பக்கம் 01
ஈழத்தின் மொத்த இயற்கை அழகையும் ஓரிடத்தில் ஒன்று சேர்த்தது போல ஜொலித்துக் கொண்டிருந்தது மதுரபுரம்.
குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை போன்ற ஐவகை நிலத்தையும் ஆக்கிரமித்து இருந்தது. கரையோரத்தில் நின்று பார்த்தால் கண் பார்க்கும் தூரம் வரை நீலப்புடவை விரித்தது போல வங்க கடல் நீண்டிருக்கும். மறுபுறம் களப்பும்,பச்சை காடுகளும், பசுமையான வயல்களும் உள்ளத்தை கொள்ளை அடித்து பார்ப்பவர் கண்ணுக்கு விருந்தளிக்கும்.சிறு சிறு மலைகள் விட்டு விட்டும், சங்கிலித் தொடராய் நீண்டும் பசுமை போர்த்திக் கொண்டிருக்கும் என்றே கூற வேண்டும். பாலாவி போல பனி மூடிய மலைத்தொடர்களிடையே ஒவ்வொரு நாள் காலை நேரமும் விடிவதற்கு சோம்பல்பட்ட படியே மெல்ல விடிவது போல இருக்கும். காற்றில் ஆடி அலைக்கழிக்கப்பட்டு மெல்ல உதிரும் பூவைப் போல் அப்படி மெதுவாக விடிவதிலும் ஓர் அழகு இருக்கும். படுக்கையில் எழுந்து உட்கார்ந்து பறப்பதற்கு சிலிர்த்து கொள்ளும் பட்டாம்பூச்சி போல கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தாள் ஆயிஷா.
பள்ளிவாசலில் சுபஹ் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டு தொழுகை நடந்து கொண்டிருந்தது. சமையலறையில் தாய் ரஹீமா வேலை செய்து கொண்டிருந்தது தெரிந்தது.
ஆயிஷாவும் படுத்த பாயை சுருட்டி அதனிடத்தில் நேர்த்தியாக வைத்து விட்டு சுபஹ் தொழுவதற்காக வுழூ செய்வதற்கு கிணற்றடி நோக்கி போனாள்.தன் தந்தையான ஸாலிஹ் கிணற்றடியிலிருந்து வுழூ செய்து கொண்டு அவசர அவசரமாக பள்ளிக்குச் செல்ல வெளியேறிக் கொண்டிருந்தார்.
மகள் ஆயிஷாவைக் கண்டதும் “நான் தொழுதுட்டு வாரன் மகள் நீங்க உம்மாட்ட போய் சொல்லுங்க” என்றுவிட்டு முக மலர்ச்சியோடு சென்றார்.
“சரி வாப்பா நான் உம்மாட்ட போய் சொல்லுறன்” என்று கொண்டே தாயிடம் வந்து விடயத்தை எத்தி வைத்து விட்டு கிணற்றடிக்குச் சென்றாள்.
ஸாலிஹ் ஒரு சாதாரண கூலித் தொழிலாளி.கூலித் தொழில் செய்து தன் குடும்பத்தை நடத்தி செல்பவர்.பல ஏக்கர் காணிகளை வைத்திருக்கும் போடிமார் அவரை சந்தித்து சில வேலைகளை கொடுக்கும் போது அவர்களது வயலில் வேலை செய்து கொடுத்து விட்டு அவர்கள் கொடுக்கும் கூலிப் பணத்தை பெற்றுக் கொள்வார்.
அந்த சம்பாத்தியத்தில் தான் கடன் என்று யாரிடமும் ஒரு ரூபாய் காசு கூட வாங்காமல் தன் இரு பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்தார்.குடும்ப பொறுப்பை தானும் ஏற்று தன் தந்தையின் பாரத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக அவரது ஒரே மகன் பதினெட்டு வயதிலே வெளிநாடு சென்று விட்டான்.மற்ற இரண்டு பெண் பிள்ளைகளும் படித்துக் கொண்டிருந்தனர்.
ஒரு பெண் உயர் தரத்தில் கல்வி கற்று கொண்டிருந்தாள்.அவள் தான் ஆயிஷா.
தொழுகையை முடித்து விட்டு ஆயிஷா தான் எதிர்நோக்கவிருக்கும் பொதுப் பரீட்சைக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தாள். மகள் படித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து விட்டு ரஹீமா ஒரு தட்டில் பிஸ்கட்டும் தேநீருமாக கொண்டு வந்து வைத்தார்.
“பிஸ்கட்ட சாப்பிட்டுனு படியுங்க மகள்” என்று பாசமாக ஆயிஷாவின் தலையை தடவி விட்டு சென்றார்.
“நீங்க சாப்பிட்டயலா உம்மா?”
“வாப்பா வந்த பிறகு நானும் வாப்பாவும் சாப்பிடுறோம் மகள் நான் தங்கச்சிய பள்ளிக்கூடத்துக்கு போக எழுப்பி விடுறன்” என்று கொண்டே தங்கை ஸைனப்பை எழுப்பச் சென்றார்.
பாடசாலைக்குச் செல்ல நேரமாவதை உணர்ந்து புத்தகங்களை மூடி வைத்து விட்டு தயாராகச் சென்றாள் ஆயிஷா.
தங்கை ஸைனப்பும் தயாராகிக் கொண்டு வரவே புத்தகப்பையை எடுத்து தோள் மீது போட்டவாறே தாயிடம் சொல்லி விட்டு வெளியே வந்தாள்.
முற்றத்தில் வயலுக்குச் செல்வதற்காக சைக்கிளில் மண்வெட்டியை கட்டிக் கொண்டிருந்த தந்தையிடம் “வாப்பா நாங்க ஸ்கூலுக்கு போய் வாறோம்” என்று புன்னகைத்தவளிடம்
“அல்லாஹ்ட காவலா ரெண்டு பேரும் போய் வாங்கோ” என வழி அனுப்பி வைத்தார்.
“சரி வாப்பா, நீங்களும் அல்லாஹ்ட காவலா போய் வாங்கோ” என்று சொல்லி விட்டு பாடசாலை நோக்கி ஸைனப்புடன் சென்றாள்.
மூன்றாம் தவணை பரீட்சை நடந்து முடிந்த உற்சாகத்தில் மாணவர்கள் தங்களைத் மதிப்பெண்களை தெரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு பாட ஆசிரியரையும் சந்தித்து கொண்டிருந்தனர்.
எதிலும் ஈடுபாடு இல்லாமல் தன் தந்தை குடும்பத்தை ஒரு குறையும் இல்லாமல் வைத்துக் கொள்ள வெயிலில் படும் கஷ்டத்தையும் அக்கஷ்டத்தை எப்படி நீக்குவது என்ற யோசனையிலும் மூழ்கிப் போனாள் ஆயிஷா.
வீட்டுச் செலவுகளையும் பார்த்துக் கொண்டு தனதும், தங்கையினதும் படிப்புச் செலவுக்காக தந்தை வெயிலில் ஓயாது ஓடி உழைத்து கஷ்டப்படுவதை நினைக்கும் போதெல்லாம் அவளது உள்ளம் யாருக்கும் தெரியாமல் ஊமைக் கண்ணீர் வடிக்கும்.
யோசனையில் மூழ்கியதில் தன்னை சுற்றிலும் நடந்ததை மறந்து சிந்தித்துக் கொண்டிருந்தாள்.யாரோ வேகமாக உலுக்குவதை உணர்ந்து சுயநினைவுக்கு வந்தாள்.
பக்கத்தில் இருந்த தோழி உலுக்குவதை பார்த்து “என்னடி மரத்த உலுக்குற மாதிரி என்னை உலுக்கிக்கிட்டு இருக்கிறாய்?” என கேட்டாள்.
“அப்படியா? மகாராணிக்கு தாம்பூலம் வைத்து வரவேக்கனுமாக்கும்? டீச்சர் உன்னை கூப்பிட்டுட்டு இருக்காங்க நீ என்னடா என்டா இகமோ பரமோ என்டு எங்கயோ பாத்துட்டு இருக்கிறாய்? நானும் எத்தன தடவை தான் கூப்பிடுறது? உன்னை தட்டிப் பார்த்தும் உணர்ச்சி இல்ல அதால தான் வன்முறையில ஈடுபட்டன்”என்று சிரித்தவாறே ஹாஜரா சொன்னாள்.
“டீச்சர் எப்போ வந்தாங்க?”
“நீ ஆகாயக் கோட்டை கட்டினு இருக்கும் போது தான் வந்தாங்க நீ போய் முதல்ல என்னென்டு கேளு”
ஆயிஷா என்று மீண்டும் குரல் கேட்கவே “ஓம் டீச்சர் வாறன்” என்று கொண்டே சென்றாள்.
“என்ன ஆயிஷா நான் கூப்பிட்டது கேக்காம அப்படி என்ன யோசிச்சிட்டு இருந்தீங்க?”
“வெளியில பாத்துட்டு இருந்தன் அதான் நீங்க கூப்பிட்டது கேக்கல என்ன விஷயம் டீச்சர்?”
“எல்லாம் நல்ல விஷயம் தான் நீங்களே தெரிஞ்சிக்கோங்க” என்று சந்தோஷத்துடன் ஒரு கோவையை எடுத்து ஆயிஷாவிடம் நீட்டினார்.
அதனை விரித்து பார்த்த ஆயிஷாவின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்து” அல்ஹம்துலில்லாஹ் என்னால நம்பவே முடியல” என்றாள்.
“ஆயிஷா என்டு தானே நேம் போட்டிக்கி பிறகென்ன நம்புறத்துக்கு?”
“மாகாண மட்டத்தில் நான் முதலாம் இடமா என்டு தான் டீச்சர் நம்ப முடியல”
“உங்க எழுத்தாற்றலுக்கு இன்ஷா அல்லாஹ் எதிர் காலத்தில நல்லதொரு இடத்துல இருப்பீங்க” என வாழ்த்தினார்.
“அல்லாஹ் நாடினா இன்னும் சந்தோஷம் டீச்சர்”
“நாளக்கி உங்கள காலை ஆராதனையில கூப்பிட்டு செர்டிஃபிகேட் தருவாங்க” என்று ஆயிஷாவிடம் சொல்லிவிட்டு ஏனைய வகுப்பு மாணவர்களிடம் விஷயத்தை சொல்லி ஆயிஷாவை பாராட்டினார் டீச்சர்.
“இந்த விஷயத்தை வாப்பாவிடம் சொன்னால் சந்தோஷப் படுவாங்க” என நினைத்தாள்.பாடசாலை விட்டுச் சென்றதும் ரஹீமாவிடம் “உம்மா இன்னும் வாப்பா வரலையா?” எனக் கேட்டாள்.
“இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவார்.நீங்க ரெண்டு பேரும் போய் உடுப்பு மாத்திட்டு வாங்கோ நான் சாப்பாடு வைக்கிறன்”
சாப்பாடு வைக்கும் போதே ஆயிஷாவின் தந்தை வேலையை முடித்து விட்டு வருவது தெரிந்தது.
ஸைனப் ஓடிச்சென்று”பேக்க தாங்க வாப்பா நான் கொண்டு போய் வைக்கிறன்” என்று பையை வாங்கி உள்ளே கொண்டு போய் வைத்து விட்டு வந்தாள்.
“வாப்பா நான் உங்கள தான் காத்துட்டு இருந்தன்”
“என்ன விஷயம் மகள்?”
“நான் மாகாண மட்ட சாகித்திய இலக்கிய போட்டியில முதலாம் இடம் வந்திக்கன் வாப்பா”
“அல்ஹம்துலில்லாஹ் இப்படியே நல்லா படிக்கணும் மகள். நல்லாப் படிச்சி டீச்சர் ஆகணும். அதுக்கு தான் நான் இப்படி கஷ்டப்படுறன்”
அடுத்த நாள் ஆயிஷா காலை ஆராதனையில் வைத்து கௌரவிக்கப்பட்டாள்.
ஒரு கிழமையின் பிறகு பரீட்சையின் புள்ளிகள் ஆசிரியர்களால் வழங்கப்பட்டது. அனைத்திலும் ஆயிஷா அதிகூடிய புள்ளிகளைப் பெற்று வகுப்பில் முதல் மாணவியாக தேறினாள்.
தொடரும்….