வெந்நீரூற்றுக்களும் பூகம்ப முன்னறிவிப்பும்

0
1210

சாதாரணமான வெப்பநிலையைவிட உயர்ந்த வெப்பநிலையில் உள்ளதாகக்காணப்படும் நீரூற்றுக்களே வெந்நீரூற்றுக்கள் எனப்படும். பூமியின் மேலோட்டின் கீழுள்ள வெப்பமான பாறைகளின் இடுக்குகளூடாக மேல்நோக்கி ஊடுருவி வரும் நீரானது பாறைகளின் வெப்பத்தின் ஒரு பகுதியைக்காவிக்கொண்டு வெளியேறி வெப்பநீர் ஊற்றுக்களாகப்புறப்பட்டு வருகிறது. சுமார் ஐந்நூறு மில்லியன் ஆண்டுகளுக்குமுன் உருவாகியதாகக் கருதப்படும் சூடான உலர் பாறை(HDR)களோடு தொடர்புபடும் போதே நீரூற்றுக்கள் வெந்நீரூற்றுக்களாக மாறுகின்றன. இப்பாறைகள் கொண்டுள்ள கதிர்த்தொழிற்பாட்டு மூலகங்களின் இயற்கையான செயற்பாடு காரணமாகவே அவைகளில் வெப்பம் ஏற்படுகிறது.

வெப்பம் கொண்ட பாறைகள் பிரதானமாக நிலக்கீழ்ப்பாறைத் தகடுகளின் எல்லைப்பகுதிகளில் காணப்படுகின்றன. இலங்கையானது இந்தோ அவுஸ்திரேலியன் தகட்டில் அமைந்துள்ளது. புவி நிலக்கீழ்ப்பாறையானது மேலும் ஆபிரிக்கன், பசிபிக், அந்தாட்டிக், யூரேசியன், தென்னமரிக்கன் மற்றும் வட அமெரிக்கன் ஆகிய ஆறு பாறைகத்தகடுளைக்கொண்டு அமைந்துள்ளது. இலங்கையின் தானம் தகடுகளின் எல்லைப்புறங்களில் இல்லாததன் காரணமாக இங்கு செயற்பாடுடைய எரிமலைகள் இல்லை.

இலங்கை அமைந்துள்ள பாறையானது புவியியல் ரீதியாக மூன்று பிரதானமான தகடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன வன்னிப்பாறை (Wanni complex), உயர்நிலப்பாறை (Highland complex) மற்றும் விஜயன் பாறை (Vijayan complex) ஆகியனவாகும். உயர்நிலப்பாறைப் பகுதிக்கும் விஜயன் பாறைப்பகுதிக்கும் இடையே உள்ள அம்பாந்தோட்டை முதல் திருகோணமலை வரையிலான பகுதியிலேயே இலங்கையின் அநேகமான வெந்நீரூற்றுக்கள் காணப்படுகின்றன. திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ரங்கிரிய, கன்னியா என்னும் இடங்களிலும், பொலன்னறுவ மாவட்டத்தில் மெதவேவா, பொரவேவா, முத்துகல்வேவா, மதுறு ஓயா தேசிய பூங்காவில் குரக்குபுர என்னுமிடங்களிலும், அம்பாறை மாவட்டத்தில் மகா ஓயா, வேகவா, கப்புறல்லா, எம்பிலின்னே என்னுமிடங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மதுனாகல என்னுமிடத்திலும் வன்னிப்பாறையிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில் கீரிமலையிலும் உள்ள வெந்நீரூற்றுக்கள் பிரபலமாய் அறியப்பட்டவையாகும். வடமராட்சியிலுள்ள கற்கோவளத்திற்கண்மையில் அமைந்திருக்கும் புனித நகர்ப்பிரதேசத்திலும் ஒரு வெந்நீரூற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேற்கண்ட வெந்நீரூற்றுக்களைவிட வற்றாத நீர்நிலைகள் பலவும் இலங்கையின் பல பாகங்களிலும் காணப்படுகின்றன. யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள நிலாவரைக்கிணறு, மந்துவில் சோலையம்மன் கோவிலில் உள்ள தீர்த்தக்கிணறு, நல்லூரிலுள்ள யமுனா ஏரித்தடாகம் என்பனவும் கிழக்கு மாகாணத்திலுள்ள மாமாங்கத்தீர்த்தம், உகந்தைமலையிலுள்ள நீர்ச்சுனைகள் என்பன இவற்றுள் சிலவாகும்.

உலக அளவில் ஐஸ்லாந்து, நியுசிலாந்து, சிலி, ஆபிரிக்கா,எகிப்து,உகண்டா, ஸம்பியா, அமெரிக்கா, மெக்ஸிக்கோ, பிரேஸில், கனடா, இந்தியா, கொஸ்ராறிகா, பேரு, சீனா, கொரியா, மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், ஜேர்மனி, கிரீஸ், துருக்கி, ஐரோப்பா,ஜப்பான், தாய்வான் போன்ற இன்னோரன்ன நாடுகளிலும் பிரபலமாக அறியப்பட்ட வெந்நீரூற்றுக்கள் உள்ளன.

வெந்நீரூற்றுக்களில் நீராடுவது உடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணையானது என்பது அனுபவ உண்மையாகும். காரணம் அந்நீரூற்றுகளில் ஆரோக்கியத்திற்கு ஊக்கமளிக்கக்கூடிய கனிப்பொருட்கள் அடங்கியுள்ளன. விசேடமாக தோல்சார்ந்த நோய்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய மருத்துவ கனிப்பொருட்களை இவ்வெந்நீர் ஊற்றுக்கள் கொண்டுள்ளன. சில வெந்நீரூற்றுக்கள் சமயங்களோடு இணைத்துப்பேசப்பட்டு புனித ஊற்றுக்களாகக் கருதப்பட்டுப் பேணிப்பாதுகாக்கப்படுகின்றன.
வெந்நீரூற்றுக்களின் வெப்பநிலையானது 30 சதம பாகை முதல் 101 சதம பாகைவரை வேறுபடுவதாக அறியப்படுகிறது. வழக்கமாக சாதாரண காற்றின் வெப்பநிலையைவிட 6.5 அல்லது அதற்கு மேற்பட்ட வெப்பநிலையில் வெந்நீரூற்றுக்களின் வெப்பநிலை காணப்படும். கன்னியா வெந்நீரூற்றின் வெப்பநிலை 30 சதம பாகை முதல் 37 சதம பாகைவரை வேறுபடுகிறது. மதுனாகல நீரூற்றின் வெப்பநிலை 34 சதம பாகை முதல் 46 சதம பாகை வரை வேறுபடுகிறது.இவ்வெந்நீரூற்றானது 11,582அடி ஆழத்திலிருந்து புறப்பட்டு வருகிறது. ஒரு செக்கனுக்கு 645மில்லி லீற்றர் அளவான நீர் இந்த ஊற்றிலிருந்து வெளியேறுகிறது. மகா ஓயாவிலுள்ள வெந்நீரூற்றே இலங்கையின் அதியுயர் வெப்பநிலை கொண்ட வெந்நீரூற்றாகும். இங்குள்ள ஏழு வெந்நீர்க்கிணறுகளில் ஒன்று 56 சதம பாகை வெப்பநிலை கொண்டதாயுள்ளது.
இயற்கையின் தோற்றப்பாடுகளில் சிறப்புவாய்ந்த ஒன்றாகக் கருதப்படும் வெந்நீரூற்றுக்கள் தனியே மக்கள் நீராடி மகிழ்வதற்கு மட்டுமே உருவாகியிருக்கவில்லை. அவை இயற்கை அனர்த்தத்தில் பயங்கரமான பூமியதிர்ச்சியை முன்கூட்டியே அறிவிக்கும் சமிக்ஞையை வழங்கும் சாதனங்களாகவும் பயன்படுத்தப்படலாம். பூமியதிர்ச்சியை முன்கூட்டியே எதிர்வு கூறத்தக்க சாதனம் தொழில் நுட்பம் வானளாவ வளர்ந்திருக்கும் இக்காலத்தில் கூடக் கண்டறியப்படவில்லை பூமியதிர்ச்சி இடம்பெறும்போதே றிச்டர் எனும் அளவுகோலைக் கொண்டு அதை மதிப்பிடுகின்றனர். அதனால்தான் விஞ்ஞானம் வேற்றுக்கிரகங்களையும் தொட்டிருக்கும் இக்காலத்திலும் பூமியதிர்ச்சியினால் பல்லாயிரம் உயிர்கள் பலியாகின்றன. அளவிட முடியாத சேதம் ஏற்படுகிறது.

முதல் 10 கிலோமீற்றர் ஆழத்திற்குள் உள்ள பூமியின் மேலோட்டில் ஒரு கிலோமீற்றர் ஆழத்திற்கு சுமார் 20 சதம பாகை அளவுக்கு வெப்பநிலை அதிகரிப்பு காணப்படுகிறது. வெந்நீரூற்றுக்கள் யாவும் இவ்வாழத்திற்குள்ளாகவே அவற்றின் ஆரம்பத்தானத்தைக் கொண்டவையாக உள்ளன. பூமியதிர்ச்சியின் பருமனைப்பொறுத்து வெந்நீரூற்றுக்களின் வெப்பநிலை அதிகரிப்பும் காணப்படுகிறது என்பதை சீனாவின் பீஜிங் இலுள்ள தயான் வெந்நீர்க்கிணற்றில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி காட்டுகிறது. பூகம்ப அலைகளின் காரணமான அதிகரித்த வேகத்துடனான மேற்காவுகையும் வௌ;வேறு வெப்பநிலைகள் கொண்ட நீர்க்கூறுகள் கலப்பதாலும் பூகம்பத்தின் ஆரம்பக்கட்டத்தில் வெந்நீரூற்றின் வெப்பநிலை குறைகிறது. பூகம்பம் நடைபெற்று முடிந்ததும் வெப்பநிலையில் அதிகரிப்பு காணப்படுகிறது. எனவே இவ்வாறான திடீர் வெப்பநிலை மாற்றங்களை அறிந்து கொள்வதன் மூலம் பூகம்பம் நிகழக்கூடிய சாத்தியக்கூறுகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடும். இதற்கு வெந்நீரூற்றுக்களின் வெப்பநிலையைத் தொடர்ந்து அளந்தறியவேண்டும். இலங்கையின் பல பாகங்களிலும் காணப்படும் வெந்நீரூற்றுகளின் வெப்பநிலைகளில் ஏற்படும் மாற்றங்களை வருடம் முழுவதும் அளந்தறிந்து அதை ஒரு தரவாக வைத்து ஆராயவேண்டும். திடீர் மாற்றங்கள் வெப்பநிலைகளில் காணப்படும்போது அதைப் பூகம்பம் ஏற்படப்போகும் முன்னறிவிப்பாகக் கொண்டு மக்களை எச்சரிக்கையாய் இருக்கும்படி கூறலாம்.

பூகம்பம் ஏற்படும் இடங்களிலுள்ள வெந்நீரூற்றுக்களின் தரைநீர் மட்டம் அல்லது நீர் வெளியேறும் வீதங்கள் பூகம்பம் ஏற்படும் காலங்களில் குறைவதாக ஜப்பானிலுள்ள மற்சுயாமா நகரில் ஊற்றெடுக்கும் டோகோ வெந்நீரூற்றில் நடாத்தப்பட்ட ஆராய்ச்சி காட்டுகிறது. புவியோடுகள் நகர்வதனால் ஏற்படும் உள்ளக மாற்றமே இதற்கான காரணமாக இருப்பதாக அறியப்படுகிறது. புவியோடுகளின் நகர்வும் பூகம்பம் ஏற்படப்போகும் அறிகுறியாக உள்ளமையால் இவ்விதமான தரைநீர் மட்டக்குறைவு திடீர் எனக்காணப்படும்போதும் அது பற்றிக்கவனம் செலுத்தி மக்களுக்கு பூகம்ப முன்னெச்சரிக்கை விடுத்து அறிவுறுத்தலாம். இலங்கையிலுள்ள வற்றாத நீரூற்றுக்களின் மட்டவேறுபாடுகளையும் வருடம் முழுவதும் அளந்து தரவுகளைப் பெற்று மட்ட வேறுபாடுகள் திடீரென ஏற்படுகிறதா என அறிய முடியும். பூகம்பம் ஏற்படும் இடங்களிலுள்ள வெந்நீருற்றுக்களில் சுமாராக இருபத்திரண்டு மூலகங்கள் இருப்பதாக அறியப்படுகிறது. சல்பேற்றுக்கள், நைற்றேற்றுக்கள், கல்சியம், சோடியம் மற்றும் குளோரைட் உட்பட மேக்குரி எனப்படும் இரச மூலக்கூறும் அத்தோடு பல்வேறு கனிப்பொருள்களும் அடங்கியுள்ளன எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவைகளில் நீராடுபவர்க்குத் தோல்நோய்கள், பாரிசவாதம், ஆஸ்த்துமா போன்ற நாட்பட்ட பல வியாதிகளையும் குணப்படுத்தும் சக்தியும், மனச்சுமையைக்கூட இலேசாக்கி ஆறுதல் அளிக்கும் ஆற்றலும்; காணப்படுகிறது. அதேநேரம் பூகம்பம் நடைபெறப்போகும் காலத்தில் திடீரென வெந்நீரூற்றுக்களிலுள்ள இரச(அநசஉரசல)த்தின் அளவில் மாற்றம் ஏற்படுவதாக மக்கள் சீனக்குடியரசின் பீஜிங் நகரில் உள்ள அரச பூகம்ப ஆராய்ச்சி மையம் கண்டறிந்து கூறியுள்ளது. எனவே இலங்கையிலுள்ள வெந்நீரூற்றுக்களிலும் உள்ள இரசத்தின் அளவை வருடம் முழுவதும் அளந்தறிந்து அதில் ஏதாவது திடீர் மாற்றங்கள் தோன்றுகிறதா என அறிந்து அதைக்கொண்டும் பூகம்ப முன்னறிவிப்பை மக்களுக்கு வழங்கலாம்.
இவ்வருடத்தில் இதுவரை மூன்று தடவைகள் இலங்கையில் பூமியதிர்வு ஏற்பட்டுள்ளதையிட்டு நாம் அலட்சியமாய் இருக்க முடியாது. இலங்கை அமைந்துள்ள நிலக்கீழ்ப்பாறை இதுவரையில் இல்லாத மாற்றமொன்றுக்கு உள்ளாகியிருப்பதையே இது கோடிட்டுக்காட்டுகிறது. 2004 டிசம்பர் 26ம் திகதி சுமாத்ரா தீவின் அண்மையில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் பின்பே இம்மாற்றம் நிகழ்ந்துள்ளதை ஏற்றுக்கொள்ளலாம். ஏனெனில் 11-04-2012இல் மீண்டும் அதே இடத்தில் பூகம்பம் ஏற்பட்டபோது இலங்கையின் தலைநகர் உட்பட அநேக இடங்களில் கட்டிடங்கள் ஆடுமளவுக்கு பூமியதிர்ச்சி உணரப்பட்டது. எனவே இந்தோனேஷpய கடற்பகுதியில் 30 கிலோ மீற்றர் ஆழத்திலுள்ள பூமியதிர்ச்சி மையம் கொண்டிருந்த புவியோட்டிற்கும் இலங்கை அமைந்திருக்கும் புவியோட்டுக்குமிடையே தொடர்பு உள்ளது என்பதை உணரலாம். பின்பு 19-05-2012 நடுராத்திரி 1.45மணியளவில் மலையகப்பகுதிகளில் 3.5 ரிச்டர் அளவு புவிநடுக்கம் உணரப்பட்டது. மீண்டும் 26-05-2012 அன்று காலை 9.00 மணியளவில் கொழும்பிலும் அம்பாரையிலும் மலைநாட்டின் சில பகுதிகளிலும் 3.3ரிச்டர் அளவில் புவியதிர்வு பதியப்பட்டது. பிற்கூறிய இரு சந்தர்ப்பங்களிலும் உலகத்தின் எப்பாகத்திலும் பூமியதிர்ச்சி நடந்ததாகத் தகவல் இல்லை. எனவே இது இலங்கையின் கீழுள்ள புவியோட்டின் நகர்வின் காரணமாக ஏற்பட்டிருக்குமோ என ஐயம் எழுகிறது. ஆகையினால்தான் இலங்கை மக்கள் சுனாமி பற்றி எச்சரிக்கையாய் இருப்பதுபோல புவியதிர்வு பற்றியும் எச்சரிக்கையாய் இருக்கவேண்டியுள்ளது. பூமியதிர்ச்சியைப்பொறுத்தவரை வந்தபின் காப்பது முடியாத ஒன்றாகும். காரணம் இலங்கையின் நகர்ப்புறங்களில் மாடி மனைகள் அமைக்கப்பட்டிருக்கும் விதத்தைப்பார்த்தால் பூகம்பத்தின்போது எவரும் தப்பிப்பிழைக்க முடியாத நிலையே காணப்படுகிறது. எனவே பூகம்பம் வரப்போவது பற்றி ஓரிரு நாட்களுக்கு முன்பாவது எச்சரிக்கை செய்யப்பட்டாலே மக்களை இவ்வித திடீர் அனர்த்தத்திலிருந்து காப்பாற்ற முடியும். புவிச்சரிதவியல் நிறுவகம், நவீன தொழில்நுட்பங்களுக்கான ஆதர் சீ.கிளார்க் நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களும் இலங்கையில் பூகம்பம் நிகழக்கூடிய சாத்தியக்கூறுகள் பற்றியும் அவைகளை முன்னறிவிப்பதற்கு ஏதுவான யான் கூறியுள்ள முறைகளையும் இன்னும் அதுபோன்ற சாத்தியமான முறைகளையும் தீவிர கவனத்தில் எடுத்துச் செயற்படுவது அவசியமானதாகும். அரசாங்கமும் இந்த முக்கியமான ஆராய்ச்சிக்குத் துணைசெய்ய வேண்டும்.

முந்தைய கட்டுரைசிங்கை நகரத்து சிம்மாசனம் – அத்தியாயம் 02
அடுத்த கட்டுரைசமூக ஊடகங்கள் சாபமா? வரமா?
சா.சக்திதாசன் (அக்கரைச்சக்தி)
இலக்கிய, எழுத்துப்பணிகளில் சுமார் 52 வருடங்களாக ஈடுபாடு கொண்ட யான் சமயம்,அரசியல்,சமூகம், இலக்கியம்,கல்வி மற்றும் விஞ்ஞானம், நவீன தொழில்நுட்பம் பற்றிய துறைகளில் கட்டுரைகளையும் கவிதைகளையும் படைத்துள்ளேன். எனது கவிதைகள், இலங்கையின் புகழ்புத்த கவிஞர்களான நீலாவணன், சில்லையூர் செல்வராசன், நாவற்குழியூர் நடராசன், காசி ஆனந்தன் போன்றவர்கள் தலைமையில் கவி அரங்கேற்றம் பெற்றுள்ளன.இலங்கை வானொலியிலும் எனது கவிதைகள் ஒலித்தன. வீரகேசரி, சுதந்திரன், கலைவாணன்,தினகரன் போன்ற பத்திரிகைகளில் எனது கவிதைகளும் கட்டுரைகளும் பிரசுரமாகியுள்ளன. மாற்றம், கிழக்கொளி, இந்து தருமம்,இளங்கதிர் சாயிமார்க்கம், யாழோசை, சமாதானம்,நாணோசை, மருதம்,அருந்ததி,தாயக ஒலி போன்ற சஞ்சிகைகள் எனது ஆக்கங்களைப்பிரசுரித்துள்ளன.ஆங்கிலத்திலும் பல கவிதைகளைப்படைத்துள்ளேன். பட்டய இயந்திரப்பொறியியலாளராகிய யான் தொழில்நுட்பம்,விஞ்ஞானம் சார்ந்த கவிதைகளையும், ஆரய்ச்சிக்கட்டுரைகளையும் எழுதியுள்ளேன். கவிதைநூல்களையும், தொழில்நுட்ப நூல்களையும் எழுதி ஆவணமாக்கி வைத்துள்ளேன்.அத்துடன் பல கவிதைகளை எனது குரலில் பதிவுசெய்து வைத்துள்ளேன். திருக்குறள்கள் அத்தனையையும் விருத்தப்பாவில் மாற்றி எழுதியுள்ளேன்.வெண்பா,விருத்தப்பா, ஆசிரியப்பா,கட்டளைக்கலித்துறை, குறும்பா வடிவில் கவிதைகளைப்படைக்கிறேன். பாடசாலைக்காலங்களில் தமிழ் ஆங்கில நாடகங்களில் நடித்த அனுபவம் உண்டு. வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளிலும், நாட்டுக்கூத்திலும் பக்கப்பாடகராகப்பங்குபற்றியுள்ளேன். ஆலயங்களில் பஜனைப்பாடகராகவும் இருந்துள்ளேன். முகநூலில் சமூக,சமய, அரசியல், ஒழுக்கவியல் சார்ந்த விடயங்களைத் தொடர்ச்சியாக எழுதிவருகிறேன். சோதிட சாஸ்திரத்திலும் எனக்குப்பரிச்சயம் உண்டு. அக்கரைப்பற்று இராமகிருஷ;ண வித்தியாலயத்திலும், கல்லடி உப்போடை சிவானந்த வித்தியாலயத்திலும் கல்வி பயின்ற யான் பேராதனைப்பல்கலைக்கழகத்தின் இயந்திரப்பொறியியல் பட்டதாரியாவேன்.இலங்கைப்பொறியியலாளர் சங்கத்தின் பட்டய இயந்திரப்பொறியியலாளராகவும் உள்ளேன். தம்பிலுவில் மகாவித்தியாலயத்தில் ஆசிரியப்பணியை ஆரம்பித்த யான், பேராதனைப்பல்கலைக்கழகம், கிழக்குப்பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கைத்திறந்த பல்கலைக்கழகம், இரத்மலானை தொழில்நுட்பப்பல்கலைக்கழகம் ஆகியவற்றில் விரிவுரையாளராகவும், வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை, இலங்கை சீமெந்துக்கூட்டுத்தாபன காங்கேசன் சீமெந்துத்தொழிற்சாலை என்பவற்றில் இயந்திரப்பொறியியலாளராகவும், யாழ்ப்பாணம் கொக்குவில் தொழில்நுட்பக்கல்லூரி, மட்டக்குளி உயர் தொழில்நுட்பக்கல்லூரி என்பற்றில் வருகை தரு விரிவுரையாளராகவும், பெலவத்தை நிர்மாண இயந்திரோபகரண பயிற்சிநிலையத்தில் செயற்திட்டப் பொறியியலாளராகவும், தேசிய கல்வி நிறுவகத்தின் பொறியியல் தொழில்நுட்பப்பகுதியில் செயற்றிட்ட அதிகாரியாகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன். கல்முனை பாண்டிருப்பைப்பிறப்பிடமாகக்கொண்ட மூதறிஞர் சைவப்புலவர் இளைப்பாறிய உதவி அதிபர் சே.சாமித்தம்பி-நாகம்மா தம்பதிகளின் சிரேஷ;ட புத்திரனான யான் சாவகச்சேரியைப்பிறப்பிடமாகக்கொண்ட பாக்கியலட்சுமி அவர்களைத்துணைவியாக வரித்துள்ளேன். யான் மூன்று ஆண் மக்களுக்குத் தந்தையாவேன். (2018-07-15) எமது 35ஆம் ஆண்டு திருமண நிறைவுநாள் என்பது குறிப்பிடத்தக்கது. எனது 'இல்லறவாழ்வு இனிக்குமா? கசக்குமா? ' எனும் நூல் அருந்ததீ நிறுவனத்தினால் கொழும்புத்தமிழ்ச்சங்கத்தில் அன்றைய தினம் வெளியிடப்பட்டது.
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments