மனித இனத்தின் மிக நுட்பமான ஆற்றல்களில் நினைவாற்றல் வளம் முக்கியமான ஒன்றாகும். நினைவாற்றல் என்ற ஒன்றில்லாவிடில், மனித இனத்தின் ஆறாவது அறிவிற்கு வேலையே இல்லாமல் போயிருக்கும். இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த நினைவாற்றல் வளம் மனிதனுக்கு மனிதன் வேறுபடும்.
- உங்களின் நினைவாற்றல் எந்த அளவு இருக்கிறதென்று சோதித்துப் பார்த்ததுண்டா ?
- உங்களில் எத்தனை பேரால் பள்ளியில் பயின்ற தமித்தாய் வாழ்த்தை இப்போது பிழையின்றி நினைவுகூற இயலும் ?
நினைவாற்றல் என்பது இயற்கையாக அமையப்பெற்ற மனித ஆற்றலானாலும், அந்த ஆற்றல் குறித்த தெளிவான அறிவின்மையால், நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள தெரியாமல் பலரும் திணருகின்றனர்.
நினைவாற்றல் வகைகள்
பொதுவாக நினைவாற்றலை இருவகையாக பிரிக்கலாம் – மேற்பரப்பு நிலை நினைவுகள் & அழ்நிலை நினைவுகள்.
மேற்பரப்பு நிலை நினைவுகள்
நம் அன்றாட நிகழ்வுகளின் மூலமாக பதிவாகும் எண்ணற்ற தகவல்கள் இந்த மேற்பரப்பு நிலையிலேயே இருந்து காலப்போக்கில் மறைந்துபோகிறது. பல தகவல்களை சேகரித்தறிந்திருந்தாலும், தேவையானபோது அதை நினைவுகூறுவது பெரும்பாலானவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கிறது.
ஆழ்நிலை நினைவுகள்
ஆழ்நிலை நினைவுகளை பொருத்தமட்டில் சில விடயங்கள் எளிதில் நினைவிற்கு வருகிறது. சில விடயங்களை உடனடியாக வருவதில்லை, மாறாக அந்த விடயங்கள் பற்றி எவரேனும் ஆரம்பித்தாலோ, கண்டாலோ, நம்மாள் அதை உடனே நினைவுபடுத்தி அது சரியா? தவறா ? என கூற இயலுகிறது.
யதார்த்த நிலை
குழந்தைகள், பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது கவனத்துடன் புரிந்துகொண்டாலும், பல சமயங்களில் அவர்களால் கற்றவற்றை நினைவுகூர்ந்து தேர்வில் எழுதமுடிவதில்லை. ஏன் ?
பத்துநாள்களுக்கு முன்னர் கேட்ட ஒரு சொற்பொழிவில், பேச்சாளர் எடுத்தாண்ட எண்ணற்ற உதாரணங்களையும், கூறிய கருத்துக்களையும் அப்போது நன்கு உண்ர்ந்ததாய் இருந்திருந்தாலும், இன்றைக்கு அதில் பாதியைக்கூட ஞாபகத்தில் கொண்டுவர இயலவில்லையே ?
நாம் கற்றறிந்த விடயங்கள், தகவல்கள், இலக்கியங்கள் எல்லாவற்றையும் நினைவில் கொண்டு, தேவையான போதெல்லாம் அதை முழுமையாக நினைவுகூர்ந்து எல்லாரையும் பிரம்மிக்கவைக்க வேண்டுமென்று எல்லோருக்கும் பேராசை உண்டு. ஆனால், அதற்கான முறையான முயற்சியையும், பயிர்ச்சியையும் நம்மில் எத்தனைபேர் முதற்கண் துவக்குகிறார்கள். அப்படியே துவக்கியவர்களில் எத்தனைபேர் சவால்களைக் கடந்து தொடர்கிறார்கள் ?
கேள்வி
மாணர்களிடம், ஆசிரியர் பள்ளியில் நடத்திய பாடத்தை வீட்டில் சென்று மீண்டும் ஒருமுறை படிக்குமாறு அறிவுருத்துவார். நன்றாக புரிந்துணர்ந்த பாடத்தை மீண்டும் எதற்கு படிக்கவேண்டும் என்று மாணவர்கள் வழக்கம்போல் தவிர்த்துவிடுகின்றனர்.
கற்றறிந்த பாடத்தை மீண்டும் கற்பதற்கும், நினைவாற்றலுக்கும் என்ன சம்பந்தம் ?
திரும்பப் படித்தால் தான் நினைவாற்றல் வளருமென்றால் தினம்தினம் ஒன்றையே எத்தனை நாள்களுக்கு படித்துக்கொண்டிருப்பது ?
பியோடர் வோஸ்நியாகின் ஆய்வு
எத்தனையோ துறைகளில் ஆய்வுகள் நடப்பதுபோல, இந்த நினைவாற்றல் குறித்தும் எண்ணற்ற ஆய்வுகள் நூற்றாண்டுகளாய் நடக்கின்றது. 1980-களில் நடத்திய ஆய்வில் போலந்தை சேர்ந்த பியோடர் வோஸ்நியாக் என்ற அறிஞர் ‘சூப்பர்மெமோ மாதிரி’ (SuperMemo Model) என்ற ஒரு மாதிரியை உருவாக்கினார். சாதாரணமாக ஒரு மனிதன் கற்றறிந்த விடயத்தை எவ்வளவு நாள்கள், எத்தனை சதவிகிதம் ஞாபகம் வைக்கிறான் என்றும், அதே விடயத்தை, குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டுமொருமுறை நினைவுகளை புதுப்பிப்பதன் மூலம், எந்த அளவிற்கு நினைவுகூறுவது அதிகரிக்கிறது என்ற அடிப்படையில் நடத்திய ஆய்வின் மூலமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தை உருவாக்கினார்;
இந்த வரைபடம் வாயிலாக, காலம் (நாள்கள்) மற்றும் நினைவுகூறும் திறனளவு என்ற இரு அளவீடுகளின் அடிப்படையில், தன் ஆய்வு முடிவுகளை வோஸ்நியாக் வெளிப்படுத்தியுள்ளார்.
பொதுவாக இன்று கற்றறிந்துகொண்ட தகவல்கள், நாளடைவில் மெல்ல மெல்ல நம்முடைய நினைவிலிருந்து அழியத்துவங்கும். (உத.) இன்று நாம் ஒரு திருக்குறளை படித்து மனனம் செய்கிறோம். சில தினங்களுக்கு அந்த திருக்குறளைப் பற்றி சிந்திக்காமல், 10 நாள்கள் கழித்து அந்த திருக்குறளை நினைவுகூற முயற்சித்தால், அக்குறளின் முதல்வார்தையே நமக்கு ஞாபகம் வராது. மாறாய் அந்த குறளின் வேறு ஒன்றிரண்ட வார்த்தைகளோ, அல்லது அக்குறளின் பொருளோ சிலரால் நினைவுகூறப்படலாம். அதையே 60 நாள்களுக்குப் பின்னர் கேட்டால், எந்த வார்த்தையும், பொருளும் நினைவுக்கு வராது. மேலே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தில் இந்த நிலை ‘மறக்கும் வளைவு’ என்று காண்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதேகுறளை, அந்த 10 நாள்களுக்கு இடைப்பட்ட நாள்களில், ஒன்றிரண்டு முறை அந்த குறள் நினைவுகளை புதுப்பித்திருந்தால், 10-வது நாள் எளிதில் ஞாபகத்திற்கு வந்திருக்கும். குறிப்பிட்ட கால இடைவெளியில் கற்றறிந்த விடயங்களை மற்றுமொருமுறை வாசித்தோ, நினைவுகூர்ந்தோ, மனதில் பதிந்த நினைவுகளை புதுப்பிப்பதன் மூலம், அந்த நினைவுகளை நம்மில் ஆழமாக பதிவாகிறது. மேலோட்டமாக இருந்த நினைவுகள், புதுப்பிப்பதன் மூலமாக நிரந்தர நினைவுகளாக நம்மில் பதிவாகிறது. இந்த ‘சூப்பர்மெமோ மாதிரி’ ஆய்வுகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன {மனித ஆற்றல் வரையறையை முற்றிலுமாய் அறியும் வரை}.
நாம் செய்யவேண்டியவை
- முதல்முறையே நன்கு புரிந்துபடித்து மனனம் செய்தாலும், அந்த அறிவை எவ்வளவு காலம் நம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்கின்ற தேவைக்கேற்ப, குறிப்பிட்ட இடைவெளியில் அந்த நினைவை புதுப்பிப்பதன் மூலமாக அவற்றை நம்மில் நிரந்தரமாக்கி, தேவைப்படும்பொழுது எளிதில் நினைவுகூறளாம்;
- குழந்தைகளுக்கு இந்த நினைவாற்றல் மாதிரியை படிப்படியாய் புரியவைத்து அவர்களின் நினைவாற்றல் வளத்தை பன்மடங்காக்க பயிற்றுவிக்கலாம்;
நல்லநினைவாற்றல் வாழ்வில் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்; தன்னம்பிக்கை வாழ்வை வளமாக்க வழிவகுக்கும்; முறையாக பயிற்சி செய்து, நினைவாற்றலை வளர்ப்போம் ! உலகை வெல்வோம் !!
– ம.சு.கு