நீ எனக்கு எப்படி?
‘எங்குழந்தை போல’
நான் உனக்கு எப்படி?
‘என் தாயைப்போல’
இல்ல
என்ன
அதுக்கு கொஞ்சம் கீழ வையு
தாய்க்கு நிகரா தாரமில்ல
எந்த பெண்ணும்
விரும்புறதுமில்ல
தாயைத்தாண்டி
வேற உறவு
வாழ்வில் வந்து
சேர்வதுமில்ல
பட்டாம்பூச்சியாய் ஒட்டிக்கொள்ளத்தான்
ஒவ்வொரு உறவும் நினைக்குது
பூ வேறு
நார் வேறு
இடையில் எங்கே மணப்பது
உன் பாடு உன் வீடு
நான் வேறு என்பது
இந்த நெருக்கம்
இவ்வளவுதான்
இது தாண்டி எங்கே போவது
பாசம் ஒண்ணும் குத்தமில்ல
நேசம் ஒண்ணும் தப்புமில்ல
எல்லைய நாம போட்டுக்கிட்டோம்
என்னென்னமோ பேசிக்கிட்டோம்
எல்லாக்கதவயும் அடச்சிப்புட்டு
சாவிய நாம தொலைச்சிக்கிட்டம்
இந்த உலகம் இப்படித்தான்
ஏத்தி இறக்கி
எங்கேயோ சேர்க்கும்
தூர எறிஞ்ச பந்தாட்டம்
தள்ளிப்போக வைச்சாலும்
பாசம் வந்து மொத்தத்துல
நங்கூரம் போட்டு வைக்கும்
நினைச்சு நினைச்சு அழ
நித்தம் ஒரு கத
எனக்கில்ல
நான் நெனச்ச உன்னவிட்டு
வேறு வைக்க மனசுமில்ல
நீ ஒரு கல்லுனு
மனசுக்குள்ள
முணுமுணுப்பன்
கல்லும் கரையுறப்போ
கண்ணீர் உடைச்சு நான் அழுவன்
என்னைத்தாண்டி
போகாது என் பிள்ளைனு
பைத்தியமா நெனச்சுகிட்டேன்
பலவாட்டி சிரிச்சுக்கிட்டேன்
காதல் கிறுக்கு இல்ல
உன்னப்பத்தி கத பேச
யாரும் எனக்கு இல்ல
உரிமை இல்லாத சொத்தா நீ
பட்டா போட
எனக்கு இங்கு மனசுமில்ல
உன் கையில என் ரேகை
பதிஞ்ச தடம் தெரியல
ஊரும் உற்றவரும்
என்ன கேலி பண்ணி சிரிக்குமுன்னு
கனவிலயும் நெனைக்கல
இந்த வலி ஆயுளுக்கு
போதுமுன்னு நெனைக்கிறன்
பேராச சங்கதியா
பெருநேசம் அமைஞ்சிடும்னு
தவிக்கிறன்
மொத்தத்துல மனசு சிரிச்சு
பல மாசம் ஆயிடுச்சு
பழைய கத எங்கேயோ
என்ன விட்டு ஓடிடுச்சு
சேரும் சேரா கத
சத்தியமா புரியல
நாளைக்கு நான்
பைத்தியமானா அதுக்கு
நீயும் பொறுப்பில்ல