உறவு

0
1144

அவள் பார்வை
எனை தீண்டாது
போயிருந்தால்
நான்
அந்த மஜ்னுவைப் போல
பித்துப் பிடித்தவனாய் மாறி
இன்று
இத்தனை கவிதைகளை
கிறுக்கிக்
கொண்டிருந்திருக்க மாட்டேன்
கஸல்களைப் படித்தபடி
நிலவையும்
தென்றலையும்
மாறும்
என் உணர்வுகளுக்கு
தோழமை என
எண்ணிக் கொண்டிருந்திருக்க
மாட்டேன்

அவளை நான் பார்க்காமலே
இருந்திருக்கலாம்

குறைந்தபட்சம்
என் ஹார்மோன்களாவது
சீராய் பயணித்திருக்கும்

பனிக்குடம் உடைக்க
போராடும்
குறைமாத குழந்தையைப் போல
அவளால்
என் இயல்புக்கும்
இயலாமைக்கும்
மிகப் பெரிய போராட்டம்
வலுத்திருக்காது


அவள் எனக்கென
படைக்கப்படாமல்
இருந்திருக்கலாம்

சட்டென சுண்டியிழுக்கும்
அவளுக்கேயான அவள் வாசனை
எனை தவிர்க்கச் செய்திருக்கலாம்

ஒட்டக் கத்தரிக்கும்
நகங்களைப் போல
என் பாதை விட்டு
அவள் விலகி
எங்கோ போயிருந்திருக்கலாம்

நான்
நானாகவே இருந்திருப்பேன்

அவளின் புன்னகையை
என் உதடுகள்
பிரதிபலிக்காது போயிருந்தால்
ஒரு ராட்சச மின்னலில்
பார்வை தொலைத்து விட்ட
துரதிர்ஷ்ட குருடனைப் போல்
நான் அலையாமல்
இருந்திருப்பேன்

சில நளினங்களிலிருந்து
விடுபட்ட
ஆண்மைக் குணத்தின்
சாயல் சரி
என்னை
கவராது போயிருந்தால்
ஒரு நெருக்கமான
தோழனுக்குரிய
இடத்தை அவள்
நிரப்பியிருந்திருக்க மாட்டாள்

என் வாழ்க்கை என்னிடத்தில்
எப்போதும் போல்
பத்திரமாகவே இருந்திருக்கும்

எல்லாமே விதிதான்
பாட்டாளியின் வியர்வைக்குரிய
கூலியையும்
விவசாயிக்குரிய கண்ணீரின் விலையையும்
நிச்சயிக்கும் அதே விதிதான்

எங்கோ ஒரு குடும்பத்தில்
பிறந்த எனக்கும்
அவளுக்கும் முடிச்சுப் போட்டு

இல்வாழ்க்கையில்
இவளின்றி அசையாது
ஓர் அணுவும் என
என் ஜட நிலைப் பிறழ்வுகளை
நிஷ்டூரப்படுத்தியது

என் மனித தர்மத்தின்
எல்லை நீட்டி
என் கர்வம் அழித்து
என்னை எனக்குள் புதுப்பித்து
எல்லாமே சரி என்ற
நேர் கோட்டில் பயணிக்கச் செய்திருக்கிறது

குறை தவிர்
மனமாளப் பழக்கியிருக்கிறது

என்னால் ஒன்றை
மட்டும் உறுதியாய் சொல்ல முடியும்

அவள் என்
வாழ்க்கை முழுமைக்குமான
அதிர்ஷ்டம்

குவளைகளில் நிரப்பப்படும்
உயர் வகை திராட்சை
மதுவைப் போல

பெண்ணால் ஓர் ஆணின்
வாழ்க்கையில் நிரப்பப்படும்
பரிபூரணம்

இறைவா
உனக்கு கோடி நன்றிகள்

என் விலா என்பு வழி
அவளைப் படைத்ததற்கு

என் துர்க்கிரித்தனம்
அவள் விடயத்தில்
தோற்றுப் போய் விடச் செய்ததற்கு

இறைவனே
உனக்கு கோடி நன்றிகள்

எனக்கு முன்
அவள் சுவாசம்
நிறுத்தப்பட்டிருந்தாலும்

இந்த அறுபது வயதின்
கனத்த தனிமையை
அவளுக்கு பதில்
எனக்குத் தந்ததற்கு

இளமையில் கொடுமை
வறுமை என்றால்
முதுமையின் கொடுமை
தன் துணையின்றி
மீதி நாட்கள் நகர்த்துவதுதான்…………………….

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments