அபலை

6
2001

“என்ன பெத்த ராசாவே………. என்ன விட்டு போயிட்டியே….    கட்டினவ கதி கலங்க…….. பெத்த புள்ள கண்ணீர் விட……. சொக்கத்துக்கு போயிட்டியே….. சொல்லாம போயிட்டியே….”

” என்ட  ராசா…. ஆ….. ”

ஊர்க்கிழவிகள் ஓலம் அது. ஒப்பாரி வெகு தொலைவாக ஊரின் எல்லைப் பக்கமாய் கேட்கிறது. அங்கே ஒரே குடிசை தான். கட்டப்பட்ட தோரணங்கள் அங்கு தான் வழிகாட்டுகின்றன. ஊர் முக்காவாசி அங்கு தான் ஆஜர். குடிசை வாசலில் கிழவிகள் கூடி குழறி மூக்கு சீறி பரிமாறிக்கொள்ள, அருகே ஒருத்தி சலனமற்றவளாய்… அவள் அருகே ஒரு பிள்ளை…  பாடகிகளின் சம வயது வாலிபர்கள் வெத்திலை பொட்டியை தேட, உண்மையோ பொய்யோ ஏதேதோ சனம் கிசுகிசுக்க அதெல்லாம் கேட்க வேண்டாமென சொல்லும் பாணியில் தாரை தப்பட்டைகள் காதை கிழித்தன. இவை எல்லாவற்றுக்கும் காரணமானவன் ஆர்ப்பாட்டமில்லாமல் நடுவே, வெண் பந்தலில் அடக்கமாயிருந்தான். ஆம் அவன் தான்……..

ஊரெல்லாம் கடன் வாங்கி, ஊதாரியாய் செலவழித்து பொறுப்பற்று திரிந்தவன் இன்று பரலோகம் போய்விட்டான். அவன் இருந்தும் ஒன்று தான் இல்லாததும் ஒன்று தான். அவன் இல்லாததற்கான அறிகுறி கமலம் நெற்றியிலிருந்த வெண்பொடி. கணவன் இறந்து விட்டான் என்று அழவில்லை எப்போதும் போலவே அவள் முகம் சோக உருவாய் இருந்தது. கல்யாணமாகி ஒரு வருடத்திலேயே அவளுக்கு வாழ்க்கை சலித்து விட்டது. நிலையறிந்து அப்போதே குடும்ப பொறுப்பை ஏற்றவள் அவள்.
குடும்பம் என்றால் அவ்வளவு பெரிய வம்சமில்லை. ஐந்து வயதில் ஒரே ஒரு பையன். அவனை படிப்பிக்கவும், பெற்ற கடனை கொடுப்பதற்கும், ஒரு வேளை உணவுக்குமே அவளது உத்தியோகம் சரியாய் இருந்தது. அவள் செய்யாத வேலையில்லை. காட்டு வேலை, தோட்ட வேலை, வீட்டு வேலை, மாட்டு வேலை என அனைத்தும். நாணயமுடன் நாணயம் பெறுவதே அவள் எண்ணம்.
கல்யாணமாகி சில காலம் செல்ல செல்ல தான் செல்லனை பற்றி அறிந்தாள். அப்போதெல்லாம் நாளொரு பிரச்சனை. சங்கக்கடை போல சனம் முட்டி வழியும். ஊதாரியான செல்லனுக்கு உல்லாசம் தான் ஒரு கேடு!
ஞாயிற்றுகிழமை என்றால் முழுக்க அங்கு தான். இதெல்லாம் நினைக்கத்தான் அவள் விழிகள் சற்று துளிர் விட்டன.  இறுதி கிரியை யாவும் முடிந்து சவம் சுடலை செல்ல ஆயத்தமானது. என்ன செய்வது ஊராருக்காய் ஒரு தரம் ஓவென்று அழுது வைத்தாள். கிழவிகள் உச்சஸ்தாயியில் குழற, பாடை படலை தாண்டி சென்றது.

விஷயம் முடிஞ்சுது. ஊர் மெல்ல மெல்ல கலைந்தது.

செக்கல் நேரம்.
மூலையில் விளக்கெரிய திண்ணையில் கமலம். மடியில் மகன் கவலையுடன் உறங்கலானான். மகனை பார்த்தவுடன் அவளது நினைவலைகளும்  அசைய தொடங்கிற்று. செல்லனை கல்யாணம் செய்து என்ன சுகத்தை கண்டாள். மக்கட்பேறும் இல்லை. பிறந்து இரண்டே நாளான கைக்குழந்தையாய் வந்தவன் மடியிலுறங்க, இவனை பெற்றவள் அன்றே இறக்க மாற்றாளுக்கு பிறந்தவனை தன் மகனாய் வளர்த்தவள் கமலம். அவன் தன் மகனல்லன் என்ற எண்ணம் ஒரு போதும் அவள் மனதில் உதித்ததில்லை.  எண்ணங்கள் அலைந்தோய பெருமூச்செறிந்தவள் அப்படியே சற்று கண்ணயர்ந்தாள்.

பொழுதும் புலர்ந்தது.

புறப்பட்டாள் வேலைக்கு வழமை போல்……..

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
6 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Sajustan uthayakumar
Sajustan uthayakumar
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

தலைப்பிற்கு ஏற்ப சிறந்த கதையினை எழுத்தாளர் சீடன் அவர்கள் அமைத்துள்ளார்.எளிமையான மொழிநடையில் இவ் அபலை தன் மனக்குமுறலை மிக அழகாக வெளிப்படுத்துகிறாள். கதையின் திருப்புமுனை மிக நன்று. வாழ்த்துக்கள் சீடன் அவர்களே .

Diroshan Alagaratnam
Diroshan Alagaratnam
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Good one.Keep Writing 👍

வஞ்சிமறவன்
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

மிகச்சிறந்த கதை
சொல்லாடல் மிக அருமை
மேலும் வளர வாழ்த்துக்கள்