வான்நிலா…

0
1118

என் வாழ்நாளில் ஒருமுறையேனும்
ஏணிவைத்தேறி ஆகாயத்தடைந்து,
வால்வெள்ளியை நூலாய் திரித்து,
நட்சத்திரங்களை மலர்களாய் கோர்த்து,
அவளின் கழுத்தில் மாலை சூடிட ஆசை…

அத்தனை அழகு அவளில்..

அடடா…!
அவள் இல்லையேல் வானிற்கு ஏதழகு?
மெய்மறந்து ரசிக்கிறேன்
தென்னங்கீற்றே!
மறைக்காமல் கொஞ்சம் விலகு..
உணர்வுகள் ஊசலாடுவதை
உணர்ந்து கொள்ளுமா உலகு?
அவளைப் பற்றி ஆயிரம்
அர்த்தம் சொல்லுதே இந்திரவு..

அவளொரு அழகோவியம்…

அவளை மயக்க,
விண்மீன்கள் விட்டு விட்டு
கண்ணடிக்கும்
உடுக்கள் தங்களுக்குள்ளே
போர்தொடுக்கும்
விண்கற்கள் அவளுக்காய் எரிந்து
இறந்திட துடிக்கும்
எது நடந்தாலும்
ஏரெடுத்துக்கூட பார்த்திட மாட்டாள்

திமிரு பிடித்த தேவதையவள்…

காரிருள் வானம்தான் அவள் போர்வை
எப்பொழுதும் போர்த்திக்கொண்டுதான் வருவாள்

முப்பதே நாட்கள்தான் அவள் காலெல்லை
அதன் பின்னே தேய்ந்திடுவாள்

சோகம் அவளை சூழ்ந்தால்
இருண்டுவிடுவாள்
இன்பத்தில் அவள் தாழ்ந்தால்
ஒளிர்ந்துவிடுவாள்

ரோசக்காரியவள்…

காலோட்டத்தில் 
என்றாவது ஒருநாள்
நான் இறங்கிப் பார்த்திட வேண்டும்
என் தடம்
பதித்திட வேண்டும்….

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments