எழுதித் தீராப் பக்கங்கள்

0
6
IMG-20250822-WA0011

பக்கம் 02

காலம் காலில் சக்கரம் கட்டியது போல கண்டபடி சுழல ஆரம்பித்து நாட்கள் ஓடத் தொடங்கின. 

ஆயிஷா அவளது நண்பர்களுடன் குழுமி இருக்கும் போது தமிழாசிரியை மொனிட்டர் என்றவாறு உள்ளே நுழைந்தார். ஆசிரியையின் அழைப்பு கேட்டு நண்பர்களிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டு ஆசிரியையின் முன்னால் போய் நின்றாள். 

“என்ன டீச்சர் கூப்பிட்டீங்க?” 

நீங்க தமிழ் தினப் போட்டியில ரெண்டு நிகழ்ச்சிக்கு செலக்ட் ஆகிக்கிறீங்க இன்ஷா அல்லாஹ் எழுத்து போட்டிகள் வரும் வியாழக்கிழமை நடக்கும். அவை நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடக்கும். பிரிப்பயார் ஆகிக் கொள்ளுங்கோ” எ‌ன்று கூ‌றி சில துணுக்குகளை அவளிடம் கொடுத்து விட்டுச் சென்றார். 

தமிழ் தினப் போட்டியில் அனைவரும் எதிர்பார்த்தபடி ஆயிஷா எழுதி விட்டு வந்தாள். 

அவை நிகழ்ச்சியான தமிழ் அறிவு வினா விடை போட்டிக்காக அவளும் அவளது குழுவினரும் எதிரணிக்கு முன்னால் வந்து நின்றார்கள். 

கோட்டக் கல்வி பணிப்பாளர் போட்டியின் நடுவராக கலந்து சிறப்பித்தார். ஆயிஷாவின் அணி சொல் அம்புகளால் முன்னேறிக் கொண்டிருந்தது.அணிக்குள்ளும் எதிரணியிடமிருந்தும் வாய்ப்புக்கள் தவறி மாறும் போது அதற்கான பதிலை ஆயிஷாவே அளித்து அதிகூடிய புள்ளி அடிப்படையில் அணியை வெற்றி பெறச் செய்தாள். 

போட்டி நிறைவடைந்து வெளியே வந்தவர்களுக்கு தமிழ் ஆசிரியை வாழ்த்து கூறி ஆசிர்வதித்தார்.

அடுத்த வாரமே ஆயிஷா கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற கவிஞர்கள் கலந்து கொண்ட கவிப்பட்டிமன்றம் ஒன்றில் பங்கு கொண்டு தன் பங்களிப்பை வழங்கினாள். அனைவரிடமும் பாராட்டும் பரிசுகளும் பெற்றுக் கொண்டு வீடு திரும்பும் போது கவிப்பட்டி மன்றத்திற்கும் அதிதியாக கலந்து கொண்ட கோட்டக் கல்வி பணிப்பாளர் ஆயிஷாவின் முன்னே வந்து நின்றார். 

“நீங்க அருமையா கவிதை சொன்னீங்க மகள். போன வாரம் நடந்த தமிழ் தினப் போட்டியிலயும் நீங்க தான் அதிகூடிய புள்ளி எடுத்தீங்க ஏ லெவல் தானே படிக்கிறீங்க? நல்லா படியுங்கோ  மகள். உங்க கல்விப் பயணத்துல நல்ல முன்னேற்றம் அடையுவீங்க இன்ஷா அல்லாஹ்” என்று வாழ்த்து உரைத்தார் கோட்டக் கல்வி பணிப்பாளர். 

” ஜெஸாக்கல்லாஹு கைர் சேர் உங்க ஆசி அப்படியே நிறைவேறட்டும் சேர் இன்ஷா அல்லாஹ்” என்றாள்.

ஆயிஷாவுடன் சிறிது நேரம் பேசியபடி குடும்ப நிலவரத்தை பற்றி விசாரித்துக் கொண்டு விடைபெற்றுச் சென்றார்.

கல்விப் பாதையில் முன்னேற்றத்தை மட்டுமே கண்டு சென்ற அவள் இழக்கப் போகும் ஒன்றே ஒன்று அவள் வாழ்க்கையையே தடம் புரட்டப் போகும் என அறியாமலே மகிழ்ச்சியுடன் காலத்தை கடத்தினாள்.

ஆயிஷாவின் தந்தை வழமை போல் வயலுக்கு செல்லத் தயார் ஆனார். ரஹீமா முக மலர்ச்சியோடு தன் கணவனை வழி அனுப்பி வைத்தார்.

அவசர காரியமாகச் சென்றவருக்கு தன் பிள்ளைகளின் முகத்தைக்கூட பார்ப்பதற்கு நேரம் கிடைக்கவில்லை. இறைவனின் விதியோ முந்திக் கொண்டது. வயலுக்கு சென்றவர் வழியிலே வைத்து காட்டு யானையால் தாக்கப்பட்டு பெரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்த மனைவியும் பிள்ளைகளும் உறவினர்களும் வைத்தியசாலையில் குழுமினர்.

ஆனாலும் என்ன பயன்? அரை மணி நேரத்தின் பிறகு தன் திருவாயால் கலிமா மொழிந்தவாறு வைத்தியசாலையிலே இறைவனின் அழைப்பை ஏற்று இறையடி சேர்ந்தார்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன். 

தன் குடும்பத்துக்கே நிழல் தந்து கொண்டிருந்த பெரிய ஆலமரத்தில் இடி விழுந்து எரிந்ததைப் போல அவருடைய இந்த மரணத்தை ஆயிஷாவால் தாங்கிக்கொள்ள முடியாமல் இருந்தது.

அவளது குடும்பமே ஆதரவற்று யாரும் இல்லாமல் தவிப்பது போல ஒரு எண்ணம் எழுந்து அவளை தவிக்க வைத்தது.

“நல்லாப் படிச்சி நீங்க டீச்சர் ஆகணும் மகள்” என்ற தந்தையின் குரல் அசரீரி போல வந்து அவளது காதில் வந்து ஒலித்தது.

தந்தையின் இலட்சியத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று மனதில் வைராக்கியம் கொண்டாள் ஆயிஷா. ஆனால் அவளது வைராக்கியம் எத்தனையோ உறவுகளின் விரிசல் என அப்போது அவளுக்கு தெரியவில்லை.

தந்தையின் இழப்பில் இருந்து வெளியேறி தந்தையின் இலட்சியத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக பாடசாலை நோக்கிச் சென்றாள்.விதியோ அவளைப் பார்த்து கை கொட்டிச் சிரித்தது. இரண்டாவது நாள் தவணைப் பரீட்சையை செய்து முடித்து விட்டு வீடு திரும்பியவளுக்கு பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. 

“நாளையில இருந்து நீங்க ஸ்கூலுக்கு போக வேணாம் நல்ல இடத்தில இருந்து ஐநேரத் தொழுகையும் தொழுகிற மாப்புள பார்த்திக்குறோம்” என்றார் அவளது மாமா. 

“நான் படிக்கணும் இப்போ எனக்கு கல்யாணம் வேணாம் இன்னும் ஒன்பது மாசத்துல படிப்பு முடிஞ்சிடும் அதுக்கு பிறகு கல்யாணத்த பத்தி யோசிக்கலாம்”என்று விட்டு உள்ளே சென்றாள். 

அவள் தன் விருப்பத்தை தெளிவாகச் சொன்ன பிறகும் அவளுக்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருந்தனர். அப்பாவித்தாயின் மனதையும் கெடுத்து, தந்தையின் இழப்பை மையமாக கொண்டு குடும்ப நிலவரத்தை எடுத்துச் சொல்லி மலையளவு நம்பிக் கொண்டிருந்த தாயின் ஊடகவே பிரச்சினை முளைத்தது. 

“உம்மா உங்கட நிலம எனக்கு புரியுது என்ட நிலமயயும் நீங்க விளங்கிக் கொ‌ள்ளு‌ங்கோ” 

“இந்தக் காலத்துல நல்ல மாப்புள கெடைக்கிறது கஷ்டம் மகள் உங்கட நல்லத்த தான் நாங்க பார்ப்போம்” 

“இது என்ட நல்லது இல்ல உம்மா. இதுக்கு மேல இதப்பத்தி எனக்கிட்ட பேச வேணாம்” என்றதும் எழுந்து சென்றாள். 

தந்தை இருக்கும் போது ஒரு துளி கண்ணீர் கூட சிந்தாத ஆயிஷா தந்தையின் இழப்பின் பி‌றகு கண்ணீருக்கு சொந்தக்காரியாகவே ஆகி விட்டாள்.

எவ்வளவு முயற்சி செய்தும் திருமணப் பேச்சிலிருந்து ஆயிஷாவால் விடுபட முடியவில்லை. இறுதியாக வற்புறுத்தலின் மத்தியிலே திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டாள். 

திருமணத் தேதியும் குறிக்கப்பட்டது. ஆயிஷா பரீட்சை எழுத வராமல் இருந்ததன் காரணம் அறிந்து ஆசிரியர்கள் அவளது வீடு தேடி வந்து அவளது உறவினர்களுடன் ஆயிஷாவின் பாண்டித்தியம் பற்றி பேசி விட்டுச் சென்றனர்.

அவர்கள் பேசி விட்டுச் சென்றதிலும் பயனில்லை. இறைவனின் மேல் பொறுப்புச் சாட்டி விட்டு ஆயிஷாவும் அமைதியாக இருந்தாள். அடுத்த நாளும் பரீட்சைக்கு செல்லாமல் இருக்கவே ஆசிரியர்கள் வந்து அவளை பாடசாலைக்கு அழைத்துச் சென்றனர். 

கட்டாயக் கல்வி உரிமை மறுக்கப்பட்டதன் காரணமாக போலிஸாரால் அவளது குடும்பத்தினருக்கு ஆலோசனை வழிகாட்டல் மேற்கொள்ளப்பட்டது. ஆயிஷாவின் கல்வி பாதிக்கப்படக் கூடாதென ரஹீமாவின் சகோதரர்களை போலீஸ் நிலையத்தில் வந்து ஒப்பமிட்டு செல்லச் சொன்னார்கள். 

அன்றிலிருந்து அனைவரும் ஆயிஷாவுக்கு எதிரியாக மாறினர்.யாரும் அவளோடு முகம் கொடுத்து பேசவுமில்லை. ஆயிஷாவின் திருமணத்தை எதிர்த்த ரஹீமாவின் ஒரு தம்பியின் வீட்டிலே அதாவது ஆயிஷாவின் தாய் வழி மாமாவின் வீட்டிலே இரு மாதங்கள் தங்கிப் படித்தாள். அவர்களும் அவளது படிப்புக்கு எந்த இடையூறும் விளைவிக்காமல் தங்களது ஆதரவை வழங்கினார்கள். 

புறக்கணிப்பிலும் பல சவால்களுக்கு மத்தியிலும் ஆயிஷா எதிர்நீச்சல் போட்டு தந்தையின் இலட்சியத்தை நிறைவேற்றுவதற்காக முயற்சி செய்து நல்ல முறையில் பரீட்சையை எழுதி முடித்தாள். 

சில மாதங்களின் பிறகு…

பரீட்சை பெறுபேறுகள் வெளியானதை அறிந்து தனது பெறுபேற்றை தெரிந்து கொள்ள முயற்சி செய்தாள்.தன் பெறுபேற்றினை தெரிந்து கொண்டவளின் கண்கள் கண்ணீரைச் சொரியவும்,வாய் இறைவனைப் புகழ்ந்து “அல்ஹம்துலில்லாஹ்” என்றது. 

ஆயிஷா சிறந்த பெறுபேற்றினை பெ‌ற்று பல்கலைக்கழகம் செல்லத் தகுதி உடையவளானாள். பரீட்சை பெறுபேறு வெளியாகி சில மாதத்திலேயே பல்கலைக்கழக தெரிவு பட்டியலும் வெளியாகியது. 

இறைவனின் பேரருளால் பல்கலைக்கழகத்திற்கு தெரிவானாள். 

எத்தனை மனிதர்கள் எதிர்த்தாலும் இறைவனின் கருணையும் வல்லமையும் ஒரு மனிதனுக்கு கிடைத்து விட்டால் மனதில் வைராக்கியம் கொண்டு எதையும் சாதித்து விட முடியும். ஆயிஷாவின் விடயத்திலும் இது சரியாகப் பொருந்திவிட்டது என்பதை நினைக்கும் போது ஆயிஷாவின் உள்ளம் ஸ்தம்பித்துப் போனது.

இரண்டு வருடங்களுக்கு பிறகு அவளுக்கு திருமணமும் நடந்தேறியது.

இறுதியில் தன் தந்தையின் ஆசையை நிறைவேற்றும் பயணத்தில் தன் கணவனின் முற்று முழு ஆதரவுடன் அவளது பட்டப்படிப்பையும் இனிதே நிறைவேற்றி விட்டாள்.

பல தடை கற்களையும் சாதனை படிகளாக மாற்றி குடும்பத்தின் முதல் பட்டதாரியாக கருப்பாடை அணிந்து பட்டம் பெற்று வாகை சூடி வலம் வரப் போகும் திருநாளும் வெகுதூரம் இல்லை அவளுக்கு.

எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் தன் தந்தையின் ஆசையை நிறைவேற்ற உறுதுணையாக இருந்த இறைவனை நினைவுகூரும் போது அவளது உள்ளம் அல்ஹம்துலில்லாஹ் என எண்ணிக் கொண்டது. 

முற்றும்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments