நடுநிசி வேட்டை – அத்தியாயம் 02

0
708

 

 

 

 

காலை வேளை கடைத்தொகுதிகள் வரிசையாக அமைந்திருந்த அந்த பிரதான வீதி வழமை போல் பரபரப்புக்கு சற்றும் பஞ்சம் இன்றி இயங்கிக்கொண்டிருந்தது. உயர்ந்த கட்டடங்களில் விற்கும் அநியாய விலைகளை பேரமே பேசாமல் பகட்டாக வாங்கும் மக்கள் நடைபாதை கடைகளில் சற்று சத்தமாகவே பேரம் பேசி ஏழைகளின் வயிற்றில் அடித்துக்கொண்டிருந்தார்கள். அந்த பிரதான வீதியில் மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்த காரின் டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த பத்ரி தன் அருகில் இருந்த நியூஸ்பேப்பரில் இலேசாக கண்களை ஓடவிட்டு தலைப்பு செய்திகளை ஆராய்ந்தான்.

“வக்கீல் சங்கர் கொலை”

என்று சிகப்பு நிறத்தில் சற்று பெரிதாகவே எழுத்துக்கள் பேப்பரின் கால்பகுதியை நிரப்பியிருந்தன. கார் நெருங்கலான ஒரு வீதி வழியாக பயணித்து ஓரிடத்தில் வந்து நின்றது. பத்ரி காரின் கதவை திறந்து வெளியே வந்தான். தன்னுடைய ஆபீசுக்கு முன்னால் நின்ற அந்தக் கறுப்பு நிறக் கார் அவன் கவனத்தை ஈர்த்தது. அதை ஓரப்பார்வையால் தொட்டுக்கொண்டே ஆபீசினுள் நுழைந்தான். ஒரு பெண்மணி, அழகாக தான் இருந்தாள். மெல்லிய உடல் வாகு, சற்று எடுப்பான தோற்றம். சத்யா அவளிடம் எதோ தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தான். கையில் வைத்திருந்த பைல்களை மேசையில் வைத்தபடி கண்களாலேயே சத்யாவிடம் என்ன என்று விசாரித்தான் பத்ரி.

“இதோ பாஸ் வந்திட்டாரு” என்ற சத்யா “இவர் தான் மிஸ்டர் பத்ரி” என்று அவரை அறிமுகம் செய்தான்.

“உம் சொல்லுங்க என்ன விசயம்?”

“வழக்கமான கேஸ் தான் பாஸ், வீட்டில ஏதோ ப்ராப்லம். புருசன் மேல கொஞ்சம் டவுட்டாம். எப்படிபட்டவர்னு தெரிஞ்சுக்கணுமாம்.”

“ஏன் சந்தேகப்படுறீங்கனு தெரிஞ்சுக்கலாமா மிஸிஸ்…” என்று பெயரை அறியும் நோக்குடன் இழுத்தான் பத்ரி.

 

 

 

 

“கீதா” குரல் கணீரென்று இனிமையாக இருந்தது.

“எஸ் கீதா சொல்லுங்க”

“ஸார் அது வந்து அவரோட பைல்ஸ் செக் பண்ணும் போது ஒரு பொண்ணுக்கூட சேர்ந்து அவர் எடுத்துக்கிட்ட போட்டோஸ்லாம் கிடைச்சீச்சு”

“அவர்கிட்ட என்ன ஏதுனு விசாரிக்கலையா?”

“ஆ. கேட்டேன் ஸார். ஆனா அவரு கடையில வேலைபாக்கிற பொண்ணு அது இதுங்கறாரு. மேல ஏதும் கேட்டா காச்சு மூச்சுனு கத்துறாரு. கடையில வேலை பாக்கிற பொண்ணுக்கூட போட்டோ எடுத்துக்க என்ன அவசியம் வந்தீச்சு. எனக்கு அவன் மேல ஆரம்பத்திலயிருந்தே டவுட்டு” என்றாள் கீதா. அவளின் சொற்கள் உதிர்ந்த வேகம். அவள் மேலும் தொடரப்போவதை உறுதிசெய்தது. அதற்கு மேல் அந்தப் புலம்பலை கேட்க விரும்பாத பத்ரி,

“டீடெயில்ஸ்லாம் கொடுத்திட்டிங்களா?” என்ற படி சத்யாவை நிமிர்ந்து பார்த்தான்.

“ஆ.. வாங்கீட்டேன் பாஸ்”

“ம்ம் ஓகே மேடம் நீங்க போகலாம். உங்க ஹஸ்பன்ட் பேரு என்ன சொன்னீங்க?”

“கோபாலகிருஷ்ணன்”

“என்ன பண்ணீட்டு இருக்காரு?”

“ஜுவல்லரி சாப்.. கே.கே ஜுவல்லர்ஸ் வைச்சிருக்காரு ஸார்”

“ம்ம் சரி நீங்க போகலாம் ஒரு வாரத்தில ரிப்போர்ட் சப்மிட் பண்ணீடுறோம்.”

“என்ன பாஸ் இது எப்ப பாரு புருசன் மேல பொண்டாட்டி சந்தேகம். பொண்டாட்டி மேல புருசன் சந்தேகம். ச்சே பாதிக்கு மேல வீண் சந்தேகம்.” சலித்துக்கொண்டான் சத்யா.

 

 

 

 

“சந்தேகம் மனுசன் கூடவே பிறந்தது சத்யா. சந்தேகம் இல்லாம மனுசனே இல்ல”

“அதுக்குன்னு இப்புடியா? சந்தேகம் ஒரு தேசிய வியாதி.”

“இப்படிலாம் இவங்க சந்தேகப்படுறதால தான் நமக்கு வேலையே வருது.”

“என்னம்மோ போங்க பாஸ். டிடெக்டிவ்னதும் நானும் ஏதோ ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’ ரேஞ்ச்க்கு பீல் பண்ணேன். தொப்பிலாம் கூட வாங்கி வைச்சிருந்தேன். கடைசியில இவங்க பின்னாடி திரியுறதே நம்ம பொழைப்பா போச்சு. இதுக்கு ஒரு ஆபிஸ் வேற” என்று சலித்தபடியே எழுதிக்கொண்டிருந்தான் சத்யா.

“அப்புறம் சத்யா இன்னைக்கே இந்த கே.கே புராஜெக்ட்ட ஸ்டார்ட் பண்ணீடலாம்.” “ஐ ஆம் ரெடி பாஸ் ஸ்டார்ட் பண்ணீடலாம்.”

கே.கே ஜுவல்லரி என்று பெயர்ப்பலகை காட்சிப்படுத்தப்பட்டிருந்த கட்டத்தின் அளவே அதன் வருட வருமானத்தைப் படம் போட்டுக் காட்டிக்கொண்டிருந்தது. தங்கத்தின் விலை எப்படித்தான் ஏறினாலும் தங்கத்திற்கு இருந்த மதிப்பு என்றும் குன்றுமணி அளவு கூட குறையாது என்று காட்டுவது போல் வெகு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது கே.கே ஜுவல்லர்ஸ். நகைக்கடை முதலாளிக்கே உரிய உடலமைப்பில் பெருத்து பருத்து வயிற்றை பந்தாக வைத்து தன் மேஜையில் இருந்த குபேரன் சிலையுடன் எவ்விதத்திலும் வேறுபடாமல் ஏ.சி ரூமில் கால் நீட்டி அமர்ந்திருந்தார் கோபாலகிருஷ்ணன். அந்த மேஜையின் ஒரு ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த நவீன மாடல் ஆப்பிள் ஐஃபோன் தனக்கே உரிய பிரத்தியேக குரலில் இசை எழுப்பியது. அதைக் கைகளில் எடுத்து இலேசாக வருடிக் காதில் வைத்தார்.

“ஹலோ கோபாலகிருஷ்ணன் ஹியர்”

எதிர்முனையில் நிசப்தமே பதிலாக வந்தது.

“ஹலோ”

ஃபோனைக் காதில் இருந்து எடுத்து திரையைப் பரிசோதித்தார். லைனில் தான் இருந்தது. ஏதோ புது நம்பர் “யாரோடதா இருக்கும்”. என்று மனதில் எண்ணிக்கொண்டே மீண்டும் காதில் வைத்து

“யாருங்க அது. கால் பண்ணீட்டு பேசாம இருந்தா என்ன அர்த்தம்?”

எதிர்முனையில் மூச்சு சப்தம் மட்டும் பதிலாக வந்தது.

“ஹலோ யாருங்க?” என்றார் கே.கே கோபத்துடன்.

“மிஸ்டர் கே.கே இது” என்று அழுத்தமாக கூறிய அந்த குரலின் அழுத்தம் குறைந்து காற்றை வெளியே ஊதுவது போல் ஆனால் பயங்கரமான குரலில் வெளிவந்தது. “இதோட முடியப்போறதில்ல!!”

நடுநிசி வேட்டை தொடரும்…

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments