உதிரக் கண்ணீர்

2
982
WhatsApp Image 2020-06-01 at 12.38.48

“ இங்க எதுக்குடீ வந்த? ஓடுகாலி நாயே,
எங்க குடும்ப கௌரவத்தையே குழி தோண்டி புதைச்சிட்டியே டீ…. மரியாதையா இந்த இடத்த விட்டு போய்டு…”
வாய்க்கு வந்தபடி எல்லாம் திட்டப்பட்டும் சபிக்கப்பட்டும் “படார்” என வீட்டுக் கதவு சாத்தப்பட்டது.

பாரிய ஏமாற்றத்துடன் கையில் குழந்தையோடு வாசலில் நின்ற ஆட்டோவை நோக்கி வந்தாள் ஈஸ்வரி. அவள் உடலில் குழந்தையை தூக்க மட்டுமே சக்தி இருந்தது. தள்ளாடிய நடை. பழைய புடவை. கலைந்த முடி. கவலையை கண்ணீர் விட்டு ஆற்றிக்கொள்ளவும் கண்களில் நீர் இல்லை.

நடந்தவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த ஆட்டோகாரனுக்கு அவள் மீது இன்னும் பரிதாபம் கூடியது. தன் வீட்டில் காசு வாங்கி தருவதாக கூறியே ஆட்டோவில் ஏறி அம்மா வீடு வந்தாள் . ஆனால் இங்கு ஈஸ்வரி ஏற்கப்பட தயாரில்லை..

தயங்கிய படி ஆட்டோ அருகே வந்தாள்.
“ ஏன் மா? என்னாச்சு” வினாவினான் ஆட்டோகாரன்.
எதுவும் பேசாமல் நின்றாள் ஈஸ்வரி.

“உன்ன பார்த்தா ஏதோ கஷ்டத்தில இருக்கிறத போல இருக்கு. என்னை ஒரு கூடப் பிறந்த அண்ணனா நினைச்சுக்கோ. ஏதாச்சும் உதவி தேவையா? சொல்லு. என்னால முடிஞ்சத செய்றேன்”

ஓ… என்று அழ ஆரம்பித்தாள். சற்று நேரத்தில் நிதானமானவளாய் “அண்ணா! என்கிட்ட இப்போ காசு இல்ல.என்ன மன்னிச்சிடுங்க…” கூறினாள் ஈஸ்வரி.

“ அது பரவாயில்லை மா!,இனி எங்கே போகபோற? இப்போ நீ எங்க போகனும் சொல்லு….”

“இல்ல அண்ணா! நான் போய்க்கிறன். நீங்க போங்க ” இவ்வாறு
நீண்ட நேர உரையாடலின் பின் ஆட்டோவில் ஏறி அமர்ந்து கொண்டாள். ஆட்டோகாரன் அந்த நேரத்தில் ஈஸ்வரிக்கு ஆண்டவனாய் தெரிந்தான்.
ஆட்டோ இன்னோர் வீட்டு கேட்டில் போய் நின்றது.

தயக்கத்துடன் அந்த வீட்டின் வாசலில் போய் நின்று ஆட்டோவை திரும்பி பார்த்தாள். ஆட்டோகாரன் அவளுக்கு இங்கேயும் எதுவும் பிரச்சினையாக இருக்குமோ? என்ற வாறு அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்.

“அண்ணி!”
உள்ளே இருந்து ஒரு குரல். ஓடிவந்து வரவேற்றாள் ஈஸ்வரியின் கணவனின் தங்கை. ஆம் அது அவளின் மாமியார் வீடு. அவளுக்கான வரவேற்பு அங்கே நீண்ட நேரம் நிலைக்கவில்லை. கோபத்தோடு வந்தாள் அவளது மாமியார்.

“ஏய்! ராசி கெட்டவளே, உன் தரித்திரம் பிடிச்ச பிள்ளையையும் கொண்டு இங்கயே வந்திட்டியா? என்னக் கொலைகாரி ஆக்கிடாம வெளில போயிடு…”

“அத்தை, நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க”

” உனக்கு இங்க யாரும் அத்தை இல்ல. போடி வெளிய”
அவமதித்து வெளியே அனுப்பப்பட்டாள். அந்த வீட்டில் அவளுக்கு ஆதரவாக பேசவும் யாரும் முன்வரவில்லை. மீண்டும் ஏமாற்றத்துடன் வெளியே வந்தாள். ஆட்டோகாரன் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தான்.

” இங்கேயும் சேர்த்துக்கொள்ள மாட்டாங்களாமா? இனி எங்கே போக போற?” கேட்டான் ஆட்டோக்காரன்.

“தெரியல” பதிலளித்தாள்.

“உன் பிரச்சினை என்னன்னு சொல்லுமா… உன் வீட்டுக்காரன் எங்கே இப்போ….”

சற்று நேர நிசப்தம் அவளின் அழுகை ஒலியின் பின்னணியில். சிறிது நேரத்தில் தன் கதை சொல்ல தொடங்கினாள்.

” எனக்கும் அவருக்கும் லவ் மேரேஜ். இரண்டு பேர் வீட்லயும் ஜாதிய காரணம் காட்டி சேத்துக்கல. தனியா வீடு எடுத்து வாடகைக்கு இருந்தோம். சந்தோஷமா தான் வாழ்ந்தோம். ஒரு வருஷத்தில பையனும் பிறந்தான். பையன் பிறந்து மூணு மாசம் கழிச்சு ஒருநாள் பக்கத்து வீட்டுகாரங்க வந்து சொன்னாங்க உன் ஹஸ்பன்ட் லாறில மோதி இறந்துட்டான்னு. எனக்கு வாழ்க்கையே அதோட இருண்டு போச்சு. சரி பிள்ளைக்காக வாழனுமேனு முடிவெடுத்தன். அவர் போய் இப்போ மூணு மாசமா ஒரு வேளை சாப்பாடுக்கு கூட வழி இல்ல. நானாச்சும் வேலைக்கு போகலாம் னா , குழந்தையோட நீ என்ன வேலை பாக்க போற னு கேட்கிறாங்க. வீட்டு கார அம்மா, வாடகை கொடுக்கலனு வீட்ட காலிபண்ண சொல்லீட்டாங்க. இப்போ மூணு நாளா……. ” பலத்த சத்தத்துடன் அழ ஆரம்பித்தாள்…
“அம்மா! அழாதம்மா…” தேற்ற முயன்றான்ஆட்டோக்காரன்.
“ என் கொழந்த …. ” விம்மி விம்மி பலமாக அழுதாள்.


ஒரு பெண்ணுக்கு இத்தனை துன்பமா? கடவுளே ….

“ சரிமா வா, றோடுல நின்னு பேச வேண்ணாம். எங்கவீட்டுக்கு போகலாம். என் பொண்டாட்டி உன்னப் பாத்துப்பா. யோசிச்சு ஏதும் முடிவு பண்ணலாம் வா….” பெரிய மனதுடன் கேட்டான் ஆட்டோக்காரன்.உலகத்தில் நல்லவர்களும் இருக்காங்க என்பதை கடவுள் ஈஸ்வரிக்கு காட்ட நினைச்சிருப்பார் போல.

” உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம். வேண்டாம் ” கூறினாள்.

” இது என்னம்மா சிரமம். நீ ஆட்டோல ஏறு” கட்டாயப்படுத்தி ஏற்றினான்.
ஆட்டோ நகர்ந்து அவனின் வீட்டை அடைந்ததது. உடனே இறங்கி உள்ளே சென்று அனைத்து சங்கதிகளையும் கூறி தன் மனைவியை அழைத்து வெளியே வந்தான்.

” இறங்கி வாம்மா, எல்லாம் அப்றம் பேசிக்கலாம்.இது உன் அண்ணன் வீடா நெனச்சுக்கோ, வாம்மா” ஈஸ்வரியை அழைத்தாள் ஆட்டோக்காரனின் மனைவி. கனவா இது…. உலகத்தில் இப்படிப்பட்டவர்களும் இருக்கிறார்களா என்ற கேள்விகளை அவளது சோகங்கள் நிறைந்த கண்கள் கேட்டு நின்றன .அவள் ஆட்டோவால் இறங்கிய தருணம், பசி மயக்கத்தில் கால்கள் தள்ளாடி சமநிலை இழந்தாள்.
குழந்தை கீழே விழுந்தது.
“…………………….”
“என்னோட செல்லமே” அலறிய படி மண்டியிட்டு குழந்தையைத் தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டாள்.
கண்களில் நீர் ஆறாய் ஓடியது. இதயத்தைப் பிழிந்தது அத் தாயின் உருக்கம்.
ஆட்டோ காரனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பதற்றத்துடன் பார்த்துக்கொண்டனர்.

ஆட்டோக்காரன் மண்டியிட்டு அழுது கொண்டிருந்த அவள் அருகே மெதுவாக அடி வைத்து வந்தான் . வார்த்தைகள் வரத் தயங்கின. நடுக்கங்கள் வேறு…
” ஏன் மா……
குழந்தை விழுந்துச்சு எந்த வித சத்தமும் போடாம பொம்மை போல இருங்குதே மா……”

ஓ………..
வானைப் பிளக்கும் ஓசை கொண்டு அழுதாள். கதறினாள்.கதியற்று தவிக்கும் அப் பேதை மனதில் என்ன என்னவெல்லாம் நினைத்தாளோ?!. அந்தக்கணம்.. “வீட்ட…… வீட்ட காலி பண்ணி இப்போ மூணு நாளா றோட்டு றோட்டா அலையுறேன். சாப்பிட ஒரு வாய் சோறு இல்ல…. தண்ணிய மட்டும் குடிச்சி உடம்ப இயக்கினேன். தாய்ப்பால் கூட சுரக்கல. என் பிள்ள பசியால அழுறத என் கண்ணால பார்க்க முடியல….எந்த தாய்க்கும் இந்த நிலை வரக்கூடாது. காதலிச்சது என்ன அவளவு பாவமா…. ஐயோ…. கடவுளே….என் விடிவ தேடி ஓடினேன் என் பிள்ளைக்காக…ஆனா…. ஆ……
……… இன்னைக்கு காலைல …. க்ம்…. காலைல…. என் பிள்ளை என்ன விட்டு போய்ட்டான்….” வீறிட்டு அழுதாள்…..
சூழ நின்றோரையும் அழவைத்தாள்.
” அண்ணா…. அண்ணா….. , இவன அடக்கம் பண்ண தான் என் அம்மா வீட்டயும் மாமியார் வீட்டயும் உதவி கேட்டு போனேன். யாரும் நா சொல்றத கேட்க கூட தயாரா இருக்கல.
ஆனா நீங்க……
உங்க நல்ல மனசு ….. உங்கள எந்த ஜென்மத்திலும் மறக்க மாட்டேன்….” என்று கூறிக்கொண்டே குழந்தையை தாங்கிய படி நிலத்தில் சாய்ந்தாள் ஆட்டோக்காரனின் காலடியில்…..

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
2 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Kasthury Sothinathan
Kasthury Sothinathan
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

மிக மிக அருமையான கதை இது.. மனதை தொட்ட உருக்கமான கதைக்கரு. வாழ்த்துகள் வஞ்சிமறவன். இதே போன்ற கதைகளை இன்னும் எதிர்பார்க்கிறேன்.

Last edited 4 years ago by Kasthury Sothinathan