கணையாழி

10
3214
WhatsApp Image 2020-05-22 at 02.42.47

ஸ்ரீயும் சாயுவும் சிறுவயது முதலே இணை பிரியாத நண்பர்கள். இருபது வயதைக் கடந்த இளைஞர்களாக இருந்த அச்சமயத்திலும் சிறார்களைப்போன்றே துடுதுடுத்துக் கொண்டு தோழமை பாராட்டினர்.

ஸ்ரீயைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் நெடிய உருவம் கொண்ட ஒர் இளவல் அவன். நினைப்பவற்றை முடிக்காமல் தூங்கவே மாட்டான். சீக்கிரமே காரியம் முடியவேண்டும் என எதிர்பார்க்கும் ஓர் அவசரகுடுக்கை. ஆனால் சமயம் பார்த்து காய் நகர்த்தி வெற்றி காண்பதில் சளைத்தவன் அல்ல.
சாயு சற்றே வித்தியாசமானவன். நிதானம் என்பது அவனுக்கு பிரதானம். ஸ்ரீ எடுக்கும் அவசர முடிவுகள் பலவற்றை பல கோணங்களில் நோக்கி ஸ்ரீயை வழி நடத்துபவன். ஸ்ரீ அளவுக்கு துணிச்சல் அற்றவன். இன்னும் சொல்லப்போனால் ஒரு பயந்தாங்கோலி. ஆனால் சிறந்த அறிவாளி.

இருவரும் சிறுவயது முதலே தொல்லியல் துறையிலும் வரலாற்று கள ஆய்வுகளிலும் நாட்டம் கொண்டவர்கள் அதையே இலட்சியமாக எடுத்து சங்கல்பம் கொண்டவர்கள். ஸ்ரீயின் மாமா தான் இவர்கள் இருவக்கும் ஒரு முன் மாதிரி. அவர் தலைசிறந்த ஒரு தொல்லியலாளர். மாமாவின் வீட்டில் வந்து மாமாவின் புத்தகங்கள் ஆய்வு அறிக்கைகள் என அனைத்தையும் படிப்பான் ஸ்ரீ. மாமாவும் ஸ்ரீக்கு பல விடயங்களைக் கூறவும் தவறுவதில்லை. சாயுவும் சில வேளைகளில் ஸ்ரீ உடன் இணைந்து மாமா வீடு செல்வதுண்டு. இருவரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தமது வரலாற்று ஊகிப்புக்கள் தமது தேடல்கள் பற்றியும் பகிர்ந்து கொள்வர்.

இப்படியாக ஒரு நாள் மாமாவின் புத்தக ராக்கயை அலசிக்கொண்டிருந்த ஸ்ரீக்கு ஒரு மஞ்சள் நிற கோப்பு கையில் பட்டது . அது என்னவாக இருக்கும் என்று திறக்க எண்ணிய அவனுக்கு அந்த கோப்பு தன் வாழ்நாளில் கிடைக்கும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டான். ஒவ்வொரு பக்கங்களையும் பரவசம் மிகுந்த புன்னகையோடு கண்வெட்டாமல் புரட்ட ஆரம்பித்தவன் வாசித்த முடிவில் களிக்கூத்தாடினான். இதை எப்படியாயினும் சாயுவிடம் சொல்லியாக வேண்டும் என்று துடித்தான். “நான் இக்கோப்பினை கோட்டால் மாமா தருவாரா?”என்ற கேள்வி அவன் மனதில்.
தரமறுத்தாலும்…. என்ற ஐயத்துடன் சுற்றும் முற்றும் பார்த்து தான் கொண்டுவந்த பையில் அதனை பதுக்கினான். மாமா வீட்டில் விடைபெற்றுக் கொண்டு சாயுவிடம் விரைந்து சென்றான் ஸ்ரீ.


சாயுவின் வீட்டுக்கு சென்று அறையில் கட்டில் மீது அமர்ந்திருந்த சாயுவிடம் எந்த விடயமும் சொல்லாமல் கோப்பை நீட்டினான் ஸ்ரீ. நண்பனின் திடீர் வருகையை சற்றும் எதிர்பாராத சாயு
கோப்பையும் நண்பனின் முகத்தையும் மாறிமாறி பார்தான். ஸ்ரீயின் முகத்தில் காணப்பட்ட பூரிப்பு சாயுவுக்கு எதையோ பெரிதாக சாதித்துவிட்ட தோரணையை காட்டி நின்றது. “என்ன இது?” கேட்டான் சாயு.
“படித்துப் பார்” புன்னகையுடன் பதிலளித்தான் ஸ்ரீ.
எதுவும் புரியாதவனாய் ஒவ்வொரு பக்கமாய் வாசிக்க ஆரம்பித்த சாயுவின் முகமும் ஆயிரம் சூரியன்களின் பிரகாசத்தை ஒருசேரப் பெற்றது.
இதிகாச காலத்தில் இராவணனால் கவரப்பட்டு இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த சீதா தேவியின் நிலை அறிந்து வர இராமபிரான், அனுமனை இலங்கைக்கு தூது அனுப்பி வைத்தார். இதன்போது சீதைக்கு தன்னை அடையாளம் காட்ட தனது கணையாழி எனப்படும் மோதிரத்தை அனுமனிடம் கொடுத்தனுப்பியதாக இராமாயணம் கூறுகிறது.இக் கணையாழியானது அனுமன் சீதையை கண்ட போது அவரிடம் கொடுத்த தாகவும் சீதாதேவியால் தான் சிறை வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்த மரத்தின் பொந்தில் இது வைக்கப்பட்டதாகவும் இராமன் தன்னை அழைத்து செல்ல வரும்போது சீதாவால் அது எடுத்துச் செல்லப்படவில்லை என்றும் அக்கோப்பில் கூறப்பட்டிருந்தது. மேலும் அக்கணையாழியை தேடிச்சென்று இடையே திரும்பி வந்தோர் பற்றிய குறிப்புகளும் அம் மரத்தின் அமைவிடம் குறித்த வழிகாட்டி வரைபடமும் அக்கோப்பில் இருந்தது.
“ ஸ்ரீ ! இது அருமையான விடயம்”
என்று கோப்பை மலைத்துப் பார்த்தபடியே கூறினான் சாயு. கட்டிலில் சாயுவின் அருகே வந்து அமர்ந்து கொண்டு சாயுவை பார்த்து “நாம் ஏன் இக் கணையாழியை தேடி போக கூடாது?” என்றான் ஸ்ரீ. சடுதியாக கண்களை விரித்துக் கொண்டே ஆச்சரியத்துடன் ஸ்ரீ இன் முகத்தை பார்தான் சாயு. “என்ன சொல்கிறாய்? இது சாத்தியமா? இது உயிரைப் பணயம் வைக்கும் முயற்சி என்று இக்கோப்பிலேயே உள்ளது. நாங்கள் எப்படி?!”என்று மெல்லிய குரலில் கேட்டான் சாயு. “நான் முடிவெடுத்து விட்டேன், நாம் ஒரு கை பார்போம் நீ தயாராகு” என்று கட்டிலில் இருந்து எழுந்தபடியே கூறினான் ஸ்ரீ. “அக் கணையாழியை அடைவதால் என்ன லாபம்?” கேட்டான் சாயு. “ஆஆஆ…. ”இழுத்தான் ஸ்ரீ. துணிந்து பயணித்து அக் கணையாழியை கண்டு விட வேண்டும் என்பதே ஸ்ரீயின் மன ஓட்டம்.அவன் வேறெதையும் யோசிக்கவில்லை. ஸ்ரீ கொடுத்த ஊக்கத்தால் இறுதியில் சாயுவும் களப்பயணத்திற்கு ஒப்புக்கொண்டான்.

இந்நிகழ்வு நடந்து ஒரு வாரமாய் துல்லியமாக திட்டங்களை தீட்ட ஆரம்பித்தனர் இருவரும். சாயு சிறுபராயம் முதலே காடு, மலைப் பயணங்கள் குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலதையும் பார்வையிடுவான். மேலும் பாடசாலையில் சாரணர் அணியில் செயற்பட்டதால் காடுகளில் சென்று பயிற்சிப்பாசறைகளில் ஈடுபட்ட அனுபவமும் உண்டு. எனவே காட்டில் களஆய்வுக்கான வியூகங்களை சிறப்பாக வகுத்தான் சாயு. ஸ்ரீ உலர் உணவுகளையும் பிஸ்கட் பைகளையும் நிறையவே தன் பையில் நிரப்பிகொண்டான். சாயு குடைகள், டார்ச்லைட் என ஒவ்வொன்றையும் துல்லியமாக எடுத்து வைத்து பயணத்திற்கு சிறப்பாக தயாரானார்கள். ஏழு நாட்கள் சுற்றுலா செல்வதாக இருவரும் வீட்டில் பொய் சொல்லிவிட்டு கணையாழி நோக்கிய பயணத்தை ஆரம்பித்தனர்.
பேருந்தில் பயணம். ஒரு மாதிரியாக சீதை சிறைவைக்கப்பட்டிருந்த அசோகவன காட்டுப்பகுதியின் ஆரம்ப தானத்தை வந்தடைந்தனர்.அங்கிருந்த சீதை அம்மன் ஆலயத்தை வழிபட்ட பின் வழிகாட்டி திட்டம் காட்டும் ஆரம்ப இடத்தை கண்டறிந்து பயணத்தை துணிவுடன் ஆரம்பித்தனர்.

மேடும் பள்ளமுமாய் அடர்நத மரங்களோடு விலங்குகளின் சத்தங்கள் பயமுறுத்த பாதை நீண்டு கொண்டே சென்றது. மாலைப்பொழுதை எட்ட முன்னமே சூரிய ஒளி கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது. மழையும் பெய்ய ஆரம்பிக்க தூரத்தே தெரிந்த மலைக்குகை ஒன்றை ஓட்டமும் நடையுமாய் சென்றடைந்தனர். சாயு டோர்ச்சை எடுத்து ஒளியை வர வைத்து இருவரும் மெல்ல மெல்ல குகைக்குள் சென்றனர். நீரின் ஊறல்களும் தேக்கமும் ஆங்காங்கே காணப்பட தாம் தங்க தகுந்த வறண்ட இடத்தை தெரிவு செய்தனர். ஸ்ரீ நிலத்தில் விரிப்பொன்றை விரித்தான். சாயு கொண்டு வந்த பொருட்களை பாவித்து தீப்பந்தம் மூட்டி அவ் இடத்தில் தீக்குவியல் ஒன்றையும் உருவாக்கினான்.

இருவரும் அமர்ந்திருந்த படியே வழிகாட்டி திட்டத்தையும் திசைகாட்டியையும் வைத்து தமது பயண எதிர்காலத்தை ஊகித்தனர். பின் பசிக்கு கொண்டு வந்த பாணில் ஜாமை பூசி சாப்பிட்டனர்.சாயு பயணப்பையை தலையில் வைத்து சோர்வினால் கண்ணயர்ந்தான். ஸ்ரீ கணையாழியை காணும் வைராக்கியத்துடன் எதையோ எல்லாம் யோசித்துக்கொண்டு பிரமை பிடித்தவன் போல் உற்காந்திருந்தான். நேரம் ஆக ஆக அவனும் இருந்த இடத்திலேயே கண்ணயர்ந்தான்.மறுநாள் பொழுது புலர்ந்தது . காலை காரியங்களை கஷ்டப்பட்டு முடித்தபின் இருவரும் பயணத்தை தொடரலாயினர்.

முன் நாள் இரவு வகுத்த திட்டத்தின் படி லங்கா தோட்டம், இராவணகோட்டை , சீதா ஏரி என்பவற்றை நேர்வடக்கே நடந்து கடந்தோமே ஆனால் கணையாழியின் இடத்தை அடையலாம் என்பது அவர்களின் வியூகம். இருவர் மனதிலும் காலத்தை வென்ற திடமான தைரியம் அவர்களை வழிகாட்டியது. மிருகங்களின் குறுக்கீடு,பூச்சிக்கடி, களைப்பு , தாகம் எல்லாவற்றையும் சேர்ந்தே முறியடித்து முன்னோக்கி சென்று மதிய வேளையில் லங்கா தோட்டத்தை அடைந்தனர். அங்கே பசியைபோக்க ஓரிடத்தில் உற்காந்து பிஸ்கட்டை எடுத்து உண்ண ஆரம்பித்தனர். அப்போது சாயுவின் அருகே ஓர் நாய்க்குட்டி வந்து வாலை ஆட்டியது. சாயு அதனை அன்போடு ஸ்பரிசித்து அதற்கு பிஸ்கட்டுகளை உண்ண கொடுத்தான். இருவரும் புறப்பட தயாராகி , சாயு நாயை தூக்கி அதனை வருடிக்கொடுத்தபடியே ஓர் சந்தேகம் வர ஸ்ரீயை நோக்கி “ இங்கே நாய் உள்ளதென்றால் நாய் வளர்க்க மனிதரும் இருப்பார்களா?”என்று கேட்டான். ஸ்ரீயின் முகம் மாறியது. தான் நின்ற திசையில் இரு அடி முன்னேறி சுற்றும் முற்றும் பார்த்தான். தன் முதுகை யாரோ தட்ட பின் சட்டென்று திரும்பினான். சாயு நின்று கொண்டிருந்தான். “என்ன? ” கண்களால் கேட்டான் ஸ்ரீ. ஒரு கையில் நாய் குட்டியுடன் மறு கையால் தாம் வந்த திசையில் எதையோ பயம் கலந்த பதற்றத்துடன் சுட்டிக்காட்டினான்.

அங்கே விலங்குத் தோலை ஆடையாக அணிந்த ஓர் பெரிய உருவம் நின்று கொண்டிருந்தது. ஆம் ஒரு காட்டுவாசி வேடன் அவன். அவனை எதிர் கொள்ள தயாரானவன் போல் ஸ்ரீ அவனை நோக்கி சென்றான். ஸ்ரீ அவனை சில நிமிடங்கள் உற்று பார்த்தபடி நின்றான். திடீரென அவனுடன் சைகையில் எதையோ சைகை கலந்த மொழியில் உரையாடினான். சில நிமிட உரையாடலின் பின் அக்காட்டுவாசி பயத்துடன் எதையோ பதிலளித்து விட்டு நாய்க்குட்டியை பெற்றுக்கொண்டு ஓட்டம் பிடித்தான். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சாயுவுக்கு முகத்தில் ஈயும் ஆடவில்லை. அத்துணை வியப்பு!.

“வா… லங்கா தோட்டத்தின் அழகை ரசிப்போம்” என்று சாயுவை அழைத்தான் ஸ்ரீ. சாயு ஒன்றும் கேட்காமல் ஸ்ரீ உடன் தொடர்ந்து பயணமானான். லங்கா தோட்டத்தின் வனப்பை ரசித்துப் பின் இராவண கோட்டையை நோக்கி கால்கள் நடக்க ஆரம்பித்தன. தூரத்தில் தெரிந்த கோட்டையை கலங்கரை விளக்கமாக கொண்ட கப்பல் போல் இருவரும் பயணமாகினர். நடக்கும் வழியில் சாயு “எவ்வாறு அந்த காட்டுவாசியிடம் கதைத்தாய்?” என வினாவினான்.தன் மாமா தனக்கு காட்டுவாசிகளின் பாஷையை சொல்லிக் கொடுத்ததாக பதிலளித்தான் ஸ்ரீ.  மேலும் அவன் ,தான் இங்கே தான் வசிப்பதாகவும் வடக்கு பக்கம் பயணமாகும் தங்களை திரும்பிச்செல்லும் படி கூறியதாகவும் சீதையம்மா அங்கே அழுது கொண்டு இருக்கா என்று கூறி பயந்தோடியதாகவும் கூறி முடித்தான். இராவண கோட்டை வந்தது. சிதைந்த நிலையில் காணப்பட்ட பழமையான கோட்டை அது. கோட்டையை தாண்டி மறுபுறம் அடைய வேண்டுமானால் நீரகழி ஒன்றை கடக்க வேண்டும். சாயு அகழியின் அருகே நின்ற மரத்தில் ஏறி கொழுக்கி கொண்ட கயிறு ஒன்றை மறுபுறம் நின்ற மரம் ஒன்றில் வீசி பற்றிப்பிடிக்கச் செய்தான். பின் ஒருவர் அடுத்து ஒருவராக அகழியை கடந்து மறுபுறம் அடைந்தனர்.

பொழுது சாய்ந்தது. ஒரு கூடாரம் அமைத்து இருவரும் உள்ளே உடலை நீட்டி ஓய்வெடுத்தனர். கோட்டையின் அபூர்வமான சத்தங்களை கேட்டு பயந்த வண்ணமே உணவுண்டு நித்திரையாகினர். மறுநாள் காலை மீண்டும் கால்கள் நடக்கலாயின. நீண்ட நேர பிரயாணத்தின் பின் சீதா ஏரி குறுக்கிட்டது. “இது தான் சிறைவாசத்தின் போது சீதை நீராடிய இடமாம்”கூறினான் சாயு. இருவரும் ஏரியில் மேனி கழுவிட புது தெம்பு பெற்றனர் . உடலின் காயங்கள் எல்லாம் மாயமாகின. அதிசயத்தால் மெய் சிலிர்த்த இருவரும் தம் போத்தல்களிலும் ஏரி நீரை நிரப்பிக்கொண்டனர்.மீண்டும் நடை தொடர்ந்தது. செல்லும் வழி எல்லாம் இறந்த மனிதர்களின் என்புக்கூடுகள். தமக்கு இந்நிலை வருமோ என்று சாயு மனதில் ஒரு வித பயம். ஸ்ரீயை பார்த்தான் சாயு. அவன் எதையும் பொருட்படுத்தாமல் ஏறு நடையில் முன்னேறினான். ஆங்கே  கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஓர் பெரிய மரம். பொன் வேலிகளுடன் காணப்பட்ட அமைப்புக்கள். இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து ஆர்ப்பரித்தனர். தாகம் கொண்டவன் தண்ணீரை கண்டால் ஓடிச்செல்வது போல் இருவரும் பெருங்கதி ஓட்டத்தில் மரத்தினை அடைந்தனர். இருவரும் மரத்தடியில் சென்று நன்கு மூச்சு வாங்கினர். தாம் எச்சேதமும் இன்றி இலக்கை அடைந்தோம் என்று சாயு மனதில் பெரும் மகிழ்ச்சி. இருவரும் யுகங்கள் கடந்து நிலைத்து நிற்கும் மரத்தின் விசாலத்தில் மெய் மறந்தனர்.

இருவரும் மரத்தின் பொந்துகளில் கவனமாக கணையாழி தனை தேடினர். ஓர் பொந்தில் இருந்து வெளிப்பட்ட பிரகாசம் இருவர் முகத்தையும் ஜொலிக்க வைத்தது. பொந்துக்குள் கையை விட்டு கணையாழியை எடுக்க முட்பட்டான் ஸ்ரீ. பாரிய இடி மின்னலுடன் பலத்த காற்று வீசத் தொடங்கியது. இருவரும் நிலைகுலைய ஆரம்பித்தனர். ஆனால் கணையாழியை காணும் வேட்கை இருவரிடமும் சற்றும் குறையவில்லை. பாரிய போராட்டத்தில் கணையாழியை வெளியே எடுத்தான் ஸ்ரீ. என்ன ஒரு பிரகாசம். ஆஹா!!! .இருவரும் மாறி மாறி கைகளில் எடுத்து பார்த்துக் கொண்டனர். திடீரென காற்றும் நின்றது. “ ஸ்ரீ! காற்று நின்று விட்டது.வா நாங்கள் சீக்கிரமே இக்காட்டை விட்டு வெளியேறுவோம்” என்று சாயு கூறினான் . அக்கணமே பலத்த சிரிப்புடன் சித்தர் ஒருவர் அவ்விடம் வந்தார். இருவரும் யார் இந்த கிழவன் என்ற பாணியில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அச்சித்தர் இருவர் முன்னும் வந்து அமர்ந்து ஸ்ரீயை நோக்கி“மகனே! இது காலத்தால் இதுவரை பாதுகாக்கப்பட்ட தெய்வ ரகசியம். இக் கணையாழி இவ்விடம் விட்டகன்று அதர்மக்காரரின் பிடியில் சிக்கினால் உலகம் பாரிய அழிவை சந்திக்கும் ஐயா!நீ இக் கணையாழியை பெற்றிருக்கிறாய் என்றால் நீ சாதாரணமானவன் அல்ல . நீ மகாராஜா விபீஷ்னரின் வம்சம். ஆனால் இக் கலி உலகிற்கு இக் கணையாழியை கொண்டு சென்று விடாதே” என்று கூறி முடித்தார். ஸ்ரீ யாருடைய பேச்சையும் கேட்காதவனாய் கணையாழியை கைகளில் பொத்திக் கொண்டு ஓடினான். சாயு அச் சித்தரின் முகத்தை இரு கணம் பார்த்து விட்டு ஸ்ரீயை பின் தொடர்ந்து ஓடினான். சித்தர் அழகிய புன்னகையுடன் இருந்த இடத்திலேயே இருந்தார்.

ஸ்ரீ ஓட்டமும் நடையுமாக இராவண கோட்டையை அடைந்தான். சாயு பின்னாலேயே ஓடி வந்தான் .“ஸ்ரீ!!நில்” பலமுறை கத்தினான் சாயு. கோட்டையின் அகழிக்கு அருகே இருந்த கல்லில் தடக்கி கீழே விழுந்தான் ஸ்ரீ. கணையாழி தூக்கி வீசப்பட்டு அகழிக்குள் போய் வீழ்ந்தது. “என்னுடைய கணையாழி ” என்று கத்திக்கொண்டே எழுந்தான் ஸ்ரீ.“என்ன கணையாழியா ? அதை இனித்தான் பெறப்போகிறாம்”கூறினான் சாயு. ஸ்ரீ விழிகளை விரித்து பார்த்தான். ஆம் குகையில் காலைக் கனவு இது….இனி இராவண கோட்டையை நோக்கி கால்கள் நடக்க தொடங்கும்….

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
10 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
keerthana
keerthana
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Keep it up bro👏👍👍👍

Kasthury Sothinathan
Kasthury Sothinathan
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

மிகவும் அருமை
சுவாரஸ்யமான தேடல்.
பாத்திரங்களும் பயணித்த உணர்வு.
வாழ்த்துக்கள்

Kasthury Sothinathan
Kasthury Sothinathan
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

இதே போன்ற கதைகளை இன்னும் எதிர்பார்க்கிறேன்
நன்றி

Sajustan Uthayakumar
Sajustan Uthayakumar
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

மிகவும் அருமையான மற்றும் சுவாரஷ்யமான படைப்பாக உள்ளது. கதையினை வாசிக்கும் போது நானும் பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது இவ்வகையில் எழுத்தாளர் வெற்றியீட்டியுள்ளார். அத்துடன் கதையின் பாங்கு, மொழி நடை, இடங்களின் வருணனை எல்லாமே மிகச் சிறப்பு . தன் கற்பனைத்திறனையும் சிறப்பாய் காட்டியுள்ளார். இவ்வாறான படைப்புக்களை மென்மேலும் எங்களிற்கு விருந்தாக்க வேண்டி நிற்கிறேன். வாழ்த்துக்கள்

ஸ்ரீகர்ஷன்
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

அருமையான படைப்பு நண்பரே….. கதை நகர்ந்து செல்லும் பாங்கு சிறப்பு…..
தொடர்ந்து எழுதுங்கள்……
வாழ்த்துக்கள்…..