மூலிகையின் பெயர்: வேம்பு
மருத்துவப் பயன்கள்: வேம்பு கோழையகற்றுதல், சிறுநீர் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தல், வாதம், மஞ்சள் காமாலை, காய்ச்சல் , சுவையின்மை, பித்தம், கபம், நீரிழிவு, தோல் வியாதிகள், பூச்சிக் கொல்லியாகவும் பயன்படுகிறது.
பயன்படுத்தும் முறைகள்:
- வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் மறைந்து விடும். வேப்பம் குச்சியால் தொடர்ந்து பல் துலக்கி வந்தால் வாய் துர்நாற்றம் போகும், பற்கள் உறுதியாகும்.
- வேப்பிலை, எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்துத் தலைக்குத் தேய்க்க, பித்த மயக்கம், குடிவெறி குணமாகும்.
- வேப்பிலை, மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூச பித்த வெடிப்பு, கால் பாத எரிச்சல் குணமாகும். நகச்சுத்திக்கு பற்றிட குணமாகும்.
- வேப்பம் பூவின் துவையல், ரசம் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும்.
- காயை உலர்த்தி பொடி செய்து வெந்நீரில் கொடுக்க மலேரியாக் காய்ச்சல் குணமாகும்.
- வேப்பங்கொழுந்தும் அதிமதுரப்பொடியும் சம அளவு சேர்த்து நீர் விட்டு அரைத்துப் பட்டாணி அளவாய் மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி நாள் தோறும் 3 வேளை ஓரிரு மாத்திரை கொடுத்து வர அம்மை நோய் தணியும்.
- வேம்பு இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்துத் தடவி வரப் பொன்னுக்கு வீங்கி, பித்த வெடிப்பு, கட்டி, பரு, அம்மைக் கொப்புளம் ஆகியவை குணமாகும்.
- 5 கிராம் உலர்ந்த பழைய வேம்புப் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு மூடி வைத்திருந்து வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும். கல்லீரலை நன்கு இயக்குவிக்கும்.
- 3 கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் கூட்டி அரைத்துக் காலை, மாலையாக 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும். நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் தீரும்.
குறிப்பு
- தினமும், காலை வேளையில் பத்து வேப்பிலைக் கொழுந்து எடுத்து ஐந்து மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் மலேரியாக் காய்ச்சல் குணமாகும்.
- வேப்பிலைக் கசாயம் கிருமிகளைக் கொன்று காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகும்.
- வேப்பங்காய் இரத்த மூலத்தையும், குடற் பூச்சிகளையும் சிறுநீரகத் தொல்லைகளையும் போக்கும்.