இரட்டை மனிதர்கள்

0
1142

நான் பார்க்கும்
மனிதர்கள் எல்லாம்
விநோதமாயிருக்கிறார்கள்
அவர்களுக்கு
இரட்டை நாக்கிருக்கிறது
உடம்பெல்லாம் கண்களும்
மூக்கு நீண்டுமிருக்கிறது
நான் ஒரு வேளை கனவு காண்கின்றேனோ
Am I in wonderland…..
இல்லை
என்பது போல்
ஒரு சிலர் வந்து
செல்கிறார்கள்
என்னோடு இயல்பாய்
பேசி சிரித்தபடி
கை குலுக்கி
தலை தடவி
தோள் பற்றி
கன்னத்தில் முத்தமிட்டு
கலைந்தும் செல்கிறார்கள்
அவர்களின் பரிச்சயம்
மேகக் கூட்டத்தைப்
போலிருக்கிறது
நிரந்தரமற்றதாயும்
காற்றடிக்கையில்
கலைந்து விடுவதாயும்..

மறுபடியும்
விநோத மனிதர்கள் வருகிறார்கள்
அவர்களின் கைகுலுக்கும்
முயற்சி 
என்னை உற்சாகப் படுத்துவதாயில்லை
நான் முகம் திருப்பிக்
கொண்டாலும்
அவர்கள் உரிமை கொண்டவர்கள்
போல
என் அந்தரங்கங்களுக்குள்
அவர்களின் 
நீண்ட மூக்குகளை
நுழைக்கிறார்கள்
உங்களை பிடிக்கவில்லை
என்று
நாசூக்காய் சொல்லியும்
அவர்கள் விலகுவதாய்
இல்லை
அவர்களின் அத்தனை 
கண்கள் கொண்டும்
என்னை
உளவறிதல் தான்
முக்கிய வேலை 
என்பது போல் நடந்து கொள்கிறார்கள்
இனியும் அவர்கள் 
பேச்சை நான்
கேட்பதாயில்லை
அவர்களை வெளியே
தள்ளி கதவடைக்கையில்
கூச்சல் போடுகிறார்கள்
காதுகளை பொத்திக்
கொள்கிறேன்
அம்மாவுக்கு என்
செய்கைகள் பிடிக்கவில்லை
ஏன் இப்படி 
நடந்துகொள்கிறாய்
ஒன்றை நாலாய் பேசுபவர்கள்
உன்னைப் பற்றி
என்னவெல்லாம் சொல்வார்களோ 
என்கிறாள்
பரவாயில்லை விடு
என்று சமாதானம் செய்து
சிரிக்கிறேன்
அம்மா 
எனைப் பார்த்து 
பயந்தபடி
வீலென்று கத்திக் கொண்டு
ஓடி விட்டாள்
நான் எதுவுமே
நடவாதது போல் 
அமைதியாய் 
இருந்து கொண்டேன்
மேலே ஓர்
வார்த்தையும் பேசுவதில்லை
என 
நாக்கை மடித்தபடி
வாயை
இறுக மூடிக் கொண்டேன்
இரட்டை நாக்குக்காரர்கள்
விஷமமானவர்கள்
என்று அவளுக்கு
நான் சொல்லித்
தெரிய வேண்டியதில்லை….

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments