பரீட்சை பெறுபேறுகளும் மாணவர்களின் எதிர்பார்ப்புக்களும்

2
964

கல்விக் கற்றல் என்பது வாழ்நாள் நீடித்த செயற்பாடாகும். கல்வி என்பது அனைவருக்கும் பொதுவானதாக கருதப்படுகின்றது. அந்த வகையில் தகுந்த சூழ்நிலையை உருவாக்கி மனிதர்களின் உள்ளார்ந்த தகுதிகளை வெளிக்கொண்டு வருவது கல்வி என கூறலாம். கல்வி என்ற வார்த்தை இன்றைய காலகட்டத்தில் இலங்கையரைப் பொறுத்தமட்டில் ஒரு முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகின்றது. ஆரம்ப நிலை தொடங்கி பல்கலைக்கழகம் வரை ஏழை, பணக்காரன், சாதி, மதம், இனம், மொழி போன்ற எவ்வித பாகுபாடும் இன்றி அனைவருக்கும் பொதுவானதாகவும், அனைவராலும் ஆர்வத்துடனும் போட்டி மனப்பான்மையுடனும் முறையான திட்டமிடலுடனும் மேற்கொள்ளப்படுகின்றன.

பாடசாலைக் கல்வி முறைமையானது ஆசிரியர் மையக் கல்வி முறையிலிருந்து மாணவர் மையக் கல்வி முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. கற்றல். கற்பித்தல் செயற்பாடுகளில் முழக்க முழக்க ஆசிரியர்களின் பங்களிப்பு என்ற நிலையிலிருந்து மாறி ஆசிரியர்களின் உதவியோடு மாணவர்கள் அவர்களாவே முயற்சி செய்து கற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் இந்த மாணவர் மையக் கற்றல் முறையின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. மாற்றமடைந்து வரும் உலகின் கல்வித்துறைக்கு ஏற்ப இலங்கையின் கல்வித்துறையிலும் காலத்திற்குக் காலம் மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது. அதற்கேற்ப பாடசாலைப் பாடத்திட்டங்களிலும் மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த மாற்றங்கள் உரியமுறையில் உரியவர்களினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா? பின்பற்றப்படுகின்றனவா? என்பது தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுவது அவசியமாகும். ஏனெனில், பாடசாலைகளில் மாற்றப்பட்டுள்ள இந்த கற்றல், கற்பித்தல் முறைமையானது எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை என்ற விமர்சனமும் காணப்படுகிறது. ஆசிரயர்களின் உதவியோடு மாணவர்கள் செயற்பாட்டுப் பொறிமுறைகளுடன் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

சுயகற்றலுக்கான தேடல்களில் முனைப்பைக்காட்ட வேண்டும் என்பதை நோக்காகக் கொண்ட இந்த மாணவர் மையக் கற்றல் முறைமையானது ஆரம்பப் பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுடன் ஒப்பிட்டு நோக்குகையில், இந்த முறைமை பெற்றோர் மையக் கல்வி முறைமையா எனச் சமகாலத்தில் சிந்திக்கச் செய்துள்ளது. ஏனெனில், ஆரம்ப்பப் பிரிவு மாணவர்களுக்கு வழங்கப் படுகின்ற செயன்முறைக் கல்விச் செயற்பாடானது பெற்றோர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாகவே அமைந்துள்ளதைக் காண முடிகிறது. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளில் அக்கறைகொள்ள வேண்டும் என்பதை ஊக்குவிப்பதற்காக இந்த செயற்பாடுகள் அமைந்தாலும், ஒரு செயன்முறைப் பயிற்சியுடன் தொடர்பான கல்வி நடவடிக்கைக்காக மாணவர்களினால் பெற்றோர்கள் வலிந்து செயற்படச் செய்யப்படுகிறார்கள். உதாரணத்திற்கு, காற்றில் பறக்கும் பொருள் ஒன்றை செய்து வருமாறு ஆரம்பப் பாடசாலை வகுப்பொன்றைச் சேர்ந்த ஒரு மாணவன் பாட ஆசிரியரினால் அறிவுறுத்தப்படுகின்றபோது, அந்த அறிவுறுத்தலை நடைமுறைப்படுத்துவது மாணவனாக இல்லாது அவனது பெற்றோறே அப்பொருளைத் தயாரித்துக் கொடுத்து பாடசாலைக்குப் பிள்ளையை அனுப்பி வைக்க வேண்டியுள்ளது. இதனால்தான் ஒரு சில விடயங்களில் மாணவர் மையக் கல்வியானது பெற்றோர் மையக் கல்வியாக மாற்றமடைகிறதா என வினவப்படுகிறது.

கல்வி முறை இவ்வாறு உள்ள நிலையில் பரீட்சை முறைமையும் ஞாபக சக்திக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்குவதாகவே காலகாலமாக இருந்து வருகிறது. இலங்கையில் இலவச் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது முதல் எழுத்தறிவு கொண்டோரின் எண்ணிக்கை அதிகரித்தே வந்துள்ளது. தற்போதை இலங்கையின் எழுத்தறிவு வீதம் 98 வீதமாகவுள்ளது என்பதும் இது தெற்காசி நாடுகள் அனைத்தை விடவும் அதிக வீதமாகவுள்ளமையையிட்டு இலங்கை மக்களாகிய நாம் பெறுமைப்பட்டாலும், நமது கல்வி முறைமையிலும் பரீட்சை முறைமையிலும் மேலும் மாற்றம் செய்யப்பட வேண்டிய தேவையுள்ளது. அப்போதுதான்;, நவீன உலகின் எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுத்து வெற்றி பெறுவதற்குரிய எதிர்கால சந்தியினரை உருவாக்க முடியுமாக இருக்குமென கல்விமான்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இலங்கைப் பாடசாலைகளும் பரீட்சைகளும் ஒரு மொழி, இரு மொழி மும்மொழிப் பாடசாலைகளென மொழி அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ள சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் மொத்தமாக ஏறக்குறைய பத்தாயிரம் அரச மற்றும் அரச சார்ப்புடைய பாடசாலைகள் இயங்குகின்றன. இவற்றில் அண்ணளவாக நான்கு மில்லியன் மாணவர்கள் கல்வி கற்பதுடன் கிட்டதட்ட 2,40,000 ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் ஈடுபடுகின்றனர். இவற்றுடன் சர்வதேச பாடசாலைகளும் அரச அங்கீகாரத்துடன் செயற்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய மூன்று இலட்சம் மாணவர்கள் நாடு பூராகவுமுள்ள அரச பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு ; அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு அனுமதிக்கப்படுகின்ற மாணவர்கள் அவர்களின் 10 அல்லது 13 வருட கால பாடசாலைக் கல்வி நடவடிக்கையின்போது ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை ஆகிய மூன்று தேசிய பரீட்சைகளுக்குத் தோற்றும் சந்தர்ப்பம் கிடைக்கின்றனது. இருப்பினும், இம்மூன்று பரீட்சையிலும் தோற்றும் வாய்ப்பு தரம் ஒன்றில் சேருகின்ற 100 வீத மாணவர்களுக்கும் கிடைப்பதில்லை.


இவ்வாறான நிலையில், புலமைப் பரிசில் பரீட்சையில் தகைமை பெறும் மாணவர்களில்; 30 ஆயிரம் மாணவர்களே புலமைப் பரிசில்களுக்கு உரித்தாகுகின்றனர். அவர்களில் 15 ஆயிரம் பேருக்கு மாத்திரமே புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்குவதற்கு தெரிவுசெய்யப்படுகின்றனர் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இவ்வாறு இருந்தபோதிலும்,; இப்பரீட்சையில் தங்களது பிள்ளைகளைச் சித்தியடையச் செய்வதற்காக பாடசாலைகளும் பெற்றோர்களும் மேற்கொள்ளும் சிரத்தையினால் மாணவர்கள் அழுத்தத்திற்கு உள்ளாகிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது.

இப்பரீட்சைக்காக பிள்ளைகளை விட பெற்றோர்கள் எடுக்கும் பிரத்தனங்களுக்கு அளவே இல்லை. இப்பரீட்சையில் தமது பிள்ளையை சித்தியடையச் செய்ய வேண்டும் என்ற பெற்றோர்களின் அக்கறை வேட்கையைப் பயன்படுத்தி, கல்வி வியாபாரம் செய்வோர் தங்களது வியாபாரத்தைக் கற்சிதமாகப் இந்நிலையில் இப்பரீட்சையின் வெற்றி தோல்வியினால் ஏற்படுகின்ற உள மாற்றங்கள், கவலைகள் வேதனைகள் என்பவை பல உளவியல், சமூக, பொருளாதாரப் பிரச்சிகைளையும் தோற்றுவிக்கின்றன
இவ்வாறே ஒவ்வொரு வருடமும் கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக ஏறக்குறைய 500,000 மாணவர்கள் தோற்றுகின்றனர். இவர்களில் அண்ணளவாக 50 வீதத்திற்கும் 60 வீதத்திற்குமிடைப்பட்டவர்களே உயர்தரம் கற்பதற்கு தகுதி பெறுகின்றனர். சித்தியடையத் தவறுவர்களில் 50 வீதமானோர் கணிதம் மற்றும் தாய் மொழிப் பாடங்களில்  சித்தியடைவதில்லை. ஆக, ஏறக்குறைய 40 வீதமானவர்கள் உயர்தரக் கல்வியை தொடரா முடியாது கைசேதப்படும் நிலை காணப்படுகிறது.

அதேபோல், ஒவ்வொரு வருடமும் கல்விப் பொதுத்தராதார உயர்தரப் பரீட்சைக்கு சராசரியாக 3,50,000 மாணவர்கள் தோற்றுகின்றனர். இவர்களில் ஏறக்குறைய 170,000 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகைமை பெறுகின்றபோதிலும் பல்கலைக்கழகங்களில் காணப்படும் மனித வள மற்றும் பௌதீக வளப் பற்றாக்குறையின் நிமித்தம் ஏறக்குறைய 32,000 மாணவர்களே இலங்கையிலுள்ள 17 தேசிய பல்கலைக்கழகங்களிலுமுள்ள கற்கை நெறிகளுக்காக ஒவ்வொரு வருடமும் உள்ளவாங்கப்படுகின்றனர். அண்ணளவாக ஒரு இலட்சம் மாணவர்கள் இப்பரீட்சையில் சித்தியடையத் தவறுவதுடன் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோர் பல்கலைக்கழக அனுமதியைப் பெறுவதற்குத் தமைமை இருந்தும் அவர்களால தேசிய பல்கலைக்கழகங்களில் அனுமதிபெற முடியாதுள்ளது. இதனால்தான், தற்போதைய பாடத்திட்டமும் பரீட்சை முறையும் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

ஆகவே, வழிகாட்டல் மற்றும் உளவளத்துணை செயற்பாடுகள் உரிய முறையில் வினைத்திறனுடன் முன்னெடுக்கப்படுகின்றபோது இவ்வாறான பரீட்சை முடிவுகள் மாணவர்கள் மத்தியில் பாதிப்புக்களை ஏற்படுத்தாது பாதுகாக்கும். அத்துடன் அவர்களிடத்தில் தன்னம்பிக்கையை வளர்க்கக் கூடியதாகவும் அமையும். அதனால், கல்வி வாழ்க்கையில் எதிர்நோக்குகின்ற வெற்றி தோல்விகள் அவர்களது எதிர்காலத்தை சூனியமாக்காது வளமுள்ளதாக்குவதற்கான சிறந்த வழிகாட்டல்களும் உளவளத்துணை வழங்களும் அவசியமாகிறது. இவை அவர்களின் கல்வி வாழ்க்கைக்கு மாத்திரமின்றி, முழு வாழ்க்கை பயணத்திலும் சவால்களை எதிர்கொண்டு வெற்றியாளர்களாக மிளிர்வதற்கு வழிவகுக்கும்மென்பது நிதர்சனமாகும்.

சி.அருள்நேசன்

முந்தைய கட்டுரைகாதல் காதல்
அடுத்த கட்டுரைஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 21
அருள்நேசன் அஜய்
சி.அருள்நேசன் ஆகிய நான் இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர். தற்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் சிறப்புகற்கை இறுதியாண்டு மாணவன். என்னுடைய பள்ளி வாழ்க்கை முதல் கட்டுரை மற்றும் ஊடகம், ஏனைய இதர செயற்பாடுகளில் அதிக அக்கறைக் கொண்டதன் காரணமாகவும் எமது சமூகம் கல்வியால் உயர வேண்டும் என்ற நிலையில் இதுவரையிலும் இலங்கையின் அனைத்து தமிழ் தேசிய பத்திரிகைகள் மற்றும் பிராந்திய பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எனது கட்டுரை ஆக்கங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது. சுமார் 120 மேற்பட்ட கட்டுரைகள் அரசியல், கல்வியியல், சமூகம், மலையகம், பொதுவான விடயங்கள் என்ற வகைகளுக்குள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பயன்பெரும் வகையில் கல்வியியல் கருத்துக்கோவை என்ற நூலை வெளியிட்டேன். மேலும் பல ஆக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன். பல மாவட்டங்களில் பாலியல் கல்வி, சிறுவர் உரிமைகள், தொழில் விருத்தி வழிகாட்டல், பெற்றோர்கல்வி, மாணவர் விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல் செயற்பாடுகள் என்னால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நன்றி
5 2 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
2 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Meerashahib Mohammed Atheef
Meerashahib Mohammed Atheef
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

உங்களுடைய பக்கத்தில் இலகுவாக தகவல்களையோ செய்திகளையோ விளங்கிக்கொள்ள முடிகிறது

MJ
MJ
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Good