ஒரு காதல் என்பது நிறையவே கொட்டிக் கிடக்கு
பார்க்கும் இடம்
கேட்கும் விடயம்
தொட்டுணரும் பரவசம்
விட்டகலும் ப்ரியம்
மூச்சுமுட்டத் தரும் முத்தம்
திகட்டத் திகட்ட
பின் பிடரிவழி
வழியும் நேசம்
அள்ளிக் கொள்ளும் குழந்தை
தொப்பலாய் நனைக்கும் மழை
கடிகார ‘டிக் டிக்’
இரண்டு பெரும் இடைவெளிக்குள்
சிக்கித்தவிக்கும் மனம்
தோழா
நெஞ்சம் முழுக்கவே நேசம் புதைந்திருக்கு
காதலென்பது கொட்டிக்கிடக்கு
பிரிவின் ஆற்றாமையில்
தூக்கத்தின் விழிப்பில்
பழைய வாட்சப் உரையாடல்களை
மீட்டிப் பார்க்கையில்
செல்லம்
குட்டி
என்ற வார்த்தைகளில்
எல்லாமே
இன்னும் இன்னும் இன்னும் என
பிரிக்க முடியா உன் நேசம்தானே
இறுக இறுகப் பின்னியிருக்கு
இத்தருணம்
இந்நேரம்
இந்த மழையைப் போலவே
உன்னை நேசிக்கக் கடவுகிறேன்
காதலென்பது
பார்க்கும்
கேட்கும்
தொட்டுணரும் விடயமெல்லாம் எனப் பொருள் கொள்கிறேன்
நீயில்லாத இடத்தில்
நீயே நிறைந்திருப்பதாய் உணர்கிறேன்