மொழி பெயர்க்க முடியாத
மோகக் கவிதை
மெளனம் பிரசவிக்கும் மொழிகள்
விழிகளில் தான் வெளிப்படும்
இது சப்தம் அனுஷ்டிக்கும் விரதம்
முதிர்ச்சி என்பது மெளனத்தில் தான்
மொட்டவிழும் மலரின் மெளனம்
பூப்படைந்த புதுப்பெண்ணின் நாணம்
இவ்வாறு மெளனத்தின் மொழிகள்
என்றும் மோகனமாய்த் தான் இருக்கின்றன
மெளனம் தான் உன் வார்த்தைகளை
வடிகட்டி வனப்பூட்டுகிறது.
சப்தம் – செவிகள் செவிமடுக்கும் ஓசை..!
நிசப்தம் – இதயம் செவிமடுக்கும் பாஷை..!
பேசப்படும் மொழிகளில் – அதிகம்
பேசப்படும் மொழி
பேசாத இந்த மொழியே..!!
மெளனம்
சம்மதமாகவும் இருக்கலாம்..!
சங்கடமாகவும் இருக்கலாம்..!
சில சமயங்களில்
மரண வலியை
மெளன வலி
மிஞ்சிப்போகும்..!
மெளனம்
சில வேளைகளில்
சிறந்த பதில்..!
பல வேளைகளில்
உன்னைக் காக்கும் மதில்..!
மெளனம் மொழியின் கவசம்.
மேகத்தால் சூழ்ந்த நிலவு அழகு.
முக்காட்டுப் பெண்ணழகு.
மொழியின் முக்காடு இந்த மெளனம்..!
மெளனம்
வார்த்தைகளின் மரணம் அல்ல..
மனிதத்தின் பூரணம்..!!
எழுதியவர்
-இன்ஷிராஹ் இக்பால்