அசோகம்

0
3073

 

 

 

 

Sorrowless tree- அசோகம் -சோகத்தை நீக்கும் என்ற பொருளைத்தரும் அசோக மரம் இந்தியா முழுவதுமே காணப்படுகின்றது. அசோக மரம் என்று பரவலாக தவறாக பலரால் கருதபடுவது நெட்டிலிங்க மரமாகும். அசோகு, பிண்டி, செயலை என்று வெவ்வேறு பெயர்களில் தமிழிலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட இந்த மரத்தின் அறிவியல் பெயர் சரகா அசோகா (Saraca Asoca). இது சிசல்பீனியேசி தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. 

மகாபாரதத்தில் விவரிக்கப்பட்டுள்ள தமயந்தியின் கதையில் அசோகம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  கணவன் காணாமல் போன பின்பு, தமயந்தி கண்ணீருடன், பூத்துக் குலுங்கி நிற்கிற அசோகமரத்தின் அருகில் சென்று, அதனுடைய பெயருக்கு ஏற்றவாறு தன்னுடைய துயரத்தை நீக்கி, கணவன் மீண்டும் தன்னோடு சேர வேண்டும் என்று வேண்டுகிறாள்.

 ராமாயணத்திலும் ராவணன் சீதையை இலங்கையின் அசோக மரங்கள் நிறைந்திருக்கும் தனது அந்தப்புரத்தில் சிறை வைத்திருந்தபோது சீதை தன் துயரையெல்லாம் இம்மரத்திடம் சொல்லிக்கொண்டதாகவும் தொல்கதைகள் சொல்கின்றன. ராவணன் அந்தப்புரமகளிரின் ஆரோக்கியத்தின் பொருட்டே இம்மரங்களை அங்கு வைத்திருந்தாரென்பதை இதன் மருத்துவகுணங்களினின்றும் நாம் அறிந்துகொள்ளலாம்.

கடவுளை வணங்குவதற்குத் தகுந்த மரமாக அசோகம் பல காலமாக இந்தியாவில் இருந்து வந்துள்ளது என்று பிரகத் சம்ஹிதை நூல் கூறுகிறது. இந்துக்களுக்கு மட்டுமின்றி சமண மதத்தினரும், புத்த மதத்தினரும்  அசோக மரத்தைப் புனித மரமாகக் கருதுகின்றனர். துர்க்கைக்கு உரித்தான ஒன்பது தாவரங்களில் அசோகமும் ஒன்று. சிவன் மட்டுமின்றி காமதேவனின் பக்தர்களும் இதைப் புனிதமாகக் கருதுகின்றனர். சமண அருகனுக்கு விருப்பமான இந்த மரத்தின் அடியில்தான், வர்த்தமான மகாவீரர் கடவுள் நிலையை அடைந்தார். அருகனின் பூ, பிண்டிப்பூ. சாக்கியமுனி அசோக மரத்தடியில்தான் பிறந்தார் எனப்படுவதால் புத்த மதத்தினரும் இம்மரத்தைப் புனிதமாகக் கருதுகின்றனர்.

 நல்ல மணமுடைய தளிரையும் மலரையும் பண்டைய இந்திய மக்கள்  தலையிலும் காதிலும்   மார்பிலும் அணிந்ததாக இலக்கியக் குறிப்புகள் கூறுகின்றன.  அத்வைத வனத்திலும், இந்திரபிரஸ்தத்திலும் இந்த மரம் காணப்பட்டதாக மகாபாரதம் கூறுகிறது.

சலங்கை அணிந்த ஓர் இளம்பெண்ணின் கால்களால் மென்மையாக உதைக்கப்பட்டால் இம்மரம் பூத்துக் குலுங்கும் என்று காளிதாசர் மேகதூதத்தில் குறிப்பிட்டுள்ளார்.   சமணர்களின் ஆசாரங்க சூத்ரமும், குமரகுருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழும்  அசோகத்தைக்குறித்துக் கூறுகின்றன. மத நம்பிக்கை அடிப்படையிலும், பண்பாட்டு ரீதியிலும் இந்த  அசோக மரம்  மிகப் பெரிய முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.

வங்காளப்பெண்கள் அசோக சஷ்டி தினத்தன்று  இம்மலரின் மொட்டுக்களை உண்ணுவதும் மலர்ச்சாற்றை குழந்தைகளின் மீது தெளித்தால் அவர்கள் துயரின்றி வாழ்வார்கள் என்று நம்புவதும் வழக்கத்திலிருக்கிறது.

சமஸ்கிருதச் சொல்லான அசோகு தமிழில் அசோகம் என்றாயிற்று. சாயை, அங்கணப்பிரியை, கிருமிகாரகம் , மலைக்கருணை, தாமிர பல்லவம், வஞ்சுளம், வீத சோகம் எனவும் அழைக்கப்படும் இம்மரத்திற்கு  சரிபம், ஹேம்புஷ்பா, தாம்ரபல்லவா என வடமொழியிலும் பல பெயர்கள் உண்டு. இது அழகிய தோரணம் போல கவிழ்ந்து தொங்கும் அடர்ந்த மினுங்கும் இலைகளும் ஆரஞ்சுவண்ண மலர்க்கொத்துக்களும் செறிந்திருக்கும் ஒருபசுமை மாறாமரமாகும்.

 

 

 

 

 

இந்திய மண்ணில் எங்கும் சாதாரணமாக வளரக்கூடியது. குறிப்பாக, இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் அதிகம் வளர்கிறது.. ஒடிசா மாநிலத்தின் கிழக்கு மலைத்தொடர் பகுதிகளிலும், கோவா, கர்நாடக மாநிலங்களின் சில பகுதிகளிலும் இயல் தாவரமாக இது காணப்படுகிறது.   இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வளர்ப்பு மரமாகவும் இருக்கிறது.    

இந்தியா இலங்கை மற்றும் நேபாளில் மிகப்புனிதமான மரமாக கருதப்பட்டு வழிபடப்படும் மரங்களில் அசோகமும் ஒன்று. புத்த மதத்திலும் இந்து மதத்திலும் தொடர்புடைய மரம் இது. ராமாயணம் உள்ளிட்ட பல புராண இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மரம் இந்த அசோகம். இந்தியாவில் இந்த மரத்துக்கு உயிரும் ஆன்மாவும் உண்டு என்றும், “மக்களின் துயரத்தில் இது துயர்கொள்ளும், மக்களின் மகிழ்ச்சியில் இது மகிழ்வு கொள்ளும்” என்றும் நம்பிக்கை நிலவுகின்றது.

அசோக மரப்பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து ஆண் பெண் இருபாலருக்கும் கொடுக்கப்படுகின்றது ஆயுர்வேதத்தில். தேக ஆரோக்கிய பலம் மற்றும் நோய் நீக்குதலில் அசோக மரப்பட்டை பெரும் பங்கு வகிக்கின்றது. மரப்பட்டை, உலர்ந்த மலர்கள் ஆகியவற்றிற்கு  பெண்களுக்கு வரும் உடல்நிலை, மனநிலை மற்றும் கருப்பைக், கோளாறுகளை தீர்க்கும் மருத்துவ குணங்கள் உண்டு. Dysmenorrhoea எனப்படும் ஒழுங்கற்ற வலியுடனான மாதவிலக்கு, Amenorrhoea எனப்படும் மாதவிலக்கு துவங்காமை, வெள்ளைப்படுதல் ஆகியவற்றிற்கும், மலட்டுத்தன்மையை போக்கவும் இம்மரப்பட்டைச்சாறு மருந்தாக பயன்படுகிறது. மாதவிலக்கு நாட்களிலான எல்லா குறைகளையும் கருப்பை நோய்களையும் மலட்டுத்தன்மையையும் நீக்கி பெண்களின் உடல்நிலையை சிறப்பாக்குகிறது இம்மரம்.

 இம்மரத்தின் காற்று வீசும் இடத்தில் கூட பெண்களுக்கு கருப்பை தொடர்பான எந்த நோயும் குறைகளும் வராது என்பது நம்பிக்கை. மாசி பங்குனி மாதங்களில் மலரும் அசோகமலரின் நறுமணத்தை நுகரும் பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் காரணமற்ற மனஅழுத்தங்களும் விலகும்

சரும மென்மைக்கு மரப்பட்டைச்சாறு உதவுகின்றது, சருமத்தினடியில் தேங்கி இருக்கும் அழுக்குகளையும் நச்சுக்களையும் நீக்கி சருமத்தை பொலிவுடன் விளங்கச்செய்யும் இப்பட்டைச்சாறு. வயிற்றுப்புழுக்கள், மூலம் மற்றும் பூஞ்சைத்தொற்றுக்கும்  பலனளிக்கும்

அசோக மரப்பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் அசோகரிஷ்டம், அசோகாதிவடி, அசோகாதி குக்குலு மற்றும் அசோகாதிசூரணம் ஆகியவை மலட்டுத்தன்மை மற்றும் கருப்பை நோய்களுக்கு பரிந்துரைக்கப்படும் .


இது தவிர, பல்வேறு நோய்களைக் குணமாக்கும் தன்மை அசோக மரத்திற்கு உண்டு. ரத்தபேதி, சீதபேதி, வெள்ளைப்படுதல், சர்க்கரை நோய், பித்த நோய்கள், ரத்த அழுத்தம், அடிக்கடி உண்டாகும் கருச்சிதைவு, சிறுநீரக வியாதிகள், சிறுநீரகக் கல் போன்ற வியாதிகளை அசோக மரம் அதிசயமாய் குணமாக்கும்.

வாதம், பித்தம், சிலேத்துமம் என்று வரிசைப்படுத்தி சொல்கிற வளி எனும் காற்று தொடர்பான நோய், பித்தம் என்கிற உஷ்ணத்தை அடிப்படையாகக் கொண்ட நோய். சிலேத்துமம் என்னும் சீதனத்தை (நீரை) அடிப்படையாகக் கொண்ட நோய் ஆகிய அனைத்தையும் போகச் செய்து உடலுக்கு ஆதரவாக நின்று உடலைக் காக்கும் அசோக மரப்பட்டை மருந்து.

 

 

 

அசோக மரத்துப் பூக்களை சேகரித்து நீரிலிட்டுக் காய்ச்சிக் குடிப்பதால் அடிபட்ட காயம், அதனால் மனநிலையில் ஏற்பட்ட பாதிப்பு ஆகியன குணமாகும். அசோக மரத்துப் பூவின் தீநீர் ஆழ்மனத்தில் கவலை, பதட்டமான உணர்வு ஆகியவற்றையும் கட்டுப்படுத்தக்கூடியது.
அசோக மரப் பூக்களையோ, பட்டையையோ குடிநீராக்கிக் குடிப்பதால் வயதானவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல் நோய்களும் மன நோய்களும் குணமாகிறது.. . பட்டைசாற்றை கர்ப்பஷ்ய ரசாயனம், (கருப்பை டானிக்)  என்றே அழைக்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள்.

புராணங்களில் இம்மரங்களில் யட்சிகள் வாழ்வதாக குறிப்பிடப்பட்டிருக்கும்.இந்திய சிற்பக்கலையில் அசோகமரத்தினை பற்றிக்கொண்டிருக்கும் யட்சிகளைக் காணலாம். மலட்டுத்தன்மை நீக்கி காமம்பெருக்கும் குணமுள்ள அசோக மலர் காமனின் கரும்பு வில்லின் ஐந்து மலர்கணைகளில் ஒன்றாக இருப்பதில் ஆச்சர்யமில்லை அல்லவா!

சில இடங்களில் நெட்டிலிங்கம் என்னும் நெடிதுயர்ந்து வளரும் மரங்களை (Polyalthia longifolia) தவறாக அசோக மரம் எனக்கூறும் வழக்கம் இருந்து  வருகின்றது. இது  தவறாகும் அசோகமரம் என்பது saraca asoka என்னும் அசோகமே.  Polyalthea longifolia   எனப்படும். நெட்டிலிங்கம் உயரமான பெரும்பாலும் கிளைகளற்ற ஆப்பிள் பச்சை வண்ண மலர்கொத்துக்களையும் நாவற்பழம் போன்ற கனிகளையும் கொண்டிருக்கும் அன்னோனேசியே குடும்பத்தாவரம். இதன் இலைகள் நீளமாக ஓரங்களில் அலையலையான அமைப்புடன் காணப்படும், மரங்கள் நீளவாக்கிலான கூம்புகளைபோல காணப்படும், இவை அசோகமல்ல.

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments