மானிடர் அறிவைப் பெருக்கும் ஆயுதம்
மாட்சியில் எங்கும் சிறக்கும் மதிப்புகள்
கல்வியில் கரையைக் கண்டவர் உண்டோ?
கற்பனை உலகில் பறக்கும் மனிதரில்
பண்டைய பாடம் குருவின் வீட்டில்
பக்குவப் படுத்தும் குருகுலப் போதனை
எளிமையும் பண்பும் நடத்தையில் தந்தன
ஏற்றம் கண்டிட வழியும் பிறந்தது
ஆன்மா அறிந்திடும் அறிவியல் புகட்டி
ஆன்மிகப் போதனை அதிலே இருந்தது
அந்நியர் ஆட்சியில் ஆங்கிலம் கலந்தது
ஆரம்பப் பள்ளியில் சமயத்தை வைத்தது
எண்ணும் எழுத்தும் வளர்ச்சி கண்டது
ஏட்டில் படித்தது அச்சில் நுழைந்தது
வகுப்பறை நுட்பம் இன்று கண்டோம்
வகை வகையாய் துறைகளைப் பிரித்தோம்
கட்டண கல்வி கலியுகம் படைத்தது
காலத்தின் தேவை உயர்நிலை தேர்ச்சி
விஞ்சிய வளர்ச்சியோ தனியார் பள்ளிகள்
விருத்திகள் பெற்றிடும் அரசின் கொள்கைகள்
இணையத் தொடர்பில் எத்தனை வசதிகள்
இலகுவாய் கற்பாய் வீட்டில் இருந்தே
இலவச இணைப்பாய் கைபேசியிலும் கற்கை
இன்றைய கல்வி இணையில்லா வளர்ச்சியே…
தெ.கரிதரன் (சம்பூர் சமரன்)
கிழக்குப் பல்கலைக்கழகம்.
கல்வியும் மருத்துவமும் இணையில்லாத சேவை. ஆனால் இன்று முழு வியாபாரமாக மாறியிருப்பதுதான் மிகப்பெரும் கவலைக்குரிய விடயம்.