அன்பு கொண்டு அடிமையாகி
அடிமனம் வேதனைப்படுகையிலே
ஆறுதல் தேடி நிற்க
ஆதரிப்பார் யாருமில்லை
எம்மனம் தேற்றவென்று
எமக்களித்த பரிசே ஒரு துளிக் கண்ணீர்
பித்தலாட்டக் காதலிலே
பிரிவுதான் வருகையிலே
துன்பம் நேர்கையிலே
துயரத்தில் ஆழ்கையிலே
தீராத சோகத்தையும்
தீர்த்திடுமே ஒரு துளிக் கண்ணீர்
தனித்து நாம் நிற்கையிலே
தனிமை உணர்கையிலே
தலையணைக்கு வாயிருந்தால்
தயங்காமல் கதை சொல்லும்
தடைகள் வரும் போது
தடையங்கள் இன்றி வந்த ஒரு துளிக் கண்ணீர்
உறவென்று உரிமையோடு உறவாட
உள்ளத்தை புரிந்திடாது உதறிடும் வேளையிலே
நட்புக்குள் துரோகங்கள் நடனமாட
நம்பிக்கை தொலைந்து அங்கு
நிர்க்கதியாய் நிற்கையிலே
ஒற்றுமையும் இல்லாது போராடும் வாழ்க்கையதில்
ஒரு கணமும் சிந்திக்காது
அத்தருணம் வழியும் ஒரு துளிக் கண்ணீர்
அடங்காத வயதினிலே அறியாமல் வந்த கண்ணீர்
அறிந்திடும் வயதினிலே அடக்கியே ஆழ்கிறதே
விழியோரம் விளையாட்டாய் வந்த கண்ணீர் – இன்று
விதியோடு போராடி விருட்சமாய் நிற்கிறதே
கருவறையில் இருந்து கல்லறை செல்லும் வரை
கண்டிடார் யாருமில்லை
கண்ணதிலே ஒரு துளிக் கண்ணீர்..