இது ரசிக்கும் படியாக இல்லை என்று நாம் சொல்லும் ஒரு புகைப்படம் கூட,எங்கோ, யாரோ ஒருவரால் மிகவும் ரசித்து நேசித்து எடுக்கப்பட்ட புகைப்படம் தான்!
அது போல நாம் இயல்பாகவே விரும்பாத பல விடயங்களை மற்றொருவர் மிகவும் நேசிப்பார், செய்து கொண்டு இருப்பார்.
ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியான இயல்புகளும், உணர்வுகளும் உண்டு, அது இறைவனின் நியதி.
அன்றாட வாழ்வில் இப்படி எத்தனையோ மாறுபட்ட குணம் கொண்டவர்களுடன் பேசுகிறோம், கடந்து செல்கிறோம், அதில் சிலரின் செயலை புன்னகையுடன் உள்வாங்கும் அதே சமயம் வேறொருவரின் செயலை பார்த்து சற்று முகம் சுளிக்கிறோம்.
காரணம் அவர் செய்தவை சரியா பிழையா என்பதை விட நம் இயல்புக்கு ஒத்துப்போனதா அல்லது இல்லையா என்பதே அந்த இடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
நம் உணர்வோடு ஒத்துப்போகிறவரை பார்த்து புன்னகைக்கிறோம் இல்லாவிடில் வெறுக்கிறோம், அதே போல தான் வேறோரு மனிதருக்கு நம் செயல்களும் தெரியும் என்பதை யோசிக்க தவறுகிறோம்.
எவ்வளவு நல்ல காரியம் செய்தும் குத்தி காட்டப்பட்டவரும் உண்டு தீயது செய்தவரை தூக்கி பாராட்டியவரும் உண்டு உலகினில் காரணம் உணர்வுகளின் வித்தியாசம்.
ஆதலால் மற்றவரின் நிறம், அந்தஸ்து, பட்டம், பதவி, மதம், குடும்பம், ஏழ்மை, வறுமை, போன்ற வெளிப்படையான அனைத்தையும் தள்ளி வைத்து விட்டு அவரின் உள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் முதலில்.
அது எந்த வகையான உணர்வாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும், முதலில் மதிப்பளிக்க பழகினால் பின்பு அந்த உணர்வுகளில் உள்ள சரி, பிழையை சுட்டிக்காட்டி திருத்தம் செய்வது கஷ்டம் இல்லை.
எப்போது உணர்வுகள் கண்டு கொள்ளப்படாமல் மிதிக்கப்பட்டு, ஒதுக்கப்படுகிறதோ, அங்கே தான் கோபம், விரக்தி, எதிர்ப்பு போன்ற அத்தனையும் உருவாகிறது.
உள்ளத்தை நேசித்து வெற்றி கொள்ள சிறந்த வழி எல்லா தனிமனிதனுடைய உணர்வையும் புரிந்து நடப்பது தான்!