சிக்கரி (Chicory)

0
708

 

 

 

 

சிக்கோரியம் இண்டிபஸ் (Cichorium intybus) என்னும் பல்லாண்டுத்தாவரத்தின் முள்ளங்கி போன்ற வேர்களை காயவைத்து வறுத்து பொடிப்பதின் மூலம் கிடைக்கும் பொடியே   சிக்கரித் தூள் ஆகும். காப்பியின் சுவையை அதிகரிக்கவும்  , காஃபின் எனும் ஆல்கலாய்டின் அளவை குறைப்பதற்கும் காப்பிக் கொட்டைத் தூளுடன், சிக்கரித் தூள்  80க்கு 20  என்ற விகிதத்தில் கலக்கப்படுகிறது.  

            ஆஸ்திரேலியா, சீனா மற்றும் வட அமெரிக்காவில் தரிசு நிலங்களில் தானாகவே வளரும் ஐரோப்பாவைச் சேர்ந்த இத்தாவரம், 19ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் பயிரிடப்பட்டது. உலகில் பரவலாக தற்போது சிக்கரி பயிரிடப்பட்டாலும்  நெதெர்லாந்து,பெல்ஜியம்,பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் மிக அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகின்றது.

             இந்தியாவில்   1950க்கு பின்னர் சிறிய அளவில் பயிரிடப்பட்டுவந்த இத்தாவரம்  நெஸ்லே (Nestle) 1970 ல் காபியின் சுவையை அதிகரிக்கும் பொருளாக சிக்கரியை  அறிமுகப்படுத்திய பின்னர் , குஜராத், தமிழ்நாடு மற்றும் ஒடிசா உள்ளிட்ட  பல மாநிலங்களில்   அதிக அளவில் பயிரிடப்பட்டு தற்போது தரமான சிக்கரி உற்பத்திசெய்யும் சில நாடுகளில் இந்தியாவும் முண்ணனியில் உள்ளது.

          அஸ்டரேசியே (Asteraceae) எனும் சூரியகாந்திக்குடும்பத்தைச்சேர்ந்த  சிக்கரி வளர மணற்பாங்கான நிலமும் 10லிருந்து 25 டிகிரி செல்சியஸ் வெப்பமும் தேவைப்படும். விதைகள் மூலம் பயிரிடப்படும் சிக்கரியின் வேர்களும் இலைகளும்  7லிருந்து 8 வாரங்களில் அறுவடை செய்யப்படும்   

 

 

 

 

C மற்றும் B வைட்டமின்கள்  நிறைந்த இதன் இலைகளும் உணவாகப்பயன்படுவதால் இலைகளுக்கு Chichorium intybus var. Foliosum மற்றும்   வேர்களுக்கு Chichoriyum intybus var. sativum என  தனித்தனியே சிக்கரிச்செடிகள்  பயிரிடப்படுகின்றது. வேர்க்கிழங்கில்  10- 16 சதம் புரதமும், லாக்டுசின்.(Lactucin) இனுலின், சுக்ரோஸ், செல்லுலோஸ் மற்றும் சாம்பல் சத்துக்களும் உள்ளன.

          1- 1.5 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய  அதிக கிளைகளற்ற இச்செடியின் பச்சை மற்றும் இளஞ்சிவப்பு நிற தண்டுகளிலும்,  மாற்றடுக்கில் அமைந்த நீளமான , மடிப்புகளும், ஓரங்களில்  பற்களும் கொண்ட காம்புகளற்ற தண்டைக்கவ்விப்பிடித்தது போல காணப்படும்  இலைகளின் அடியிலும் சிறு சிறு முடி போன்ற வளர்ச்சி காணப்படும். 4 முதல் 5 செமீ அகலமுள்ள, 15லிருந்து 20 இதழ்கள் கொண்ட வெளிர் நீல மலர்கள்  அதிகாலையில் மலர்ந்து 4 முதல் 5 மணி நேரத்தில் வாடிவிடும்.

சிக்கரி உடல் சூட்டைத் தணித்து மூச்சுத் திணறல், அஜீரணம், தலைவலி ஆகியவற்றை நீக்குகிறது. மூளையை சுறுசுறுப்பாக்கும் மருந்தாகவும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக்குறைக்கவும்  சிக்கரி பயன்படுகின்றது.

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments