நித்திய கல்யாணி

0
3231

 

 

 

 

 

 

வின்கா ரோஸா (Vinca rosea) அல்லது கேதராந்தஸ் ரோசியஸ் (Catharanthus roseus), என்னும் அறிவியல் பெயர்களால் அழைக்கபடும்  நித்திய கல்யாணி அபோசைனேசியே (Apocynaceae)  தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. எல்லாப் பருவங்களிலும் பூக்கும் பசுமை மாறாத இச்செடி. சுடுகாட்டுப் பூ, கல்லறைப் பூ, பெரிவின்கிள், (periwinkle) மதுக்கரை, முதலிய பல பெயர்களை கொண்டுள்ளது.  இச்செடி அழகுத் தாவரமாகவும் மருந்து உற்பத்திக்காகவும் வணிக ரீதியாக பெருமளவில் பயிரிடப்படுகிறது

நித்தியகல்யணியின் பிறப்பிடம் மடகாஸ்கர். 1700ல் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தபட்ட இத்தாவரம் அதன் பிறகு இந்தோனேசியா, இஸ்ரேல், தென் ஆப்பிரிக்கா ,இந்தோசீனா,  பிலிப்பைன்ஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவிலும் அலங்கரச்செடியாக பரவலாகியது. பல நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்திலும் நித்யகல்யாணிச்செடியின் அனைத்து`ப்பாகங்களும் பன்னெடுங்காலமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.

 இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, அஸ்ஸாம், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்காளம் குஜராத் ஆகிய மாநிலங்களில் தரிசு நிலங்களில் இச்செடி சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ் நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருது நகர், இராமநாதபுரம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இச்செடி சாகுபடி செய்யப்படுகிறது. மணல் பாங்கான இடத்திலும், தரிசு நிலங்களிலும் தானே  செழித்து வளரும் இவற்றை. பாழ் நிலங்கள், சாலையோரங்களில் அதிகமாகக் காணலாம். முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. 

 

 

 

 

 

1 லிருந்து 2  அடி உயரம் வளரும் பச்சைத்தண்டுகளையுடைய  இக்குறுஞ்செடியின் எதிரடுக்கில் அமைந்த  நச்சுத்தன்மை கொண்ட   முட்டை வடிவ பளபளப்பான இலைகள் கசப்பாக இருப்பதால் ஆடுமாடுகள் இதனை உட்கொள்வதில்லை நித்தியகல்யாணி மலர்கள், ஐந்து இதழ்களைக் கொண்டது. இளஞ்சிவப்பு , வெள்ளை  மற்றும் இள நீலம், அடர் சிவப்பு நிறங்களிலும் மலர்கள் இருக்கும்.. எல்லா பருவங்களிலும் இந்த தாவரம் பூத்துக் குலுங்குவதால் நித்ய கல்யாணி என்கிற பெயரைப் பெற்றது. நித்தியகல்யாணி பழங்கள் இரட்டையானவை. நிறைய விதைகளுடன் கூடியவை. 

இதில் உள்ள  85 க்கும் அதிகமான ’’வின்கா ஆல்கலாய்டுகள் ’’ என்றழைக்கப்படும் வேதிப்பொருட்கள் லுக்கேமியா மற்றும் லிம்போமா  போன்ற ரத்தப்புற்றுநோய்களை குணப்படுத்தும் மருந்துகளாகும்.   குறைந்த ரத்த அழுத்தம், ரத்த அணுக்கள் குறைபாடு ஆகியவற்றிற்கும் இவ்வேதிப்பொருட்கள் மருந்தாகின்றன

வின்க்ரிஸ்டின், வின்ப்ளாஸ்டின், அஜ்மாலின், ரவ்பேசின் (Raubasin) செர்பென்டைன் (Serpentine) ரிசெர்பைன் (Reserpine) ஆகிய செயல்திறன் மிக்க  வேதிப்பொருட்கள் உள்ள நித்திய கல்யாணியின் மருத்துவ பயன் கொண்ட இலைகள், பூ, தண்டு மற்றும் வேர்கள் மருந்து தயாரிப்பின் பொருட்டு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மணலுடன் இவற்றின் விதைகளைக் கலந்து மானாவாரியாகவும், இறவை சாகுபடியாகவும் விதைத்து,. செடி வளர்ந்து 6 ,9 மற்றும் 12 வது மாதங்களில் இலைகளைப் பறித்து பதப்படுத்தி ஏற்றுமதி செய்கிறார்கள். பின் 12 வது மாதத்தில் தரைமட்டத்தில் செடியை அறுத்து விட்டு வேர்களை உழுது எடுத்துப் பதப்படுத்தி வியாபாரத்திற்கு அனுப்புகிறார்கள். அமெரிக்கா ஹங்கேரிக்கு இலைகளும், வேர்கள் மேற்கு ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கும் எற்றுமதியாகிறது.

 

 

 

 

 

 வீட்டுத்தோட்டங்களிலும் பூதிகாக்களிலும் அலங்காரச்செடியாக பல நிறங்களில் மலர்கள் இருக்கும் செடிகளை கலந்து வளர்க்கலாம். இவற்றின்  நுண்ணிய விதைகள் விழுந்துவிழுந்து மீண்டும் செடிகள் வளர்ந்தவாறே இருக்கும்.

வெண்ணிற மலர்களுடன்  ‘Albus’ , இளஞ்சிவப்பு மலர்களுடன் ‘Grape Cooler’ பலநிறங்கள் கலந்த   Ocellatus  , வெள்ளையில் சிவப்பு உள் வட்டத்துடன் ‘Peppermint Cooler’ ஆகியவை இப்போது வணிகரீதியாக பயிரிடப்படும் நித்யகல்யாணி வகைகளாகும்.

நச்சுத்தன்மை; இச்செடியில் வேதிபொருட்கள் நிறைந்துள்ளதால் நச்சுத்தன்மை கொண்டிருக்கின்றது. உலர்ந்த செடியை எரிக்கையில்வரும் புகையை முகர்ந்துபார்ப்பது, மருத்துவர்களின் கண்காணிப்பின்றி செடியை மருந்தாக பாவிப்பது ஆடுமாடுகளுக்கு உணவாக செடியினை அளிப்பது போன்றவை ஆபத்தை விளைவிக்கும்.

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments