சக்தி எங்கே போகிறாள்?

3
704
IMG_20201230_235237-a159ab40

 

 

 

 

 

 

முகத்தில் எப்போதும் ஒரு புன்னகை! ஆழ்ந்த சிந்தனைகள் அவள் மனதிற்குள் ஓடிக் கொண்டிருப்பது அவள் கண்களிலே தெரியும்.  பற்பல கனவுகளைச் சுமந்துக் கொண்டு, அந்தக் கம்பெனி முன் வந்து நின்றாள்.  அது அவள் ஹைதராபாத்தில் வேலை பார்க்கவிருக்கும் முதல் நாள்.  அவளைப் பொறுத்தவரை அது வேறொரு உலகமாகவே தோன்றியது.  புதிய இடம் என்ற பயமில்லை… ஆனால் அவளுக்கே உரித்தான ஒரு தயக்கம்.  

 
“சக்தி!  என்ன இங்கேயே நின்னுட்ட? இன்னும் நடக்க வேண்டியது ரொம்ப இருக்கு!”  கீர்த்தனா நினைவுப்படுத்தினாள். 
 
ஹைதராபாத்தில் இப்போதைக்கு தெரிந்த ஒரு முகம் என்றால், அது சக்திக்கு “கீர்த்தனா” மட்டுந்தான்.  சக்தி, கீர்த்தனா வீட்டில் தங்கியிருக்கிறாள், வேலைக்காக!  
 
சக்தி : “ஆமா கீர்த்து! நான் நடந்து போக வேண்டியது இன்னும் அதிகமா இருக்கு”
 
ஊரில் இருக்கும் அம்மா மற்றும் பாட்டியைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.  ஆண்துணை என்று ஏதுமில்லாத காரணத்தால் சக்தி வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம்.  
 
கீர்த்தனா : “பெஸ்ட் ஆஃப் லக், சக்தி! வெல்கம் டு திஸ் நியூ கம்பெனி! உன்னோட கேபின் எதுன்னு  சொல்றேன்…வா!”
 
சக்தி : “தேங்க்ஸ் கீர்த்து! ஒரு நிமிஷம்… அம்மாகிட்ட பேசிக்குறேன்…” என்றவள், தன் அலைபேசியில் ஊரில் இருக்கும் அம்மாவிற்கு அழைப்பு விடுத்தாள்.  
 
சக்தியின் பாட்டி எடுத்து, “சக்தி! என்னடா கண்ணு! சாப்டியாடா? வேல பாக்குற இடம் புடிச்சுருக்காடா? எல்லாரும் நல்லா பேசுறாங்களாடா?” அந்தக் குரல் இன்னும் பல கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனது. 
 
சக்தி : “பாட்டிமா! நா சாப்டேன் பாட்டிமா! இப்போதான் நானும் கீர்த்தியும் வந்துருக்கோம்.  அதான் அம்மாகிட்ட சொல்லலாம்னு கால் பண்ணேன்…”
 
சக்தியின் பாட்டி, அலைபேசியைத் தன் மகளின் காதருகே வைத்தார்.  “ஊர்ல இருந்து சக்தி போன் பண்ணிருக்கா…” என்றார். 
 
சில “ம்… ம்…” உரையாடல்களுக்குப் பின் சக்தி மனநிறைவோடு அலைபேசியைத் துண்டித்தாள்.  சில கண்ணீர்த்துளிகளும் எழுந்தன.  சக்தியின் அம்மாவால் வாய் பேச இயலாது.  அந்த “ம்… ம்…” மொழி சக்திக்கும் பாட்டிக்கும் மட்டுமே புரியும். 
 
கீர்த்தனா, சக்திக்கு அவள் வேலை செய்யவிருக்கும் இடத்தைக் காட்டினாள்.  
 
கீர்த்தனா : “ஓகே சக்தி! யூ கேரி ஆன்! ப்ராஜெக்ட் ஹெட் உன்னோட வொர்க்ஸ் பத்தி மெயில் பண்ணுவாரு.  சிஸ்டத்துல செக் பண்ணிக்கோ.  க்ளாரிட்டி வேணும்னா அவரு கேபின விசிட் பண்ணு…ஈவினிங் கேன்டீன்ல வெயிட் பண்ணு,  வீட்டுக்குச் சேர்ந்தே போகலாம்!”
 
சக்தி : “சரி கீர்த்தி! நீயும் நல்லா வொர்க்  பண்ணு… சீ யூ லேட்டர்!”
 
சக்தி தன்னுடைய கணினியை இயக்கினாள்.  அவளுக்கான சில வேலைகள் திரையில் காண்பிக்கப்பட்டன.  ஒரு மணி நேரத்திற்குப் பின், அவள் அருகே இருந்த அலுவலக தொலைபேசி அழைத்தது.  
 
சக்தி : “குட் மார்னிங் சார்!  ஐ அம் சக்தி!”
 
அந்தப் பக்கம் அவளுடைய ப்ராஜெக்ட் ஹெட் அஸ்வின்… “வெல்கம் சக்தி! யூ ஆர் டூயிங் யுவர் வொர்க்ஸ்  குட்! கம் டு மை கேபின்!”
 
சக்திக்குக் கிடைத்த முதல் பாராட்டு! வாடிக்கையான புன்னகையை முகத்தில் ஏந்திக்கொண்டு, அஸ்வின் கேபினுக்குச் சென்றாள். 
 
அவன் முதல் பார்வையே அவன் எப்படிப்பட்டவன் என்பதைச் சக்திக்கு எடுத்துக் கூறிவிட்டது.  அவன் தன்னிடம் பேசுவது கூட அவளுக்குப் பிடிக்கவில்லை.  சரியாக அறிமுகம் இல்லாத தன்னிடம் வேலையைத் தாண்டி, தேவையற்றவற்றை அவன் பேசிக்கொண்டிருப்பது சக்திக்குப் பிடிக்கவில்லை.  “எனக்கு வொர்க்ஸ் இருக்கு…” என்று நாகரீகமாகக் கூறி வெளியே வந்தாள். 
 
 
 
 
 
 
 
 
இவனைப் போன்ற சில வல்லூறுக்கள் எல்லா இடங்களிலும் இருப்பதால்தான், நாடு எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது.  சக்தியால் விலகியிருக்க முடியுமே தவிர இவனைப் போன்றவர்களை ஒட்டு மொத்தமாக ஒழித்துவிட முடியாது.  அது அரசாங்கத்தின் பொறுப்பு! 
 
சக்தி தனக்கு வழங்கப்பட்ட எல்லா வேலைகளையும் விரைவாகவே செய்து முடித்துவிட்டாள்.  வேலைகளை எல்லாம் முடித்துவிட்டதாக அஸ்வினுக்கு மெயில் அனுப்பினாள்.  
 
அப்போது சீஃப் மேனேஜர் கார்த்திக் அங்கே வந்தான்.  எல்லாரும் எழுந்து நின்று வணக்கம் கூறினர்.  அங்கிருந்த ஒரு சில பெண்களிடம் அவனாகவே கை கொடுத்து, அவர்களைத் தொட்டுப் பேசுவதை, சக்தி தன் கேபினிலிருந்து
கவனித்தாள். 
 
சக்தியின் கேபின் அருகே வந்து நின்றவன், தன் கூலிங் கிளாஸை கழற்றி “ஆர் யு நியூ?” என்றான்.  வேண்டா வெறுப்பாக “ம்…எஸ்” என்றாள்.  “யு ஆர் லுக்கிங் வெரி பிரிட்டி” அவன் முதல் வழியல்.  அதற்கேதும் சக்தி பதில் கொடுக்கவில்லை.  கார்த்திக் அந்த இடத்தை விட்டு நகராமல் அங்கேயே நின்றுக் கொண்டிருந்தான். 
 
சக்தி அவனைப் பொருட்படுத்தாமல் 
தன் இருக்கையில் அமர்ந்தாள்.  அஸ்வின் கேபினுக்கு அவன் சென்றான்.  
 
அஸ்வின் : “வாங்க கார்த்திக் சார்” 
 
கார்த்திக் : “யாருடா அந்தப் பொண்ணு! ரொம்ப திமிரு புடிச்சவளா இருப்பா போல”
 
அஸ்வின் : “யார சார் சொல்றீங்க? அந்த முதல் கேபின்ல இருக்க அந்தப் பொண்ணா?”
 
கார்த்திக் : “ம்…”
 
அஸ்வின் : “அவ பேரு சக்தி!  நியூ அப்பாயிண்ட்மென்ட்.  எங்கிட்டயும் திமிராத்தான் சார் நடந்துக்கிட்டா…”
 
கார்த்திக் : “சரி ஈவினிங் கவனிச்சுக்கலாம்”
 
 
 
 
 
 
 
 
 
 
மணி ஐந்து ஆனது.  கீர்த்தனாவிடம் இருந்து அழைப்பு.  
 
சக்தி : “கீர்த்தி!  வொர்க் ஓவர் டி! இதோ வரேன்…நீ கேன்டீன்ல வெயிட் பண்ணு”
 
அப்போது அங்கு வந்த பியூன் “மேடம் அஸ்வின் சார் உங்கள கூப்டுறாரு!” என்றார்.  தழல் எரிகின்ற கண்களோடு அவன் அறைக்குச் சென்றாள்.  அங்கே கார்த்திக்கும் இருந்தான்.  அவர்கள் இருவரின் பாம்பு பார்வை, அவள் தீந்தனல் பார்வையை மாய்த்துவிடுமா என்ன? 
 
அஸ்வின் : “நாங்க என்ன சொல்ல வரோம்னு உனக்குப் புரியும்னு நினைக்குறேன்!”
 
சக்தி : “உங்க ரெண்டு பேரோட நடவடிக்கையில நல்லாவே புரியுது”
 
கார்த்திக் : “புத்திசாலி… அப்பறம் என்ன? ரூம் ஆர் லார்ட்ஜ்?”
 
சக்தி : (சிறிது யோசனைகளுக்குப் பிறகு) “எதுவா இருந்தாலும் ஓகே”
 
கார்த்திக் : “நீ இவ்ளோ சீக்கிரம் இறங்கி வருவேன்னு தெரியாது… பட் நைஸ்!” 
 
சக்தி, அஸ்வின் கேபினிலிருந்து வெளியே வந்து பார்த்தாள்.  யாருமில்லை.  பியூன் மட்டும் இருந்தார். 
 
சக்தி : “நைஃப் கிடைக்குமா?  ப்ரூட்ஸ் கட் பண்ணனும்”
 
பியூன் : “இருங்க மேடம்! கேன்டீன்ல இருந்து வாங்கி வரேன்”
 
சக்தி : “கொஞ்சம் சீக்கிரமா!”
 
பியூன் கேன்டீனில் இருந்து கத்தி எடுத்து வந்து கொடுத்தார்.  அதை வாங்கி, தன் கைகளில் மறைத்து வைத்துக் கொண்டு அஸ்வின் கேபினுக்குள் சென்றாள்.  உள்ளே உடைமாற்றும் அறையும் சேர்ந்திருந்தது.  அஸ்வின் மட்டும் வெளி இருக்கையில் அமர்ந்திருந்தான்.  மதி மயங்கி இருந்ததால், அவனுக்கு நடக்கப்போவது இன்னதென்று தெரியாமல் போனது.  அவனருகே சென்றவள், அவன் மார்பில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இரண்டு முறை குத்தினாள்.  கண்ணகி காற்சிலம்பில் இருந்த மாணிக்கப்பரல்களென அவன் இரத்தத்துளிகள் தெறித்தன.  அவன் மயங்கி, கீழே சரிந்தான். 
 
அஸ்வின் அலறல் சத்தம் கேட்டு, உள்ளேயிருந்து கார்த்திக் வெளியே வந்தான்.  வலது கையில் கத்தி… முகத்திலும் உடையிலும் இரத்தத் திவலைகள்.  அவள் கால் அருகே அஸ்வின் நிலைகுலைந்து கிடந்தான்.  என்ன நடந்தது என்பதை அறிவதற்குள் அந்த அரக்கன் மார்பிலும் முகத்திலும் கத்தியால் குத்தினாள்.  இருவரும் இரத்த வெள்ளத்தில் கதறிக் கொண்டு, அந்த அறைக்குள் கிடந்தனர். 
 
வெளியே வந்த சக்தியின் ஆக்ரோஷமான தோற்றத்தைக் கண்டு, அந்தப் பியூன் உறைந்தே போய்விட்டார்.  நடந்தவற்றை அவள் கூறினாள். 
 
பியூன் : “இது பேரு கொலை கிடையாது.  இது மாதிரியான கொடிய அரக்கன்கள இப்படித்தான் வதம் செய்யணும்! இவன்கள பத்தி இங்க இருக்க எல்லாருக்கும் தெரியும்.  எத்தனையோ பொண்ணுங்க வாழ்க்கைய அழிச்ச மோசமான இவன்கள அழிக்க கடவுளே உன்ன அனுப்பிருக்காரு! இவன்க இரத்தக் கறை உன் மேல படியாம இருக்க என்னால ஒன்னு பண்ணமுடியும்…”
 
 
 
 
 
 
 
 
 
குடோனில் இருந்த பெட்ரோல் கேனை அந்தப் பியூன் எடுத்து வந்து, அவர்கள் இருக்கும் அறைக்கு வெளியேயும் உள்ளேயும் ஊற்றினார்.  அறைக்குள் இருந்த மின்சாதனக் கம்பிகளைத் துண்டித்து, அதனால் விபத்து ஏற்பட்டது போல் அமைத்து, நெருப்பைப் பற்ற வைத்து சக்தி கையில் கொடுத்தார். 
 
பியூன் : “மேடம் நீங்க ஒன்னும் கவலப்படாதிங்க… எலக்ட்ரிக்கல் ஃபால்ட்னால இந்த விபத்து ஏற்பட்ட மாதிரி சொல்லிக்கலாம்.  அதையும் தாண்டி சந்தேகம் கிளப்புனாங்கனா முன்விரோதம் காரணம்னு சொல்லிடலாம்…”
 
சக்தி தன் கையில் இருந்த தீப்பொறியை, பெட்ரோல் திவலைகள் மீது எரியச் செய்தாள்.  கொஞ்ச நேரத்தில் அறைக்குள் முழுவதும் தீ படர்ந்தது.  அந்த இரு அரக்கன்களும் சக்தி போன்ற பெண்கள் பற்ற வைக்கும் நெருப்பிற்கிரையாயினர்.  
 
கீழே நின்று கொண்டிருந்த கீர்த்தனாவிடம் சக்தி “பக்கத்துல கோயில் குளம் இருக்கா?” 
 
கீர்த்தனா சக்தியின் இரத்தம் படிந்த கைகளையும் சிவந்த கண்களையும் பார்த்து “சக்தி வெளியே ஒரு கோயில் இருக்கு…” என்று மிகுந்த பயத்துடன் கூறினாள். 
 
அவள் குளம் இருக்கும் திசை நோக்கி நடக்க, “சக்தி எங்க போற?” என்றாள். 
 
“இந்தக் கறைய கழுவ…” என்று கூறி அவள் நடையைத் தொடர, அவள் பாதை செந்நிறமாகியது. 
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
3 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Vignesh Vicky
Vignesh Vicky
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

thíѕ ѕtσrч íѕ thє juѕtícѕ fσr wσmєn.

α ѕmαll tríвutє tσ thєm