முத்தான முதியவர்கள்…

0
8697

முகநூலில் உறவுகளைத்தேடி
புலனத்தில் புன்னகைத்து
பற்றியத்தில் சிக்கிக் கொண்டு
படவரியில் பின் தொடரும் காலமிது…
இங்கு பாசத்திற்கு மட்டும் இடமில்லை

பலநூறு ஆண்டுகளுக்கு முன்
பாட்டி சொன்ன கதைகளெல்லாம்
இன்று,
வலையொளியில் தேங்கிக்கிடக்க
பாட்டிகளெல்லாம் முதியோர் இல்லத்தில்
நிறைந்து வழியும் காட்சி…

ஆறுதலுக்கு யாருமின்றி
அரவணைக்க கரங்களின்றி
அறையப்பட்ட சிலுவையில் ஆணியாய்
முதியோர்கள் இல்லங்களில் முடங்கிக்கிடக்க
முகநூலில் அன்னையர் தின வாழ்த்துக்கள்,
முறைக்கு முன்னூறு தடவை தந்தையர் தின குறுந்தகவல்கள்…

மண்ணில் புதைந்து கிடக்கும் வைரம்
வெளிவராதவரை விலைமதிப்பில்லை
முதியவர்களும் அவ்வாறே…

இருக்கும் வரை பெறுமதி தெரியாமல்
உதரிதள்ளிவிட்டு
இறந்த பிறகு ஓலமும் ஒப்பாரியும்…

முதியவர்கள்,
நூலகத்தில் தேடியும் கிடைக்காத புத்தகம்…
கடந்துவந்த நாட்களெல்லாம் அனுபவமாய்
பட்ட கஸ்டங்களெல்லாம் படிப்பினையாய்
பக்கம் பக்கமாக எடுத்துரைக்கும்…

பாவம் படிக்கத்தான் யாருக்கும் நேரமில்லை…

முத்தான முதியவர்கள்
முகம் காட்டும் முழுமதி போன்றவர்கள்..
அமாவாசையென நினைத்து அடித்து துரத்திவிட்டு
மின்விளக்கு ஏற்றி இருளில் தொலைந்திட வேண்டாம்…

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments