நினைத்தாலே இனிக்கும்- லாக் டவுன் தெரபி போட்டிகள்

0
559
online class-abc99a0e
இணைய வழி: கற்றலும் கற்பித்தலும்

ஆன்லைன் வகுப்புக்கள் துவங்கி பல மாதங்கள் ஆகிவிட்டதென்றாலும் இன்னும் அதில் எனக்கு நல்ல பரிச்சயமும் பிரியமும் ஏற்பட்டுவிடவில்லை. கரும்பலகையில் எழுதி வருஷக்கணக்காக பழகிய கையும் மனமும், இதற்குப்பழகாமல், ஒத்துழைக்காமல் சண்டி பண்ணுகின்றது.  மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களின் கண்களைப்பார்த்தபடி கற்பித்தலில் இருக்கும் மகிழ்வையும் நிறைவையும் 1998’லிருந்து அனுபவித்து கொண்டிருப்பவளாதலால், இப்படி கணினி முன்பாக அமர்ந்துகொண்டு தட்டச்சிய கட்டுரைகளையும் குறும்படங்களையும் காண்பித்து கற்பிப்பதில் இருக்கும் பொருளின்மையையும் நிறைவின்மையையும் ஒவ்வொருநாளும் உணர்கிறேன்.

என்னைப்போன்ற ஆசிரியர்களுக்கே இப்படியென்றால் நல்ல காலத்திலேயே வகுப்பறைக்கு வந்து கற்றுக்கொள்ள சுணங்கும் மாணவர்களுக்கு கேட்கவேண்டுமா என்ன?

இனிமேல் இணையவழிகற்றல்தான் என்று அறிவிப்பு வந்தபோது அத்தனை பயமாக இல்லை. கணினி உபயோகிக்கத் தெரியும் என்றாலும் அதன்வழியே கற்றுக்கொடுப்பது குறித்து அதுவரை சிந்தித்ததில்லையென்பதால் பெரிதாக ஒன்றும் நினைத்துக்கொள்ளவில்லை மேலும் அப்படியெல்லாம் ஒன்றும் இருக்காது, இதோ எல்லாம் சரியாகிவிடும், வழக்கம் போல கல்லூரிக்கு சென்று வகுப்பில் பாடமெடுக்கப்போகிறோம் என்று மனம் நம்பிக்கொண்டிருந்ததும் காரணமாக இருக்கலாம்

ஆனால் நாட்கள் செல்லச்செல்ல வைரஸ்தொற்று உலகளாவிய பெரும் ஆபத்தாகி, லட்சக்கணக்கானோர் இறந்ததும், மிகப்பெரிய ஆளுமைகளும் செல்வந்தர்களும், பிரபலங்களும் கூட தொற்றுக்கு ஆளாகி அவர்களில் சிலர் உயிரிழந்ததுமாக வயிற்றில், உப்பு, புளி, காரம் எல்லாம் சேர்த்து கரைத்தது போல கலவரமானது

பின்னர் ஒருநாளில் ஆன்லைனில் கற்பிப்பதை மறுநாளே துவங்க முதல்வரிடமிருந்து, (கல்லுரி முதல்வர்) தகவல் வந்தே வந்துவிட்டது

வீட்டில் மகன்களுக்கும் அப்படியே!

தட்டச்சுவதை எப்படியோ முன்பின்னாக செய்து பழகி இருந்தாலும் கணினியை எனக்கு அவ்வளவாக தெரியாது, கணினிக்கும் என்னை அத்தனை தெரியாது பாவம்

இனி நாங்கள் இருவருமாக நேர்ந்து கலந்து சேர்ந்து வேலை செய்வதன் சாத்தியங்கள் எனக்கு மிகதொலைதூரத்தில் தான் தெரிந்தது

மகன்களிடம் முதலில் இணையவழி கற்பித்தலின் அடிப்படைகளை கற்றுக்கொண்டேன் கூகிள் மீட், ஜூம் மீட் எல்லாம் போய் டெஸ்ட் மீட் நடத்தி ஆ்ன்லைன் வகுப்புக்களை. கொஞ்சம்  பரிச்சயப்படுத்திக்கொண்டேன் ஆனால் முதல்நாள் உண்மையாகவே கண்ணைக்கட்டி கம்ப்யூட்டர் முன்னால் விட்டது போலத்தான் இருந்தது

வகுப்பில் யாரையும் பார்த்துப்பேசமுடியாது என்னும் விஷயமே அப்போதுதான் உரைத்தது. அப்படி ஒரு கற்பித்தலைக் குறித்து சிந்தித்ததே இல்லையாதலால் அடுத்து என்னால் முன்னேறவே முடியவில்லை.  50/60 மாணவர்களின் மத்தியில் உயரமான மர மேடையில் நின்றபடியும் அவ்வப்போது இறங்கி அவர்கள் அமர்ந்திருக்கும் வரிசைகளுக்குள் நடந்தும், சின்ன சின்ன கேள்விகளை கேட்டு பதில்பெற்றுக்கொண்டும், பலவண்ண உடைகளில்  கிளர்ந்து ஒளிரும் இளமையுடன் இருக்கும் மாணவர்களை கண்ணுக்கு கண் சந்தித்து பாடமெடுத்ததுக்கும் மாற்றாக, நான் யாரை நோக்கி பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதே தெரியாமல், நான் பேசிக்கொண்டிருப்பதை யாரேனும் கவனிக்கிறார்களா இல்லையா என்றும் தெரியாமல்  40/50  நிமிடங்கள் பேசுவதென்பது பெரிய கொடுமையாக இருந்தது. வருகையை பதிந்துவிட்டு  சில விஷயங்களை மட்டும் தெரிவித்துவிட்டு முதல் நாள் வகுப்பை சுருக்கமாக முடித்தேன்.

பின்னர் வந்த நாட்களில் மெல்ல மெல்ல இம்முறைக்கு பழகினேன் ஆனால் முன்புபோல பாடம் கற்பித்தலில் இருக்கும் ஆர்வமும் நிறைவும் எள்ளளவும் இல்லை என்பதை உணர்ந்தேன் இனி அப்படியான நிறைவு ஏற்படவும் போவதில்லை என்னும் உண்மையும் புரிந்தது குறிப்பாக தாவரங்களின் சித்திரங்களை வரைந்து, கற்றுக்கொடுப்பதற்கான் சாத்தியமே இல்லையாதலால், ஒருநாள் கூட நிறைவுடன் வகுப்பை முடித்த உணர்வு வரவேயில்லை.

கல்லுரிக்கு அலைபேசியை கொண்டுவந்ததற்காக  முந்தின மாதங்களில் கண்டித்த அதே ஆசிரியர்கள் அலைபேசியிலும், கணினியிலும் பாடம் நடத்தி அதை மாணவர்கள் அலைபேசியில் கவனிக்கவேண்டி வந்தது துர்லபம்தான்.

அளிக்கப்பட்ட எல்லாவாய்ப்புக்களிலும் சந்து பொந்துகளை  கண்டுபிடித்து தப்பிக்கமுயலும் மாணவர்கள் இந்த இணைய வழியேயான கற்பித்தலிலும்  குறுக்கு வழிகளை கண்டறிந்து விட்டிருந்தார்கள். வருகையை உறுதிசெய்த மறுகணம் அலைபேசி அல்லது மடிக்கணினியில் நான் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் திரையை கீழிறக்கிவிட்டு வேறேதும் படங்களை பார்ப்பது, மாணவர்கள் மைக்கை அணைத்து வைத்திருக்க வேண்டுமென்பதால்  பாட்டுக் கேட்பது, போனில் நண்பர்களுடன் உரையாடுவது அல்லது போனை அங்கேயே விட்டுவிட்டு வேறெங்காவது போவது என்று ஏராளமான வழிகளில் அவர்களுக்கு முக்கியமென்று தோன்றுபவற்றை, இளமைக்கே உரிய அறியாமையுடன்  செய்ய அந்த நேரத்தை பயன்படுத்திக்கொண்டார்கள்.  வழக்கமான சின்சியர் சிகாமணிகள் மட்டும்   வகுப்பை (?) கவனித்துக்கொண்டிருப்பார்கள்.

வீட்டில் அனைவரும் எப்போதுமே இருந்து கொண்டிருப்பதால் சமையல் உள்ளிட்ட வழக்கமான வீட்டுவேலைகள் பலமடங்கு அதிகரித்துவிட்டிருக்கிறது. பாடங்களை முன்பு போல மனதிலிருந்தும் நினைவிலிருந்தும் எடுத்து  கரும்பலகையில் எழுதி, வரைந்து கற்றுத்தர வாய்ப்பில்லாததால் பக்கம் பக்கமாக தட்டச்சு செய்யும் வேலையும் சேர்ந்து உடல் ஓய்ந்துபோனது

முன்பைக்காட்டிலும் அதிகாலையில் எழுந்து பின்னிரவு வரை விழித்திருந்து, குடும்பத்தில் அனைவருமாக சேர்ந்து பேசுவதென்ன ஒன்றாக அமர்ந்து உணவுண்பதும் கூட இல்லாமல் போய் அவரவர்க்கு இடைவேளை இருக்கையில் தனித்தனியே அமர்ந்து சாப்பிடுவதும், ஒரே வீட்டில் தனித்தனி தீவுகளாக படுக்கையறையில், வாசல் திண்ணையில் , கூடத்தில் என்று தனித்தனியே அமர்ந்து கணினியை கட்டிக்கொள்வதுமாக நாட்கள் நகருகின்றது.

யெஸ்சார், யெஸ்மேம், ஏம் ஐ ஆடிபிள்? ஸ்கீரீன் தெரியுதா போன்ற வார்த்தைகளால் வீடு நிறையத்துவங்கி விட்டிருந்தது. இப்படி 2ஆம் வருடம் மூன்றாம் வருடம் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பெடுப்பதை குறித்து வருந்திக்கொண்டிருப்பதெல்லாம் வெறும் டிரைய்லர்தான், மெயின் பிக்சர் இனிமேல்தான் என்பதுபோல 2 மாதங்கள் கழித்து வந்து சேர்ந்தார்கள் கல்லூரிப்படிப்பென்பது கருப்பா சிவப்பாவென்று கூட   தெரிந்திருக்காத  பள்ளி வாசனை அப்படியெ மீதமிருக்கும்  முதலாம் ஆண்டு மாணவர்கள்.

கல்லூரி வாழ்வே மிகப்புதிது,  கணினியிலும், அலைபேசியிலும் ஆசிரியர்களை சந்திப்பதும் அதிலேயே கற்றுக்கொள்ளுவதும் மிக மிகப் புதியது. பொள்ளாச்சி போன்ற 18 பட்டிகளால் சூழப்பட்டிருக்கும் கிராமும் இல்லாத நகரமும் இல்லாத ஒரு கலவையான ஊரில் , பெரும்பாலான மாணவர்கள் தமிழ்வழிக் கற்றலில் பள்ளிப்படிப்பை முடித்து ஆங்கில வழிக்கற்றல் குறித்த அச்சமும் பிரமிப்புமாக வந்திருக்கும் வேளையில் இணைய வழிக்கற்றல் இருதரப்புக்கும் ஏகப்பட்ட சேதாரங்களை உண்டாக்கியது.

வழக்கமாக முதலாம் ஆண்டு மாணவர்கள் வகுப்புக்கு முதல் நாளே சென்று ஒவ்வொருவராக, கைகுலுக்கி பெயர் கேட்டு, அவர்களை புகழ்ந்தும் அணுக்கமாகவும் பேசி, துவக்க நாட்களிலேயே  அவர்களுக்கு மிக நெருக்கமான சொந்தமெனும் உணர்வை அளிக்கும், எதையும் பகிர்ந்து கொள்ளலாமென்று நம்பிக்கை அளிக்கும் ஒருத்தியாக மாறிவிட்டிருப்பேன். பின்னர்  3 வருடங்களும் என் பின்னால் அன்புடன் சுற்றிக்கொண்டிருப்பார்கள். எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது கொரோனா

முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரியில் உண்டாக்கி கொடுத்திருக்கும் வாட்ஸப் குழுமத்தில் இணையத் தெரிந்திருந்தது அவ்வளவே. நான் அதில் கொடுக்கும் வகுப்பிற்கான இணைப்பை திறந்து வகுப்பில் இணையத் தெரியவில்லை பலருக்கு. பகீரத பிரயத்தனம் எல்லாம் செய்து அவர்களுக்கு புரியவைத்து ஒருவழியாக  இணைந்த பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல்,  எனக்கு பதிலாக  present பொத்தானை அழுத்தி share the screen என்று வந்தபின்னால் நான் எதுவும் ஸ்லைட் போடமுடியாமலாகி அவர்களை கெஞ்சிக்கூத்தாடி அதை நிறுத்தச்சொல்லவேண்டி இருக்கும்

இன்னும் சிலருக்கு அவரவர் ஊர்களில் வீடுகளில் இணையவேகம் இருக்காது எனவே’’வந்து வந்து’’ போய்க்கொண்டிருப்பார்கள. வந்தாலும்  ஆடியோவை உயிர்ப்பிக்க தெரியாமல் சைகைமொழியில் எனக்கு பதில் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

படாத பாடுபட்டு unmute செய்ய சொல்லிக்கொடுத்தால் அதுபெரும் ஆபத்தில் கொண்டுபோய் விடும். அவரவர் வீட்டு பின்னணி ஓசைகள் பலவிதமாயிருக்கும், கலவரமாகவுமிருக்கும்.  தொலைக்காட்சி ஓசை, சமையலறை ஓசை, விடாமல் நாய் குரைப்பதெல்லாம் ஆடியோ குறுக்கீடுகளென்றால் அவ்வப்போது வந்து கேமிராவில் குட்டித்தங்கை அல்லது தம்பி என்று குஞ்சுகுளுவான்கள் எட்டிபார்ப்பார்கள்,அல்லது யாரேனும் திறந்த முதுகுடன் இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டு காமிராவை கடந்து செல்வார்கள்

ஒருவழியாக 10 நாட்களில் அவர்கள் வகுப்பில் இணைவதை கற்றுக்கொண்டாலும் அவரவர் பெயர்களில் அலைபேசி வழியே யாருமே இணைந்திருக்காததால் ஒவ்வொருவரின் பெயர்களை எழுதிக்கொள்ள   மேலும் சில  சிலநாட்கள் ஆகியது

சொந்தப்பெயரைத்தவிர எல்லா விதமான பெயரகளிலும் மாணவர்கள் நுழைகையில் எனக்கு திகிலாக இருக்கும். மெர்சல் வெற்றி, தல ரசிகன், தளபதி வெறியன், proud Brahmin, ஹிந்து வெறியன், தலை தளபதி ரசிகன் என மாணவர்கள் ஒருபுறம் கொலைவெறிப்பெயர்களுடன் வருகையில், மாணவிகள் வாயாடி, வாயாடி பெத்தபுள்ளை, அப்பா செல்லம் புஜ்ஜிம்மா, தேனு, உனக்காவே நான், போன்ற பெயர்களில் வருவார்கள். ஓருத்தி வெத்திலைக்கொடியென்று பெயர் வைத்துக்கொண்டிருக்கிறாள் இன்னொருத்தனோ ’முடிஞ்சாகண்டுபிடி’ என்ற பெயரில்.

சரி பெயர்கள் தான் இப்படி, புகைப்படங்களாவது அவரவருடையதை வைத்துக்கொள்ளலாமல்லவா? நேரில் தான் பார்க்க முடியவில்லை தோற்றம் எப்படியிருக்குமென்று தெர்ந்துகொள்ளலாமென்றால், பெரும்பாலான மாணவர்கள் விஜய் அல்லது அஜித் புகைப்படங்களையே வைத்திருக்கிறார்கள். எனக்கு விஜய்க்கும், அஜீத்துக்கும், விஜய் சேதுபதிக்கும் தாவரவியல் கற்றுக்கொடுக்க தயக்கமாக இருந்தது. எங்கள் கல்லூரி பாலக்காட்டுச்சாலையில் இருப்பதாலும் கேரளா அரைமணி நேரப்பயணதில் வந்துவிடுமென்பதாலும் நிறைய கேரளமாணவர்கள் கல்லூரியில் சேர்ந்து படிப்பார்கள். ஒருநாள் வகுப்பில் லாலேட்டன் காத்திருந்தார். எனக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. லாலேட்டனின் பெயர் வினீத்.

மாணவிகள் ரோஜப்பூ, நஸ்ரியா அல்லது தலைமுடி காற்றில் பறக்கும் அழகு போஸில் அவரவர் புகைப்படம் . இதுகொஞ்சம் தேவலையாகஇருந்தது.

துவக்க நாட்களில் எல்லா மாணவர்களின் மைக்கையும் உயிர்பித்து வைக்க சொல்லி அவர்களிடம் பேசியபடியே பாடம் நடத்திக்கொண்டிருந்தேன். சிலநாட்களிலேயெ அவ்வழக்கத்தை நிறுத்த வேண்டிவந்துவிட்டது. மும்முரமாக பூஞ்சைக்காளானின் உணவுமுறைகளையோ அலல்து  பேக்டீரியாவில் எப்படி பாலினப்பெருக்கம் நடைபெறுகின்றது என்றோ மாய்ந்து மாய்ந்து விளக்குகையில் பின்னணியில் கேட்கும் ’’பிளாஸ்டிக் குடம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம், கடைகீரேய்’’, போன்ற கூவல்களூம், ’’உறைக்கு செல்விக்காட்ட தயிர் வாங்கிட்டு வர’ச்சொல்லும் சிற்றேவல்களும்,  ’’டேய், மல்லித்தழைய மார்கெட்டுக்கு கொண்டு போகாம போனை நோண்டிகிட்டு இருக்கியா’’ போன்ற அதட்டல்கள் மட்டுமல்லாது  ’’இந்தம்மா என்னடா 9 மணிக்கு வகுப்புக்கு எட்டேமுக்காலுக்கே வந்துருது’’ என்று எனக்கான கண்டனங்களும் வந்துகொண்டிருந்ததால் ஒருநாளைக்கு சிலரைமட்டும் மைக்கை உயிர்பிக்க சொல்லிவிடுவேன் அவர்களிடமும் வீட்டில் பின்னணிச்சத்தம் இருந்தால் அணைத்துவிடும்படி முன்கூட்டியே வேண்டி விரும்பி கேட்டுக்கொள்ளுவேன்

அதற்கும் ஆபத்து வந்தது. ஒருநாள், ரேபிஸ் வைரஸுக்கும் ஹெச் ஐ வி வைர்ஸுக்குமான தோற்ற ஒற்றுமைகளை குறித்து  விளக்கிக்கொண்டிருக்கையில் திடீரென ஒரு மாணவனிடமிருந்து ’’கதை வுடாதே அதெல்லாம் ஒண்ணும் கிடையாது’’ என்று சத்தமாக  எதிர்வினை வந்ததும் திகைத்துப்போனேன். ஆனால் வீடியோவில் என்னை 48 மாணவர்கள் பார்த்துக்கொண்டிருப்பதால் புன்னைகை தவழும் முகத்துடன் ‘’ தமிழ்செல்வன் மைக்கை அணைக்கறிங்களா ‘’ என்று ஆங்கிலத்தில் மென்மையாக கேட்டதும் அங்கிருந்து ’’ வாய்பில்லை ராஜா, வாய்ப்பே இல்லை’’ என்று பதில் வந்தது. என்னை கட்டுப்படுத்திக்கொண்டு  வகுப்பு ரெப்ரஸெண்ட்டேட்டிவை ‘’ செல்வம்’’ என்று ஒரு அதட்டல் போட்டதும் அவன் இவனைக்கூப்பிட்டு சொல்லியிருப்பான் போல, சற்று நேரத்தில் தமிழ்ச்செல்வன் லெஃப்ட் த மீட்டிங்!

சாயங்காலமாக தமிழ்ச்செல்வன் என்னை அழைத்து மைக் ஆன் செய்து  இருப்பதை மறந்து நண்பனிடம் அன்று நடக்கவிருந்த IPL  போட்டியைக் குறித்து பேசியதற்காக மன்னிப்பு தெரிவித்தான்.( பெயர்கள் மாற்றபட்டிருக்கின்றது)

கேள்வி கேட்டால் என்னையே ம்யூட் செய்வது, வேண்டுமென்றெ எதிரொலி கேட்பதுபோல  மைக்கை வாய்க்கு மிக அருகே கொண்டு போய் பேசி விட்டு’’ டவர் சரியில்லை மேம்’’ என்பதை மட்டும் தெள்ளத்தெளிவாக சொல்லுவது போன்ற வில்லத்தனங்களும் நடக்கின்றது.

என்னவென்று சொல்லுவது, எப்படித்தான் கண்டிப்பது? எனக்கே இத்தனை அசெளகரியங்கள் இருக்கையில், நல்ல நாளில் வகுப்பறைக்கு வரும்போதே கற்றலின் அவசியத்தை சரிவர உணராத இளம்பருவத்தினரை,  அவர்களைக் கவரும் ஆயிரக்கணக்கான கேளிக்கைகள் சூழ்ந்திருக்கையில், கவர்ந்திழுக்கையில்  இணைய வழிக்கற்றலின் வழிக்கு திருப்புவது அத்தனை எளிதல்லவே!

ஓய்வும் நிறைவும் இல்லாமல் இப்படியே நாட்கள் செல்வது துயரளிக்கிறது. தேர்வுகளில் ஒருசிலரைத்தவிர அனேகமாக அனைவருமே போனில் இணையத்தை பயன்படுத்தி கேள்விகளை தட்டச்சி பதிலை காப்பியடிப்பது தெள்ளத்தெளிவாக தெரிந்தும் திருத்தி மதிப்பெண்கள் தரவேண்டி இருக்கிறது. நேரான பாதையில் செல்லும் தெளிவும் குறுக்கு வழிகளில் செல்லக்கூடாதென்னும் அறிவும் சுயஒழுக்கமும் தானாய் எல்லாருக்கும் வராத இளம்வயதில் இவர்களைச் சொல்லுவதிலும் குற்றமில்லை. விடைத்தாள்களை ஸ்கேன் செய்து ஆசிரியர்களுக்கு அனுப்பும் அவசரத்தில் ஒரு மாணவன் அவன் காபி அடித்த புத்தகப்பக்கத்தையும் அப்படியே ஸ்கேன் பண்ணி எனக்கு அனுப்பி இருந்தான். நொந்துகொண்டு அவனை கூப்பிட்டு கண்டித்தேன். அவன் செய்த தவறுக்கு தண்டனை தரும் காலமல்ல இது, என்றாலும் ஒரு ஆசிரியையாக அவன் தவறு செய்தது எனக்கு தெரிந்திருக்கிறது, என்பதயாவது அவனுக்கு தெரிவிக்க வேண்டுமல்லவா?

இந்த இணைய வழிக்கற்றலில் ஆசிரியைகள் இல்பேணுவதும், கல்லூரி பள்ளி கற்பித்தலை சரியாக நேரத்துக்கு செய்வதும்,  வீட்டிலேயே இருக்கும் குழந்தைகளை கவனிப்பதுமாக ஓய்வின்றி உழைப்பதையும் மிகுந்த மன அழுத்தத்திலும், உடல்சோர்விலும் இருப்பதையும் பார்க்கின்றேன்.

கல்லூரியில் படிக்கும் மகனின்  இளம் ஆசிரியை ஒருவர் காலை 8.45க்கு  கலைந்த தலையும் சோர்ந்த கண்களூமாக நைட்டியிலேயே பாடம் சொல்லிக்கொடுக்க துவங்கியதை கரிசனத்துடன் தான் பார்த்தேன். இன்னொரு ஆசிரியை பாடம் நடத்திக்கொண்டிருக்கையில் பச்சிளம்குழந்தையின் வீறிடல் கேட்டதும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு வீடியோவை அணைத்துவிட்டு சில நிமிடங்களில் மீண்டும் வந்தமர்ந்தார். அவர் கண்களில் தெரிந்த சோர்வும்  குழப்பமும், தூக்கமின்மையும், அலுப்பும், ஒரு அன்னையாக எனக்கு துயரளித்தது.

மாணவர்களின் சிறப்பம்சங்களென்ன என்று அறிந்துகொள்ள முடியவில்லை சோர்வுடன், பசியுடன், கவனச்சிதறலுடன் இருப்பவர்களை கண்டு வேண்டியதை செய்து அவர்களை ஊக்கப்படுத்தி கற்றலை தொடரச்செய்ய முடியவில்லை..

மொத்தத்தில் இப்போது நடந்துகொண்டிருப்பது ஆளுமை உருவாக்கக்கல்வி அல்லவென்பதில் எனக்கு மாற்றுக்கருத்தே இல்லை. இப்படியெல்லாம் இயந்திரங்களுடன்  வாழ்வை இணைக்கவேண்டியிருக்கும் என்று தெரியாமல் சாதாரண சோர்வுகளுக்கும் பணிச்சுமைகளுக்கெல்லாம் கூட ’’இயந்திரத்தனமான வாழ்க்கை’’ என்று முன்பு சொல்லிக்கொண்டிருந்ததை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது.

மாற்றுக்கல்வி, சோற்றுக்கல்வி, புதிய கல்வி,  கலைக்கல்வி ,அறிவியல் கல்வி சமச்சீர்க்கல்வி என்று பலவற்றை பார்த்தோம். இனி  இந்த இணையக்கல்வியையும் உலகம் பழகிக்கொண்டு நிரந்தரமாக கல்விமுறையே இதற்கு தக்கபடி மாறிவிடுமா  அல்லது கொரோனாவை போலவே இதற்கு முன்பும்,  லட்சக்கணக்கானோர் இறப்புக்கு காரணமாயிருந்த  பிளேக். அம்மை போலியோ, போன்ற கொள்ளை நோய்களைப்போல இதுவும் வந்த சுவடை ஆழப்பதித்துவிட்டு காணாமல் போனபின்பு வழக்கம்போல கல்லூரிக்கு  பருத்திப்புடவையும் கண்ணாடியுமாக போய் வகுப்பெடுத்துக்கொண்டு, தாமதமாக வருபவர்களின், அரதப்பழசான ’’பஸ் லேட் மேம்’’ போன்ற பொய்களை சகித்துக்கொண்டு,  செல்லமாக கண்டித்து உள்ளே அனுமதித்துக்கொண்டு வகுப்பெடுக்கும் நாட்களும் விரைவில் வந்துவிடுமா? பிந்தையதின் சாத்தியங்களையே மனம் மிகவும் நம்புகின்றது);

ஒரு கூடுகையின் பொருட்டு கல்லுரிக்கு சென்றவாரம் முறையான பாதுகாப்புடன் சென்றிருக்கையில் அடைக்கப்பட்டிருந்த வகுப்பறைகளும், என்னை மறந்துவிட்டு யார் என்றூ வினவிய காவலாளியும்,  தூசு படிந்திருந்த என் இருக்கையும் கண்ணை நிறைத்தது.

ஆசிரியமென்பது ஒரு பணியல்ல அது ஒரு வாழ்வுமுறை.. இந்த புதிய வாழ்வுமுறைக்குள் என்னால் என்னை முழுமையாக பொருத்திக்கொள்ளவே முடியவில்லையெனினும், இதுவரையிலும் எங்கு பிடுங்கி நடப்பட்டாலும் வேர்பிடித்து வளரும் இயல்புடையவளாகவே இருந்திருக்கிறேன். விரைவில்  இதற்கும் பழகிக்கொள்ளுவேன் என்றே நினைக்கிறேன்

Once a teacher always a learner, எனவே கற்றுக்கொண்டே இருக்கவேண்டுமல்லவா, கடைசிக்கணம் வரைக்கும்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments