குங்குமப்பூ – Saffron

0
1551

 

 

 

 

 

மிகப்பழமையான, விலையுயர்ந்த நறுமணப்பொருட்களில் ஒன்றான குங்குமப்பூ    எனப்படும் சாஃப்ரன் (saffron) குரோக்கஸ் சடைவஸ்  (Crocus sativus ),என்னும்   இரிடேசீயே   (Iridaceae) தாவரக்குடும்பத்தைச் சேர்ந்த பல்லாண்டுத் தாவரம்.  இது சிவப்புத்தங்கம்  (Red Gold) என அழைக்கபடுகின்றது.

 saffron என்னும் ஃப்ரெஞ்சு மொழிச்சொல்லின், வேர் அரபிமொழியில் ’மஞ்சள்’ என பொருள்படும்  லத்தீன் சொல்லான safranum என்பதிலிருக்கிறது

 மத்தியத்தரைக் கடல்   பகுதிகளிலும் அவற்றை ஒத்த , உலர்ந்த கோடைத் தென்றல் வீசும் பகுதியிலும் அதிகமாக வளரும் இவை உறைபனிகளையும், குளிர்மிகுந்த பனிக்கட்டி மூடியிருக்கும் சூழலையும் தாங்கி வாழக்கூடியவை. 

குங்குமப்பூச் செடியின் சாகுபடி வரலாறு 3,000  ஆண்டுகளுக்கு முற்பட்டது.  காட்டுகுங்குமப்பூ-wild saffron,  குரோக்கஸ் கார்ட்ரைட்டியானஸ்  (Crocus cartwrightianus)    செடியை இனவிருத்தி மற்றும் கலப்பினம் செய்ததன் மூலம்  நீளமான சூலகமுடிகளை ( Style ) கொண்ட இப்போது அதிகம் பயிரடப்படும் crocus sativus செடியை உருவாக்கினர்

குங்குமப்பூ சாகுபடிக்கு உயர் கரிமப் பொருள்களைக் கொண்ட, தளர்வான, அடர்த்தி குறைந்த, நன்கு நீர்பாய்ச்சப்பட்ட,  சுண்ணாம்பு நிறைந்த களி மண் வகைகள் (clay-calcareous) உகந்தவை. நல்ல சூரிய ஒளியில் அவை மிகச்சிறப்பாக வளர்வதால், சூரிய ஒளியை நோக்கி சரிவாக அமைந்த நிலப்பகுதிகளில் பாரம்பரியமான மேட்டுப்பாத்தி முறைகளில் இச்செடிகள் பயிர் செய்யப்படுகிறது.

 

 

 

 

   

குங்குமப்பூ சாகுபடிக்கு வளமான மழை நிறைந்த இளவேனில் காலமும் உலர்ந்த கோடைக்காலமும் மிக உகந்தவையாகும்., இவற்றின் ஊதாநிறப் பூக்கள் வளம் மிக்க விதைகளை உருவாக்குவதில்லை அதனால் நிலத்துக்குக் கீழே இருக்கும் பழுப்பு நிறமான 4.5 செ.மீ வரையிலான விட்டத்தைக்கொண்ட குமிழ் போன்ற தண்டுக்கிழங்குகளைத் தோண்டி எடுத்து, சிறு துண்டுகளாக உடைத்து நட்டு வைப்பதன் மூலமே இவற்றை பயிரிட முடியும்.. ஒரு கிழங்கை உடைத்து, பிரித்து நடுவதன் மூலம் பத்து புதிய தாவரங்களைப் பெறலாம்

கோடைகாலத்தில் உறக்க நிலையில் உள்ள தண்டுக்கிழங்குகள், இலையுதிர் காலத்தின் ஆரம்பத்தில் தமது குறுகலான இலைகளைத் துளிர்த்து, மொட்டு விடத் தொடங்குகின்றன. இவை அக்டோபர் மாதத்தில்,பல மென்வரிகளைக்கொண்ட சாம்பல் கலந்த ஊதா நிறமுடைய பூக்களை உருவாக்குகின்றன.. பூக்கும் காலத்தில் இந்தத் தாவரங்களின் சராசரி உயரம் 30 சென்டிமீட்டருக்கும் குறைவாக இருக்கும். பூப்பதற்கு சற்று முன்னர் வரும் மழைப் பொழிவு குங்குமப்பூவின் விளைச்சலை ஊக்குவித்து அதிகமாக்குகிறது.

இலையுதிர் காலத்தின் மத்தியப் பகுதியில் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள் எல்லாச் செடிகளும் பூக்கின்றன காலையில் மலரும் பூக்கள் மாலைக்குள் வாடத் தொடங்கிவிடுகின்றன என்பதால் அறுவடை மிக வேகமாக நடக்கும்.

 3 அல்லது 4 நாட்கள்வரையே  உதிராமல் இருக்கும் மலர்களை கைகளால் பறித்து,  கூடைகளில் சேகரித்து,  குறிப்பிட்ட வெப்ப நிலையிலிருக்கும் அறைகளின் கூரையிலிருந்து தொங்க விடுவார்கள். மலர்கள் உலர்ந்ததும் சூல்முடிகள் கவனமாக பிரித்தெடுக்கப்படும். இந்த தயாரிப்புக்களே ஏறக்குறைய ஒருவாரகாலம் நடக்கும்.

 

 

 

 

 

 

ஒவ்வொரு பூவிலிருந்தும் மூன்று நீட்சிகளை உடைய சூல்தண்டுகள்  (style)  உருவாகின்றன. அவை ஒவ்வொன்றின் முனையிலும் 25-30 மி.மீ அளவில் கருஞ்சிவப்பு நிறமுள்ள சூலகமுடிகள் ( stigma ) காணப்படுகின்றன. பூ என பொதுவில் அழைக்கப்பட்டாலும் உண்மையில் இந்த  சூலகமுடிகளே குங்குமப்பூ என அறியப்படுபவை. தனித்த  உலர்ந்த சூலகமுடியின்.  நீளம் தோராயமாக 20 மி.மீ இருக்கும்.

 குங்குமப்பூவின், உலர்ந்த வைக்கோல் போன்ற மணத்திற்கும், நிறத்திற்கும், சுவைக்கும் மருத்துவ குணங்களுக்கும் எளிதில் ஆவியாகின்ற, நறுமணம் தருகின்ற 150 க்கும் அதிகமான சேர்மங்களும் பல ஆவியாகாத செயல்மிகு வேதிக் கூறுகள் உள்ளன.

 இவற்றில் ஜியாஸேந்தின் (zeaxanthin), லைக்கோப்பீன் (lycopene) மற்றும் பல்வேறு வகையான ஆல்ஃபா (α) மற்றும் பீட்டா-கரோட்டின்கள் ஆகியவை முக்கியமானவை. குங்குமப்பூவின் தங்கம் போன்ற மஞ்சள்-செஞ்சிவப்பு நிறத்திற்கு  ஆல்ஃபா (α) குரோசினும்..  கசப்பான சுவைக்கு குளுக்கோசைட்டு பிக்ரோகுரோசினும் காரணமாகும்.

அடிக்கடி மாறும் pH அளவுகளால்  பாதிக்கப்படும் உலர்ந்த குங்குமப்பூவை, வளிமண்ட ஆக்சிசனுடனான தொடர்பைக் குறைக்கும் பொருட்டு  காற்றுப் புகாத கொள்கலன்களில் சேமிக்க வேண்டும்

தோராயமாக 150 பூக்களிலிருந்து 1 கிராம் உலர்ந்த குங்குமப்பூ இழைகள் கிடைக்கின்றன. ஒரு பவுண்டு (454 கிராம்கள்) உலர் குங்குமப்பூவை உற்பத்தி செய்ய 50,000–75,000 பூக்கள் தேவை. இது ஒரு கால்பந்து மைதானத்தின் பரப்பளவில் மேற்கொள்ளப்படும் பயிர் செய்கைக்குச் சமமானது 150,000 பூக்களைப் பறிப்பதற்கு நாற்பது மணிநேரம் வேலை செய்ய வேண்டியுள்ளது.

 பிரகாசமான கருஞ்சிவப்பு நிறம், சிறிதளவு ஈரத்தன்மை, நெகிழ்த்தன்மை, உடைந்த இழைத் துகள்கள் இல்லாமல் இருப்பது ஆகியவையே  தரமான புத்தம் புது குங்குமப்பூவின் இயல்புகளாகும்.

உலகெங்கும் குங்குமப்பூவின் பல பயிர்வகைகள் வளர்க்கப்படுகின்றன. ஸ்பேனிஷ் சுபீரியர்’ (Spanish Superior) என்றும், ‘கிரீம்’ (Creme) என்றும் வணிகப்பெயர்களைக் கொண்ட வகைகள் வண்ணம், சுவை, நறுமணம் ஆகியவற்றில் இனிமையானவை

அதிக சாஃப்ரானல்,, வழக்கத்துக்கு மாறாக நெடியுடைய நறுமணம் ,அடர் வண்ணம் ஆகியவற்றைக் கொண்டிருப்பது இத்தாலியின் “அக்குய்லா” குங்குமப்பூ (zafferano dell’Aquila),  . மற்றொன்று காஷ்மீரி “மாங்ரா” அல்லது “லசா” குங்குமப்பூ (crocus sativus kashmirianaus).  குங்குமப்பூவில் முதல்தரம் சாகி, என்றும் இரண்டாம்தரப்பூ மோக்ரா என்றும் மூன்றாம்தரப் பூ லாச்சா என்றும் அழைக்கப்படுகின்றது

ஈரான், ஸ்பெயின், இந்தியா, கிரீஸ், அஸர்பைஜன், மொரோக்கோ, இத்தாலி (உற்பத்தி அளவின் இறங்கு வரிசையில்) ஆகியவை குங்குமப்பூவை உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகள்.  ஈரான் உலகின் மொத்த குங்குமப்பூ உற்பத்தியில் 93.7 சதவீதத்திற்குப் பங்களிக்கிறது  நியூசிலாந்து, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளிலிருந்து இயற்கை உரமிட்டு வளர்க்கப்படும் பல்வேறு சிறப்புப் பயிர்வகைகளும் கிடக்கின்றன. அமெரிக்காவில், மண்வாசனையுடைய பென்சில்வேனிய டச்சுக் குங்குமப்பூ (Pennsylvania Dutch saffron) சிறிய அளவுகளில் விற்கப்படுகிறது.

 

 

 

 

 

 நன்கு காயவைக்கப்பட்ட ஒரு கிலோ குங்குமப்பூ சந்தையில் சுமார் மூவாயிரம் டாலர்களுக்கு விற்கப்படுகிறது ( சுமார் 2 லட்சம் இந்திய ரூபாய்கள்)

இந்திய குங்குமப்பூ

வலிமையான சுவை, நறுமணம், வண்ணமூட்டும் விளைவு ஆகியவற்றின் அடையாளமான மிக அடர்ந்த மெரூன்-ஊதா வண்ணம் கொண்ட காஷ்மீர் குங்குமப்பூ வகை உலகின் அடர்நிற குங்குமப்பூ வகைகளில் ஒன்றாக விளங்குகின்றது இந்தியாவின் காஷ்மீர் பள்ளத்தாக்கு குங்குமப்பூ சாகுபடிக்குப் புகழ்பெற்றது. ஸ்ரீநகருக்கு 18 கிலோமீட்டர் தொலைவில் 1700 மீட்டர் உயரத்திலுள்ள பாம்போர் என்ற பகுதியில் ஏறக்குறைய 3350 ஏக்கர் பரப்பளவில் தேசிய நெடுஞ்சாலைகளின் இருபக்கங்களிலும் வண்டல் மண்மேட்டு நிலங்களில் பயிரிடப்படுகிறது. 

சீனாவிலும் இந்தியாவிலும் 2000 வருடங்களுக்கும் மேலாக மருந்தாகவும் வாசனையூட்டும் உணவுக்கலப்பாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது

 குங்குமப்பூ ஆஸ்த்மா, இருமல், தூக்கமின்மை,இதய நோய் மற்றும் சருமப்பாதுகாப்புக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

  பெரும்பாலான நாடுகளில் சந்தைப்படுத்தபப்டும் குங்குமப்பூவில் அதிகம் கலப்படமும் உள்ளது. மாதுளம் தோட்டின் உட்புறமிருக்கும் நார்களையும் புற்களையும் பீட்ரூட் சாயமேற்றியும் , marigold எனப்படும் துளிர்த்தமல்லியின் இதழ்களை காயவைத்தும் இதனுடன் சேர்க்கிறார்கள்.

கர்ப்பிணிகள் குங்குமப்பூ உட்கொண்டால் பிறக்கும் குழந்தையின் சரும நிறம் மேம்படும் (அதாவது வெள்ளை அல்லது சிவப்பாகும்) என்பது எந்த அறிவியல் ஆதாரமுமில்லாத  தொன்று தொட்டு நம் சமுதாயத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் மூட நம்பிக்கை. குழந்தைகளின் சரும நிறம் பெற்றோர்களின் மரபணுக்களால் மட்டுமே தீர்மானிக்கபடுகின்றது.

குங்குமப்பூவில் இருக்கும் வேதிச்சேர்மங்கள் கருப்பையை சுருங்கி விரியச்செய்யும் மற்றும் மாதவிடாய் சுழற்சியை துவங்கி  வைக்கும் குணம் கொண்டவை. எனவே குங்குமப்பூவை தொடர்ந்து அதிகமாக  உட்கொள்கையில் கருக்கலைப்பும் சிறுநீரக செயலின்மையும் 20 கிராமுக்கு அதிகமாகையில் உயிரிழப்பும்  கூட ஏற்படும் ஆபத்துள்ளது.

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments