மலையுச்சியில் நின்று
அடிவாரத்தை தொட்டுவிடும்
அருவியென
நோக்கம் கொள்…!
ஆழ்கடலில் தோன்றி
கரை மணலை முத்தமிடும்
திரையென
நோக்கம் கொள்…!
நோக்கம் நோக்கம்
நோக்கம்…
இங்கு
எது தான்
நோக்கம்…!
குதித்து வரும்
அருவி நீர்
தற்கொலை தூண்டுவது
நோக்கமா…?
திரண்டு வரும்
திரை
ஆழ்கடல் அன்னையை நீங்கி
ஓட்டம் பிடிப்பது
நோக்கமா…?
விதியெனும் வியாதியால்
வீழ்ந்தவனும்
சதியெனும் சகதியால்
சாய்ந்தவனும் கொண்டது
என்ன நோக்கம்…?
பசிப் பிணியால்
பிணம் தின்னும்
பிசாசுகளாய் மாறிய
தெருவோரக் குழந்தைகள்
கொண்டது
என்ன நோக்கம்…?
ஓட்டு எனும்
ஒற்றை உரிமத்தை
ஓரிரவிலே உடைமையாளன் கை
மாறியதன்
நோக்கம் தான் என்ன…?
தேர்தல் கட்சிக்கூட்டக் களத்திலே
தேவ வாக்குகள் அருளப்படுவதிலும்
கூன் முதுகு கொண்டு
குழைந்து குழைந்து
சிரித்து கும்பிடு போடுவதிலும்
வேட்பாளர் கொண்ட
நோக்கம் தான் என்ன…?
மொழி மலமாகவும்
சாதி சாக்கடையாகவும்
இனம் இருட்டாகவும்
உருவெடுத்ததன்
நோக்கம் தான் என்ன…?
பருவமடையா பிஞ்சு
பாழாக்கப்பட்டு கசக்கி
வீசப்படுவதன்
நோக்கம் தான் என்ன…?
பெற்ற பிள்ளையை கைவிட்டு
பெற்ற தாய்
பொழுது போக்கு செயலிகளிலே
பித்துப் பிடித்துப்
பிழையாய் பிழைத்து
நெறி தவறி ஓடுவதன்
நோக்கம் தான் என்ன…?
நடிகர் பெயரை
நளினமாய் உரைத்து
விசிறிகள் விவாதம்
விதைத்து
விளலாய் நேரத்தை நகர்த்துவதன்
நோக்கம் தான் என்ன…?
காதலில் காமம் ஊற்றெடுத்திட
காலவரையறை யாவும்
கடந்து கணக்கெடுத்திடாது
வரைவின் முன்னே வரையப்பட்ட
காமசூத்திரத்தின்
நோக்கம் தான் என்ன…?
அதன் போது உதித்துக் கொண்ட
கருவின் தோன்றலின்
நோக்கம் தான் என்ன…?
எதிர்காலம் தான் என்ன…?
இல்லை கருவிலேயே சிதைவதா…?
இக் கரு மட்டுமல்ல
பல கனவுகளும்
பலமான நோக்கம்
எதுவென அறிந்திடாதே
நொருங்கிச் சென்ற
சரித்திரமும் உண்டு…!
நோக்கும் நோக்கம்
எதுவென…
அறி…
தெளி…
விழி…!
வெற்றி ஆறாய்
விரைந்திடு…!
வாழ்த்துகள்…!
செமமா ♥