அக்னி சாதியே…
அன்றொரு நாள் – நீ
யாரென்ற கேள்விக்கு
மிடுக்குடன் கூறினாய்…
பூமித்தாய் ஈன்ற பரிசாக
மங்கையர் குல சிரசாக
பூத்திட்ட குல மகளாம்
சீதையின் கற்பு தூய்மையை
இராமனுக்கும் உலகுக்கும்
எடுத்தியம்ப சிவனின்
நெற்றிக்கண் அகோரத்தில்
கொதித்து வந்த பிழம்பு நான்
என்றாய்
மன்னனின் தவறினால்
மூச்சிழந்த தன்னவனின்
உடல் நீதிக்காய் – கொடுமை
கண்ட கதிரோனிடமும்
பாண்டிய சபையினுளும்
கள்வனாயென் கணவன் என்று
கதறியெழுந்த கண்ணகியின்
உடல் வெப்பத்தில்
உதித்தெழுந்த அனல் நான்
என்றாய்
துஷ்டத்தை அழிக்கவும்
தர்மத்தை காக்கவும் – மகா
யுத்தத்தை நடாத்த வந்த
பாண்டவ திரௌபதியின்
பிறப்பிடமும் புகழிடமும் நான்
என்றாய்
இறுமாப்புடன் பதில் கூறி
செருக்குடன் நீ சென்றாய்
அன்று புகட்டினாய் எனக்கு
பெண்மையின் பெருமையும்
சாபமும் சபதமும் நீயென
# பெண் குல ஜாதியே…..அக்னி இதழ் …… #