கடவுளே…!
நீரென்று நெருப்பள்ளி
உடல் தடவிக்கொள்கிறேன்
பூவென்று புகையள்ளி
தலை சூடிக்கொள்கிறேன்
கண்ணுக்கு மையென்று
கரி பூசிக்கொள்கிறேன்
காலுக்குக் கொலுசென்று
சங்கிலி மாட்டிக்கொள்கிறேன்
இன்னும்,
ஏக்கத்தைச் சேலையாக நானுடுத்திக்கொள்கிறேன்
தவிப்பைப் போர்வையாக
நான் போர்த்திக்கொள்கிறேன்
கண்களைக் குளமாக்கி
நானீந்திக்கொள்கிறேன்
கண்ணீரை அமுதாக்கி
நானருந்திக்கொள்கிறேன்
இன்னும்
இன்னும்,
என் கணவன் துணையின்றி
ஜடமாக வாழ்கின்றேன்
எல்லையற்ற சோகங்களில்
என்னாட்களை கடக்கிறேன்
என்னவன் திரும்பும் நாட்களை எண்ணி
அகமகிழ்ந்து கொள்கிறேன்
நாட்காட்டியை பார்த்த வண்ணமே
நாட்களைக் கடக்கிறேன்…
கைகாலிருந்தும் ஊனமாய் கிடக்கிறேன்
வாய்பேசத் தெரிந்தும்
வார்த்தைகளின்றித் தவிக்கின்றேன்
மேகத்திடமும் தென்றலிடமும்
செய்தி சொல்லியனுப்புகிறேன்
இனியும் வேண்டாமே வெளிநாடு,
வாசற்கதவை திறந்து வைத்துக்
காத்துக்கொண்டு கிடக்கிறேன்…