இந்த நிர்மலமான நேரங்கள்
என்று தீரும்
இப்போதெல்லாம்
இந்த நேரங்களில்
ஒரு மண்புழு மண்டைக்குள் ஏறி
நரம்பு மண்டலங்களில் சறுக்கி
ரத்தத்தோடு சேர்ந்து
குதித்து தாளம் போட்டு
அப்படியே கரைந்தும் விடுகிறது
அதன் தடங்கள் எதுவுமில்லை
மீண்டும் புதியதாக
நான் வெறுக்கும்
மயிர்க்கொட்டிகள்
அட்டைகள்
அதைவிடப் பெரிய
நத்தைகள் என ஊர்ந்து நகர்ந்து
எப்படியோ தவழ்ந்து
மூளைச் சலவைக்கு முகாமிடுகின்றன
சில நேரம்
வானம் முழுக்க நட்சத்திரங்கள்
மின்மினிகள்
அதிசயமாய் அழகிய கனவுகளும்
வரத்தான் செய்கின்றன
யாரோ மயக்கமாய் பாடுகிறார்கள்
மயிலிறகை நீட்டுகிறார்கள்
எல்லாம் கனவுதான்
கண்கள் மூடியிருக்கும்
வரையிலான கிறக்கந்தான்
எப்போதும் போல
துடுப்பிழந்த தோணிதான்
இன்னும் அதே கரையில்
எனக்கான படகு
ப்ரியங்களால் நிரப்பப்பட்டிருக்கின்றது என இன்னும்
நம்ப வைத்துக் கொண்டிருக்கின்றது…
Subscribe
Please login to comment
0 கருத்துரைகள்
Oldest