காத்திருப்பு

0
1181

நான் அவளை 
முத்தமிட்ட போது
மொட்டுக்கள் 
மலர்ந்து பரப்பிய
மணத்தில்
கரையோரத்தில்
கழற்றி வைக்கப்பட்டிருந்த
என் கோபம்
ஆடை தொலைத்த 
நிர்வாணியென
மீண்டும் வெளி வராமல்
எனக்குள்ளே
மறைந்து கொண்டது
எங்கிருந்தோ 
ஒரு புல்லாங்குழல்
தூரத்திலிருந்து
மென்மையாய்
மீட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது 
சைப்ரஸ் 
மரங்கள் வழி
வருந் தென்றல்
அவளின் கண்களைப் போல
அத்தனை குளிர்ச்சியாய்
இருக்கிறது
அவளிடத்தில்
அந்த நதியின்
அமைதி பொதிந்து கிடப்பது
அத்தனை அழகை கூட்டுகிறது

உன்னை கோபப்படுத்தி விட்டேனா?

நான் பதிலுக்கு புன்னகைக்கிறேன்
இன்னும் சில
நிமிடத்தில் கப்பல்
வந்து விடும்
என் பயணமும் தொடங்கி விடும்
அவள் குழந்தையைப் போல
என் மார்புக்குள் 
புகுந்து கொண்டாள்
இனி இந்த
அலைகளோடும்
கடலோடுமே அவள்
நாட்கள் கழியும்
தூரத்தில் 
கப்பல் வரும் சத்தம்
கேட்கிறது
அவள் என்
கைகளைப் பிடித்துக்
கொண்டாள்
எப்போதும் போல்
என்னையும் உன்னோடு 
அழைத்துச் செல்
என்று மன்றாடவில்லை
வெறுமனே 
என் கைகளை மட்டும் பிடித்துக் கொண்டிருந்தாள்
நான் எப்போதும் 
போல் 
விரைவில் வந்து விடுவேன் 
எனும் பொய்
வாக்குறுதிகளை அளிக்கவில்லை
அவளை 
சமாதானம் செய்யும் 
முயற்சியை எனக்கு அவள்
தரவில்லை
கப்பலின் கொடி அருகில்
நெருங்கிக் கொண்டிருக்கிறது

அவள் ஒரு
பையை நீட்டுகிறாள்
அதன் கனத்தின் பொருள்
விளங்காமல்
அவளை பார்க்கிறேன்

இந்த நான்கு வருடங்களாய்
நீ வரும் நாட்களை
எண்ணி நான்
சேகரித்த 
சிப்பிகளும் கிளிஞ்சல்களும்
இனி உன்னுடனே இருக்கட்டும்
நீ கடக்கும் 
ஒவ்வொரு நாளிலும்
இதிலிருந்து
ஒவ்வொன்றாய் கடலில் வீசு
நீ எறியப் போவது
என் 
ஞாபகங்களை அல்ல
நம் இடைவெளிகளை
பேசி முடிக்கையில்
அவளின் நீலக் கண்கள்
கலங்கியிருந்தது

குனிந்து அவளின்
மேடிற்ற வயிற்றில் முத்தமிட்டேன்
கப்பல் புறப்படப்
போவதற்கு ஆரம்பமாய்
சைரன் சத்தம் கேட்டது

மீண்டும் ஒரு முறை அவளை
அணைத்துக் கொண்டேன்
அதன்பின் நாங்கள்
எதுவும் பேசிக் கொள்ளவில்லை

அவள் கையசைப்பது 
தூரமாய் மாறி
பின் ஒரு புள்ளியாகி 
நின்றே விட்டது

“ப்ளாக் டீ சாப்பிடுகிறாயா?”
கேப்டன் தாமஸ்
நான் புன்னகைத்தபடி
சரி என்றேன்
“புவர் லிட்டில் பாய்”
நகர்ந்து விட்டான்
மறுபடியும் 
அதே கப்பல்
நீலக் கடல்
ப்ளாக் டீ
அதே வேலை
அத்தனை கிளிஞ்சல்களையும்
சிப்பிகளையும்
ஒரே தடவையில்
கொட்டி விட்டு
அவளிடத்தில்
ஓடிப் போகணும் என்பதை
கட்டுப்படுத்தியபடி
ஒரு கிளிஞ்சலை
எடுத்து
கடலில் வீசி விட்டு
அவள் தந்த பையை 
நெஞ்சோடு
கட்டிக் கொள்கிறேன்
இப்போது அந்தப் பை
கனக்கவில்லை
என் மனமே
கனத்திருக்கிறது……

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments