இயற்கையின் நடைமுறையில் மாற்றம் என்பது ஒரு தவிர்க்க முடியாத அம்சமாகும். பிரபஞ்சம் தோன்றிய காலம் முதல் அது மாற்றமடைந்துகொண்டே வந்து இன்றைய நிலையை எய்தியுள்ளது. பிரபஞ்சத்திலுள்ள மிகப்பெரிய தனிப்பொருட்கள் எனக்கொள்ளத்தக்க விண்மீன்கள் வெடித்துச்சிதறி கோள்மண்டலங்களாக மாற்றப்படுகின்றன. அச்சிதறலினால் உண்டாகும் தூசுப்படலங்களின் ஈர்ப்புவிசை காரணமாக வால் நட்சத்திரங்கள் தோன்றுகின்றன. இவை, சூரியன் போன்ற வாயுக்கோளங்களை அண்மிக்கும்போது அவைகளை ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் சிலகாலம் சுற்றிவந்து பின்னர் வான மண்டலத்தில் மறைந்துவிடுகின்றன. இதேபோல நாம் காணும் சூரியனிலிருந்து கோடிக்கணக்கான ஆண்டுகளுக்குமுன் பிரிந்து வந்த எமது பூமியும் அது தோன்றிய காலத்தில் இருந்து வௌவேறு வகையான மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இச்சூரிய மண்டலத்தில், பூமியில் மட்டுமே தோன்றியிருக்கும் மனித இனமும் தோற்றத்திலும், இயல்பிலும் மாற்றமடைந்து வந்திருக்கிறது.
மனிதனும் இயற்கையின் ஒரு அங்கமாகையால் இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் மனிதனிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இயற்கையின் மாற்றங்கள் அனைத்துக்கும் ஒரு பொருளின் அணுக்களின் அடிப்படைக்கூறுகளான இலத்திரன், புரோத்தன்,நியூத்திரன் போன்றவற்றின் அதிர்வுகளே காரணமென்று நவீன விஞ்ஞான இயலில் கண்டறியப்பட்டுள்ளது. இயற்கையை பொதுவாக உருவமுள்ள பொருட்களாகவும், உருவமற்ற சக்தியாகவும் இரண்டாகப் பகுக்கலாம். உண்மையில்
பொருள் வேறு, சக்தி வேறு அல்ல. உறைந்த சக்தியே பொருளாக எமக்குத்தோற்றமளிக்கிறது. பொருளைச்சக்தியாகவும், சக்தியைப் பொருளாகவும் மாற்ற முடியும் என்பது விஞ்ஞானி ஐன்ஸ்ரீன் கண்டுபிடித்த பேருண்மையாகும். பொருளை சக்தியாக மாற்றுவதன் விளைவாக ஏற்படும் அபார ஆற்றலைப் பயன்படுத்தியே அணுவாயுதங்கள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாயுதங்கள் இரண்டாம் உலக மகாயுத்தத்தில் ஜப்பானிலுள்ள ஹிரோஷpமா, நாகசகி நகரங்களை நாசமாக்கியதோடு சுமார் இரண்டு லட்சம் மக்களின் உயிரையும் குடித்தன. சுமார் 40 வருடங்களின் பின்பும் அணுக்குண்டு போடப்பட்டதன் விளைவை அப்பகுதி மக்கள் அனுபவித்துக் கொண்டு வந்தனர். அதேவேளை பொருளைச் சக்தியாய் மாற்றும் திடீர்ச்செயற்பாட்டை ஆறுதலாக்க அதன் விளைவு மனித குலத்திற்குச் சாதகமாக அமைகின்றது. அணு உலை எனப்படும் கருவிகளில் இவ்வாறே பொருள்–சக்தி மாற்றத்தினால் ஆகும் வெப்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் பெற்றுப் பெரும் பயனைப் பெற்று வருகின்றனர். எனவே ஒரு மாற்றமானது நல்ல விளைவையும் தீய விளைவையும் தர முடியும். எது தேவை என்பதைப் பயன்படுத்தும் மனிதனே தீர்மானிக்க வேண்டும்.
உலகிலுள்ள உயிரினங்களுள் மனிதன் சிந்தனை ஆற்றல் உள்ளவன். ஏனையவை இயற்கையின் வழியே தோன்றி, வாழ்ந்து, மறைந்து விடுகின்றன. மனிதனோ, தன் சிந்தனை ஆற்றலினால் இயற்கையையே மாற்ற வல்லவனாக இருக்கிறான். இச்சிந்தனை தோன்றும் மனம் எனப்படும் சூட்சுமப்பொருள் மூளையைக் கருவியாகக்கொண்டு செயலாற்றுகின்றது. மூளையில் ஏற்படும் அதிர்வுகளே சிந்தனையாக வெளிப்படுகின்றன. ஆக்குவதற்கும், அழிப்பதற்கும் அதிர்வுகளே மூலகாரணமாக இருப்பதனாலும், எல்லாவித மாற்றங்களையும் அதிர்வுகளே உண்டாக்குகின்றன என்பதாலும், மனிதனிடத்துள்ள சிந்தனையாற்றல் நன்மை தரும் வகையில் அமைவதற்கு, இயற்கையைச் சாதகமாய் மாற்றக்கூடியவிதமான அதிர்வுகளோடு அவனது சிந்தனைக்குரிய அதிர்வுகளும் ஒத்திசைக்கவேண்டும். இவ்வாறு ஒத்தியைபு ஏற்படுத்துவதற்கு எவ்வாறு சிந்திக்கவேண்டும் என வலியுறுத்தி வழிநடத்தவே சமயங்கள், தத்துவங்கள், சாஸ்திரங்கள் என்பன தோன்றியுள்ளன. மனிதனது சிந்தனை ஒழுக்கம் தூய்மையானதாய் இருக்கவேண்டும் என்றே மதங்கள் யாவும் முரசறைகின்றன. ஒருவன் எந்த மதத்தையும் சாராதவனாக இருந்த பொழுதிலும் அவனது சிந்தனையொழுக்கம் தூய்மையானதாய் இருந்தாலொழிய அவனால் மனித குலத்திற்கும், சுற்றாடலுக்கும் நல்ல விளைவை ஏற்படுத்தக்கூடிய மாற்றமொன்றைக் கொண்டுவரமுடியாது.
எல்லா மனிதர்களும் ஒரேவிதமாய்ச் சிந்திக்க முடியாது. சிந்திப்பதுமில்லை. இதனால்தான் மனிதர்களிடையே போட்டி, பொறாமை, பூசல், போர் என்பன தோன்றுகின்றன. இவை நிச்சயமாக மனித குலத்திற்குப் பிரதிகூலமான விளைவுகளையே தருகின்றன. அனுகூலமான விளைவுகள் ஏற்படவேண்டுமானால் ஒற்றுமை, அன்பு, பரஸ்பர நம்பிக்கை என்பனபோன்ற நற்குணங்கள் வளரவேண்டும். இதற்கு ஒரு சிறுதொகை மக்கள் கூட்டத்தினராவது ஒரே விதமாய்– நல்லவிதமாய்ச் சிந்திக்கப் பழகவேண்டும். அக்கூட்டத்தினரது சிந்தனையாற்றல்கள் அப்போது ஒன்றுசேர்ந்து உருப்பெருக்குற்று நல்ல அதிர்வலைகளை ஏற்படுத்தி ஏனையவர்களின் சிந்தனைகளையும் தாக்கி அவர்களையும் நல்ல வழியில் சிந்திக்கத்தூண்டும். இதனால் கூடிய அளவு மக்கள் கூட்டத்தினர் நன்மை பெற இடமுண்டு. நல்ல விளைவை அனுபவிக்க வழியுண்டு.
ஓர் இலட்சியத்தை வென்றெடுக்க வேண்டுமாயின் அவ்விலட்சியத்தைப்பற்றியும், அதை அடைவதால் ஏற்படும் மாற்றத்தின் நன்மையான விளைவுகள் பற்றியும் ஆழமாகச்சிந்தித்து மனமென்னும் சூட்சுமப்பொருளில் இலட்சியப்பற்றினை ஊற வைக்கவேண்டும். இலட்சியத்திற்காக நேரே பாடுபடுபவராக இல்லாதிருந்தபோதிலும், இலட்சியத்துக்குரிய மக்களாய் இருப்பவர்கள் மாறுபாடான சிந்தனை உள்ளவர்களாக இருப்பின் அது நேரே பாடுபடுபவர்களையும், ஏனையவர்களையும் தாக்கி, இலட்சியத்தை அடைவதைப் பின்னோக்கித் தள்ளும். சிந்தனை என்பது ஒரு அபாரமான சக்தியே. சக்தியைப் பொருளாக ஆக்க முடியுமெனில், சிந்தனையை நல்லவிதமாக மாற்றினால் உலகில் நிச்சயம் நன்மை பெருக்கலாம். நல் விளைவை அனுபவிக்கலாம்.