ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 13

0
449

 

 

 

 

திக்ரித்திலும் குண்டு வெடித்தது 

பாக்தாத்தின் விடுதி எங்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர்களால் நிரம்பியிருந்தது. விடுதியை விட்டு வெளியே செல்ல எங்களுக்குஅனுமதி மறுக்கபட்டது. பாக்தாத்தின் வீதிகளில் நடை செல்லும் எனது திட்டம் இயலாமல் போயிற்று. பயணக்களைப்பும்,குளிரும் இருந்ததால் இரவு உணவுக்குப்பின் சீக்கிரமே துயில சென்றோம். அதிகாலையே புறப்படவேண்டியும் இருந்தது. அதிகாலை மூன்று மணிக்குப்பின் விழித்துக்கொண்டேன். அதன்பின் அரை துயிலில் திக்ரித் முகாமின் தொடர் நினைவுகள் வந்துகொண்டே இருந்தது.

அந்த ஆண்டில் அக்டோபர் மாதம் ரமலான் தொடங்கியிருந்தது. ஆந்திராவின் ரோஷன், உணவுக்கூடத்திற்கு எதிரிலிருந்த பள்ளிவாசலுக்கு எங்களை அழைத்துச் சென்று ரமலான் நோன்பு துவங்குவதற்கு முன் பள்ளிவாசலை முழுமையாக சுத்தம்செய்தான். அவனும், வயதில் மூத்த கலீல் பாயும் முப்பது நாட்களும் இரவில் சிறப்பு தொழுகையான தராவிஹ்தொழுகையை சிறப்பாக நடத்தினர். நான் முப்பது நாட்களும் நோன்பிருந்தேன். அதிகாலை மூன்றரை மணிக்கெல்லாம் நோன்பிருப்பவர்களை எழுப்புவது என் பணி. மாலையில் உணவுக்கூடத்திற்கு வெளியே வட்டமாக அமர்ந்து நோன்பு திறப்போம்.ராணுவ வீரர்கள் சிலரும் எங்களுடன் வருவர். எனக்குப் பிடித்த பிளாக் பாரஸ்ட் கேக் தினமும் கிடைத்தது. அடுமனைபணியாதலால் அவரவர் விருப்ப உணவுகளுக்கு பஞ்சமேயில்லை. ஒருநாள் மலையாளி ஓட்டுனர் ஒருவர் தேங்காய் பால் கலந்தசுவையான நோன்பு கஞ்சியும் செய்து தந்தார்.

முருகன் கேட்டான் “பாய், எப்படி தண்ணி குடிக்காமலே இப்படி இருக்க முடியுது?” என. “முருகா, எல்லாம் பளக்கம்” என்றேன். இங்கேயே ரமலானை கொண்டாடினோம். ரோஷன் தான் பெருநாள் தொழுகையை சிறப்பாக நடத்தினான். கோவில்பட்டி சங்கர் எனக்கு பதினைந்து டாலரில் ஒரு டி சர்ட் வாங்கித் தந்தான். எனக்கு அது கொஞ்சம் விலை அதிகம். (அப்போதும்,இப்போதும்).

டிசம்பர் மாதத்தில் திக்ரித்தில் முதல் முதலாக குண்டு வெடித்தது. அனைவரும் ஓடி பங்கர் பாதுகாப்பு சுவற்றுக்குள் பதுங்கினோம். திக்ரித்தில் குண்டு வெடிக்கும் என யாரும் நினைத்திருக்கவில்லை. பள்ளி வாசலின் முன்பு பெரிய வாகன நிறுத்துமிடம் இருந்தது. உணவு உண்ண வரும் ராணுவ வீரர்களும் மற்றவர்களும் அங்குதான் வாகனங்களை நிறுத்துவர். அங்குதான் குண்டுகள் விழுந்தன. அதன் அருகில் இருந்த கழிப்பறைக்குள் கோவாவின் பெர்னாண்டோ மாட்டிகொண்டான். கழிப்பறை நெகிழியால் செய்யப்பட்டது.குண்டு விழுந்ததும் தெறித்த சிறு கற்கள் கழிப்பறையை துளைத்து கொண்டு அவனது கால்களை பதம்பார்த்தது. காயம் சிறிதாக இருந்ததால் பிழைத்துகொண்டான். பெர்னாண்டோ பணிக்கு வந்து இரண்டு மாதங்களே ஆகியிருந்தது. பயத்தில் உறைந்துபோய்விட்டான். அதிலிருந்து மீளாமலே ஒரு மாதத்திற்குள் தாயகம் திரும்பினான். குண்டு விழுந்த மறுநாள் ராணுவ காமாண்டோ எங்கள் உணவு கூடத்திற்கு வந்து பெர்னாண்டோவிற்கு நினைவுப் பதக்கமும், சான்றிதழும் வழங்கினார்.

 

 

 

 

ஒரு நாள் காலை உணவின் போது, வேறு கம்பனியில் வேலை செய்யும் தர்மராஜு தட்டில் ஆரஞ்சு பழத்துடன் வந்தார். அவர்எங்கள் உணவு கூடத்தில் சாப்பிட அனுமதிக்கபட்டிருந்தார். “என்னா அண்ணே டெய்லி ஆரஞ்சு தின்னுதிய போல” என கோபால் கேட்டான். “ஆமா நல்லதுன்னு சொன்னாங்க”. “ஆமான்னே இடி அமின்ட்ட இப்படிதான் அது மத்ததுக்கு நல்லதாக்கும் னு சொல்லி அவன் டெய்லி நாற்பது ஆரஞ்சு தின்னனாம்தெரியுமா”.

தர்மராஜுவின் நிறுவனம் வேறு. அவர்களின் குடியுருப்பும் தனியாக எங்கள் முகாமை ஒட்டியே இருந்தது. சில மலையாளிகளும்அவர்களுடன் இருந்தனர். அவர்கள் சில நேரங்களில் சாம்பார்,ரசம், அப்பளம் என தென்னிந்திய உணவை சுவையுடன் சமைப்பார்கள்.முதலில் நாங்கள் ஒன்றிரண்டு பேர் அவர்களிடம் போய் சாப்பிட்டோம். பின்பு தினமும் பத்து,பதினைந்து பேர் வீதம் தினமும்நிரந்தரமாக அங்கேயே சாப்பிட ஆரம்பித்தோம். பருப்பு, சாம்பார் பொடி, அப்பளம் போன்றவை அவர்களுக்கு குவைத்திலிருந்து வரும்.பாக்கெட்டில் அடைத்த பாலை கொடுத்தால் தயிர் ,மோராக செய்து தருவார்கள்.அவர்கள் சமைக்கும் உணவின் சுவை காரணமாக, நாங்கள் பொருட்களை கொல்லைப்பக்கம் வழியாக அவர்களுக்கு கொடுப்போம். அவர்கள் எங்களுக்கு மீன், இறால்,கோழி என நாங்கள் சாப்பிட ஆசைப்படுவதை சமைத்து எங்களுக்கு தருவார்கள்.

மலையாளிகள் குடிக்காமல் இருப்பது கொஞ்சம் கஷ்டம் போல. டப்பாகளில் அடைத்த அன்னாசிப்பழம், அல்லது வேறு எதையாவதுகேட்பார்கள். அதில் ஈஸ்ட் சேர்த்து ஏழு,அல்லது எட்டு நாள்களில் அதை ‘கள்’ போன்ற போதை வஸ்துவாக மாற்றிக் குடிப்பார்கள் .

லோகேஷ் “பாய் மணி ஐந்தாகிவிட்டது” என்ற போதுதான் திக்ரித்தின் நினைவுகளிலிருந்து விடுபட்டேன். காலை அங்கிருந்துஜோர்டானின் தலைநகரம் அம்மானுக்கு பயணிக்க, கழிப்பறை, குளிரூட்டி வசதியுடன் கூடிய நவீன பேருந்து வந்தது வேறு, வேறுமுகாம்களிலிருந்து வந்தவர்கள் என முப்பது பேர் அதிகாலை தயாராகியிருந்தோம் .காலை உணவையும் ,மதிய உணவையும் பொட்டலமாக தந்தனர். அதை திறந்ததும் லோகேஷ் “இத எப்படி பாய் சாப்புடுது அவிச்சகோளில உப்பும் , மிளகு பொடியும் போட்டு சப்புன்னு இருக்கு” என்றான் குப்புஸ்-னு ஒரு ரொட்டி கொஞ்சம் தடிமனா இருக்கும் ஆனாலும் கையால பிச்சி சாப்பிடலாம் .சில இடங்களில் சப்பாத்தியையே சிலஇடங்களில் போராடிதான் பிய்க்க வேண்டும் சாப்பிடும்போது வாயும் வலிக்கும். கொஞ்சம் சோறு, தண்ணீர் பாட்டில்கள் மட்டும் தேவைக்குஅதிகமாக தந்தார்கள் . நாங்கள் முகாமிலிருந்து நான்கைந்து ஆப்பிள் பழங்களை கையில் எடுத்து வைத்திருந்தோம். பயணத்தின்போது பேருந்து ஜன்னலின் திரைச்சீலையை திறக்க கூடாது என்றனர்.

 

 

 

மற்ற நாட்டவர்கள் அதிகம் பேர் அமெரிக்க ராணுவத்திற்கு உதவியாக பணிபுரிவாதால், எங்கள் பேருந்தின் மீதும் தாக்குதல்நடத்தலாம் என்றனர். பேருந்து எங்கும் நிற்காது சென்றது. பாதுகாப்புக்கு பேருந்தின் முன்னால் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புவீரர்களுடன் ஒரு ஜீப் சென்று கொண்டிருந்தது.முதலில் ஈராக்கின் எல்லையில் உள்ள சோதனை சாவடி அமெரிக்கர்கள் தான் அங்கிருந்தனர் அவர்களுக்கு உதவியாக சிலஇராக்கிய வீரர்களும்.அதிகாலை புறப்பட்டு மாலை வரை நீண்ட பயணத்திற்கு பின் அங்கு வந்து சேர்ந்ததும் அனைவரும் கீழேஇறங்கி சோதனைகளை முடித்து கை கால்களை தளர்த்தி கொண்டோம்.

பின் ஜோர்டன் நாட்டின் சோதனை சாவடி. நீண்ட வரிசையில் வாகனங்கள் அங்கு காத்திருந்தன. சாலை வழியாக ஒரு நாட்டின்எல்லையைக் கடப்பது மிகக் கடினம். நம் முன்னால் நிற்கும் அனைத்து வாகனங்களும் சென்று நம் முறை வருவது வரை நீண்டநேரம் காத்திருக்க வேண்டும்.எல்லையை கடக்கும் அனைத்து பயணிகளின் பெயர்களும் கணிணியில் குடியுரிமை அதிகாரிகளால் சரி பார்த்த பின்னரேஅனுமதிக்கபடுவர். இப்படி நீண்ட பயணத்திற்கு பின் பெயர் இல்லாததால் திரும்பி பாக்தாத் சென்றவர்கள் உண்டு. நண்பன் சங்கர்அப்படி எல்லை வரை வந்து நீண்ட காத்திருப்புக்கு பின் திருப்பியனுப்பப்பட்டான் .சொந்த காசு நாற்பத்தைந்து டாலர் செலவழித்துகாரில் தனிமையில் பாக்தாத் விடுதிக்கு சென்று சேர்ந்ததை சொன்னபோது திகைப்பாக இருந்தது.

ஜோர்டான் எல்லையில் காத்திருக்கும்போது பஞ்சாபி ஒருவரை பார்த்தேன். உலகில் மூன்று விசயங்கள் பொதுவானது ,தண்ணீர்,காற்று ,ஹிந்துஸ்தானி. “பாஜி கியா ஹால் ஹோ” என்று நலம் விசாரித்தேன். .இங்கு பஸ்ராவில் ஓ .என் .ஜி .சி யின் எண்ணைஎடுக்கும் இடத்தில் பணிபுரிவதாக சொன்னார். எங்களிடம் “எங்கிருந்து வருகீறீர்கள்” என கேட்டறிந்து கொண்டார் .இரவில் எல்லையை தாண்டி ஜோர்டன் நாட்டிற்குள் நுழைந்தோம். நல்ல குளிர் விடுதியை சென்றடைய பத்து மணியாகிவிட்டது.எனக்கும் லோகேசுக்கும் ஒரே அறை. நட்சத்திர விடுதி அது. அங்கே இரவில் நல்ல உணவு கிடைத்தது. எங்கள் நிறுவன முகவர்எங்களைச் சந்தித்து கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொண்டு காலையில் வருவதாக கிளம்பிச் சென்றார். குளிருக்கு இதமாககம்பளிக்குள் நுழைந்துததும் நல்ல நித்திரை.

தொடரும்..

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments