ஆதவனோடு போராடி
பெருமூச்சிட்டு பிழைக்கும்
கைக்கூலியாளரும்
தொழிலாளி
அவனை யாரென்று அறியாத
கான்ரக்ட்காரனோ முதலாளி?
உடல் வேர்வை உதிரவிட்டு
உணவு உற்பத்தி பண்ணும்
கமகாரரும் தொழிலாளி
அவனுக்கு வட்டி கடன் போட்டு
கொடுக்கும்
வங்கிகளோ முதலாளி?
பெருந்தோட்ட பயிர்பிடுங்கி
தினம் வெறும் பழங்கஞ்சில்
முளித்தெழும்
மலைநாட்டவரும் தொழிலாளி
ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கமுடியாத
கோப்ரேட் கொம்பனியோ முதலாளி?
பலர் வீட்டுச் சாக்கடையை
பாரபட்சமின்றி
பள்ளத்திலிருந்து மீட்டெடுப்பவரும்
தொழிலாளி
தினம் மனச்சாக்கடையில்
நீந்திப் பிழைப்பவரோ முதலாளி?
பட்டி மேய்த்து
பாதி விலையில்
பால் விற்பவரும் தொழிலாளி
பெட்டி பால் அருந்தி
முட்டி மோதுபவரோ முதலாளி?
வீட்டோடு இருந்தாலும்
பல பரிமாணம் கொண்டு
விதவிதமாய் பராமரிக்கும்
அன்பு அன்னையவளும் தொழிலாளி
அவள் சும்மாதான் இருக்கிறாளென்று
சூழுரைப்பவரோ முதலாளி?
பலர் நாற்றமதை
நறுமணமாக்குவதால்
தாழ் சாதியாய் தூற்றப்படும்
நல்லெண்ணம் கொண்டவரும் தொழிலாளி
சாதியெனும் நாற்றமதை
தோலாய் போற்றியவரோ முதலாளி?
தொழிற்சாலைதான்
எதிர்கால வழிச்சாலையென்று
இயந்திரமாய் போன
ஏழைகளும் தொழிலாளி
ஓட்டி என்ற பெயரில்
உதிரத்தை உறுஞ்சும் அதிகாரிகளோ
முதலாளி?
நல்லதை புகட்டி
கல்விச் செல்வத்தை விதைக்கும்
ஆசானும் தொழிலாளி
தேவையில்லா சொல்லதைக்கூறி
வன்முறையை விதைக்கும்
போதகரோ முதலாளி?
நாட்டுக்காய் பாடுபடும்
நற்படை வீரனும்
தொழிலாளி
சூழ்ச்சியை ஆயுதமாயேற்ற
துரோகிகளோ முதலாளி?
கொள்ளைகள் செய்யாமல்
கொள்கையுடன் உழைக்கும்
உழைப்பாளிகள் எல்லோரும்
தொழிலாளி
கொள்ளையினாலே வாழ்ந்து மடியும்
மனிதரோ முதலாளி?
மடியாய் எமைத்தாங்கி
எதிர்கால படியாய் படர்ந்திருக்கும் மண்ணும்
அன்னார்ந்து பார்க்க பொழியும்
மேக மழையும்
ஒளியாய் வழிகாட்டும்
ஒற்றை சூரியனும்
கஞ்சமின்றி கொடுக்கும்
தூய்மையான காற்றும்
இப்படி எதையும் எதிர்பாராத
கொடை முதல்கள் மட்டுமே
இங்கு முதலாளி
ஏனையோர் எல்லாம்
சமமான தொழிலாளி