இதுவரை காலமும்
புகைப்பட அட்டைகளிலும்
தொலைக்காட்சிப் பெட்டிகளிலும்
பார்த்துப் பழகிப்போன
ஓர் உருவம்
அடர்ந்த காட்டின்
கூந்தலின் உள்ளிருந்து
ஒலியெழுப்பிய வண்ணம்
எனதருகில் தரித்து நின்றாள்
சிறுகுழந்தையின் முன்னிலையில்
கரைந்து வடியும் ஐஸ்குச்சியை
சுவை பார்க்கத் துடித்திடும்
மனம் கொண்டிருந்தேன்
அவளிலேறும் வரை…
முதல் தடவை என்பதால்
ஆனந்த பெருக்கில்
நீந்திக் கொண்டிருந்த எனக்கு
மறுமுனையில் நடுக்கமும், நாவறட்சியும்
ஹிக்கடுவையிலிருந்து கொழும்பு
நோக்கிய பயணமது
என்றாலும் உலகம் சுற்றப்
போகிறேன் என்றவொரு அவா!
எனதிருக்கையில் அமர்ந்த படி
எல்லாவற்றையும் ரசித்துக் கொண்டிருந்தேன்…
இரும்புப் பட்டிகளில்
சக்கரங்களின் உரசல்களாயிருக்கட்டும்
வளையும் பெட்டிகளின்
இடை நெளிவாயிருக்கட்டும்
புகையினை உமிழும்
கருநிற உதடுகளாயிருக்கட்டும்
குகையினில் மறையும்
ஒட்டுமொத்த உடலாயிருக்கட்டும்
அனைத்திலும்
திளைத்திருந்தேன்…
நண்பர்கள் கதவடியில் நின்றுகொண்டு
பாடல்கள் இசைத்தும்
கைதட்டி ரசித்தும்
புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்
இருக்கையை விட்டு
எழுந்து சென்று பார்த்த எனக்கு
பங்குகொள்ள முடியாமல் போனது
பாவி இவள் குலுக்களினால்
கொழும்பில் இறங்கி
மட்டக்களப்பிற்குச் செல்ல
பயணச்சீட்டு வாங்கி
பத்திரப்படுத்திக் கொண்டேன்
ஊர் திரும்புதலை நினைத்து
பேரின்பம் கொள்ள மறுத்த மனது
இவளுக்காய் ஏங்கி
அவள் மடியில் தூங்கிக் கொண்டிருந்தது
குளிர் காற்றின் தழுவலில்
மழைத்துளிகள் முத்தமிட்டு
என்னை எழுப்பிவிட்டு
மூஞ்சு காட்டிச் சென்றன
அப்படி என்ன கோவமோ
என்னில்?
பத்திரமாக இறக்கிவிட்டு
பிரியாவிடை ஒலியெழுப்பி
ஆகாசவெளியில் எங்கோ பறந்து
மறைந்து சென்றுவிட்டாள்…
super