ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 22

1
566

 

 

 

நட்பை விலக்கிச் சென்ற பாயல்

போர்முனையில் மது அனுமதி கிடையாது.  அதை மிகச் சரியாக கடைப்பிடிக்கும் பொருட்டு, உயர் ராணுவ அதிகாரிகள் கண்காணிக்கவும் செய்வார்கள்.  கழிப்பறை சுத்தம் செய்ய வரும் ஈராக்கிய டாங்கர் லாரி ஓட்டுனர்,  முகாமின் வாயிலில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் கடும் சோதனையையும் தாண்டி,  தினமும் சில மது பாட்டில்களை உள்ளே கொண்டு வந்துவிடுவான்.கள்ளன் பெருசா? காப்பான் பெருசா? எனக் கேட்டால் கள்ளன் தான் பெரிசு எனச்சொல்ல கேட்டிருக்கிறேன்.
 
ஈராக்கிய ஓட்டுனரிடம் இருபது அமெரிக்க டாலருக்கு மூன்று மதுக்குப்பிகளை வாங்கி,  இரண்டு மதுக்குப்பிகளை பதினைந்துடாலர் வீதம் இளம் ராணவவீரனுக்கு விற்று, பத்து டாலர் லாபமும் பார்த்து விட்டு, ஒரு குப்பியை ரகசியமாக நண்பர்களுடன் குடிக்கும் கில்லாடிகளும் எங்களுடன் இருந்தனர் .
 
எங்கள்  முகாமில் ஆன்றனி என கோவாவைச் சேர்ந்த ஒருவன் இருந்தான். ஆன்றனி சுமாரான உயரம்,  சுருள்  தலைமுடி,வெள்ளைக்காரர்களின் நிறம், பெண்மை கலந்த வட்ட முகம், கையில் எப்போதும் சிகரெட்டுடன் இருப்பான். அவன் கொஞ்சம் சைக்கோத்தனமானவன். எனது நண்பன் கார்த்திக்கிற்கு ஒருநாள் அவனுடன் கொஞ்சம் வாய்த்தகராறு. அன்று ஆன்றனி கொஞ்சம்குடித்திருந்தான். தகராறு நீண்டபோது  ஆன்றனி போதையில் “நீங்கள் தினமும் மிலிட்டரி பொம்பளைய உள்ள வெச்சி மணிக்கணக்காக பேசிக்கொண்டிருக்கிறீர்கள்” என்றான். அதைக் கேட்டதும் கொதித்த கார்த்திக் அவனை கெட்ட வார்த்தைகளால்திட்டினான். “ஆம் நாங்கள் பேசுகிறோம். சில நேரங்களில் நீங்களும் வந்து பேசுகீறீர்கள். அது பொது இடம். அதில் என்ன தப்பு?” எனத் துவங்கி தகராறு நீண்டு விட்டது.
 
போதையில் ஆன்றனி  தன்னிலை மறந்து கார்த்திக்கைத் திட்டினான்.  மற்ற கோவா அன்பர்கள் எங்களிடம் “அவனுடன்பேசாதீர்கள்” என சொல்லிவிட்டு அவனை அழைத்துச் சென்றனர். அன்றிரவு மீண்டும் குடித்து போதை ஏற்றியவன் தன் கைகளில்மணிக்கட்டுக்கு மேலே கத்தியால் கிழித்து கொண்டான்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
பின்னர் இரவு  ஒரு மணிக்கு எங்கள் முகாமின் தலைமை அதிகாரியான  டெர்ரி ஆண்டர்சனின் அறைக் கதவைத் தட்டினான் .நள்ளிரவில்  டெர்ரி ஆண்டர்சன் பதட்டத்துடன் கதவைத் திறந்தபோது முன்னால் நின்றிருந்த ஆன்றனி  “ஐ வான்ட் டு டாக் டு யு”என்றான். கைகளில் காயத்தை பார்த்து திடுக்கிட்ட அவர் அவனை அடுமனைக்கு கொண்டு சென்று முதலுதவி செய்தபின், விசாரித்துவிட்டு அவனை கூடாரத்திற்கு செல்லும்படி எச்சரித்து அனுப்பினார்.
 
 மறுநாள் டெர்ரி ஆண்டெர்சன் என்னிடம். “நீங்கள் இனி அந்த ராணுவ வீராங்கனையை கூடாரத்திற்குள் அனுமதிக்கக் கூடாது. இதுஆடவர் மட்டுமே தங்குமிடம் . அதனால் வெளியே சந்திக்கும் போது  பேசிக்கொள்ளுங்கள்” என்றார் .
 
 அப்போதுதான் தெரிந்தது ஆன்றனி மட்டுமல்ல மற்ற சிலரும் பாயல் எங்களுடன் பழகியதில் , பொறாமையும் , எரிச்சலும் கொண்டிருந்தனர் என. மனித மனம் அப்படித்தான் இருக்கிறது. எப்படி இனிமேல் பாயலிடம் எங்கள் கூடாரத்திற்கு வராதே எனசொல்வது என்ற யோசனையில் இருந்தபோது,  கார்த்தி என்னிடம்  “ஷாகுல் பிரதர் எப்படி அக்காட்ட சொல்ல போறீங்க” எனக் கேட்டான். நீயே சொல் என அவன்  என்னிடம் சொல்லாமல் சொன்னான். மறுநாள் கார்த்தி விடுமுறையில் ஊர் செல்லும் நாளாகஇருந்தது.
 
 அடுத்த சில தினங்கள் பாயல் வராததால் மனம் கொஞ்சம் லேசாகியிருந்தது. பலமுறை சொல்ல வேண்டிய வார்த்தைகளைமனதுக்குள்ளேயே சொல்லிப் பார்த்துக்கொண்டேன். இது போன்ற சூழ்நிலைகளில் கால அவகாசம் கிடைப்பதும் நன்றே. அதன்பின் நான்கு தினங்களுக்கு பின்தான் பாயலை சந்தித்தேன். பாயல் முகாமிலிருந்து வெளியே சென்றபோது சந்தித்த இடர்கள், வேறுவாகனங்கள் தாக்கப்பட்டது குறித்து சொன்னாள். நான் வார்த்தைகளை வலுக்கட்டாயமாக உதட்டிற்கு கொண்டுவந்து ஆன்றனி,கார்த்திக் மோதலையும் கூடாரத்திற்குள் நீங்கள் வரக்கூடாதென மேலதிகாரி  சொல்லியதையும் சொன்னேன். என் தலை கவிழ்ந்தேஇருந்தது. சொல்லும்போது  அவள் விழியை என்னால் சந்திக்க இயலவில்லை .
 
 
 
 
 
 
 
 
 
 பின்பு அக்கா என்றழைத்து அவள் முகத்தை பார்த்தேன். அவள் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. சாதரணமாகத்தான் இருந்தாள்.அன்று அது பகல் பொழுது,  “போய் வருகிறேன்! பின்னர் சிந்திப்போம்!” எனச் சொல்லிவிட்டு சென்றாள்.
 
 அடுத்த சில தினங்களுக்குப் பிறகு  பாயல் மீண்டும் கூடாரத்திற்குள் வந்து அமர்ந்து பேசிகொண்டிருந்தாள். எங்களால் உள்ளேவராதே என சொல்ல இயலவில்லை , எப்போதுமே வராத டெர்ரி ஆண்டர்சன் அன்று கூடாரத்திற்குள் வந்தார். பாயல் உள்ளேஅமர்ந்திருந்ததை பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமலே சென்றுவிட்டார். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் உணவுக்கூடத்தில் பணியில்இருக்கும் ஒரு ராணுவ வீராங்கனையுடன் வந்தார் டெர்ரி ஆன்டர்சன்.  அவருடன் வந்த ராணுவப்பெண் பாயலிடம் “நீங்கள்கூடாரத்திற்குள் வருவதை தவிருங்கள்” என நாகரீகமாக சொன்னாள். இது  ஆண்கள் மட்டுமே தங்குமிடம் என்பதே காரணம்.
 
 அதைச் சற்றும் எதிர்பாராத பாயல் உடனே எழுந்து சென்றுவிட்டாள். மனம் வலித்திருக்கும், கவலைபட்டிருப்பாள். எங்களுக்கும்அது சற்று கடினமாகி விட்டது. மறுநாள் இரவுணவின் போது சந்தித்த  பாயலின் முகத்தில் அந்த வலியும், கவலையும்தெரிந்தது. இருந்தாலும் பொய்யாகச் சிரித்துகொண்டே பேசினாள். “ஐ யாம் ஓகே” என்றாள் .
 
  “உங்கள் மானேஜர் பெண் மட்டும் கூடாரத்திற்குள் வரக்கூடாது என்கிறார். ஆனால் உங்களில் பலர் கூடாரத்திற்குள் நீலப்படம்பார்க்கிறார்கள். முகாமில் திருட்டுத்தனாமாக மது அருந்துவதும், எல்லைமீறி நடப்பதையும் ஏன் உங்கள் மானேஜர் ஒன்றும்கேட்பதில்லை” எனக் கேட்டாள். தீடிரென வரக்கூடாது என்றதில் மிகுந்த வருத்தமும், கவலையுற்றிருந்தாள். அதன் பின்னர்உணவுக்கூடத்திற்கு வரும்போதெல்லாம்  ஒரு சில நிமடங்களாவது சந்தித்து பேசிவிட்டு செல்வது பாயலின் வழக்கம்.
 
 ஒருமுறை பாயல், அவளுடன் பணிபுரியும் மூத்த அதிகாரி, புதிதாக போர்முனைக்கு வந்த சக வீராங்கனைகள் என சகிதமாக  சாப்பிட்டுக்கொண்டிருக்கும் சமயம் நான் அருகில் சென்று சந்தித்தேன் . “திஸ் இஸ் ஷாகுல்.  மை க்ளோஸ் பிரன்ட்” என பாயல்என்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினாள்.
 
 அதன் பின் சில தினங்களுக்குப் பின்,  இரவு உணவுக்கு வந்த பாயல் “ஷாகுல் சாப்பிட்டபின் உன்னிடம் நான் கொஞ்சம் பேசவேண்டும். உணவுக்கூடத்திற்கு வெளியே என்னைக் கண்டிப்பாக சந்திக்கவும்” என்றாள். உணவுக்கூடத்திற்கு வெளியேமேசையுடன் கூடிய மர நாற்காலிகள் இருக்கும். அதில் அமர்ந்திருந்தேன். இரவுணவு சாப்பிட்டுவிட்டு வந்த பாயல் என்னருகில்நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். “ஷாகுல்,  நாளை முதல் என்னை சந்திப்பதையும், பேசுவதையும் நிறுத்திவிடு” என்றாள்.எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
எதுவும் கேட்கத் தோன்றவில்லை. தலையசைத்து விட்டு நேராக குடியிருப்பு கூடாரத்திற்கு சென்று விட்டேன்.  அங்கிருந்தபெர்னாண்டோ  என்னிடம் கேட்டான் “ஷாகுல், என்னாச்சி?” என. “ஏன்” எனக் கேட்டேன். “உன் முகம் மாறி இருக்கிறதே,  நீஎப்போதும்  சிரித்த முகத்துடன் இருப்பதை தான் நான் பார்த்திருக்கிறேன்” என்றான். ” ஒன்றும் இல்லை” என்றேன்.எப்படிக் கண்டிபிடித்து விட்டான் எனத் தோன்றியது. முகம் மாறியிருந்தால் என் தாய் விரைவில் கண்டுபிடித்து விடுவாள்.  இப்போது”சுனிதாவும் என்ன சாரே மூஞ்சி சரியில்லையே என்னாச்சி” என்பாள்.
 
பாயல் ஏன் அப்படிச் சொன்னாள் என யோசித்தேன்.  ஒரு காரணமும் புரியவில்லை. லோகேஷிடம் சொன்னேன் “பாயல் நாளைமுதல் , பேசேவோ , பார்க்கவோ வேண்டாம் என சொல்லி விட்டாள்” என . ஏன் எனக் கேட்டான் . “தெரியாது” என்றேன் .
    
அடுத்தமுறை பாயல் வரும்போது அவளிடம் கேட்டு விடவேண்டும் என நினைத்துக்கொண்டு தூங்கிவிட்டேன். மறுநாள் இரவில்பாயலை பார்த்தேன் “சாப்பிட்டுவிட்டு வாருங்கள்,  நான் உங்களுடன் பேச வேண்டும்” என்றேன். முந்தைய நாள் இருந்த அதே மரநாற்காலியில் அமர்ந்திருந்தேன். “ஷாகுல்,  சொல் என்ன விஷயம் ?” எனக் கேட்டாள்  “ஏன் இப்படி தீடிரென பார்க்காதே ,பேசாதேஎன்கிறீர்கள்” என்றேன் .
  
 மழுப்பலான காரணங்களை அடுக்கினாள்.  எதற்காகவோ தவிர்க்கிறாள் என புரிந்து கொண்டேன். “இன்று தான் கடைசி.  இனிமேல்  எப்போதும் உங்கள் முன்னால் வரமாட்டேன் என சொல்லி” விடைபெற்றேன்.  கார்த்தி விடுமுறை சென்று வந்ததும்கேட்டான் அக்கா எப்படி இருக்கிறாள் என. விபரங்களை கூறினேன்.  அன்று மதியம் உணவுக்கூடத்தில் உணவுவழங்கிக்கொண்டிருந்த கார்த்திக்கிடம். “எப்போது வந்தாய்? நலமா?” என பாயல் விசாரித்தபோது கார்த்தி பதிலேதும்சொல்லவில்லை.
 
நான் கார்த்திக்கிடம் சொன்னேன். “நீ அவளிடம் பேசு. என்னிடம் தானே பேசக்கூடாது என்றாள்”  என்றேன். “ஷாகுல் உன்னாலதான் அந்த நட்பு கிடைத்தது . உனக்கே இல்ல,  இப்ப நான் மட்டும் ஏன் பேச வேண்டும்” என்றான் .
 
பாயலின் நல்ல நட்பு இப்போது ஒரு நினைவாக மட்டுமே எஞ்சி விட்டது .அதன் பின் ஈராக்கின் பணி முடிந்து அமரிக்கா செல்லும்போது கார்த்தியை சந்தித்து விடை பெற்று சென்றாள் பாயல்.
 
பாயல்  அவளாகவே வலிய வந்து பழகியவள் , நட்பை அவளாகவே வளர்த்து கொண்டாள். அதுபோலவே விலகியும் சென்று விட்டாள்.
 
 
 
 
 
 
 
5 1 vote
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
MJ
MJ
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Wow