நீளப்பசி இரவுகளை
நீயில்லா பொழுதுகளை
வெளித்திறந்த ஜன்னல்
விழிதிறந்த மனதில்
வெறிச்சோடிய நினைவுகளில்
வழித்தெறிந்த துயரங்களில்
பூக்களே
தென்றலே
கேளாது போகும் பௌர்ணமியே
நகர்ந்து ஊறும் மேகப்பிளவே
நான் வரும் சேதியை எப்படிச்சேர்ப்பேன்
என் ஈரமுத்தங்கள்
உரசாத உன் கன்னத்தின்
வாசனை என்னவென்று என் நாசிக்கு சொல்லவேண்டும்
ஆழமான மூச்சுகளில் நான்
சுவாசிக்கப்போதுமாக இருந்தது உன் நினைவு
என்று
ரத்தம் சுழற்றும் என் நாளங்களுக்கு சொல்ல வேண்டும்
இங்கே
ஆழக்குழியில் எழும் கசப்புகளை சகிக்க
நம் நெருக்கத்தின் இனிப்பே
போதுமாக இருந்தது என
உனக்கு நான் சொல்லி விட வேண்டும்
பூவே
என் இளந்தளிரே
நெடிது வளரும் அன்பின் கிளையில்
என்னையே துளிரச்செய்யும்
ஆணிவேரே
வருவேன்
எனும் நம்பிக்கைதான்
எத்தனை வலியது
அதுவே நாம் வாழ்வின் மிச்சங்களை
இழந்துவிடாதிருக்க செய்கிறது
இங்கே அஸ்தமனத்தின் துயரங்களை
நான் நினைக்கவில்லை
நாளைய விடியல் நமக்காகவும் இருக்கும்தானே…!!!