[ம.சு.கு]வின் : ‘இல்லை’, ‘வேண்டாம்’ – என்று சொல்ல கற்றுக்கொள்ளுங்கள் [Learn to Say “NO”]

0
574
- இல்லை-f98a9515

நம் வாழ்க்கையில் எண்ணற்ற விஷயங்களை நாமே சிந்தித்து, உரிய வழிமுறையை ஆராய்ந்து செயல்படுத்துகிறோம். இப்படி சுயமாய் செய்யும் செயல்களைவிட அதிகமாக பிறர் கூறுவதற்காகவம், நிர்பந்தத்தின்பேரிலும் எண்ணற்ற செயல்களை செய்து சிலவற்றில் வெற்றியும், பலவற்றில் தோல்வியும் தழுவியிருப்போம்.

நம் தேர்வுகள் மாற்றப்பட்டால்;

நாமாக சிந்தித்து செயல்படுத்திய காரியங்களின் வெற்றி தோல்விகள், காலப்போக்கில் நம் அனுபவத்தையும் அறிவையும் வளமாக்கி தவறுகளை சரிசெய்து வெற்றபெற உதவும். ஆனால் பிறரின் நிர்பந்தத்திற்காக செய்யும் செயல்கள் என்றுமே முடிவில்லாத ஒரு தொடர்கதை. நாம் இன்ன வாகனம் வாங்கலாமென்று தீர்மாணித்து வாங்கமுற்படும் தருணத்தில், நமது நண்பன் தான் வாங்க எண்ணிய வேறொரு வாகனத்தை நமக்கு ஏற்றதென்று பரிந்துரைப்பான். நண்பர்களின் புகழ்ந்துரைப்பிற்கு செவிசாய்த்து, நம் சிந்தனையை தவிர்த்து, அவர்கள் சொல்லும் வழியிலேயே போய்விடுவோம். சில சமயங்களில், அவர்களின் ஆலோசனை நம் தேவைக்கு ஏற்றதாக இல்லாமல் இருக்கக்கூடும். நாம் சரியாக சிந்திக்காமல் அதை வாங்கிவிட்டால், கடைசிவரை நாம் கஷ்டத்துடனேயே பயணிக்கவேண்டி வரும்.

அளவில்லாமல் உண்டால்;

எல்லோர் வாழ்க்கையிலும் அன்றாடம் நிகழும் ஒரு சாதாரண உதாரணம். நாம் ஒரு உறவினர் இல்லத்திற்கு விருந்திற்கு போகிறோம். அவர்களோடு மதிய உணவு உண்ணும்போது, நமக்கு போதுமான அளவு உணவை முடிக்கின்ற தருவாயில் இந்த பலகாரத்தை சாப்பிடுங்கள், இந்த உணவை சுவைத்துப்பாருங்கள் என்று கட்டாயப்படுத்துவார்கள். அவர்கள் மனம் நோகக்கூடாதென்று இடமில்லாத வயிற்றில் மேலும் திணிக்கிறோம். இப்படி திணிப்பதன் விளைவு, அன்றைய தினம் முழுவதும் உடல் உபாதையால் தொடர்ந்து கஷ்டப்பட நேர்கிறது. நம் வயிறு, நமக்கு எவ்வளவு தேவை, என்பது நமக்குத்தான் தெரியும். உறவினருக்கு தெரியாதல்லவா? நாம் அவர் இல்லத்தில் உண்பதற்கு கூச்சப்படுவதாக எண்ணி நம்மை மேலும் உண்ண உற்சாகப்படுத்தலாம். ஆனால் நமக்கு போதுமென்பதை அவர் ஏற்கும் வகையில் சொல்லத் தெரியாததால், அதிகமாக உண்டு அவதியுருகிறோம்.

எப்படி மாட்டிக்கொள்கிறோம்;

அன்றாட வாழ்க்கையில் பல தருணங்களில் நம்முன்னே சிலபல வாய்ப்புக்களும் / நெருக்கடிகளும் நம்மை நோக்கி நண்பர்கள் / உறவினர்கள் / சக ஊழியர்கள் மூலம் திணிக்கப்படும். அவற்றில் எதை ஏற்க வேண்டும், எதை தவிர்க்க வேண்டுமென்று நாம் யோசித்து, ஆகாதவற்றிற்கு ‘வேண்டாம்’ என்று உறுதியாய் சொல்லத்தெரியாமல், எல்லாவற்றிற்கும் சரியென்று தலையசைத்து மாட்டிக்கொள்கிறோம்.

உதாரணமாக;

  • நண்பர்களுடன் செல்லும் கேளிக்கை விருந்துகளில், நிர்பந்தத்தின் காரணமாக சிலர் மது அருந்துகின்றனர்;

  • வேலைகள் பல இருக்க, நண்பன் அழைத்தான் என்பதற்காக, வெளியில் சென்று நேரத்தை வீணடித்து பின் வேலைப்பழுவில் அவதிப்படுவது;

  • ‘கூடாது’, ‘வேண்டாம்’ என்று சொல்லவேண்டிய விஷயங்களில், அன்பு செலுத்துவதாக எண்ணிக்கொண்டு, குழந்தைகளுக்கு அளவற்ற சுதந்திரம் கொடுத்து அவர்களை கெடுத்துவிடுகிறோம்;

  • நண்பர் கேட்டார் என்பதற்காக LIC பாலிசி, மாதாந்திர சீட்டில் சேர்ந்து இடையில் கட்ட தடுமாறி மாட்டிக்கொள்கிறோம்;

இப்படி அன்றாடம் எண்ணற்ற விஷயங்களில் சமுதாய நிர்பந்தம், நண்பர்கள் / சுற்றத்தினரின் நிர்பந்தம், அவர்களால் நிராகரிக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தால், பல விஷயங்களில், தேவையில்லாமல் ஒத்துக்கொண்டு வகையாய் மாட்டிக்கொள்கிறோம், கடைசியில் நமக்கென்று செலவழிக்க நேரமில்லாமல் மனத்தளர்ச்சி அடைகிறோம்.

இந்த நிலைக்கு மூலகாரணம் என்ன?

தவிர்க்க வேண்டிய விஷயங்களை, பிறரின் நிர்பந்தங்களுக்காக ஒத்துக்கொண்டு செய்வதில் துவங்குகிறது சிக்கல்கள். அப்படி தொடங்கும் பெரும்பாலான செயல்கள் ஆர்வம் குறைவினால், பெரும்பாலும் தோல்வியை தழுவுகின்றன. நமக்கு வேண்டாம் என்று சொல்ல பெரும் தயக்கம்.

எங்கே நண்பர்கள் நம்மை புறக்கணித்து விடுவார்களோ ? சுற்றத்தாரின் மனம் வேதனை அடையும்படி நேருமோ? நம்மை திறமையற்றவர் என்று முத்திரைகுத்திவிடுவார்களோ? என்று நமக்குள்ளாகவே பல சந்தேகங்களை கிளப்பி எல்லாவற்றிற்கும் சரி என்றே சொல்லி சிக்கிக்கொள்கிறோம்.

இல்லை என்பது முடிவல்ல ! – தேர்வுகளின் ஆரம்பம் !

நமக்கு கொடுக்கப்படும் நிர்பந்தத்தில் ஏதேனுமொன்றை தேர்வு செய்துவிட்டால், நாம் பல இதர உகந்த வாய்ப்புக்களை நழுவவிடுகிறோம். நண்பர் அழைப்பிற்கிணங்கி திரைப்படத்திற்கு சென்றால், அந்த பொன்னான பொழுதை குடும்பத்தினருடன் செலவிடும் வாய்ப்பை / புத்தகம் படிக்கும் வாய்ப்பை / பொருளீட்டும் வாய்ப்பை தவரவிடுகிறோம்.

‘சரி’ – தேர்வுகளின் முடிவு

‘இல்லை’ – தேர்வுகளின் ஆரம்பம்

என்றுமே ‘சரி’ என்று சொல்வது நமக்கு இருக்கும் வாய்ப்புக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகும்.

‘வேண்டாம்’, ‘இல்லை’ என்று சொல்வது, நமக்கு வேறுபல நல்ல தேர்வுசெய்ய வாய்ப்பளிக்கும்.

பிறரின் நிர்பந்தங்கள்;

நாம் ஏன் பிறர் நிர்பந்தத்திற்கு உடன்படுகிறோம்?

  • ஒதுக்கப்படுவோம் என்ற பயம்!

  • அக்கறையின்மை என்று எண்ணுவார்களோ?

  • சுயநலவாதி என்று முத்திரைகுத்துவார்களோ?

  • பிறரை தவிர்க்கிறோம் என்று எண்ணுவரோ?

  • பிறருக்கு நம்பிக்கை துரோகம் செய்கிறோமோ?

  • பிறர் நம்மை விமர்சிப்பார்களோ?

  • பிறரை நாம் இழக்க நேரிடுமோ?

நாம் ‘வேண்டாம்’ ‘இல்லை’ என்ற சொற்களை சொல்வது நம் சுயநம்பிக்கை சார்ந்த ஒரு வெளிப்பாடு.

தன்னம்பிக்கை குறைந்தால் ?

நம்மீது நம்பிக்கை குறைகின்றபோது, நம்மை சுற்றியுள்ளவர்களின் எண்ணங்களுக்கும், கருத்துக்களுக்கும் நாம் கட்டுண்டுவிடுகிறோம். நமக்கு உகந்தவையல்ல என்று தெரிந்தும், மறுத்துப்பேச தைரியமில்லாத காரணத்தினால் மாட்டிக்கொள்கிறோம். ஓரிருமுறை அவர்களின் நிர்பந்தத்தில் சிக்கும் நம்மை, அவர்கள் எப்போதும் அவர்கள் வழியிலேயே வருவதற்கு எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கு நேரம் போகவில்லையென்றால், நம்மை அழைத்து நம் நேரத்தை வீணடிக்கிறார்கள்.

இப்படி அவர் தவறாக எடுத்துக்கொள்வாரோ? இவர் நம்மை வெறுத்துவிடுவாரோ? என்று தேவையற்ற அனுமானங்களை நாமே உருவாக்கிக்கொண்டு, இந்த நிர்பந்த சக்கரத்தில் உழல்கின்றோம்.

இந்த நெறுக்கடியான நிலை நம்மில் எல்லோருக்கும், எப்போதுமே வழக்கமாக நிகழ்கின்ற ஒன்றுதான். எவனொருவன் தான் நிர்பந்திக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்து, அந்த வலையிலிருந்து சாதுரியமாக வெளியே வருகிறானோ, அவனால் மட்டுமே தன் நேரத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு வெற்றிப்பாதையில் முன்னேற முடியும். பிறரின் நிர்பந்தத்தில் சிக்கினால், நாம் மீளமுடியாத சக்கரத்தில் மாட்டி உழல்வோம்.

நிர்பந்தங்களை எப்படி தவிர்ப்பது;

நிர்பந்தங்களை எப்படி தவிர்ப்பதென்பது காலம், விஷயம் சார்ந்த ஒரு நிலைப்பாடு. இவற்றிற்கு இதுதான் சிறந்தவழியென்று ஒரு தீர்க்கமான முடிவு இல்லை. ஆனால், இப்படி நிர்பந்தங்கள் நேரிடும் தருணத்தில் கீழ்கண்ட வழிமுறைகளை மனதில் கொண்டு சூழ்நிலைக்கேற்ப செயல்படுத்தி வெற்றிபெருவது நம் ஒவ்வொருவரின் உரிமை.

1. உங்கள் பதிலை, எப்போதும் சுறுக்கமானதாகவும், தெளிவானதாகவும் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ‘வேண்டாம்’ ‘இல்லை’ என்று சொல்வது, உங்கள் உரிமை என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நண்பர் உங்களை புகைபிடிக்கச் சொன்னால், நீங்கள் அது உடல்நலத்திற்கு ஒவ்வாது, ‘வேண்டாம்’ என்று நேரடியாய் பதிலளித்து ஒதுக்கிவிடுங்கள். அவ்வாறன்றி, நான் முன்போல் இல்லை, இப்போது படிப்படியாய் குறைத்து விட்டுவிட்டேன் என்று ஆரம்பித்து, வலவலவென்று வியாபித்தால், இன்றொரு நாள் மட்டும் கம்பெனி கொடென்று நிர்பந்திப்பார்கள். உங்களின் தெளிவான, நம்பிக்கையான பதில், எதிராளியை ஒரேமுறையில் சாந்தப்படுத்திவிடும். நம்மிடம் தெளிவில்லையென்றால், அவர்கள் நம்மை ஆள்வார்கள்.

2. உங்கள் நண்பர் உங்களை இந்த மாதாந்திர தவணைத்திட்டத்திலோ, வைப்புநிதி திட்டத்திலோ சேர வற்புருத்தினால், சற்றுயோசித்து நாளை சொல்லவதாக சொல்லுங்கள். வீட்டில் மனைவியுடன் கலந்தாலோசித்து நாளை சொல்வதாக கூறுவது, அப்போதைக்கு அந்த நிர்பந்ததை தவிர்க்க உதவும். பின்னர் நன்கு சிந்தித்து வேண்டுமா? வேண்டாமா? என்று முடிவுசெய்து, அதற்கேற்ப அவருக்கு பதிலளிக்க உங்களுக்கு போதிய நேரம் கிடைக்கும். நிர்பந்தங்கள் நேர்கின்ற தருணத்தில், சற்றே நேரத்தை வாங்குங்கள். அந்த நிர்பந்தத்தை சந்திக்க, அந்தநேரம் போதிய வழிமுறையை சிந்திக்க உங்களுக்கு உதவும்.

3. நீங்கள் விரும்புகின்ற ஒரு செயலை செய்ய நிர்பந்திக்கப்படும்போது, உங்களுக்கு நேரமின்மையினால் அதை செய்ய முடியாமல் போகும்பட்சத்தில், வேறொரு நேரத்தை நீங்களே முன்மொழியுங்கள். அப்போதைய நெருக்கடியில் இருந்து விடுபட்டு, செய்யவிரும்பியதை நமக்கு உகந்த நேரத்தில் செய்யும்படி மாற்றிக்கொள்ளுதல் ஒரு சிறந்த வழிமுறை.

4. எப்படி உங்கள் நண்பர் உரிமையோடு உங்களிடம் உதவியோ? சலுகையோ? கேட்கிறாரோ, அதேபோல அதற்கு ‘சரி’, ’இல்லை’ என்று சொல்லும் முழு உரிமையும் உங்களுக்கும் உண்டு. ‘இது வேண்டாம்’ என்று சொல்லவதற்கும், ‘நீ வேண்டாம்’ என்று சொல்வதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. நீங்கள், உங்கள்முன் வைக்கப்பட்ட ஒரு வழிமுறையைத்தான் வேண்டாம் என்று ஒதுக்குகிறீர்களே தவிர அந்த நபரையல்ல. இந்தத் தெளிவு முதலில் நம்மனதில் இருக்க வேண்டும். செயலையும், நபரையும் போதியளவு பிரித்துப்பார்க்கும் தெளிவை வளர்த்துக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால், அவருக்கும் அதை தெளிவுபடுத்துங்கள்.

5. உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். பிறரின் போலித்தனத்திற்கு நீங்கள் கட்டுண்டுவிடாதீர்கள். உங்களுக்கென தெளிவான எல்லைகளை வகுத்துக்கொள்ளுங்கள். அந்த எல்லைகளுக்குள் பயனிப்பது உங்களுக்கு சுலபமாக இருக்கும். எதை தவிர்க்கவேண்டுமென்ற தெளிவும் அந்த எல்லைகளுக்குள் தெளிவாயிருக்கும். உங்களின் எல்லைகளை அறிந்துகொண்டால், நண்பர்கள் கூட நிர்பந்திப்பதை தவிர்த்துவிடுவார்கள். நமக்கென்ற கொள்கையும், எல்லையும் இல்லாதபோது, பிறரின் கொள்கைகளில் கட்டுண்டு காணாமல் போய்விடுகின்றோம்.

6. சிலசமயங்களில் வேண்டுகோள்களுடன் சில சமயோசிதமான நிர்பந்தங்களும் உடன்வரும். உதாரணமாக;-

(i) அன்று உனக்கு நான் அதைசெய்தேனல்லவா? இன்று எனக்காக இதை செய்யமாட்டாயா? என்று ‘செய்நன்றி’ போல் சில தூண்டுதல்கள் வரும்.

(ii) அங்கு பார், அவனும் உன்னைப்போல் என் நண்பன் தானே, அவன் எனக்கு உதவுகிறான். நீ மாட்டேன் என்கிறாயே ? என்று பிறருடன் ஒப்புமைபடுத்தி சில தூண்டல்களும், நிர்பந்தங்களும் வரும்.

(iii) ஒரு பெரிய உதவியைக் கேட்டு, அதை நாம் மறுக்கும்போது, இன்னொரு உதவியை, இந்த ‘சிறு உதவியேனும் செய்துகொடு’ என்று மாற்றுவழியிலும் சில நிர்பந்தங்கள் வரும்.

இப்படி எண்ணற்ற வழிமுறைகளில் நமக்கு நிர்பந்தங்கள் வரலாம் என்கின்ற நிலையை அறிந்து சமயோசிதமாய் அதை தவிர்ப்பதில்தான் நம்முடைய சாணக்கியத்தனம் உண்டு.

நாம் யாரையும் அழிக்க விருப்பவில்லை. நாம் யாரையும் காயப்படுத்த விருப்பவில்லை. நாம் யாருடைய பொருளுக்கும் ஆசை கொள்ளவில்லை. நாம் விருப்புவதெல்லாம், நமக்கு தேவையானதை நம் போக்கில் நாம் செய்யவேண்டுமென்பதே! பிறரிடம் ஆலோசனைகள் கேட்கலாம். ஆனால் ஆலோசனை வழங்குகிறேன் என்றபேரில், நிர்பந்திக்கப்படுவதை நாம் விரும்புவதில்லை. நம்முடைய நேரத்தை நமக்காக செலவிடவிரும்புகிறோம். நம் நேரத்தை பிறருக்காக செலவு செய்வதானாலும், அதை நாமே சிந்தித்து எடுத்த முடிவாய் இருக்கவேண்டுமே தவிற, பிறரின் நிர்பந்தத்தினால் செய்வதாக இருக்கக்கூடாது.

எப்போதெல்லாம் தேவையற்ற விஷயங்கள் உங்களிடம் திணிக்கப்படுகிறதோ, ஒருகனம் சிந்தியுங்கள், நேரம் தேவைப்பட்டால், பின்னர் சொல்வதாய் சொல்லுங்கள். தேவையில்லாத ஒன்றென்று தெளிவாய் தெரிந்தால், சாதுரியமாய் மறுத்துவிடுங்கள்.

மறந்துவிடாதீர்கள்,

  • ‘கேட்பது அவர்களின் உரிமையென்றால், ‘வேண்டும் – வேண்டாம்’ என்று கூறுவது உங்கள் உரிமை.

  • உங்கள் நேரத்தின் மீதான கட்டுப்பாடு, உங்களிடம் உள்ளவரை உங்கள் பாதை தெளிவாய் இருக்கும்.

 -ம.சு.கு

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments