கடலோர மணலில் பெயரெழுதி
கைவிரல் சுருள்கேசம் கோதி
விடலையின் பருவம் விளையாடி
விழிமுன் நீயிருந்த காலங்கள்
பிடிக்கும் நிறத்தில் ஆடைகொண்டு
பிள்ளையார் கோயில் வந்தாய்
படிக்கும் பெருங்கதை மறந்து
பார்வைக்குள் உயிர் நெய்தாய்
மடிப்புக் குலையா வேட்டியோடு
மருதமர நிழல்மறைவில் நானிருந்து
அடிக்கடி விழிசாய்த்து அழைக்க
ஆகாதென்று அசைவில் சொன்னாய்
துடிக்கும் இதயத்தின் வேரறுத்து
தூரத்தே விலகியேன் சென்றாய்
நடிக்கும் காதலென்று நானறியேன்
நான்காணும் கனவுகள் நீநின்றாய்
படிக்கிறேன் பகலிரவாய் உன்கவி
பார்க்கும் திசைதோறும் உன்முகம்
துடிக்குமென் இதயத்தில் உன்பெயர்
தூக்கமில்லாக் கனவிலும் துளிர்க்கிறாய்