ஏஞ்சல்

0
663

 

 

 

 

தன்மனைவியை விட்டு பணிநிமித்தமாய் தூரப்பிரதேசத்திற்கு வந்துவிட்ட தலைவனை பிரிவு வாட்டுகிறது. அவளிடம் தன் துயரங்களை அவளை பிரிந்திருக்கும் சோகத்தை சொல்கிறான்.

தனிமை என்பது இரவில்
எவ்வளவு கொடியது என்பதை இன்று நான் உணர்கிறேன்
நரிகளின் ஊளைச் சத்தம்
இந்த பனி இரவில்
ஜன்னலுக்கு வெளியே
அத்தனை ரசிக்கும்படியாய் இல்லை
எப்போதோ மூலையில் போட்டு வைத்த பயமெல்லாம்
இப்போது பின்னங்கால், பின்பாதம் எனவே
நீண்ட நகங்களுடன் அழுத்தமாய் பற்றிக் கொள்கிறது
புரியாத தாகம் தொண்டைக்குழியில்
பெரும் வறட்சியை தந்து விடுகிறது
இந்த உலகமே நிம்மதியில் துயில்வதாகவும்
நான் மட்டும கம்பளிக்குள் நடுங்குவதாகவுமே
இந்த இரவு இன்று மொழி பெயர்க்கிறது
ஏஞ்சல்
நீ எங்கிருக்கிறாய்
ஏதோ ஓர் அறையில் கட்டிலின் கால்களில் சாய்ந்து கொண்டு
இன்னும் கனவுகளை வளர்க்கிறாயா
உனக்கு சொல்ல என்னிடம்
இன்னமும் சில சேதிகள் மீதமிருக்கின்றன
என்னிலிருந்து அருகிடா அன்பு மொத்தமும்
இன்னமும் உனக்கௌ பத்திரமாய் அதே இடத்தில்
யாராலும் நிரப்பமுடியா இடைவெளியிலேயே இருக்கின்றன
மன்னித்துவிடு
இந்தக்குளிர் இரவில்
உன்னை தனியே தவிக்கும்படி செய்துவிட்டேன்
ஒரு பேய்க்காற்றிற்கு
உந்தன் விலாசத்தை கொடுத்து விட்டேன்
இந்த நடுங்கும் பனிக்கு
ஒரு தேநீரைக்கூட தரமுடியா
கையாலாகாதவனாகிவிட்டேன்
ஏஞ்சல்
என் கண்ணே
உன்னையும் என்னையும் கடத்திப்போகும்
இந்த பனி நிறைந்த இரவுகளின் தூய்மை மீது
சத்தியமாய் சொல்கிறேன்
உண்மை ஆறுதலென
எதைத்தர முடியும் என்னால்?
என் அன்பு மொத்தமும் நிரப்பிய சில துளிக் கண்ணீரையே
இந்த இரவின் சிறு கதகதப்புக்காய்
பரிசளிப்பதைத் தவிர….

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments