உணவுத் தெய்வம்

0
567

 

 

 

 

ஏர் பூட்டி உழுதுவிட்டு உழுத மண்ணில் நீர் பாய்ச்சி
வரம்பு முழுதும் சேறடிச்சு சேற்றுக்குள்ள விதை எறிஞ்சு
எறிஞ்ச விதை முளைச்சு வர ஏழைமனம் குளிருதையா……

முளைச்சு வரும் நெற்பயிரு முளமளவு வளந்திருச்சு வயல் முழுதும் களை எழும்பிடுச்சு
கை கடுக்க களை பிடுங்கி கழுத்தோரம் சுமந்து கொண்டு
கரையோரம் அள்ளி வச்சு காப்பாற்றுவான் தன் வயலை……

களையால் களண்ட பயிரு கதிர் போட எத்தனிக்கும்
பயிரெல்லாம் கதிராச்சு வயலெல்லாம் அழகாச்சு
மனதெல்லாம் பயமாச்சு காட்டு மிருகம் வந்தாச்சு

பன்றி யானை ஆட்டோட-பாயுதம்மா பசுங்கன்றுங் கூட
பாத்திருந்து காத்திருந்து கம்பு தடி கைலெடுத்து-வெரசுவான்
வெறுமேல் மேனியோட வெள்ளை மனக்காரனவன்

பகலிரவா கண்முளிச்சு படுக்கயென்றால் தீ எரிச்சு
சோறு தண்ணி தான் மறந்து தொட்டு
வளர்த்த பிள்ளைக்கெல்லாம் துணையிருப்பான் நம் உழவன்

வெயில்க் காலம் தொடங்கிருச்சு பச்சைக் கதிர் முத்திருச்சு மஞ்சள் வெயில் பாய்ந்திருச்சு வயலெல்லாம் சாயம் ஊத்திருச்சு வேளாமை வெளஞ்சிருச்சு போன உயிர் கிடைச்சிருச்சு தண்ணியெல்லாம் வத்திருச்சு அறுபடைக்கும் ஆள் கிட்டிருச்சு

அத்துமீறா ஆசையோட ஆரம்பிப்பான் அறுபடைய……
ஆள் கொண்டு வெட்டினாலும் வெட்ட ஆசை கொள்ளும் அவன் மனசும்;

கத்தியெடுப்பான் கையோட வெட்டியெடுப்பான்
நெற்கதிர பிடியோட வெயிலெல்லாம் அவன் முதுகோட
வியர்வையெல்லாம் வயல் மண்னோட வெட்டிக் குவிப்பான் சூட்டை நிலத்தோட
வெற்றி கொள்வான் தன் வாழ்வோட

இருந்ததெல்லாம் செலவழிச்சு வெதச்ச நெல் கொஞ்சமது
வெளைஞ்ச நெல் மிஞ்சியது சூடடித்து மூட்டை கட்டி
சுற்றி நின்று பூசை செய்து சொந்த நெல்ல வித்துப்போட்டு
சுதந்திரமாய் திரும்பயில தொடங்குதைய்யா சிறுபோகம்

விதைச்ச நெல்ல பார்த்திருந்து முளைச்ச நெல்ல காப்பாற்றி
விளைந்த நெல்ல வெட்டியெடுத்து விலை பேசி விற்கும் வர
வேளாமைக்காரன்படும்பாட்ட வேர்வைய காணாமல் வெட்டியாக
இருந்து கொண்டு விதவிதமா உணவு உண்ணும் வெள்ளையர் நாம் அறியோமே!

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments