அவர்களின் வீடுகளில்
அடுப்பெறிக்க விறகு இருக்காது
அரிசி, பருப்பு சமைக்க இருக்காது
பட்டினியிலே காலம் போகும்
பக்கத்துவீட்டுக்குத் தெரிந்திருக்காது
மழையும், வெயிலும் விருந்தாளிகள்
துரத்தியடைக்கக் கதவிருக்காது
தேளும், பாம்பும் கூட்டாளிகள்
தடுத்து நிறுத்த வேலியிருக்காது
பழைய சோறும், பார்சல் சோறும்
கண்கள் கண்டே இருக்காது
ஈத்தம்பழம் இரண்டு போதும்
இரவு வரைக்கும் பசியெடுக்காது
சாய்ந்தமர நாற்காலி இருக்காது
கால் நீட்டிப்படுக்க கட்டில் மெத்தையிருக்காது
படுக்கவோ, அமரவோ ஒரு பாய்தான்
இரண்டு இருந்தால் வீடு இடம் கொடுக்காது
பண்டிகைக்கோ, பெருநாளுக்கோ
பட்டுடுத்தது கிடையாது
பசிபோக்கவே நாதியில்லை
பட்டுக்கு அங்கே வழியேது?
மாலைப் பொழுதாகிவிடும்
ஏற்றிவைக்க விளக்கிருக்காது
விறகு விளக்காய் மாறிவிடும்
ஊற்றியெரிக்க எண்ணெயிருக்காது
இதையெல்லாம் எண்ணியே
பொழுதுகள் கழியும்
தூக்கம் போவதும் கண்களுக்குத் தெரியாது
கனவுகள் கூட இருளாகத்தான்
தெரியும்
வர்ணம் தீட்ட வசதியிருக்காது
யாரிடமும் கையேந்தியது கிடையாது
எனினும்
வசந்தம் கூரையை கிழித்துக்கொண்டு
வந்ததுகிடையாது
உறவென்று சொல்லியழ யாருமில்லை
இருப்பினும்
இறைவனுக்கு உதவிடவாத் தெரியாது…?