அடுத்தது!?

0
669
Man-on-fire-6819ed1e

நான் இப்போதும் பயங்கர கோபத்தில் தான் இருக்கிறேன். என்னை இப்படி தன்னந்தனியாக தவிக்கவிட்டுச் சென்ற என் தாத்தா மீது. காலம் போன போக்கில் எல்லாம் மறைந்து போனாலும் எதுவும் மறந்து போகவில்லை. தலைநகரில் பெரிய பதவியில் உத்தியோகம். கை நிறைய சம்பாதிக்கிறேன். ஆனால் இந்தத் தனிமை என்னை மிகவும் வாட்டுகின்றது. அம்மா, அப்பா இல்லாத குறை தாத்தாவின் வளர்ப்பில் நான் உணர்ந்தது கிடையாது. ஆனால் இப்போது கண்களைக் கட்டி காட்டில் விட்டது போல் என் வாழ்வே சூனியமாகி விட்டது. அவ்வப்போது என் தாத்தா வாழ்ந்து மறைந்த இந்த வீடு தான் என் உணர்வுகளுக்குப் புத்துயிர் அளிக்கின்றது. வேலைத்தளத்தில் விடுமுறை கிடைக்கும் போதெல்லாம் நான் இங்கு ஓடி வந்து விடுவேன். என்ன தான் வசதிகள் குறைவான கிராமப்புற வீடு என்றாலும் எனக்கு இந்த இல்லத்தின் மீது அலாதிப் பிரியம்.

என்னவோ தெரியவில்லை, இன்று இந்த வீடு  இன்னும் வித்தியாசமாய் இருப்பதாக உணர்கிறேன். இரவு நேர ஏகாந்தம். வீட்டின் நடுவே வரவேற்பு மண்டபத்தில் உள்ள நாற்காலியில் அமர்ந்து இருக்கிறேன். முன்னே உள்ள மேசையில் எனது பேனாவும் சில காகிதங்களும் சத்தம் இன்றி உறங்கிக் கொண்டிருக்கின்றன. கண் எதிரே உள்ள ஜன்னல் வழியே பார்க்கிறேன். வெளியில் பெரும் கும்மிருட்டு. கரு நிறம் உலகையே விழுங்கி வியாபித்து இருந்தது. தூரத்தில் நாய்களுக்குள் ஊளையிடும் போட்டி நடைபெறுகிறது போல. அடடா! ஆந்தைகள் அவற்றை உற்சாகப்படுத்தும் வகையில் ஒலிக்கின்றன. வீசும் தென்றல் என் உடலில் தொட்டுச் செல்லும் போதெல்லாம் உடற் திணிவில் சிலவற்றை எடுத்துச் செல்கின்றன போலும். நான் இலேசாகி மிதப்பது போல் உணர்கிறேன். என் தலைக்கு மேல் தொங்குகின்ற அந்த மின்குமிழ் மஞ்சள் ஒளியை இந்த இடம் முழுவதும் தெளித்துக் கொண்டிருக்கிறது.  சுவரில் பொருத்தியுள்ள அந்த ஐம்பது வயதான கடிகாரம் சீரான சந்தத்தில் டிக் டிக் என்று சிற்றொலி எழுப்புகிறது. வலப்புறத்தில் சுவரோடு முத்தமிட்டபடி நிற்கும் தாத்தாவின் அந்த மிதிவண்டி பழைய நினைவுகளை கண்முன் நிறுத்தத் தவறவில்லை.

சில கணங்கள் ஓடி மறைய ஒரு பெரு மூச்சு. என் சட்டைப்பையில் கங்காருக் குட்டியென இருக்கும் மூக்குக்கண்ணாடியை எடுத்து அணிந்த கையோடு முன்னே உறங்கிக் கொண்டிருந்த பேனாவோடு என் உணர்வுகளையும் தட்டி எழுப்பினேன். கையில் எடுத்த பேனாவை தாளில் வைக்க “தொப்” என தாளில் விழுந்த  பல்லியொன்றால் திடுக்கிட்டுப் போனேன். இதயத் துடிப்பு வீதம் பல மடங்கு அதிகரித்து விட்டது. ஒளிருகின்ற மின்விளக்கு  மின்ன ஆரம்பித்தது, என் படபடப்பைக் கூட்ட காற்றுக்கு அடித்து மூடிய ஜன்னல் ஒலியில் ஒரு கணம் உயிர்  போய்த் திரும்ப வந்தது. வினாடிகள் கடந்து செல்லச் செல்ல என் சூழலில் ஒரு வித மாற்றத்தை உணர்கிறேன்.எங்கோ தூரத்தில் ஊளையிட்ட நாய்கள் எல்லாம் இப்போது அருகே வந்து விட்டது போல் என் காதுகள் உணர்கின்றன. விட்டு விட்டு எரியும் மின்விளக்கு , காற்றோடு கலந்து வரும் துர்மணம், வெளியில் கேட்கும் விசித்திரமான சத்தங்கள் என் அச்ச உணர்வை தூண்டுகின்றன. என்னை அறியாமலே மனதில் பயம் தலைதூக்கி விட்டதன் ஆதாரமாய் உடல் பீதியில் நடுங்குகிறது, நான் வியர்வையில் குளித்துக் கொண்டிருக்கிறேன்.

எத்தனையோ இரவுகள் இதே வீட்டில் தனிமையில் கடந்திருக்கிறேன். ஆனால் இது இதுவரை நான் காணாத அனுபவம்.  ஆனால் இது காரணமற்ற பயம் தான் என என்னை நானே தேற்றிக்கொண்டது சில நிமிடங்களே நீடித்தன. என்னைத் தவிர வேறு எவரோ இந்த வீட்டில் இருப்பதாக மனம் சொல்கிறது. நாற்காலியில் அமர்ந்திருந்த படியே சுற்றும் முற்றும் பார்க்கிறேன். யாரோ முணு முணுக்கும் சத்தம்…. ஆம், அது எனது படுக்கையறையில் இருந்து தான் வருகிறது.

“யாரு…..?”
“………” சிறு வினாடிகள் வீடு முழுவதும் அமைதி ஆட்கொண்டது.

ஒருவேளை என் பிரமையாக இருக்குமோ என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். நாற்காலியில் இருந்து  எழுந்து மெல்ல மெல்ல சத்தம் வந்த அறையை நோக்கி அடி வைக்கிறேன்.  அறையின் வாசலை அடைந்து உள்ளே பார்வையை வீசி நிற்கிறேன். ஆம் நிற்கிறேன் அதே இடத்தில் ஆடாமல் அசையாமல் ஒரு சிலையாக. முன்னையதை விட அதிக வியர்வை என் உடலில் சுரக்க ஆரம்பித்தது. கண்களை இமைக்காது விழிகளைப் பெரிதாக்கி அறையினுள்ளேயே பார்த்தபடி நிற்கிறேன். நா வறண்டு போய் அச்சத்தின் உச்சத்தில் …..
அறையின் ஒரு மூலையில் நான் கண்ட காட்சி பொய்யாகிப் போய் விடாதா? என வேண்டுகிறேன். வார்த்தைகளால் கூறி விட முடியா அமானுஷ்யம் அது. என் சித்தம் சிறுகணம் கதிகலங்கிப் போய் விட்டது அதனால். இப்போது தான் என் நிலையை சுதாரித்துக் கொள்கிறேன். சுய நினைவோடு மீண்டும் அதனை நோக்குகிறேன்.

“என்ன இது…? என்னைக் கொன்று விடுமோ?…. ஐயோ! இப்போது நான் என்ன செய்வது?….. எப்படி தப்பிப்பது?…..” என்ற பல கேள்விகள் என் மனதில். பதில், அதன் அந்த அமானுஷ்ய சத்தம் தான். பட் என்று அந்த அறைக் கதவைச் சாத்தி சாவியால் பூட்டி விட்டுத் திரும்பினேன். கண் முன்னே தென்பட்டது ஒரேயொரு வழி, தாத்தாவின் அந்த மிதிவண்டி. பதறிப்போய் ஓடிச்சென்று அந்த மிதிவண்டியை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினேன். வெளியே இருட்டின் பிரவாகம். கண்ணுக்கு எட்டிய தூரத்தில் ஒரு பொட்டு ஒளி கூட இல்லை. வீட்டைத் திரும்பிப்பார்க்கிறேன்.
“அடக் கடவுளே….. இது என்னடா சோதனை!” ஜன்னல் வழியே உள்ளே பார்க்கிறேன் அதே அமானுஷ்யத்தை.
இனி தயங்கி எந்தப் பயனும் இல்லை. ஓட ஆரம்பிக்கிறேன். இதோ இந்தக் காரிருளில் எனக்கான வெளிச்சத்தை நோக்கி. ஊரார் யாராவது உதவி புரிவார் என்ற எண்ணத்தில் வீதியில் மிதிவண்டியை விட்டு உயர் விசையில் மிதித்து ஓடுகிறேன். கண்கள் உணர்பவை எல்லாம் இருட்டு! இருட்டு! இருட்டு!. காதுகளில் அது பின் தொடரும் ஓசை கேட்கிறது. அதை திரும்பி பார்க்கும் அளவுக்கு என் மனதில் திடம் இல்லை. கடைக்கண் பார்வை எறிகிறேன். அது என்னைத் துரத்திக் கொண்டு வருகிறது. இப் பெரும் இருளிலும் அது என்னைத் தொடர்வது எனக்குப் புரிகிறது.

என் விடியல் எங்கே? என்று காற்றாய்ப் பறக்கிறேன் இம் மிதிவண்டியில். என்னை காத்துக்கொள்ள வேண்டிய கனவு மட்டுமே என் சிந்தையில் நிரம்பி உள்ளது. தோற்று மடிந்தாலும் முடிந்த வரை போராடிப் பார்க்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் ஈருருளியை காற்றைக் கிழிக்கும் படி காரிருளில் செலுத்துகிறேன். என் காலம்… என்னைப் பீடித்துள்ள ஏழரைச் சனியும் என்னை விட்டுவிட வில்லை. ஆஹ்…. ஒரு குழியில் தடக்கி கீழே விழுந்து விட்டேன். கைகள் கால்கள் எல்லாம் வீதியோடு தேய்த்துக் கொண்டேன். வலிக்கிறது. ஆனால் என் உயிர்காக்கும் போராட்டத்தில் வலிகள் எல்லாம் மாயமாகி விட்டன. எழுந்தேன் , மிதிவண்டியையும் தேடிப்பிடித்து நிமிர்த்தி மீண்டும் பறக்க தயாராக , கரு முகில்கள் சற்று விலகி சந்திரனின் ஒளிக்கு இடமளித்தது. நிலவொளியில் இவ்விடத்தை சற்றே என்னால் பார்க்க முடிகிறது. இதோ என் அருகே இருக்கும் இந்த மரத்தை நோக்குகிறேன். யாரோ ஒருவர் கீழே அமர்ந்து இருப்பது தெரிகிறது. மிதிவண்டியோடு அருகே செல்கிறேன். என்ன?! இந் நடு நிசியில் தன்னந்தனியாக ஒரு பெண் அமர்ந்திருக்கிறாள். அழகிய வட்ட முகம், அள்ளி முடியாத கூந்தல், மஞ்சள் வண்ண மேனி ஆனால் வாடிய மலர் போல் தலையை புவி பார்த்துக் குனிந்த வண்ணம் சுருங்கிப் போய் உளாள். அவள் கரு விழிகளைச் சுற்றியுள்ள கரு வளையம் அவளது வருத்தங்களை பறைசாற்றுகின்றது. சில வினாடிகளுக்கு ஒரு முறை கண்களிலிருந்து கண்ணீர் துளித்துளியாய் வீழ்கிறது. ஆயிரம் எதிர்பார்ப்புகள் அவளது கண்களில் தெரிய வாட்டத்திலும் அத்தனை வனப்புடன் தோற்றமளிக்கிறாள்.

“அம்மா…. நீங்கள் யார்?”
அவள் பக்கம் சென்ற உடன் எனது வினா.
“……………….” மௌனம் மட்டுமே பதிலாய்க் கிடைத்தது.

“எதற்காக இங்கே தனியே இருக்கிறீர்கள்? ”

“…………………”

” கவலையில்  தவிப்பது எனக்குப் புரிகிறது. என்னவென்று கூறினால் என்னால் இயன்ற உதவியைச் செய்வேன்”

இது வரை தலை குனிந்து இருந்தவள் இப்போது என்னை நிமிர்ந்து பார்க்கிறாள். உண்மையில் அவள் வசீகரத்தில் மெய் மறந்து விட்டேன். அவள் தெய்வீகத் திருவாய் முதன் முதலில் மலர்ந்தது.
” கயவன் ஒருவனின் தகாத மோகத் தீயால் சிறைபட்டுக் கிடக்கிறேன்.
நீ இங்கிருந்து சென்று விடு. என்னை மீட்க என் கரம் பிடித்தோன் இங்கு வருவார். ”

” யார் அவர்?” வினாவினேன்.
” ஸ்ரீராமர்” என்பது அவள் பதில்.
இது கனவா? நனவா? இவள் சீதையா? இல்லையெனில் இவள் பிதற்றுகின்றாளா? என்று என்னுள் நானே கேட்டுக்கொண்டேன். எது எப்படியோ, ஒரு பெண்ணை இப்படி இரவில் அதுவும் கண்ணீரோடு பார்த்து விட்டு இப்படியே விட்டுச் செல்ல என் மனம் இடம் தரவில்லை.
“என்னோடு வாருங்கள், உங்களை பாதுகாப்பான  இடத்திற்கு அழைத்துச் செல்கிறேன். தயங்காமல் வந்து என் வண்டியில் பின்னால் அமருங்கள்” என்றேன்.
மீண்டும் நிலத்தைப் பார்த்த படி அமர்ந்து மௌனம் சாதிக்கின்றாள். பல முறை அழைக்கிறேன் . எவ்வித  பதில் துலக்கமும் அவளிடம் இல்லை. மீண்டும் கரு முகில் சந்திரனை மறைக்க ஆரம்பிக்கிறது.
” வாருங்கள்….. இருள் சூழப்போகிறது” என்று கெஞ்சுகிறேன். அவளை இவ்விடத்திலிருந்து கொண்டு சென்று அவளது வருத்தத்தை போக்க வேண்டும் என்ற கனவு என் கனவு மட்டுமே கண் முன்னே நிழலாடுகின்றது. மீண்டும் காரிருள் சூழ்ந்தது. அவளை வரும்படி  வேண்டி நிற்கும் என் குரல் அங்கு ஒலித்துக் கொண்டிருக்க , அந்த அமானுஷ்ய சத்தம் மீண்டும் எனை நெருங்குவது தெரிகிறது. திரும்பிப் பார்த்தால் அது வருவது தெரிகிறது. இனி நான் மீண்டும் ஓட வேண்டும். அவள் வருவதாய்த் தெரியவில்லை. ஆனால் என் உயிரை நான் காத்துக்கொள்ள வேண்டும் என்று  முடிவெடுத்துக் கொண்டு மிதிவண்டியை மிதித்துக் கதி கொள்கிறேன். மனம் முழுவதும் அவளை தனியே விட்டு வந்த குற்ற உணர்வு. ஆனால் அது அவளாய் தேடிக்கொண்டது, இதில் என் தவறு எதுவும் இல்லையே…. என்று எண்ணிக்கொண்டு மிதிக்கிறேன் ஈருருளியை.

வழி முழுவதும் ஒரே இருள். எங்கே செல்கிறேன், எப்படிச் செல்கிறேன் என்று தெரியாமலேயே பயணிக்கிறேன். அட இப்போது தான் என் அறிவில் அடித்தது அந்த யோசனை. மிதிவண்டியின் தைனமோ விளக்கு. “இருளில் வழிகாட்டும் மிதிவண்டியின் ஒற்றைக்கண்” என தாத்தா அடிக்கடி சொல்லுவார். எப்படியோ ஒரு மாதிரியாக தைனமோ விளக்கை எரிய வைத்து விட்டேன். சக்கரம் சுழறச் சுழற விளக்கு  படிப்படியாக பிரகாசிக்கிறது. நான் செல்லும் பாதையை இவ் வெளிச்சம் காட்டுகிறது. ஆனால் பின்னே அது துரத்திக் கொண்டு வருகிறதா தெரியவில்லை. இப்போது பாதையில் எதோ தடை கிடப்பது போல் தைனமோ விளக்கு வெளிச்சத்தில் பார்க்கிறேன். அது அசைகிறது. அருகே மிதிவண்டி செல்ல தடுப்பைப் பிரயோகித்து நிறுத்துகிறேன். முன்னே ஒருவன் வீதியில் கிடக்கிறான். உடல் முழுவதும் காயங்களுடன். அனலில் பட்ட புழுப்போல துடிக்கின்றான். சட்டென்று கீழே இறங்கினேன். அவன் வலியால் அவதிப்படுகின்றான் பரிதாபமாக.  ஓடிச்சென்று அமர்ந்து அவன் தலையை என் மடியில் வைத்தேன். அவனது பரிதாபமான நிலை கண்டு என் கண்களே கலங்குகிறது.
“தண்ணீர்….தண்ணீர்….” என்று தாகத்தில் தவிக்கின்றான். உடல் முழுவதும் ஆங்காங்கே குருதி பீறிட்டு வழியும்  புண்களும் , முட்களுமாய்….. ஐயோ! பாவமே…..  அவன் முகத்தில் படும் தைனமோ விளக்கு ஒளியில் அவன் நெற்றியில் உள்ள அந்தப் பெரிய காயத்தைப் பார்க்க  என் இதயத்தைப் பிழிவது போல் உள்ளது.

” யார் நீங்கள்?……இப்படி காயங்கள் வர என்ன நடந்தது?” என்று கேள்விகளை அடுக்குகிறேன் அவனிடம்.
அவனது நீர் வற்றிய வாயை திறந்து பேச முடியாது பேசுகிறான்.

” பாண்டவர்களின் புதல்வர்களை கொலை செய்ததற்கு கிருஷ்ணன் அளித்த சாபம் இது. என்னை உங்களால் காக்க இயலாது……”
என்று கூறி முடித்தான்.

“பாண்டவர்…..? கிருஷ்ணன்……?!
அப்படியானால் உங்கள் பெயர் ?” என்று வினாவ,
” அஸ்வத்தாமன்” என்ற படி மயங்கி விட்டான். எனக்கு தலை கால் புரியவில்லை. நான் காண்பவை என்ன என்று புரியவில்லை எனக்கு.  அவன் தலையை மடியில் இருந்து இறங்கி எழுந்து நிற்கிறேன். இப்போது தண்ணீர் வேண்டும் இவனை எழுப்ப. எப்படியோ இவனை எழுப்பி என்னுடன் கொண்டு செல்ல வேண்டும் என்ற அவா என்னிடம். அவன் முகத்தில் அடித்த தைனமோ விளக்கு ஒளி மெது மெதுவாக அணைய ஆரம்பிக்கிறது. பின்னே தெடரும் அமானுஷ்யம் இப்போது தொடரவும் ஆரம்பிக்கிறது. மிதிவண்டியில் ஏறி அமர்ந்து கொண்டேன். “இன்னும் சில நேரங்களில் விடிந்தது விடும். யாரையாவது  உதவி கேட்டு திரும்பி வந்து இவனை மீட்போம், இப்போது என் உயிரை காக்க வேண்டும்” என்ற முடிவுக்கு வந்து மீண்டும் அவனைத் தாண்டி என் பயணம் மீண்டும் ஆரம்பமானது.

என் துர்பாக்கியம் மீண்டும் அந்தத் தைனமோ விளக்கு எரியவில்லை. அது பழுதடைந்து விட்டது என்று நினைக்கிறேன். சரி இனி என்ன செய்வது? எப்படியோ எனக்கான வெளிச்சத்தை நோக்கி நான் ஓடித்தானே ஆகவேண்டும். மிதிவண்டியின் உயர் கதி எதுவோ அதில் செல்கிறேன். இப்போது தான் எனக்காக கடவுள் கண் திறந்தார் என நினைக்கிறேன். என் முகம் மலர்ச்சியில் மலைக்கிறது. எனக்கான ஒளி தூரத்தில் தெரிகிறது.அதை ஒளி என்றும் சொல்ல இயலாது. ஜோதி ஆகும் அது. ஓடுகிறேன் அந்த வெளிச்சத்தை நாடி. அதை கிட்ட நெருங்க நெருங்கத் தான் புரிகிறது. நான் வேண்டிய வெளிச்சம் இது அல்ல என்று.  ஒரு நகரமே தீக்கு இரையாகி எரிந்து கொண்டிருக்கிறது. சென்ற வேகத்தில் எரியும் அந் நகரின் நடுவில் உள்ள வீதி வழியாக மிதிவண்டியை செலுத்துகிறேன். கட்டடங்கள், மரங்கள் என அனைத்தையும் நெருப்பு விழுங்கிக் கொண்டிருக்கிறது. நடுவே செல்லும் எனக்கு உடல் வெப்பத்தால் எரிகிறது. அவற்றை பொருட்படுத்தாமல் ஓடுகிறேன். அதோ என் பார்வைக்கு ஒருத்தி நடந்து செல்வது தெரிகிறது. சிங்கம் போல் வீர நடையில் செல்கிறாள் தலைவிரி கோலமாக. அவளுக்கு முன்னால் தீ இன்னும் பயங்கரமாக எரிகிறது.அவள் இப்படியே முன்னோக்கிச் சென்றால் தீயில் வெந்து மாண்டிடுவாள். அவளை எப்படியோ தடுத்து நிறுத்த வேண்டும் என்று வேகத்தைக் கூட்டுகிறேன்.
“அம்மா….. நில்லுங்கள் …….அந்தப் பக்கம் செல்ல வேண்டாம்…..” கத்தியபடி அவளை நிறுத்த ஓடுகிறேன். அவள் நிற்காமல் நடையைத் தொடர்கிறாள். அழைக்கிறேன் அவளை மிகவும் உரப்புடன். எனக்கு சரியாக மூச்சு வாங்குகிது. இருந்தும் அவளை நிறுத்தி காப்பாற்ற வேண்டும் என்ற கனாவோடு நகர்கிறேன்.

இப்போது நிற்கிறாள். நானும் மிதிவண்டியை நிறுத்தி அவளைப்பார்க்கிறேன். வானைப் பார்த்த படி நிற்கிறாள் அவள். இதோ என் வலப்புறத்தே ஒரு பாதை தெரிகிறது. நெருப்பற்ற பாதை, தப்பி விட சிறந்த வழி இதுதான் என இறைவனுக்கு நன்றி சொல்கிறேன். நிற்பவள் என் குரலுக்கு செவி சாய்த்து வருவாளானால் இருவரும் இவ் வழியே சென்று தப்பி விடலாம் என்ற  எண்ணம் எனக்கு.

” நான் கண்ணகி…… நான் பவித்திரமான பத்தினித் தீ ஆவேன்….
ஓ…..பாண்டியா!….. நீ இழைத்த அநீதியால் உன் மதுரை நகரமே தீக்கிரையாகிறது……” என்று அவள் பலத்த குரலில் கர்ஜனை செய்கிறாள். “என்ன….. இவள் கண்ணகியா…..? இந்த நகரம் மதுரையா?!….” என நடப்பவை என்ன வென்று இது வரை புரியாமல் நிற்கிறேன் மிதிவண்டியில். நின்றவள் மீண்டும் தன் வழி நடக்க அவள் செல்லும் பாதை தீயால் மூடிக்கொண்டது. அவளைக் காக்கும் கனவும் காற்றோடு போனது.

சரி…. என்னை காக்க வேண்டி தென்பட்ட பாதையில் வண்டியைத் திருப்பி ஓடுகிறேன். நகரை நீங்கி வெளியேற தீயின் வெளிச்சம் சிறுகச் சிறுக குறைந்து மீண்டும் சூழல் இருள் மண்டலம் ஆகிறது. திரும்பிப் பார்கிறேன். மதுரை கொழுந்து விட்டு எரிகிறது. நடந்தவற்றை எண்ணி எனக்கு தலையே சுற்றுகிறது.
மீண்டும் ஒரு குழியில் சக்கரம் வீழ்ந்து மிதிவண்டியோடு கீழே வீழ்கிறேன். உடலின் பல இடங்களில் மறுபடியும் சிராய்ப்புக்கள். வலியில் உயிர் போகிறது. போராடிய மனம் விடவில்லை. திரும்பவும் வண்டியோடு எழுந்து நிற்கிறேன். கரு முகில்கள் மீண்டும் விலகி சந்திரனின் ஒளிக்கு இடமளிக்கிறது. என் அருகே ஒரு மரம் தெரிகிறது இப்போது. அதன் கீழேயும் யாரோ ஒருவர் அமர்ந்திருக்கிறார். தயக்கத்தோடு நகர்கிறேன் அவரை நோக்கி. ஆம் இதுவும் ஒரு பெண் தான். “மீண்டும் சுற்றி அதே இடத்தில் தான் வந்து நிற்கின்றேனோ? ” என்ற கேள்வியும் என் மனதில் ஊசலாடுகிறது. காலச் சுழலில் மாட்டிக் கொண்டேன் என்றும் மனதின் ஒரு மூலையில் சத்தம் ஒன்று எழுகிறது.

கவலைகள் நிறைந்த சுந்தர முகத்தோடு அமர்திருக்கிறாள் அவள். அண்மையில் அணுகி உற்றுப் பார்க்கிறேன். இவள் அவள் அல்லாள். இது வேறு யாரோ என்ற தீர்மானத்தோடு
“அம்மா நீங்கள் யார்? எதற்காக இங்கே தனியே இருக்கிறீர்கள்? ” என்று கேட்க உடனே நிமிர்ந்து பார்க்கிறாள்.

” கை பிடித்தவன் கானகத்தே நடு இரவில் கைவிட்டுச் சென்று விட்டான். செய்வது யாதெனத் தெரியாது இருக்கிறேன். அவன் வருகைக்காக….
நீங்கள் இவ்விடம் விட்டுச்சென்று விடுங்கள்” என்று பதிலளித்தவள் மீண்டும் மௌனமாகிறாள்.

” அவர் பெயர் என்ன?” என்று ஒரு பதிலுக்கான எதிர்பார்ப்போடு கேட்கிறேன்.

“நள மகாராசன்” என்று என் முகத்தைப் பாராமலேயே பதிலளித்தாள். நான் எதிர்பார்த்த பதிலும் அது தான். என் அறிவின் வசம் நான் இல்லை இப்போது. சீதை, அஸ்வத்தாமன், கண்ணகி இதோ இப்போது தமயந்தி , நான் காவியத்தில் கண்ட பாத்திரங்கள் நிஜமாகவே என் கண் முன்னே தோன்றுகின்றனவா? இது வரமா?……இல்லை சாபமா?. முன்னே இருப்பவளிடம் எதுவும் மீண்டும் பேசவில்லை. மிதிவண்டியை எடுத்துக்கொண்டு மீண்டும் ஓடுகிறேன். நான் காண்பவை என்ன? என்னைத் துரத்தும் அது என்ன? இந்த இருள் எனக்கு காட்ட விளைவது எதனை? கதைகளில் கண்ட மாந்தர்களை கண்ணால் காண்பது சாத்தியமா? இது சத்தியமே ஆயினும் அவர்களை கரை சேர்க்க நான் கெண்ட கனவுகள் ஏன் கை சேராமற் போனது? அவ் வேளையில் என் முடிவு சுயநலமானதா? என்ற பல கேள்விகளை என்னிடம் நானே அடுத்தடுத்து உதிர்க்கிறேன். ஒளியற்ற வழியில் இப்போது படிப்படியாக ஒளி பிறக்கிறது. ஆம் , மிதிவண்டியின் தைனமோ விளக்கு படிப்படியாக ஒளிர ஆரம்பிக்கிறது.இவ் வெளிச்சம் வீதியைக் காண்பிக்கிறது.

“அப்படியானால்……. அஸ்வத்தாமன் போன்று அடுத்தாக வீதியில் என் கண்கள் காணப்போவது யாரை?…..
அடுத்தது என்ன?!!!…..” என்ற கேள்வியோடு என் கதையை நிறைவு செய்து பேனாவை மேசையில் வைக்கிறேன். இன்னும் தூரத்தில் ஊளையிடும் நாய்களின் போட்டி முடியவில்லை. சிற்றொலி எழுப்பும் கடிகாரம் இராகம் இசைக்கிறது. தலையின் மேல் தொங்கும் மின்குழின் மஞ்சள் ஒளியில் இவ் இடம் முழுவதும் நனைந்து கொண்டே இருக்கிறது. தாத்தாவின் மிதிவண்டி அதே இடத்தில் சுவரை முத்தமிட்ட படி நிற்கிறது, என் கதையில் ஓடி ஓய்ந்தபடி……

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments