காடழித்தல் காசினிக்கே கேடுதரும்

0
721
170132279

(எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
(காய் – காய் – மா – தேமா)

பசுமைமிகு வனமதுவோ பாரி லென்றும்
படர்ந்திருக்கு முயிர்களுக்கே நன்மை யென்றும்
வசிக்குமுயிர் சுவாசிக்கும் வளியாம் தன்னை
வடிகட்டு மியற்கையிலே மரங்கள் தாமே
புசித்திடவே விலங்குக்கும் உணவ ளித்து
புவிவாழு முயிரனைத்தும் நிலைத்து நிற்கப்
பசுமையுள்ள காடுகளைப் பாது காத்துப்
பரம்பரைகள் வாழுதற்கோர் வழிச மைப்போம்

உணராது காடழித்தா லுயிர்க லெல்லாம்
உணவுத்தொ டர்பறுந்து லகமோ பாலை
வனமாகி நீர்நிலைகள் யாவும் வற்றி
வசிப்பதற்கும் இடமற்று வனவி லங்கும்
மனிதர்வாழ் குடிமனைக்குள் வந்து வந்து
மனிதரோடு பயிர்களுக்கும் தீங்கு செய்யும்
மனதினிலே இதைநிறுத்தி மண்ணில் வாழும்
மரங்களினை வெட்டாது பாது காப்போம்

மழையோடு மருந்துகளும் தரும்ம ரத்தை
மனிதரிங்கு மாய்த்தழிக்கும் மடமை தன்னைக்
களைந்துமே புதுக்காட்டு வளங்கள் செய்து
காத்திடுவோம் புவிவளத்தை மண்ணில் நன்றே
நிலைத்துயிர்கள் மண்ணிருந்து நீடு வாழ
நீரோடு சுத்தவளி நல்கும் வண்ணம்
விலைகொடுத்து வாங்குமோர் நிலைவா ராது
வையமதிற் காப்பதற்கு வழிய மைப்போம்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments