளவும்‌. இம்மஞ்சள்‌ கருக்களை ஒரு இரும்புச்‌ சட்டியில்‌ இட்டுப்‌ பெருந்‌ தீயில்‌ எரிக்கவும்‌. அடி பிடிக்காதவாறு தொடர்ந்து கிளறிக்கொண்டிருக்க வேண்டும்‌. மஞ்சள்‌ கருவானது கறுத்து எண்ணெய்‌ சுவறும்போது 75 கிராம்‌ வெள்ளைப்‌ பாஷாணத்தைத்‌ தூள்‌ செய்து போட்டுக்‌ கிளறி உடனே அடுப்பிலிருந்து இறக்கி, ஜல்லிக்‌ கரண்டியால்‌ மஞ்சள்‌ கருவை ஓர்‌ ஓரமாக ஒதுக்கிக்கொண்டு எண்ணெயை மட்டும்‌ சிறு கரண்டியால்‌ முகந்து சேகரித்துக்‌ கொள்‌ள வேண்டும்‌. இவ்வாறு செய்யும்‌ போது, அதிலிருந்து கிளம்பும்‌ புகையைச்‌ சுவாசிக்காதவாறு எச்சரிச்கையாய்‌ இருப்பது அவசியம்‌.

பயன்பாடு

பக்கவாதத்தால்‌ தாக்குண்ட கை, கால்கள்‌ மீது சூடு பறக்க இத்‌ தைலத்தைத்‌ தேய்க்க வேண்டும்‌. ஒரு நாளைக்கு இரண்டு முறை தேய்த்தால்‌ போதுமானது. விரைவில்‌ சுவாதினமற்ற கை, கால்கள்‌ ஒழுங்குற்று வருவது உறுதி, தைலம்‌ தேய்த்த இடங்களில்‌ புண்கள்‌ உண்டாகுமானால்‌ தைலம்‌ தேய்ப்பதை உடனே நிறுத்திவிட வேண்டும்‌.

வாதம்‌ நரம்புத்‌ தளர்ச்சிக்கு முட்டைத்‌ தைலம்‌ (மற்றொரு முறை)

50 கோழி முட்டைகளை வேக வைத்து மஞ்சள்‌ கருவினை மட்டும்‌ சேகரித்துக்‌ கொள்ளவும்‌. ஓர்‌ இரும்புச்‌ சட்டியில்‌ அம்‌ மஞ்சள்‌ கருக்களை இட்டு, வேப்பெண்ணெய்‌, புங்கன்‌ எண்ணெய்‌, கடுகு எண்ணெய்‌, புன்னைக்‌ கொட்டை எண்ணெய்‌, இலுப்பை எண்ணெய்‌, வகைக்கு 250 மி.லி. வீதம்‌ ஊற்றி அடுப்பிலேற்றிக்‌ காய்ச்சவும்‌. அதில்‌, ரசச்‌ செந்தூரம்‌, பாதரசம்‌, பூரம்‌, வீரம்‌ ஆகியவற்றை வகைக்கு 35 கிராம்‌ சேர்க்கவும்‌. எண்ணெய்‌ காய்ந்து மெழுகு பதம்‌ வரும்போது எடுத்து வடிகட்டிப்‌ பத்திரப்படுத்திக்‌ கொண்டு வேண்டும்போது பயன்படுத்தவும்‌.

பயன்பாடு

வாதத்தால்‌ தாக்குண்ட இடங்களில்‌ ஒரு நாளைக்கு இரு முறை சூடு பறக்கத்‌ தேய்க்க வேண்டும்‌. 1௦ நாள்களில்‌ குணம்‌ தெரியும்‌.

பத்தியம்‌

மீன்‌, கருவாடு, பழைய சோறு தவிர்க்கவும்‌.

குழந்தைகளின்‌ மாந்தம்‌, நீர்க்கோவை நீங்க அணடத்‌ தைலம்‌

5௦ முட்டைகளை அவித்து, மஞ்சள்‌ கருவை மட்டும்‌ சேகரித்து அதனை வேறு எந்த மருந்தும்‌ சேர்க்காது முன்னர்ச்‌ சொல்லிய முறையில்‌ தைலம்‌ வடித்து எடுத்துக்கொள்ளவும்‌.

அத்‌ தைலத்தில்‌ 3.5 கிராம்‌ குங்குமப்பூவையும்‌, 3.5 கிராம்‌ ரோசனையையும்‌ சேர்த்துச்‌ சிறிது சூடு காட்டிப்‌ பத்திரப்படுத்திக்‌ கொள்ளவும்‌.

அளவு: குழந்தைகளின்‌ வயதிற்கேற்ப ஒரு துளி முதல்‌ பத்துத்‌ துளி வரை.

தீரும்‌ நோய்கள்‌: மாந்தம்‌, வலிப்பு, நீர்க்கோவை ஆகியன.

குறிப்பு: குங்குமப்பூ, கோரோசனம்‌ கலக்காத அண்டத்‌ தைலத்தை நாவில்‌ தடவி வர, நாவைப்‌ பற்றிய வாதம்‌ நீங்கும்‌.

மூலம்‌ போக்கும்‌ நாகச்‌சுண்ணம்‌

40 கிராம்‌ நாகத்தை (கலப்படமில்லாத துத்தநாகம்‌) எடுத்து ஓர்‌ இரும்புக கரண்டியில்‌ வைத்துச்‌ சிறிது இலுப்பை எண்ணெய்‌ விட்டுக்‌ காய்ச்சவும்‌. துத்தநாகம்‌ உருகி வரும்‌. நன்கு உருகிய பின்‌ அதனை ஒரு பாத்திரத்தில்‌ உள்ள இலுப்பை எண்ணெயில்‌ சாய்க்கவும்‌. நன்றாய்‌ ஆறியபின்‌ அதை எடுத்து மீண்டும்‌ முன்‌ சொல்லியது போன்றே உருக்கிப்‌ புதிய இலுப்பை எண்ணெயில்‌ சாய்க்கவும்‌.

இவ்வாறு பத்து முறை புதிய புதிய இலுப்பை எண்ணெயிலும்‌, பத்து முறை புதிய புதிய எலுமிச்சம்‌ பழச்‌ சாற்றிலும்‌, பத்து முறை புதிய புதிய பசுஞ்சாணக்‌ கரைசல்களிலும்‌ (‘சாணிப்பால்‌’ எனக்‌ கூறுவர்‌) உருக்கி வார்த்து எடுக்க நாகம்‌ சுத்தியாகும்‌.

இவ்வாறு சுத்தி செய்த நாகம்‌ – 35 கிராம்‌ (1 பலம்‌) எடுத்துக்‌ கொள்ளவும்‌. இந்‌ நாகத்தை முட்டையின்‌ வெள்ளைக்‌ ௧௫ 105 கிராம்‌ (3 பலம்‌) விட்டு 4 ஜாமம்‌ (12 மணி நேரம்‌) குழி அம்மியில்‌ நன்றாக அரைக்கவும்‌. அரைத்த நாகத்தை வில்லையாகத்‌ தட்டி நிழலில்‌ உலர்த்தவும்‌. ஒரு நாள்‌ உலர்ந்த பின்‌ மண்‌ அகலில்‌ வைத்து அடி 5 சீலை மண்‌ செய்து 36 வரட்டியில்‌ புடமிட்டு எடுக்க நாகச்‌ சுண்ணம்‌ கிடைக்கும்‌.

அளவு: 19 முதல்‌ 30 மி.கிராம்‌ வரை.

துணை மருந்து: வெண்ணெய்‌ அல்லது கருணைக்‌ கிழங்கு லேகியம்‌.

தீரும்‌ நோய்கள்‌: ஒன்பது வகை மூல நோய்கள்‌, பேதி, ஈரல்‌ வீக்கம்‌, கபம்‌, குன்மம்‌ ஆகியன நீங்கும்‌; விந்து உற்பத்தி அதிகரிக்கும்‌.

அண்டச் சுண்ணம்

ஒரு முட்டையை எடுத்துச்‌ சிறிய துளை செய்து, அதனுள்‌, எவ்வளவு கொள்ளுமோ அவ்வளவு குப்பை மேனி இலைச்‌ சாறு விடவும்‌. குப்பை மேனி இலையை நிறைய அரைத்து அந்த முட்டையை, அரைத்த இலைச்‌ சாந்தினுள்‌ வைத்துக்‌ கவசம்‌ செய்து கொள்ளவும்‌. ஒரு நாள்‌ நிழலில்‌ உலர்த்தி ஏழு சீலை மண்‌ செய்து பத்து வரட்டி கொண்டு புடமிட்டு எடுக்கச்‌ சுண்ணமாகும்‌.

அளவு: 50 முதல்‌ 100 மி.கிராம்‌ வரை உண்ணவும்‌.

அனுபானம்‌: தேன்‌ (அல்லது) சுக்கு, மிளகு, திப்பிலி (திரிகடுகச்‌) சூரணம்‌.

தீரும்‌ நோய்கள்‌: வாத தோடம்‌, புண்கள்‌, கபம்‌ ஆகியன நீங்கும்‌.

அண்ட வாயு, ஆனைக்கால் நோய்க்குச் சிற்றண்ட மெழுகு

இம்முறையில்‌ சிற்றண்ட மெழுகு செய்வதற்கு வீரம்‌ – 3.5 கிராம்‌, வெடியுப்பு – 17.5 கிராம்‌, கம்பி நமச்சாரம்‌ – 7 கிராம்‌ ஆகியவை தேவை. இவற்றை அப்படியே பயன்படுத்தக்‌ கூடாது. சுத்தி செய்தே பயன்படுத்த வேண்டும்‌. சுத்தி என்பது சித்த மருத்துவ முறையில்‌ அச்சரக்குகளின்‌ விஷத்‌ தன்மையைக்‌ குறைத்து மருந்து செய்யும்‌ பதத்திற்கு மாற்றுதல்‌ எனப்‌ பொருள்‌ கொள்ளலாம்‌.

வீர சுத்தி

ஒரு சட்டியில்‌ நான்கு அல்லது ஐந்து இளநீரை உடைத்து ஊற்றி, வீரக்‌ கட்டியை ஒரு நூலில்‌ கட்டி இளநீர்‌ மட்டத்திற்குச்‌ சிறிது மேலாக, இளநீரில்‌ நனையாதவாறு தொங்க விடவும்‌. பின்‌ அப்பாத்திரத்தை அடுப்பிலேற்றி இளநீர்‌ வற்றும்‌ வரையில்‌ தீயிட்டு எரிக்கவம்‌. இப்படி மூன்று முறைகள்‌ இளநீரின்‌ ஆவியில்‌ வீரத்தை வேகவைத்து எடுக்கச்‌ சுத்தியாகும்‌.

வெடியுப்புச்‌ சுத்தி

தேவையான அளவும்‌ (17.5 கிராம்‌) உப்பிற்கு நான்கு மடங்கிற்கு நீர்‌ விட்டு அடுப்பில்‌ ஏற்றிச்‌ சிறு தீயால்‌ எரிக்கக்‌ கொதி கிளம்பும்போது கோழி முட்டையின்‌ வெள்ளைக்‌ கருவைச்‌ சிறிதளவு சேர்க்க வேண்டும்‌. கொதி நீரின்‌ மேலே அழுக்குத்‌ திரளும்‌. அவ்வழுக்கினை நீக்கிவிட்டு, (அந்நீரில்‌ ஒரு துளி எடுத்து வேறொரு பாத்திரத்தில்‌ இட்டுப்‌ பார்க்க) உறையும் பக்குவத்தில்‌ எடுத்துத்‌ துணியில்‌ வடிகட்டி அப்படியே மூடி வைக்கவும்‌.

ஒரு நாள்‌ கழித்து எடுத்துப்‌ பார்க்க உப்பானது பாத்திரத்தின்‌ அடியில்‌ படிந்திருக்கும்‌. நீரை வடித்துவிட்டுச்‌ சூரிய ஒளியில்‌ உப்பை உலர்த்தவும்‌. மீண்டும்‌ அவ்வுப்பை முன்‌ கூறிய முறையில்‌ சுத்தி செய்யவும்‌. இவ்வாறு ஏழு முறை செய்ய வெடியுப்புச்‌ சுத்தியாகும்‌.

கம்பி நமச்சாரச்‌ சுத்தி

கம்பி நமச்சாரத்தைத்‌ தேவையான அளவு வாங்கிவந்து வெந்நீரில்‌ கரைத்துச்‌ சூடாயிருக்கும்‌ போதே வடிகட்டி ஆறிய பின்‌ ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில்‌ அந்தக்‌ கரைசலை ஊற்றி வெயிலில்‌ வைக்க நீர்‌ வற்றி உப்பு, உறையும். இவ்வப்பைச்‌ சேகரித்துக்‌ கொள்ளம்‌,

இவ்வாறு சேகரித்த நமச்சாரத்தைப்‌ பசுவின்‌ சிறுநீரில்‌ கரைத்து வடிகட்டிச்‌ சுண்டக்‌ காய்ச்சி வெயிலில்‌ உலர்த்தி எடுக்கச்‌ சுத்தியாகும்‌.

இவ்வாறு சுத்தி செய்த வீரம்‌, வெடியுப்பு, நமச்சாரம்‌ ஆகிய மூன்றையும்‌ முறையே 3.5 கிராம்‌, 17.5 கிராம்‌, 7.0 கிராம்‌ எடுத்துத்‌ தனித்‌ தனியாகப்‌ பொடி செய்து ஒரு பீங்கான்‌ பாத்திரத்தில்‌ போட்டு, 50௦ மி.லிட்‌ எலுமிச்சம்‌ பழச்சாறு விட்டுக்‌ கரைத்துக்கொள்ளவும்‌.

இக்‌ கரைசலில்‌ ஒரு கோழி முட்டையைப்‌ போட்டு வெயிலில்‌ வைக்க முட்டை கரைந்து விடும்‌. பழச்சாறு முழுக்க வற்றிய பின்‌ கல்வத்தில்‌ இட்டு அரைத்து மெழுகுப்‌ பக்குவத்தில்‌ எடுத்துப்‌ பத்திரப்படுத்தி வைக்கவும்‌. இதுவே அண்ட மெழுகு ஆகும்‌.

அளவு: 100 மி.கிராம்‌ வரை – நாளைக்குக்‌ காலை, இரவு இரு வேளைகள்‌, மூன்று நாள்கள்‌ மட்டும்‌ உணவுக்குப்‌ பின்‌ கொடுக்கவும்‌. ஒரு வாரம்‌ இடைவெளி விட்டு மீண்டும்‌ 3 நாள்கள்‌, இப்படி விட்டு விட்டுத்‌ தரவும்‌.

தீரும்‌ நோய்கள்‌: அண்ட வாதம்‌, வாய்வுத்‌ தொல்லை, ஆனைக்கால்‌ நோய்‌ ஆகியவை தீரும்‌.

சிற்றண்ட ஓட்டுப்‌ பற்பம்‌ (முட்டை ஓட்டுப்‌ பற்பம்‌)

கோழி முட்டையின்‌ ஓடுகளை 500 கிராம்‌ அளவிற்குச்‌ சேகரித்துக்‌ கொள்ளவும்‌. 200 கிராம்‌ சமையல்‌ உப்பை 1 லிட்டர்‌ ஆற்று நீரில்‌ கரைத்து நீரைத்‌ தெளிய வைக்கவும்‌. தெளிந்த நீரை வடிகட்டி எடுத்து அதில்‌ முட்டை ஓடுகளைப்‌ போட்டு ஒரு நாள்‌ முழுதும்‌ ஊற வைக்கவும்‌.

முட்டை ஓடும்‌ நீரும்‌ உள்ள பாத்திரத்தை அப்படியே அடுப்பிலேற்றிக்‌ கொதிக்க வைக்கவும்‌. நீரானது 300 மி.லிட்‌ அளவிற்குச்‌ சுண்டியதும்‌ பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்‌.

ஆறிய பின்‌ ஓடுகளின்‌ உட்புறத்தில்‌ ஒட்டியுள்ள சவ்வினை உரித்து நீக்கிவிட்டு ஓடுகளை நல்ல நீர்‌ விட்டுக்‌ கழுவி எடுத்துக்‌ கொள்ளவும்‌. இதுவே முட்டை ஓடுகளைச்‌ சுத்தி செய்யும்‌ முறையாகும்‌.

இவ்வாறு சுத்தி செய்த முட்டை ஓடுகளை நீர்‌ முள்ளிச்‌ சாறு மிதமாய்‌ விட்டு, கல்வத்தில்‌ ஒரு நாள்‌ முழுவதும்‌ அரைத்து எடுத்து வில்லைகளாகத்‌ தட்டி நிழலில்‌ உலர்த்தவும்‌.

உலர்ந்த வில்லைகளை மண்‌ அகலில்‌ இட்டு மறு அகலால்‌ மூடிச்‌ சீலை மண்‌ செய்து காய விடவும்‌. காய்ந்த பின்பு 50 வரட்டி கொண்டு புடமிட்டு எடுக்கப்‌ பற்பமாகும்‌.

அளவு: 100 மி.கி. முதல்‌ 1 கிராம்‌ வரை தேவைக்கு ஏற்ப உண்ணவும்‌.

துணை மருந்து: வெண்ணெயில்‌ மத்தித்துக்‌ கொடுக்கவும்‌.

தீரும்‌ நோய்கள்‌: கபம்‌, ஜன்னி முதலியன தீரும்‌.

S0urce : ‘மாமிச உணவின் மருத்துவப் பயன்கள்’ நூலிலிருந்து

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments